வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து

 

தமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குப்பை மேடுகள் உருவாவதும் அதை கொண்டாடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டன. எல்லாமே ஒரு விளையாட்டு தான் என்பது மாதிரி எல்லாமே புத்தகங்கள் தான் என்பதாக மாறிவிட்டன. இந்நிலையில் புத்தக வாசிப்பும், தேர்ந்தெடுப்பும், தேடலும் சலிக்கப்பட முடியாத சூழலாக உருமாறி விட்டன. இதன் தொடர்ச்சியில் புத்தகங்கள் மீதான விமர்சன கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தையும், மதிப்பீட்டையும் தேர்ந்த வாசகர்களுக்கு அளிக்கின்றன. தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான கூட்டங்கள் அபூர்வம் என்றாலும் ஆங்காங்கே இருக்கும் ஆர்வலர்களின் முயற்சியால் மிகுந்த சிரமத்தோடு கூட்டங்கள் நடக்கத் தான் செய்கின்றன. 

இமைகள் இலக்கிய வட்டம் சார்பாக வேலூர் மாவட்டமான ஆம்பூரில் அதன் இயல்பான வெப்ப கொதிப்பை மீறி மழை நனைத்துச் சென்ற தணுமையான மாலைவேளையில் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்ற என் சமீபத்திய புத்தகத்திற்கான விமர்சன கூட்டம் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்தது. எழுத்தாளர் நாகூர் ரூமி தொடக்க உரையாற்றினார்.அவரின் பேச்சில் இயல்பான நளித்தனம், அவலங்கள் குறித்த கிண்டல் இவை அதிகம் இருந்தது. மேலும் தமிழுக்கு இது முக்கியமான வரவு என்றும், ஓரியண்டலிசம், பின்காலனியம் குறித்து அறிய விரும்புபவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும் என்றார். விமர்சன உரையாற்றிய அழகியபெரியவன் புலம்பெயர்தல் குறித்து இந்நூலிலிருந்து அதிக விவரங்களை சேகரிக்க முடிந்தது என்றார். உலக வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத துயரம், அவர்களின் மனக்கொதிப்பு, வலிகள் இவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதற்கான பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் சூழல் குறித்த உதாரணங்களை தன் பேச்சில் அடுக்கினார். மேலும் இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கீழைச்சிந்தனையாளர்களின் கருத்தியல் நிலைபாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார். குறிப்பாக கீழ்திசை நாடுகளின் சிந்தனைகள் எவ்வாறு வரலாற்றில் தொடர்ந்து உரையாடுகின்றன என்பதை குறித்த கருத்தையும் முன்வைத்தார்.மேலும் பெண்களை ஒடுக்குவதிலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவதிலும் எல்லா மதங்களுமே ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன என்ற கருத்தையும் முன்வைத்தார். இந்தியாவில் தலித் ஒடுக்கப்படுவதை இப்புத்தகத்தின் நிலைப்பாட்டிலிருந்து நீட்சியாக பேசினார்.இந்தியாவில் ஒடுக்கும் சமூகம், ஒடுக்கப்படும் சமூகம் இவற்றிற்கிடையேயான முரணின் தாக்கம் வீரியமடைந்து வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்த என் உரையில் விமர்சனங்கள் குறித்த பதிலை முன்வைத்தேன். மேலும் கீழைச்சிந்தனையாளர்கள் குறித்த என் அறிமுகத்தையும் அதனோடு இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து கவிதை வாசிப்பு நடந்தது. தொடக்க நிலையான,மாறுபட்ட ரசனை உடையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட நபர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். புத்தகம் பற்றிய சரியான புரிதலோடும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடும் பார்வையாளர்கள் கலைந்து சென்றார்கள்.மொத்த அனுபவமுமே என் ஆம்பூர் பயணத்தை குறித்து கொள்ளும் ஒன்றாக மாற்றியது. இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த கவிஞர் யாழன் ஆதி பாராட்டுக்குரியவர்.

 

Series Navigationவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36