வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

முனைவர் மு. பழனியப்பன்
தமிழாய்வுத்துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி
சிவகங்கை

மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு தனிமனிதனின் விடுதலை மிக்க இடமாகும். ஒரு மனிதன் தனக்கான வசதிகளை தானெ தேடிச் சேர்த்து அவற்றை அனுபவிக்கும் நிம்மதியான இடம். இந்த நிம்மதியான வீட்டை விட்டு அம்மனிதன் துரத்தப்பட்டால், அல்லது இடம் மாற்றப்பட்டால், என்ன என்ன கவலைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. வீட்டினை மாற்றினால் அல்லது வீட்டினைவிட்டுப் பிரிந்தால் ஒரு தனிமனிதனின் நிலைப்புத் தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அதில் இருந்து அவன் மீண்டு அவன் இன்னொரு வீட்டினைக் கட்டியாக வேண்டும். பழைய வீட்டின் மாதிரியை உள்வாங்கி இன்னும் பல வகை வசதிகளை உடையதாக ஒரு பெரிய வீட்டை அவன் உருவாக்கி அங்கு வாழப் பழகவேண்டும்.

சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் தங்கி வாழ்ந்த வீட்டினைவிட்டுப் பிரிய வேண்டிய காலம் வந்தது. பூம்புகார் நகரத்தில இருந்து அவர்கள் மதுரையை நோக்கிப் பயணப்படப் போகிறார்கள். அந்தச் சூழலை இளங்கோவடிகள் பண்பாடு சார்ந்து படைத்தளிக்கிறார்.

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப
என்று கோவலன் பிரிந்த காலத்தை இளங்கோவடிகள் சுட்டுகின்றார். இந்தப் பாடல் பகுதியில் ஞாயிறு தோன்றாத வைகறைப் பொழுதில் கோவலனும் கண்ணகியும் புகார் நகரத்தை விட்டுக் கிளம்புகின்றனர். வானத்தில் விண்மீன்களும், நிலவும் மறையத் தொடங்கிவிட்டன. அந்த அடர் இரவுப் பொழுதில் அவர்கள் மதுரையை நோக்கி ஊழ்வினை துரத்தச் சென்றனர் என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.

இதுவரை நிலையாக நினைத்து வந்த மாளிகை வாழ்க்கை இனி இல்லாமல் போகப் போகிறது. நாளை எங்கு எப்படி விடியும் எங்கு தங்குவது என்பது எதுவும் தெரியாமல் இவர்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

கோவலனும் கண்ணகியும் மாளிகையை விட்டுக் கிளம்புகையில் கையில் எப்பொருளையும் எடுத்துச் செல்ல எண்ணவில்லை. இக்காலத்தைப்போல கிளம்புதற்கு முன்னால் ஊர் பயணத்திற்குத் தேவைப்படுவனவற்றைத் தொகுத்து எடுத்துச் செல்ல நேரமும் அவர்களுக்கு இல்லை. மனமும் இல்லை. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையை இளங்கோவடிகள்

‘‘ நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு ’’
என்று குறிப்பிடுகின்றார். நீண்ட நெடிய வாயிலை இருவரும் கடக்கின்றனர். நெடுங்கடை கழிந்தாங்கு என்ற குறிப்பு அக்கால கட்டிடக் கலை சார்ந்த குறிப்பு ஆகும். அதாவது நெடிய பத்தியை உடைய வீட்டின் தலைவாசல் நெடிய கதவுகளுடன் இருக்கும் என்ற குறிப்பு இங்கு கிடைக்கிறது. இந்தக் குறிப்பு அப்படியே நகரத்தார் வீடுகளுக்குப் பொருந்துகிற குறிப்பு ஆகும். நெடியவாயில் கடக்கும் அவர்கள் சாவி கொண்டு தன் வீட்டைப் பூட்டியதாக குறிப்பு இல்லை. பூட்டினால் சாவியை யாரிடம் கொடுப்பது. கொண்டு செல்லவும் முடியாத அளவிற்கு அச்சாவி பெரியது. இதனால் பூட்டாமலே அவர்கள் சென்றதாக கருத இயலும். வீட்டைப் பூட்டாமல் சென்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது திரும்ப வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால்தானே அந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும். திரும்புவதில்லை என்ற நிலையில்தான் இவர்கள் கிளம்புகிறார்கள்.

