விபத்தில் வாழ்க்கை

 

 

எண்ணங்களின் கனத்தில்

உடைந்து விழுந்துவிட்டேனா

என்று தெரியவில்லை.

இல்லை மௌனம்தான்

பெருஞ்சுமையாய்

அழுத்திற்றோ என்னவோ!

 

ரயில் விபத்தில்

சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல

என் எண்ணங்களும்

ஒன்றின்மேல் ஒன்று

ஏறிக்கொண்டு

காயப்பட்டுக் கிடக்கிறது.

 

எனினும்

தூரத்துச் சந்திரனோடு

பயணித்து

என் விடியலைக் கண்டுவிடலாம்

என்ற என் பால்வீதிக் கனவைக்

கவிதையாக்கிக் கொடுத்தேன்.

 

நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில்

கடவுளை முன்னிறுத்தி

நான் உலகத்திற்கான

கனவு விடியலை

என் வாழ்க்கையின் பாடலாகக்

காட்டிவிட்டதாகப்

பெருமை பேசுகிறார்கள்!

 

ஒரு பாடலின் அளவில்

என் வாழ்க்கையை அளந்ததில்

மீண்டும் என் நினைவுகள்

விபத்திற்குள்ளான

ரயில் பெட்டிகளாயிற்று.

 

Series Navigationஅம்மாஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை