விளம்பரக் கவிதை

ஜே.பிரோஸ்கான் 
உன் கவிதையொன்றினை படித்தேன்
உள்ளம் கவலையாகி நொதிந்தது.
அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள்
பல முறை விழுந்து நான்
தப்பிக்க முடியாமல் தோற்றுப் போனதில்
நீ என்னம்மோ சந்தோசிக்கலாம்.
கவிதை படுகுழி நோக்கி நகர்கிறது.
தூசிக்கும் சொற்களால் அலங்காரமிட்டு
அங்க உணர்வுகளை துகிலுரித்து நீ
ஆடை தொலைக்கிறாய்.
ஆசை மெழுகுவர்த்தியேற்றி விசுவாசம் புரிகிறாய்..
ஏதோ நான் சொல்லவே கூச்சப்படும் ஒரு
சமாச்சாரத்தைப் பற்றி.
நீ கலிமா மொழிந்தவளாய் இருக்கிறாய்
ஹரம் தரிசிக்க உரித்தானவளாய் இருக்கிறாய்
உயிரை பிரசவிக்க தகுதியுடையவளாய் மிளிருகிறாய்
மரணம் பற்றி அறிந்தவளாய் விகசித்து பேசுகின்ற நீ.
எழுத்தில் மட்டும் நரகத்தை பிரகடனம் பண்ணுகிறாயே?
என் மனசு திட்டித்தீர்க்கின்றது -உன்
கவிதையை படித்த குற்றத்திற்காக.

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24படித்துறை