வீட்டினை விட்டு வெளியே வந்த பின் உடனே அவர்கள் மதுரைப் பயணத்தைத் தொடங்கிவிடவில்லை. பாம்பணையில் துயிலும் மணிவண்ணன் கோயில், அரசமரத்தின் அருகில் இருக்கும் புத்த தேவரின் அருளுரைகளை விரித்துரைக்கும் ஏழு இந்திர விகாரங்கள், அருகப் பெருமான் கோயில், அருகப் பெருமானின் உரைகளை எடுத்துரைக்கும் சிலாவட்டம் என்னும் சந்திரகாந்தக் கல்லால் ஆன மேடை ஆகியனவற்றைக் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.

இந்தச்சூழலை எண்ணிப் பார்க்கையில் கோவலன் எவ்வளவு தூரம் தான் பிறந்த நகரத்தினை நேசித்து இருக்கிறான் என்பது தெரியவரும். ஊருக்குப் போகிறோம். திரும்பித் தன் ஊருக்கு மீண்டும் வருவோம் என்ற உறுதி இல்லாத சூழலில் கோவலன் தன் வீட்டை விட்டு வெளியேறுகையில் தன் ஊர்த் தெய்வங்களை வணங்கி விடைபெறும் முறைமை இக்காலத்திலும் மக்கள் ஏற்றுச் செய்து கொண்டிருக்கும் முறைமை, செய்யவேண்டிய முறைமை என்பது குறிக்கத்தக்கது.

கோவலன் பல பாராட்டுகளைப் பெற்றுத் தன் பிறந்த நகரத்தை விட்டுச் செல்லவில்லை. அவனின் விதி அவனிடம் விளையாடிய காரணத்தினால் அவன் ஊரைவிட்டுச் செல்ல வேண்டியவனானான். இந்த நிலையில் ஊராருக்குச் சொல்லாமல், தன் உறவினர்களுக்குச் சொல்லாமல், தன் பெற்றோருக்குச் சொல்லாமல் பிரியும் இந்தப் பிரிவு சிலப்பதிகாரத்தினைப் படிப்பவர்கள் இடையில் பெருத்த வருத்தத்தைத் தந்து விடுகின்றது.

ஒரு மனிதனின் இடப் பெயர்வு என்பது அவனின் நிலைப்பாட்டை, அவன் சார்ந்த குடும்ப நிலைப்பாட்டை சற்றே இடையீடு செய்வது என்பதற்கு இதைவிட சிறந்த சான்று இலக்கியத்தில் இருக்க முடியாது.

சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் பிரிவதற்கு நண்பகல் சிறுபொழுதாக குறிக்கப் பெற்றிருந்தாலும் இளங்கோவடிகள் ஏன் காலைப் பொழுதைப் பிரிவிற்காக இங்கு எடுத்துக் கொண்டார் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பகல் பொழுதில் பிரியும் பிரிவு இடையீடு பட்டு விடும் என்று எண்ணிய கோவலன் காலையில் கிளம்பியிருக்கலாம் என்றாலும், கோவலனின் பிரிவு என்பது ஊடல் சார்ந்த பிரிவு. பரத்தை ஒருத்தியின் இணைப்பால் ஏற்பட்ட இழப்பு என்பதால் ஊடலுக்கான சிறுபொழுதான வைகறையைத் தேர்ந்து எடுத்திருக்கலாம் என்று முடியலாம். எவ்வாறு ஆனாலும் சிற்சில் வரிகளில இலக்கிய மாந்தரின் இதயத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவராக இளங்கோ விளங்குகிறார் என்பதற்கு மேற்காட்டிய பகுதி சான்றாகிறது.

muppalam2006@gmail.com

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு