தேமொழி
விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை நாயக்கர்கள் 1529 ஆம் ஆண்டு துவங்கி 1736 ஆம் ஆண்டு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். தஞ்சை, செஞ்சி நாயக்கர் மன்னர்களைவிடவும் மதுரை நாயக்கர்களே நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.
மதுரை நாயக்கர் மன்னர்கள்:
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சியின் பகுதியாக இருந்தாலும், மதுரை நாயக்க மன்னராக “விசுவநாத நாயக்கர்” 1529 ஆண்டு முதல் விஜயநகர அரசின் பிரதிநிதியாக அரசுப் பொறுப்பை ஏற்றார். மாலிக்காபூர் படையெடுப்பினால் களையிழந்து இருந்த மதுரையை வளமையான நிலைக்கு மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவர் காலத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, 72 பாளையப்பட்டுகளின் தலைவர்களான பாளையக்காரர்களின் கீழ் ஆட்சி நடைபெறத் துவங்கியது.
தளவாய் அரியநாத முதலியார்:
விசுவநாத நாயக்கரின் முதலமைச்சரான “தளவாய் அரியநாத முதலியார்” என்பவர் இந்த பாளையப்பட்டு ஆட்சிமுறைக்கு முதலில் வழிவகுத்தவர். முதலமைச்சராகவும் இராணுவ அதிகாரியாகவும் பணியற்றியதுடன் மட்டும் அல்லாமல், பாளையப்பட்டு திட்டம் கொண்டு வந்தது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை 1569 ஆம் ஆண்டு கட்டுவித்தது என இவர் பல அரிய பணிகளை முன்னின்று ஏற்று மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு உதவியவர். மன்னர் விசுவநாத நாயக்கர் ஆட்சியின் காலம் (1529 – 1564) முதற்கொண்டு, அவருக்குப் பின்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 – 1572), வீரப்ப நாயக்கர் (1572 – 1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 – 1601) காலம்வரை எனத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களின் ஆட்சி காலங்களிலும் இவர் அவர்களுக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில் இருந்து புகழ் பெற்றவர்.
மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில் தளவாய் அரியநாத முதலியார் குதிரை மீது அமர்ந்திருக்கும் சிலையும் உண்டு. குடிமக்களின் மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருந்த இவர் 80-வது வயதில், கி.பி. 1600-இல் முதுமையுற்று மறைந்தார். இவர் மறைந்த காலதில் நாயக்க மன்னர்கள் இருவர் குழுவாக ஆட்சி நடத்தினர். இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் (1595 – 1601) அவரது சகோதரரான “விசுவப்ப நாயக்கரும்” இணையாக நாட்டை ஆண்டனர். இவர்கள் ஆட்சியில் திருச்சி மாநகரம் இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்துடன் திருச்சி மிக முக்கியமான நகராகவும் இவர்கள் ஆட்சியில் விளங்கியது.
மன்னர் விசுவப்ப நாயக்கர்:
மதுரை நாயக்க மன்னர்கள் வரிசையில், வரலாற்றுக் கோணத்தின் அடிப்படையில் அதிகம் பேசப்படாத, புகழ் பெற்றிராத மன்னரான விசுவப்ப நாயக்கர் உண்மையில் மிகவும் புகழ்பெற்ற மதுரை “திருமலை நாயக்கரின்” பாட்டனார் ஆவார். இவர் அதிகம் அறியப்படாதற்கு இவர் தனது மூத்த சகோதரர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கருடன் ஆட்சியை இணையாக நடத்தியது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
மன்னர் விசுவப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் தளவாய் அரியநாத முதலியார் உயிர்நீத்தார். விசுவப்ப நாயக்கர் பற்றியும், தளவாய் அரியநாத முதலியார் பற்றியும் சில வரலாற்று ஆவணங்களும், மதுரை குனியூர் கல்வெட்டும்(Kuniyur Plate) தகவல்கள் தருவது போலவே, திருச்சியில் உள்ள சிறுதெய்வ கோயிலொன்றும் தகவல் தருகிறது.
பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்:
திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” (தென்னூர் ஹை ரோடு, திருச்சி 620017, புவியிடக்குறியீடு: 10°48’58″N 78°40’48″E) என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணிய செட்டியார் குலத்தின் குலதெய்வம். இக்கோவில் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திர குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள்.
பெரியநாச்சி அம்மையாருக்கு கோவில் எழுப்பி அக்கோயிலில் அவர் கணவர் வீரிய பெருமாள் மற்றும் மகன்முறை ஏற்று இறுதிச் சடங்குகள் செய்த வீரப்ப சுவாமி ஆகியோரையும் குலதெய்வங்களாக வணங்கி வருகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் “33 சிறுதெய்வங்கள்” உள்ளனர். அவர்களில் மன்னர் விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் எவ்வாறு இக்கோயில் தெய்வங்களானார்கள் என்பதை இக்கோவிலின் தலவரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம். மன்னர் விசுவப்ப நாயக்கர் மற்றும் தளவாய் அரியநாத முதலியார் ஆகியோர் பற்றிய குறிப்புகளைக் கணக்கில் கொண்டு பெரியநாச்சி அம்மையார் வாழ்ந்த காலத்தை பின்னோக்கிக் கணித்தால், அம்மையார் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது தெரிகிறது. குறிப்பாக அவர் உயிர் நீத்ததை 1595-1600 க்கும் இடைப்பட்ட காலம் என்றும் காலகட்டத்தை மேலும் குறுக்கலாம். இவர் வாழ்ந்த காலம் 1580 – 1600 க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் உத்தேசமாகக் கூறலாம்.
தலவரலாறு வழங்கும் தகவல்:
தலவரலாறாகக் கூறப்படுவது நான்கு நூற்றாண்டுகளுக்கு (420 அண்டுகளுக்கு) முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. வாய்வழிக் கதையாக அக்குல மக்களிடம் வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் சரியான காலத்தைக் கணக்கிடவில்லை என்பதையும் கோவிலின் இணையதள பக்கம் வழங்கும் தலவரலாறு மூலம் அறிய முடிகிறது. வாணியச் செட்டி குலத்தைச் சேர்ந்த பெரியநாச்சி அம்மையாரும், அவர் கணவர் வீரிய பெருமாளும் தங்கள் குலத் தொழிலான எண்ணை வியாபாரம் செய்து வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்தக்காலக்கட்டதில் உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் ஆட்சி செய்யும் பொழுது தளவாய் அரியநாத முதலியார் அவரது அமைச்சரராக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் நாயக்கர்களுக்கு தலைநகராக விளங்கியது மதுரைதான். ஆனால் பிற்பாடு இவரது பேரன் தலைநகரை திருச்சிக்கு மாற்றினார், பிறகு மற்றொருவர் ஆட்சிக்கு வந்து தலைநகரை மதுரைக்கு மாற்ற, பிறகு மறுபடியும் திருச்சி மதுரை என்று இரு ஊர்களும் நாயக்கர் காலத்து தலைநகர்களாக மாறி மாறி இருந்து வரும் வழக்கம் தொடர்ந்தது. உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் திருச்சி பகுதியை அரசாள, மதுரையில் இவரது அண்ணன் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில்தான் இருமன்னர்கள் அடங்கிய குழுவின் ஆட்சி நடந்தது என்பதை வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உறையூரில் மன்னர் விசுவப்ப நாயக்கரின் அன்பு மகள், இளவரசி இறந்துவிடுகிறாள். மிகவும் துயருற்ற மன்னருக்கு ஆட்சியிலும் நாட்டமின்றிப் போகிறது.
கடைவீதியில் ஒருநாள் தற்செயலாக பெரியநாச்சி அம்மையாரைப் பார்த்ததும் மன்னர் வியக்கிறார். பெரியநாச்சி அம்மையார் இறந்த இளவரசியின் சாயலில் இருக்கவும் அவரைப் பற்றி அமைச்சரிடம் தகவல் சேகரித்து அவரை அழைத்துவரச் சொல்கிறார். பெரியநாச்சி அம்மையார் தனது கணவருடன் சென்று மன்னரை சந்திக்கிறார். மன்னர் தனது மகள் போலவே இருக்கும் பெரியநாச்சி அம்மையாரை அவரது மகளாகவே எண்ணுவதாகவும், அவருடன் அரண்மனையில் தங்கிவிடும்படியும் கூறுகிறார். அரண்மனை வாழ்வில் இத்தம்பதியருக்கு ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. மன்னர் பெரியநாச்சி அம்மையாரைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் அளிக்கும் பொழுதெல்லாம் வந்து சந்தித்துச் செல்வதாகக் கூறி இருவரும் திரும்பி விடுகிறார்கள். எனினும், பெரியநாச்சி அம்மையாரைக் கண்டவுடன் மன்னரும் மனக்கவலையை மறந்து ஆட்சியில் கவனம் செலுத்துகிறார். இவர்களும் தங்களது எண்ணை வாணிபத்தைத் தொடர்கிறார்கள்.
ஒருநாள் புதுக்கோட்டை பகுதியின் காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற மன்னருக்கு கிடைத்த விலங்கின் இறைச்சியை தனது மகளாகக் கருதும் பெரியநாச்சி அம்மையாருக்குக் கொடுக்க விருப்பம் ஏற்படுகிறது. அவரது சேவகர்களில் ஒருவனிடம் அதைக் கொடுத்தனுப்புகிறார். அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு, தனது நாய் துணைக்கு வர, வீடு திரும்பிக் கொண்டிருந்த வீரிய பெருமாளை அவன் வழியில் சந்திக்கிறான். சேவகன் அவரிடம் மன்னர் கொடுத்தனுப்பியதை பெரியநாச்சி அம்மையாரிடம் கொடுக்க தான் செல்வதாகக் கூற, வீரிய பெருமாளும் அது என்ன என்று தெரியாமலேயே அவர் தலைமீதிருக்கும் எண்ணெய்ப் பானையின் மீது வைக்கச் சொல்லி, தான் கொடுத்துவிடுவதாகவும் அவனிடம் கூறிவிடுகிறார். அவர் வீடு திரும்பும் வழியில் கோட்டை முனி அவரை அடித்துக் கொன்றுவிடுகிறது. உடலெல்லாம் ரத்தக்கறையுடன் நாய் பெரியநாச்சி அம்மையாரிடம் ஓடி வருகிறது. ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்து பெரியநாச்சி அம்மையார் நாயினைத் தொடர்ந்து சென்று இறந்து கிடக்கும் கணவரைக் கண்டு அழுது அரற்றுகிறார். பிறகு அவரது இறுதிக் காரியங்களை முடிப்பதற்காக உடலை வண்டியிலேற்றி உறையூருக்குத் திரும்புகிறார். வழியில் இப்பொழுது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் வரும் வண்டி அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது.
தனது கணவருக்கு அங்கேயே சிதை மூட்டும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்குகிறார் பெரியநாச்சி அம்மையார். இதற்குள் தகவலறிந்த மன்னர் விசுவப்ப நாயக்கர் அங்கு வருகிறார். இறுதி காரியங்கள் முடிந்தவுடன் பெரியநாச்சி அம்மையாரை அவர் தன்னுடன் அழைத்து சென்றுவிட விரும்புவதையும் சொல்கிறார். ஆனால், பெரியநாச்சி அம்மையார் தனது கணவனுடன் உடன்கட்டை ஏற்பப்போவதாகக் கூறி உறுதியாக மறுத்துவிடுகிறார். எனவே மன்னரும் வேறுவழியின்றி வருத்தத்துடன் சந்தனக் கட்டைகள் அடுக்கிய சிதையை அமைத்துக் கொடுக்க, பெரியநாச்சி அம்மையார் கணவருடன் உடன்கட்டை ஏறுகிறார்.
சிதை ஏறும்பொழுது, தங்களுக்கு மகன் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கை செய்ய யாருமில்லையே என்று வருந்தி கணவரின் குலதெய்வமான பெருமாளிடம் பெரியநாச்சி அம்மையார் வேண்ட, அவரது கணவரின் சொந்த ஊரில், மலையின் மீது குடிகொண்டிருக்கும் பெருமாள் வீரப்ப சுவாமியாக உருவெடுத்து வந்து, மகன் பொறுப்பினை ஏற்று சிதைக்குத் தீ மூட்டுகிறார். சில நாட்களுக்குப் பிறகு மன்னரின் கனவில் பெரியநாச்சி அம்மையார் தோன்றி தான் சக்தியின் வடிவமாக பூமியில் தோன்றி செய்ய நினைத்த கடமைகளை முடித்துவிட்டதாகவும், அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்குக் கோவில் ஒன்று எழுப்பி, அவரது குலமக்கள் வணங்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார். கனவில் தோன்றிய, தனது மகளாகக் கருதிய பெரியநாச்சி அம்மையார் சொன்னது போலவே அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்கு ஒரு கோவிலை எழுப்புகிறார் மன்னர் விசுவப்ப நாயக்கர். இன்றுள்ள கோயலின் கருவறை (உடன்கட்டை ஏறிய இடத்தில்) சுவர்களில் தீப்பிழம்புகள் படம் வரையப்பட்டுள்ளது.
காலத்திற்கேற்ற தலவரலாறு விளக்கம்:
வாய்வழியாகக் கூறப்பட்டு வந்துள்ள தலபுராணக்கதையில் ஏதோ ஓர் உண்மை இழை இருக்கிறது என்ற அனுமானத்திலும் நாம் இந்த நிகழ்ச்சியை அணுகலாம். அந்த அனுமானம்தான் இக்கட்டுரைக்கும் அடிப்படை. மக்களின் காலத்திற்கு ஒவ்வாத புரிதல்களால் இக்கதை இந்நாளில் பல இடங்களில் கேள்விகள் பல எழுப்பும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஆனாலும் தகவல்களை சரியான கோணத்தில் அணுகி, என்னதான் நடந்திருக்கக் கூடும் என்பதையும் சரிவர யூகிக்க முடியும்.
இலங்கையின் வரலாற்றை ஒரு பௌத்த தொன்ம சார்புநிலை நூலாக “மாகாவம்சம்” என்ற பெயரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேரவாத புத்தத் துறவி “மகாநாம தேரர்” என்பவர் பாலி மொழியில் எழுதினார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட “கெய்கர்” (Wilhelm Geiger) என்பார் நூல்பதிப்பின் முன்னுரையில் அந்நூலை அணுகும் முறையை,
“…that our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history”
என்று விவரிப்பார். அதே கோணத்தில் இந்தத் தலவரலாற்றிலும், இயற்கையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாத புனைவுகளைப் புறந்தள்ளி, ஊடாடிச் செல்லும் வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே கொள்வோமானால், இது நடந்த காலகட்டம் மன்னர் விசுவப்ப நாயக்கர் வாழ்ந்த காலம், தளவாய் அரியநாத முதலியார் உயிரோடு அரச குடும்பத்துடன் தொடர்பில் இருந்த காலம் என்றும் அனுமானிக்கலாம்.
அரசரிடம் இருந்து அனுப்பப்பட்ட பொருளையும், அரசரின் சேவகன் வீரிய பெருமாளுடன் பேசிக்கொண்டிருப்பதையும் கண்டவர் யாருக்கோ அப்பொருளைக் கொள்ளையடிக்கும் எண்ணம் வந்திருக்கலாம். அது என்ன என்று அறியாமலேயே வீரிய பெருமாளைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு பொருளை எடுத்துக் கொண்டோடி இருந்திருக்கலாம். அப்பொருளை இறைச்சி என்று சொல்வதே கோட்டை முனியுடன் தொடர்பு படுத்த எழுந்த எண்ணமாகவும் இருக்கலாம். அக்காலங்களில் காரணம் கூற இயலாதக் கொலைகளை பேய், பிசாசு, காட்டேறி, முனியாண்டி ஆகியோர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறிவிடும் வழக்கம் இருந்ததை நாம் அறிவோம். பெரியநாச்சி அம்மையாருக்கும் அவர் கணவருக்கும், அவரது கணவர் வழி உறவில், மகன் முறையில் உள்ளவர் யாரேனும் ஒருவர் சிதைக்குத் தீயிட்டிருந்திருக்கலாம். பிறகு இறந்தவர் நினைவாக அங்கு கோவிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.
திருச்சி புத்தூரில் இன்றும் விசுவப்ப நாயக்கர் தெரு என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது (தெரு இருக்கும் பகுதியின் புவியிடக் குறியீடு: 10°49’3″N 78°40’44″E), அது அக்கால உறையூர் நகரின் பகுதியாக இருந்திருந்திருக்கலாம். இது தற்கால அருணா தியேட்டருக்கு பின்புறம் உள்ள பகுதி. ஆனால் இத்தெருவுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவர் மன்னர் விசுவப்ப நாயக்கர் என்றும், அவர் புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கரின் பாட்டனார் என்பதும் இந்நாள் மக்களுக்குத் தெரியாது என மிக உறுதியாக நம்பலாம். இன்றைய கோவில் குளத்தின் வடக்குப் பகுதி இடுகாடாகவும் இருந்திருக்கிறது. இடுகாட்டின் பயன்பாட்டில் இருந்த குளம் (குளத்தின் புவியிடக் குறியீடு: 10°49’0″N 78°40’48″E) இப்பொழுது கோவிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்று குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.
_______________________________
கட்டுரை வழங்கும் தகவலுக்கான தரவுகளின் மூலம்:
History of the Nayaks of Madura, By R. Sathyanatha Aiyar, 1924, Humphrey Milford Oxford University Press; – see Chapter 5, Page 82 & Chapter 6, Page 89 & page 395
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி – https://ta.wikipedia.org/s/l5d
தளவாய் அரியநாத முதலியார் – https://ta.wikipedia.org/s/xy9
ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி – http://sriperiyanachiammantemple.org/
Santhipriya’s pages, By N.R.Jayaraman – http://santhipriyaspages.blogspot.com/2014/12/blog-post.html
Geiger, Wilhelm. (2013). pp. 15-6. Mahavamsa The Great Chronicle of Ceylon. London: Forgotten Books. (Original work published 1912) – http://www.forgottenbooks.com/readbook_text/Mahavamsa_The_Great_Chronicle_of_Ceylon_1000058910/15
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9
- சும்மா ஊதுங்க பாஸ் -1
- மழையென்பது யாதென (2)
- கலப்பு
- இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி
- ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
- சிறுகதைகள் மூன்று
- சிமோனிலா கிரஸ்த்ரா
- பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்
- விசுவப்ப நாயக்கரின் மகள்
- பாடம் (ஒரு நிமிடக்கதை)
- இயல்பான முரண்
- மிதிலாவிலாஸ்-13
- வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
- தொடுவானம் 67. விடுதி வாழக்கை
- பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5
- சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்
- ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை
- திரை விமர்சனம் – உத்தம வில்லன்
- பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015
- கவிதைகள்
- சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- ஐ
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு
அறிவியல் ரீதியான அரிய கட்டுரை.நன்றி.
நல்லதொரு கட்டுரையைத் தந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும், தேமொழி அவர்களே!
தேமொழி ஆராய்சிகள் செய்து இக் கட்டுரையைப் படைத்துள்ளார். இதைப் படித்த பின்பு நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரிந்தது. அத்துடன் தனவாய் அரியநாதர் முதலியார் விசுவப்ப நாயக்க காலத்திலிருந்து மதுரையின் முதலமைச்சராக இருந்து பாளையப்பட்டு திட்டத்தை அறிமுகம் செய்ததாகவும் அறிகிறோம். பின்பு மன்னர் விசுவப்ப நாயக்கர்தான் திருமலை நாயக்கரின் பாட்டனார் என்பதையும் தெரிந்துகொண்டோம். பெரியநாச்சியம்மன் திருக்கோவிலின் தள வராலாறு பற்றி விளக்கமாகவே கூறியுள்ளார். விசுவப்ப நாயக்கரின் அன்பு மகள் இளவரசி இறந்தபின் அவள் நினைவில் வாடும் அவர் தற்செயலாக கடைவீதில் இறந்த மகளைப் போன்றே பெரியநாச்சி இருந்ததைக் கண்டு வியந்து அவரைத் தன்னுடன் அரண்மனையில் இருக்கச் சொன்னதும், பின்பு அவர்கள் தங்கள் இல்லம் திரும்பியதும், அவள் கணவன் இறந்ததும் அவளும் உடன்கட்டை ஏறியதும் சிறப்பாக புரியும்படி சொல்லப்பட்டுள்ளது. தளப் புராணக் கதையில் ஆங்கங்கே சில இடைச் செறுகல்கள் இருக்க வாய்ப்பு இருந்தாலும், இதில் ஆர்வம் கொண்டவர்கள் மேலும் ஆய்வில் ஈடுபடலாம்.பாராட்டுகள் தேமொழி.
இக் கட்டுரையைப் படித்தபின்பு எனக்கு இன்னொரு எண்ணமும் தோன்றியது. நாம் பெருமையுடன் பாராட்டும் தமிழ் மன்னர்களான சோழர்களும் பாண்டியர்களும் ஆட்சி செய்துள்ள தஞ்சையையும் மதுரையையும் , இப்படி விஜயநகரத்தவரும் நாயக்கர்களும் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்துள்ள னரே! அப்போதெல்லாம் அவர்கள் எங்கு போனார்கள்? அத்துடன் முடிந்ததா அவர்களின் சரித்திரம்? அவர்கள் வைத்திருந்த தமிழர் படைகள் எல்லாம் என்ன ஆனது? இவ்வாறு தமிழர் இனம் இரண்டு நூற்றாண்டுகள் தங்களுடைய பழம் பெருமைகளையெல்லாம் மறந்து வெறும் அடிமைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ( ஒருவேளை தமிழக வரலாறு சரிவரத் தெரியாமல் இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் இது பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் கூறுவார்களானால் அவர்களுக்கும் நான் நன்றி கூறுவேன் ) …டாக்டர் ஜி. ஜான்சன்.
டாக்டர் ஜான்சன் அவர்களே,
குலசேகர பாண்டியன் இரண்டாம் பாண்டியப் பேரரசை நிலைநிறுத்தியபோது சோழர்கள் அரசாட்சி ஒரு முடிவை எய்தியது. அவன் காலத்தில்தான் மதுரை மிகவும் சிறந்து விளங்கியது. அச்சமயத்தில்தான் மார்க்கோ போலோ தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்தார். அவர் மதுரையைப்போலச் சிறந்த ஒரு நகரைக் கண்டதில்லை என்றும் வியந்து எழுதினார்.
ஆயினும், குலசேகர பாண்டியனின் இறப்பிற்குப் பின்னர், அவனது இரு மகன்களும்[வீரபாண்டியன், சுந்தரபாண்டியன்] பாண்டிய அரியணைக்காகக் தமக்குள்ள போரிட்டு நாட்டை வலுவிழக்கச் செய்தனர்.
அச்சமயம் தில்லியிலிருந்து படையெடுத்துவந்த மாலிக் காபுரால் மதுரை கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. மதுரையின் செல்வச் சிறப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
அதைக்கண்டு தில்லி சுல்தான்கள் இருமுறை மதுரையின்மீது படை எடுத்து செல்வத்தைக் கவர்ந்தனர். மதுரையில் முதல்முறையாக தில்லி சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட்டது.
விஜயநகர் சாம்ராஜ்யம் தலையெடுத்ததும், மதுரையில் நிலவிய சுல்தான் ஆட்சி நீக்கப்பட்டு மதுரை உள்பட தமிழகம் முழுவதும் விஜயநகர ஆட்சிக்கு உள்ளாகியது. தமிழகம் பல பகுதிகளாகப் பிர்க்கப்பட்டு நாயக்கர்கள் என்னும் படைத் தலைவர்களிடம் மதுரை, தஞ்சை ஒப்படைக்கப்பட்டன. தமிழர்களின் ஆட்சி குலசேகர பாண்டியனுக்குப்பின் தமிழ்நாட்டில் நடக்கவில்லை.
பாமினி சுல்தான்கள், விஜயநகரைத் தாக்கி அழித்தனர். அவர்களுக்குப் பிறகு தமிழகம் வெள்ளையர் கீழ்வந்து அடங்கியது.
இந்த வரலாறு இஸ்லாமிய வரலாற்றாளர்கள் மூலமும், பல கல்வெட்டுகள் மூலமும் கிடைக்கிறது.
சோழர்களும், பாண்டியர்களும் தமக்குள்ள இட்ட போரில் தமிழ் வீரர்கள் தொகை மிகவாகக் குறைந்தது. தில்லி சுல்தான்களின் படைஎடுப்பினால், அவர்களின் மொத்தப்போர் [totalwar] முறையினால், தமிழ்வீரர்கள்/தமிழ் அரசர்கள் தலையெடுக்கவே முடியாத அளவுக்கு அழிந்து குறைந்து போனார்கள். சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டார்கள். பாண்டியர்கள் தில்லி சுல்தான்களின் படைஎடுப்பினால் தங்கள் பலமிழந்து சிற்றரசர்களாகிப் போனார்கள். பின்னர் விஜயநகரம் தலைஎடுத்தபோது, பாண்டியர்கள் அவர்களுக்குக் திறை செலுத்தி வாழ்ந்தார்கள்.
//அவர்கள் வைத்திருந்த தமிழர் படைகள் எல்லாம் என்ன ஆனது? இவ்வாறு தமிழர் இனம் இரண்டு நூற்றாண்டுகள் தங்களுடைய பழம் பெருமைகளையெல்லாம் ….//
கி.பி.1311 ஏப்ரல் 13 ல் டில்லி சுல்தானின் தளபதி மாலிக்கபூரின் படையெடுப்பால் மதுரை சூறையாடப்பட்டது.இதற்க்கு காரணமும் தமிழனின் உள் குத்து வேலைதான்.அரச வம்சத்தில் நிகழ்ந்த சகோதர போட்டி பொறாமையின் காரணமாக மூத்தவன் வீர பாண்டியனை வீழ்த்த இளையவன் சுந்தர பாண்டியன் மாலிக்கபூரை உதவிக்கு அழைத்து மதுரையை அடிமையாக்கினான்.
தமிழனின் இதே உள் குத்து சரித்திரம்தான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி பிரிந்து ஒவ்வொரு முறையும் டில்லி ஆட்சியாளர்களின் ஆதரவோடு தமிழகத்தையும்,தமிழனையும் சுரண்டுகின்றனர்.இதில் இலங்கைத் தமிழனின் தலையும் தப்பவில்லை
நாம் பெருமை பாராட்டும் சோழர்களும் பாண்டியர்களும் அவர்கள வைத்திருந்த படைகளும் என்ன ஆனார்கள் என்ற என்னுடைய கேள்விக்கு சரித்திரப்பூர்வமான விளக்கம் தந்துள்ள திரு. ஒரு அரிசோனன் அவர்களுக்கு நன்றி.
இது தொடர்புடைய இன்னொரு கேள்வியும் உள்ளது.. பாண்டியர்களுக்குள் இரு பிரிவு. பின்பு அவர்களுக்கும் சோழர்களுக்கும் போர். பிறகு இரு சாரரும் வலுவிழந்தபோது மாலிக் காபூரின் படையெடுப்பு. அதைத் தொடர்ந்து மதுரையில் தில்லி சுல்தான்களின்ஆட்சி. பின்பு தமிழகம் முழுதும் விஜயநகர ஆட்சி. அவர்களின் கீழ் நாயக்கர்களின் ஆட்சி. இறுதியாக ஆங்கிலேயர் ஆட்சி. ஆக தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டார்கள். இதோடு முடிந்ததா தமிழ் இனத்தின் வீர சகாப்தம்? ஆங்கில ஆட்சியின் சுதந்திரம் வேண்டி போரிட்ட பாஞ்சாலங்குரிச்சி, சிவகங்கை போன்ற சிற்றரசுகள் அனைத்தும் சுல்தான்களுக்கும், நாயக்கர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வந்தவர்கள்தானா ? அதுபோன்று சுல்தான்களின் ஆட்சியின்போதும், விஜயநகர ஆட்சியின்போதும் மதுரையிலோ, தஞ்சையிலோ அல்லது வேறு எங்கோ எந்தத் தமிழ்ப் போராளியோ தமிழ்ப் படையோ அவர்களை எதிர்க்கத் தோன்றவில்லையா ? வீர வரலாறு கொண்ட தமிழ் இனம் அதன் பின்பு தலைதூக்கவே முடியாத அடிமை இனமாகவே மாறிவிட்டதா? ….. டாக்டர் ஜி. ஜான்சன்.
கட்டுரைக்கு கருத்துரைகள் வழங்கிய திருவாளர்கள் இரமேஷ், அரிசோனன், டாக்டர் ஜான்சன், மற்றும் ஷாலி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் ஜான்சனின் கேள்விகளுக்கு விளக்கமுரைத்த நண்பர்களுக்கு நன்றி.
தமிழர்கள் களப்பிரர் இருண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் துளிர்த்தெழுந்து ராஜேந்திர சோழன் காலத்தில் உலகாள புறப்பட்டது போல வளர்ந்திருந்திருக்கலாம்…ஆனால் அதற்குள் பல மாறுதல்கள் நிகழ்ந்தது. எனது கோணத்தின்படி, முக்கியமாகத் தொழில் நுட்பம் மாறிவிட்டது. துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும், பீரங்கிகளும் இல்லாது பின்தங்கிவிட்ட சூழ்நிலையில், பலத்த அடி வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி நாயக்கர்களை வெளியேற்றி இருந்தாலும் போர்முறையும் போர்க் கருவிகளும் மாறிய காலத்தில் தாக்குப் பிடித்திருக்க முடியாது.
தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்வது, தமிழர் என்ற உணர்வின்றி தங்களில் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொள்வது, கல்விப் புறக்கணிப்பு, சோழர்கள் மறைவுக்கு ஒருகாரணமாக இருந்த ஜாதிக் கலவரங்கள், மத சண்டைகள் அதிகரித்தது என பல காரணங்களையும் கூறலாம். அக்கால வரலாற்றைப் பற்றிய பதிவுகள் எதுவும் நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வை படம் பிடிக்காமல் பஜனை மடங்களாக நாட்டை மாற்றிவிட்டன. இறை இலக்கியங்கள் தவிர எதையும் இயற்ற இயலாத நிலையில் மக்கள் மழுங்கிப் போனார்கள்.
பல்லவர்கள் காலத்தில் வடக்கிலிருந்து படையெடுத்து வந்தால் அவர்கள் நிறைய அடி வாங்கினார்கள். அவர்களையும் தாண்டி தென்னகம் வருவது எளிதாக இருந்தது இல்லை. அதற்குள் பிற மன்னர்கள் எச்சரிக்கை அடைய வாய்ப்பு இருந்தது. ராஜ ராஜ சோழன் காலத்தில் பல்லவரை ஒழித்தாலும் சாளுக்கியர்களுடன் மண உறவு கொண்டு, அவர்களுடன் நட்புடன் இருந்து தங்களுக்கு எல்லைப்புற பாதுகாப்பை வளர்த்தார்கள்.
ஆனால் என்று சோழரையும் பாண்டியர்கள் ஒழித்து, பதவிக்காக தனது நாட்டின் மீது படையெடுக்க பகைவருக்கு வெற்றிலை பாக்கு வைத்தார்களோ அன்று ஒழிந்தார்கள்.
சுருக்கமாக …. அடுத்த அரசின் எல்லைகளையும் மதித்து, மன்னர்களையும் மதித்து திருமண உறவுடன் தங்களை பலப்படுத்தி, ஒற்றுமையுடன் வாழ்ந்திருந்தால், தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒற்றுமையாக மௌரியர்களை தமிழகத்தில் கால் வைக்க முடியாது செய்தது போல செய்திருக்கலாம்.
அவ்வப்பொழுது ஓரிரண்டு வீரர்கள், வேலு நாச்சியார் வரை துடிப்புடன் எழுந்து போரிட்டு உயிரிழந்தது மட்டுமே பின்னர் தமிழர் வரலாறு.
கட்டுரையைப் படிதோருக்கும், பதிவிட்ட திண்ணை ஆசிரியருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
….. தேமொழி
“ராஜ ராஜ சோழன் காலத்தில் பல்லவரை ஒழித்தாலும்” என நான் கூறியது தவறு; விஜயாலய மற்றும் ஆதித்த சோழன் எனத் திருத்திப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.
….. தேமொழி
அன்புள்ள தேமொழி, உங்கள் விளக்கம் படித்து மகிழ்ந்தாலும், மனதில் சோகமே நிலைத்துள்ளது. அதற்குக் காரணம் தமிழர்களின் வரலாறு சரிவர எழுதி வைக்கபடவில்லையே என்பதால் என்று கருதுகிறேன். உங்களுடைய கட்டுரையில் நாயக்கர்கள் ஆட்சியின்போது அந்த ஆலயம் குறித்து நீங்கள் எழுதியதால் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டபோது தமிழக வரலாற்றின் ஒரு பகுதியின் சுருக்கத்தை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு நன்றி.
பண்டைய தமிழர்கள் காதலையும் வீரத்தையும் போற்றியவர்கள் என்பதற்கு நாம் நற்றிணை,குறுந்தொகை , அகநானூறு புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களின் பாடல்களைப் படித்து மகிழ்ந்து வியக்கிறோம். உலகிற்கே நன்னெறி புகட்டும் பொது மறையாக திருக்குறளையும் உதாரணம் காட்டுகிறோம். இவற்றைப் பார்க்கும்போது தமிழர்கள் சங்க காலத்தில்தான், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் சிறந்து சுதந்திரமாக விளங்கி சங்கம் வைத்து தமிழைப் போற்றி சிறப்புடன் ஒரு தமிழ் நாட்டில் வாழ்ந்துள்ளது தெரியவருகிறது. அப்போது தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களின் படைகளின் வெற்றிகள் கடல் கடந்தும் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளன. அவர்களால் எழுப்பப்பட்ட பல புராதன ஆலயங்கள் இன்றும் சாட்சி பகர்கின்றன. ஆனால் அங்கு எங்கும் அவர்களால் தொடர்ந்து நிலையான ஆட்சி நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.அந்த கால கட்டத்தில்தான் தமிழகத் துறைமுகங்களில் ரோமாபுரி வணிகர்கள் வாணிபம் புரிய வந்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது. இத்தகைய சிறப்பாக வாழ்ந்த நம்முடைய தமிழினம் பல்வேறு காரணங்களால் பிளவுண்டு, பொலிவிழந்து, தன்மானம் இழந்து, படிப்படியாக அடுத்தவருக்கு அடிமைகளாகும் நிலை உருவாகியுள்ளது. அந்த அடிமைத்தனமே இன்றும் நிலைத்துள்ளது என்பது வேதனையானது. சுதந்திரமாக வாழ்ந்த தமிழ் இனம் ஏன் இப்படிப் பிளவுண்டு சின்னாபின்னமானது? அந்த அடிமைத்தனம் எப்போது, யாரால், எப்படி வந்தது என்பதைத் தெரிந்தவர்கள் கூறினால் நல்லது…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
//சுதந்திரமாக வாழ்ந்த தமிழ் இனம் ஏன் இப்படிப் பிளவுண்டு சின்னாபின்னமானது? அந்த அடிமைத்தனம் எப்போது, யாரால், எப்படி வந்தது என்பதைத் தெரிந்தவர்கள் கூறினால் நல்லது//
சங்க காலத்திலிருந்து தமிழ் மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டு ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துத்தான் வந்திருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் ஜ. பிரேமலதா எழுதிய “சங்ககாலத்தில் போரும், அமைதியும்” என்ற கட்டுரைத் தொடர் [தாரகை இணையத்தில் வெளிவந்தவை] இதுபற்றி விளக்கும்.
மூவேந்தர்களுக்குள் போட்டியும் சண்டையும் இருந்தபோதிலும், மணவினை இருந்துகொண்டுதான் இருந்தன. புகழ்பெற்ற மங்கையர்க்கரசி என்னும் சைவநாயனார் பாண்டிய அரசனை மணந்த சோழ இளவரசிதான்.
ஆயினும், என்று ஆதித்த கரிகாலன் [இராஜராஜ சோழனின் தமையன்]பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையைக் கொய்து, பழையாறை நகர் வாயிலில் செருகி தனது பெருமையைப் பறை சாற்றினானோ, அப்பொழுதே சோழருக்கும் பாண்டியருக்கும் ஜன்மப் பகை துவங்க ஆரம்பித்தது.
இராஜராஜன் காலத்திலிருந்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பாண்டியநாடு சுதந்திரமின்றி சோழ அரசர்களால் அடக்கி ஆளப்பட்டது. மேலும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியர்களின் அரசாணி மண்டபம் அழிக்கப்பட்டு, மதுரை கொளுத்தப்பட்டது. கழுதைகள் கொண்டு உழப்பட்டட்டு, எருக்க விதைகள் தூவப்பட்டன.
இந்த அவமானத்திற்குப் பழிவாங்க பிரிந்திருந்த பாண்டிய மன்னர்களை ஒன்றிணைத்து, மூன்றாம் குலோத்துங்க சோழனைத் தோற்கடித்து அவனை நாடு கடத்தினான் “மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன்”.
அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
மாறவர்மனுக்குப்பின் வந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நாடு முழுவதையும் பாண்டியர் ஆட்சிக்குள் கொண்டுவந்தான். பாண்டியப் பேரரசு மூன்றாம் முறையாகத் தலையெடுத்தது. குலசேகர பாண்டியன் காலத்தில் கங்கைகொண்டசோழபுரம் அழிக்கப்பட்டது. சோழர் குலமே பாண்டியர்களால் பூண்டோடு அழிந்தது. பாண்டியர் ஆட்சி உச்சம் பெற்றது.
அவனது மகன்கள் அரசுக்காக நிகழ்த்திய உள்நாட்டுப்போர் நாட்டையே வலுவிழக்கச் செய்தது.
டில்லி சுல்தான்களின் படையெடுப்புகள் தமிழ்நாட்டின் செல்வம் களவுபோகக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில் — சோழர்களும் இல்லை — பாண்டியர்களை இணைக்கும் பாலமான வலுவான பேரரசனும் இல்லைதா நிலைமையில், வெளியிலிருந்து யார் படைஎடுத்தாலும், எதிர்த்து நிற்க யாருமில்லாதுதான் போயிற்று.
மதுரை டில்லி சுல்தான்கள் வசமும், தஞ்சை மராட்டியர் வசமும் போனது. பின்னர் தமிழ்நாடே விஜயநகரப் பேரரசின் கீழ் அடங்கியது.
வலுவான, தன்னலமற்ற தலைவர்கள் இல்லாதபோது — வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கர்கள் வெறும் குறுநில மன்னர்கள்தான். அவர்கள் படைகள், ஆயுத பலம் வெள்ளையரின் போர்த் திறமை முன்னும், பிரித்தாளும் சூழ்ச்சியினாலும் வலிவிழந்து தோற்றோடியது.
இன்னும் தமிழர்கள் பலவாறு பிரிக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்! “இவன் உண்மையான தமிழன் இல்லை, அவன் உண்மையான் தமிழன் இல்லை; இவன் வந்தேறி, அவன் வந்தேறி!” என்று தமிழ் இனத்தைத் தங்கள் அரசியல் இலாபத்தற்ர்காகக் கூறுபோட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்!
ஆகவே, டாக்டர் ஜான்சன் அவர்களே, //சுதந்திரமாக வாழ்ந்த தமிழ் இனம் ஏன் இப்படிப் பிளவுண்டு சின்னாபின்னமானது? அந்த அடிமைத்தனம் எப்போது, யாரால், எப்படி வந்தது என்பதை//த் திட்டவட்டமாகச் செல்ல இயலாது. சங்ககாலத்திலிருந்து தமிழர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில நூற்றாண்டுகள், சில பேரரசர்கள் தென்னட்டையே கட்டி ஆண்டார்கள். அவர்கள் செய்த மாபெரும் தவறுகள் அவர்களையே அழித்துவிட்டது. நாட்டைத் தூக்கி நிறுத்தும் தலைவர்கள் இல்லாத தமிழகம் தன்னையே இழந்து அடிமையாக ஆனது. இன்றும் அடிமையாகவே இருந்து வருகிறது.
வேறென்ன சொல்ல இயலும்?
//சுதந்திரம் வேண்டி போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை போன்ற சிற்றரசுகள் அனைத்தும் சுல்தான்களுக்கும், நாயக்கர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வந்தவர்கள்தானா? //
விஜயநகர நாயக்கர்களில் முக்கியமானவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர். அவருக்கும்பின் புகழ்கொண்டவர் ராணி மங்கம்மாள்.
அவர்கள் காலத்தில் விஜயநகரப் பேரரசு வலுவிழந்ததால், நாயக்கர்கள் தனிக்கொலோச்சத் துவங்கினார்கள். அவர்களும் வலு இழந்ததும், பாளையக்காரர்கள் தலைதூக்கி, தனித்தனியாக, சுதந்திர ஆட்சி செய்தார்கள்.
முதன் முதலாக வெள்ளையர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர் பூலித்தேவர் என்று அழைக்கப்பட்ட பாளையக்காரர் புலித்தேவர். அவர்களிடம் வெள்ளையர்களை எதிர்க்கும் அளவுக்குப் படைகளோ, வலுவான கோட்டைகளோ இல்லை. அவர்களின் கோட்டைகள் வெள்ளையர்களின் பீரங்கிகளால் உடைத்துத் தகர்க்கப்பட்டன.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் ஒரு மிகச் சிறிய பகுதியை ஆண்ட குறுநில மன்னர். அப்பொழுது இராமநாதபுரம் சேதுபதி வெள்ளையர் ஆட்சிக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டார். அவர் கட்டபொம்மனை விட அதிக நிலப்பகுதியில் ஆட்சி செலுத்தினார். எனவே, கட்டபோம்மனால் அதிக நாள்கள் வெள்ளையருக்கு எதிராக தாக்குப் பிடிக்க இயலவில்லை. அவர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு கயத்தாற்றில் தூக்கில் இடப்பட்டார்.
அவரது தம்பி ஊமைத்துரை சிவகங்கையை ஆண்ட ஜமீன் பரம்பரையான வேலுநாச்சியாரிடம் தளபதிகளாக இருந்து, பின்னர் மன்னர்களாக ஆகிய மருது சகோதரர்களிடம் தஞ்சம் புகுந்தார். அவர்களும் வெள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
இங்கு நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாலையக்காரர்களுக்கு வீரம் இல்லாமல் இல்லை. அவர்கள் தனித்து விடப்பட்டார்கள். அவர்களிடம் இருக்கும் போட்டியை அறிந்துகொண்ட வெள்ளையர்கள், நட்பு பாராட்டிய மற்ற குறுநில மன்னர்களின் உதவியுடனும், தங்கள் வலிமிகுந்த ஆயுதங்களுடனும், அதிக படைபலத்துடனும் போரிட்டு வெற்றிபெற்றார்கள்.
பாளையக்காரர்களின் படைபலத்தை, ராஜராஜன், குலசேகரபாண்டியன் இவர்களின் படைபலத்துடன் ஒப்பிட்டால், மிகமிகக் குறைவே!
//அதுபோன்று சுல்தான்களின் ஆட்சியின்போதும், விஜயநகர ஆட்சியின்போதும் மதுரையிலோ, தஞ்சையிலோ அல்லது வேறு எங்கோ எந்தத் தமிழ்ப் போராளியோ தமிழ்ப் படையோ அவர்களை எதிர்க்கத் தோன்றவில்லையா ?//
நாயக்கர் ஆட்சியில் அவர்களை எதிர்த்துப் போரிடும் அளவுக்குப் பெரிய படைபலம் யாரிடமும் இல்லை. வீரமிக்க மறவர் ஜனத்தொகை மிகக் குறைந்துவிட்டது. பிரிந்து இருந்த சில பாண்டிய மன்னர்களும் நாயக்கர்களுக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தார்கள்.
நாயக்கர்கள் பலம் குன்றியவுடன், தஞ்சையை மராட்டியர் கைப்பற்றி, அங்கு அவர்கள் ஆட்சி நடந்தது. தஞ்சையைக் கடைசியாக ஆண்ட சரபோஜி, தஞ்சையைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும், வெள்ளையர்களுக்குத் திறை செலுத்தி [as a vassal state], சென்னை ராஜதானியில் [Madras Presidency] அடங்காமல் தன்னிச்சையாக ஆட்சி செய்தது. இந்தியா குடியரசு ஆகியதும், புதுக்கோட்டை சமஸ்தானம் சென்னை மாநிலத்துடன் ஒன்றியது.
கேரளாவிலும் நாயர் படைகள் திப்பு சுல்தானாலும், வெள்ளையர்களாலும் தாக்கி அழிக்கப்பட்டன.
வலுவான தமிழ்ப் பேரரசு [சேர, சோழ, பாண்டிய]இல்லாததே அதற்குக் காரணம்.
வரலாற்றின் இன்னொரு உண்மையும் இருக்கிறது.
எந்தப் பேரரசும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ததில்லை.
உரோமானியப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு, களப்பிரர்கள், முதலாம் பாண்டியப, சோழப் பேரரசுகள், களப்பிரர்களை ஒழித்து தமிழகத்தின் இரு பகுதிகளை ஆண்ட பல்லவ, இரண்டாம் பாண்டியப் பேரரசுகள், விஜயாலய சோழன் நிறுவிய இரண்டாம் சோழப் பேரரசு இராஜராசனால் விரிவாக்கப்பட்டு இருநூறு ஆண்டுகள் தென்னாட்டையும், இலங்கையின் பெரும்பகுதியையும் ஆண்டது. அதற்குப்பின் வந்த மூன்றாம் பாண்டியப் பேரரசு தமிழ்நாட்டையும், வடஇலங்கையையும் நூறு ஆண்டுகள் ஆண்டது. அத்துடன் தமிழர் ஆட்சியையும் முடிவை எய்தியது.
நாம் பழங்கதை பேசலாம். ஆனால் நமக்குள் நாம் கூறுபோட்டுக்கொ[ல்]ள்வதை நிறுத்தி, தமிழ் ஒற்றுமைக்காக இணைகிறோமோ, நம் மனதில் அறுநூறு ஆண்டுகளுக்கோம் மேலாக நிலவிவரும் அடிமைத்தனத்தைக் கலைகிறோமோ — சாதி ஒழிக என்று வெறும் கூக்குரல் இடாமல், சாதி, சமய நல்லிக்கத்தை வளர்க்கிறோமோ, அதுவரை தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க இயலாது என்பதை மிக வருத்தத்துடன் முன்வைக்கிறேன்.
///
நாம் பழங்கதை பேசலாம். ஆனால் நமக்குள் நாம் கூறுபோட்டுக்கொ[ல்]ள்வதை நிறுத்தி, தமிழ் ஒற்றுமைக்காக இணைகிறோமோ, நம் மனதில் அறுநூறு ஆண்டுகளுக்கோம் மேலாக நிலவிவரும் அடிமைத்தனத்தைக் கலைகிறோமோ — சாதி ஒழிக என்று வெறும் கூக்குரல் இடாமல், சாதி, சமய நல்லிக்கத்தை வளர்க்கிறோமோ, அதுவரை தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க இயலாது என்பதை மிக வருத்தத்துடன் முன்வைக்கிறேன்.///
ஒற்றுமையாக இல்லாததால் அழிவு ஏற்பட்டது வரை சரியே.
ஒற்றுமையாக இருக்க சாதி மத பேதங்களை விட்டொழியுங்கள் என்று கூறுவது சாலச் சிறந்தது.
இதனை கூக்குரல் என்பது சரியில்லையே.
///சாதி ஒழிக என்று வெறும் கூக்குரல் இடாமல், சாதி, சமய நல்லிக்கத்தை வளர்க்கிறோமோ
///
பிரிவுகள் ஒழிந்தால் நல்லிணக்கம் தானே வரும். சாதிகளை இடைவிடாது விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு … அதில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு கலவரம் செய்து கொண்டிருந்தால் எங்கிருந்து நல்லிணக்கம் வரும்?
பேதங்களே வேண்டாம் ஒழித்துக் கட்டுங்கள் என்பதை கூக்குரல் என்பது சரியில்லையே.
//பேதங்களே வேண்டாம் ஒழித்துக் கட்டுங்கள் என்பதை கூக்குரல் என்பது சரியில்லையே.//
பேதங்களே வேண்டாம் என்பது சாலச் சிறந்தது. அதையே நீங்கள், நான் உள்பட அனைவரும் விரும்புகிறார்கள்.
கூக்குரல் என்பதை, “lip-service” என்னும் பொருளில் பதிந்திருக்கிறேன்.
இன்று “சாதி ஒழிக” என்பது வெறும் lipservice ஆகவே இருக்கிறது.
ஒருபுறம் சாதி ஒழிக என்று சொல்லிக்கொண்டு, இன்னொருபுறம் சாதிச்சலுகை வேண்டும் என்பதற்குப் பல்லாயிரம் காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படி நடந்துகொள்வது lipserviceதான், கூக்குரல்தான்.
என்று நாம் ஒன்றை ஒழிக்கவேண்டும் என்று முயலுகிறோமோ, அப்பொழுது வன்முறை தோன்றும். இது கண்கூடான உண்மை. இதுதான் பல இடங்களில் நடக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
அதை விடுத்து, நல்லிணக்கம் ஏற்படுத்த முயன்றால், வேறுபாடுகள் தானே மறைந்துவிடும். நல்லிணக்கம் ஏற்பட்டு ஒன்று தானாக மறைந்து போவதற்கும், ஒன்று ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
அதைத்தான் நான் குறிப்பிட்டேன். மீண்டும் பதிகிறேன்.
நல்லிணக்கம் வந்தால்தான் பிரிவுகள் மறையும். உயர்வும் தாழ்வும் எதிலும் இல்லை.
உதாரணமாக, கருப்பு-வெள்ளை வேற்றுமை பாராட்டாதே என்று சொல்லலாம்; கருப்பு-வெள்ளையையே ஒழிக்கவேண்டும் என்றால்… அது முடிகின்ற ஒன்றா?
சமய நல்லிணக்கம் வேண்டும் எனலாம்; அனைவரும் நமக்கு உறுதுணையாக நிற்பார்கள். சமயங்களையே ஒழியுங்கள் என்றால்…, நமக்கு உறுதுணையாக வருபவர்கள்கூட நம்மைவிட்டு நீங்குவார்கள். எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும்? இதுதான் உலகம்; இதுதான் நடப்பு.
இறைவன்முன் யாவரும் ஒன்றே! சரிசமமே! இந்த எண்ணம் தோன்றினால் யாரும் உயர்வில்லை, யாரும் தாழ்வில்லை. எல்லோரும் நல்லவரே! எல்லோரும் உயர்ந்தோரே!
தமிழக வரலாறு பற்றி நல்ல விளக்கம் தந்த திரு. ஒரு அரிசோனன் அவர்களுக்கு நன்றி. அது பற்றிய கருத்து கூறிய கட்டுரை ஆசிரியர் தேமொழிக்கும் வாழ்த்துகள்.
இதன்மூலம் தமிழ் மக்களின் பொற்காலம் சங்க காலம் என்பதை அறிகிறோம். இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டுவரை உள்ள ஆறு நூற்றாண்டுகள் எனலாம். அப்போது சேர சோழ பாண்டிய தமிழ் மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் மூன்று பிரிவுகளாக ஆளப்பட்டு வந்தது.அவர்களுக்குள் அவ்வப்போது போர்கள் நடந்தாலும் அது நமக்குள் நடந்த போர்கள்தான் என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். அனால் அதன்பின் அந்த மூன்று பிரிவினரின் ஆட்சிகள் முற்றாக முடிந்தபோது நாம் அன்னியரின் ஆட்சியில் அடிமைகளானோம் என்பதே உண்மை. அந்த அடிமைத்தனத்திலிருந்து நாம் இன்னும் விடுபட்டு எழவே இல்லை என்பதும் உண்மை. ஆகவே தமிழினம் கடந்த பல நூற்றாண்டுகளாக அடிமை இனமாகவே வாழ்ந்து வருகிறது என்பதையே நம் வரலாறு கூறுகிறது. இதை நாம் அறியாமலேயே எவ்வித இன உணர்வும் இல்லாமலேயே அடுத்தவருக்கு அடிமைகளாகவே வாழ்ந்து அவர்கள் இடும் பிச்சையையும் சில சலுகைகளையும் பெரிதாக எண்ணியே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம்.
இத்தகைய பழங்கதை பேசி பெருமை கொள்வதில் பயனில்லைதான்! அந்த பெருமைகள் மீண்டும் வரப்போவதில்லை. மீண்டும் சேர சோழ பாண்டியர் போன்றவர்களின் மன்னர் ஆட்சி இக்காலத்துக்கு உகந்ததும் அல்ல. சங்கப் புலவர்கள் போல் இன்று புலவர்கள் எழுதப்போவதும் இல்லை. எழுதவும் முடியாது! அன்றைய புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற தமிழ்க் காவியங்கள் இனி தோன்றப்போவதுமில்லை! இனி ஒரு வள்ளுவர் தோன்றி திருக்குறளை விஞ்சும் அளவுக்கு இன்னொரு தமிழ் மறை எழுதப்போவதுமில்லை! இன்னொரு இளங்கோ தோன்றி சிலப்பதிகாரம் எழுத முடியாது! நாம் சுமார் 2500 வருடங்களுக்கு முன் அவர்கள் எழுதிய ஒப்பற்ற சங்க இலக்கியங்களைப் படித்து புரிந்து கொண்டாலே போதுமானது! அவற்றை அழியா பொக்கிஷங்களாக பாதுகாத்தாலே போதுமானது! நம்முடைய பிள்ளைகளும் வருங்கால சந்ததியினரும் அவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வார்களா என்பதே பெரும் கேள்விக்குறிதான்!
இத்தகைய பரிதாப அடிமைச் சூழலில் தமிழ் இனம் ஒன்றுபட்டு உயர்வு காணமுடியுமா என்பதே என்னுடைய ஆதங்கம். கல்வியிலும் வாழ்க்கை முறையிலும் நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். ஆனால் நாம் அனைவரும் ஓரினம் என்பதை மட்டும் ஏன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? இந்த அறிவுக்கு அப்பாற்பட்ட சாதி என்னும் மூட நம்பிக்கையிலிருந்து ஏன் விடு பட மறுக்கிறோம்? இதுவும் ஒரு அடிமைத்தனமா? உலகின் நாடுகளையும் அங்குள்ள மனிதர்களையும் நாம் பார்த்தாவது திருந்தவேண்டாமா? நாம் வழிபடும் எந்தக் கடவுள் சாதிகள் உள்ளது என்று போதிக்கிறது? இது பற்றி மதங்களைப் பற்றி அறிந்தவர்கள் ஏதாவது விளக்கம் கூறினால் நல்லது.
இன்றைய தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டைப் போடுவது சாதி என்ற முட்டாள்தனம்தான்! இதை பல்கலைக்கழகம் சென்று படித்து பட்டம் பெற்றவர்களும் நம்பினால் அவர்கள் படித்த முட்டாள்கள்தான்!
தமிழ் மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் சாதிகள் இல்லை என்று சபதம் கொண்டு வாழ்வதோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லித் தந்தால்தான் சாதி என்னும் மூட நம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கலாம்.
சாதிகள் இல்லாத புதிய தமிழ்ச் சமுதாயம் உருவாகி தன்மானத்துடன் வாழும் தமிழ் இனம் காண்போம்! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
நல்லிணக்கம் என்பது வேற்றுமையே இல்லாது இருக்கும்பொழுதும்…அதாவது ஒரே ஜாதி, மதம், இனம், மொழி இருப்பவர்களிடமும் இருக்காது. அது மனித இயல்பு, ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள்.
நீக்கக் கூடிய வேற்றுமையை நீக்க இயன்றால் அதனால் வரும் சண்டை குறையும். அதனால் அதை நீக்கிவிடுங்கள் என்றால்… அவ்வாறு கூறுவது “கூக்குரல்” என்பது உங்கள் புரிதலாக இருப்பது வருத்தம் தருவது.
இருப்பினும் கட்டுரைக்குத் தொடர்பற்ற விவாதத்தை தொடர விரும்ம்பவில்லை. உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி திரு. அரிசோனன்