வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்

Spread the love

 

ஜோதிர்லதா கிரிஜா

(கலைமகள் ஜூன், 1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “மகளுக்காக” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)

      சுப்புரத்தினத்துக்கு அன்று காலையில் கண் விழித்த போது எப்போதையும் விட அதிகச் சோர்வாகவும் சலிப்பாகவும் இருந்தது. நகாசு வேலை செய்யப்பட்டவன் போல் ஆதவன் தகதகத்துக் கொண்டிருந்ததது சன்னல் வழியே தெரிய, கண்களின் கூசத்தில் அவற்றை மூடிக்கொண்டார். வெயிலின் சாய்விலிருந்து மணி ஏழரைக்கு மேல் ஆகி இருக்க வேண்டும் என்று கணித்துத் தமக்குள் வெட்கப்பட்டார்.

      எப்படி இருந்த உடம்பு அது! எப்படிப்பட்ட சீரான பழக்கவழக்கங்கள் உடையவர் அவர்தான்! எதுவுமே கெடியாரப்படி நடந்தாக வேண்டும் அவருக்கு. காலையில் படுக்கையை விட்டு எழுவதிலிருந்து இரவு படுக்கப் போகும் வரையிலான அவருடைய செயல்கள் யாவும் ஒரு சீரான லயத்துடன் இயங்குபவை. கடந்த ஓராண்டுக் காலமாக எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விட்டது.

      ஆரோக்கியம்! ஆமாம். அதுதன் அவரிடமிருந்து நழுவிச் சென்றுவிட்டது. ஆரோக்கியம் என்பது எத்தகைய இன்றியமையாமை நிறைந்தது என்பதை மற்ற எல்லாரையும் போலவே அவரும் அறிந்திருந்தார். அறிந்து என்ன பயன்? மற்ற எல்லாரையும் போலவே அவரும் அதைக் கட்டிக் காப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டாரில்லை. உடம்புக்கு வெளிப்படையாய் எந்தக் கோளாறும் ஏற்படாத வரையில் எந்த மனிதனும் பொதுவாகத் தனது உடல்நலத்தைப் பேணும் செயல்களைச் செய்வதில் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளுவதில்லை. இன்னும் சொல்லப் போனால்,  கோளாறு எதுவும் தெரியாத வரையில், உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ளும் கிரிசை கெட்ட செயல்களைத்தான் அவன் இடைவிடாது  செய்கிறான்.                                                   

      பள்ளியில் ஆசிரியராக இருந்த காலங்களில் உடல்நலத்தைப் பேண வேண்டிய கட்டாயம் குறித்து அவரே தம் மாணவர்களுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், தனக்கென்று வரும் போது நிலைகள் மாறித்தான் விடுகின்றன. இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், தாம் இந்த அளவுக்கு நோய்வாய்ப்படாதிருந்திருக்கக் கூடும் என்று எண்ணி வருந்தினார். அல்லது, இந்த நோய் ஒத்திப்போடப்பட்டிருக்கக் கூடும் என்று கருதினார்.

      எப்படியோ நோய்வாய்ப்பட்டாகி விட்டது. மிக மிக மெதுவாகதான் அது உடம்பைவிட்டுப் போகும் என்று டாக்டர்கள் திட்டவட்டமாய்ச் சொல்லி விட்டார்கள். அதற்குக் கூட அவர் கடைப்பிடிக்க வேண்டிய கடும் விதிகள் அவர்களால் இயற்றப்பட்டிருந்தன. கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல், என்றைக்கோ அலட்சியம் செய்த உடம்பை இன்று அவர் கழிவிரக்கத்துடன் பேணிக் காக்க முயன்று வருகிறார். …

      வயோதிகம் வந்துவிட்ட பிறகு சிலவற்றை உடம்பு ஏற்பதில்லை. சிலவற்றைச் செய்யும் வலுவேயன்றோ இந்த உடம்புக்கு இல்லாது போய் விடுகிறது!

      மருமகள் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த முக்காலியில் அவர் பல் விளக்கத் தயாராகத் தண்ணீர் கொண்டுவந்து வைத்திருந்தாள். அவருக்கு வசதியாகப் படுக்கையைக் கழுவு தொட்டிக்கு மிக அருகே போட்டிருந்தார்கள். அவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்து, ஒற்றைக்காலில் நின்று நொண்டியடித்துக் கழுவு தொட்டியை அணுகிப் பல் விளக்கினார். கழிப்பறைக்குப் போக அவருக்கு மற்றோர் ஆளின் துணை தேவை. அது சற்றுத் தொலைவில் இருந்ததால், அது வரையில் நொண்டியடித்துப் போவது சிரமமான வேலை. அவர் மகன்தான் அதற்கு உதவி செய்வான்.

      அவர் பல் விளக்கிவிட்டு, முகம் துடைத்துக்கொண்டு, படுக்கையில் ஆயாசத்துடன் விழுந்தார். முந்திய நாள்களில் என்றையும் காட்டிலும் இன்று களைப்பு அதிகமாய் இருந்ததாக அவருக்குப் பட்டது. உதவிக்கு ஆள் கூப்பிட வசதியாய்த் தலைமாட்டில் கூப்பிடு மணியின் பொத்தான் பொருத்தப் பட்டிருந்தது. அதை அவர் அழுத்திய இரண்டாம் நிமிடத்தில் அவர் மகன் முத்து அவரது அறைக்குள் நுழைந்தான்.

      வழக்கம் போல் புன்னகையற்ற முகத்துடன் அறைக் கதவை அகலமாய்த் திறந்து வைத்துவிட்டு, அவர் கட்டிலிலிருந்து இறங்க உதவி செய்து, அவரது தோளில் கை போட்டுக்கொண்டு அவன் அவரை மெல்ல நடத்திச் சென்றான்.

‘இன்றைக்கு ஏனப்பா இவ்வளவு தாமதம்? தூங்கிப் போய் விட்டீர்களா? அலுப்பாக இருந்ததா?’ என்கிற அன்பான கேள்விகளை அவன் கேட்டானில்லை. அவன் அப்படி யெல்லாம் ஆதரவாய்ப் பேசமாட்டான் என்பதை அவரும் அறிந்திருந்ததால், அந்த எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கவும் இல்லை.

கடன்! ஆமாம். எல்லாம் கடனே என்று செய்கிற காரியங்கள்தான். அதில் கொஞ்சம் அன்பையும், அனுசரணையையும் கலந்து செய்தால் வயோதிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! இது ஏன் நடுத்தர வயதுக்காரர்களுக்கும், இளைஞர்களுக்கும் புரியவே மாட்டேன் என்கிறது? நாமும் ஒரு காலத்தில் கிழடு தட்டிப் போய் நாலு பேரின் கையை எது ஒன்றுக்கும் எதிர்பார்க்கிற கட்டாயத்துக்கு ஆட்படுவோம் என்கிற ஞானம் ஏன் யாருக்குமே வரமாட்டேன் என்கிறது? உடம்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கின்ற வரையில் மனிதர்களுக்கு மனிதாபிமானம் குறித்த கடமைகள் ஞாபகத்துக்கு வருவதே இல்லை.

பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்த காலத்தில் அவர் தம் மாணவர்களுக்கு வெறும் படிப்பை மட்டுமே போதிக்கவில்லை.  ஓர் ஆசிரியரின் பணிகளுள் தலையாயது மாணவர்களிடம் நன்னடத்தையை உருவாக்குவதே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த மனிதராதலால், படிப்பு என்கிற ஒன்றைக் கற்றுத் தருவதோடு தமது கடமை முடிந்து விட்டதாய்க்  கருதாமல் அவர்களின் மனத்தளவிலான மேம்பாட்டுக்கும் அவர் அடிகோலினார்.

போன மாதம் கூட அப்துல்லா என்கிற அவருடைய பழைய மாணவன் ஒருவன் அவரது முகவரியை எப்படியோ தெரிந்துகொண்டு அவருக்குக் கடிதம் எழுதி இருந்தானே? தான் ஒரு நல்லவனாக வடிவு கொண்டதற்கு அவரே காரணம் என்றும் அதனால்தான் அமைதியுடன் வாழ்க்கை நடத்துவதாகவும் எழுதி அதற்கு நன்றி சொல்லி இருந்தானே? மூன்றாம் மனிதர்களுக்கு இருந்த புரிந்துணர்வு கூடவா பெற்ற மகனுக்கு இருக்காது?

… கடன்களை முடித்துக்கொண்டு அவர் படுக்கையில் சரிந்த போது, மருமகள் அவர் அறைக்கு வந்து முக்காலியில் காப்பியை வைத்துவிட்டுப் போனாள். ‘காப்பி வைத்திருக்கிறேன், சாப்பிடுங்கள்’ என்கிற சொற்களை “ணங்” கென்ற ஒலியால் உணர்த்திச் சென்றாள். அது அவருள் சிரிப்பைக் கிளர்த்தியது. மகனிடம் எதிர்பார்க்க முடியாத அன்பை இரத்த பந்தம் சிறிதும் இல்லாத அன்னியப் பெண்ணிடம் எதிர்பார்த்தல் மடமையிலும் மடமை என்கிற ஞாபகந்தான்.

தலைமாட்டில் இருந்த சிறிய அலமாரியிலிருந்து தோத்திர நூல்களுள் ஒன்றை எடுத்துப் பிரித்து முதற் பக்கத்திலிருந்து வழக்கம் போல் முணுமுணுவென்று படிக்கத் தொடங்கினார். இடையிடையே,  ‘ஆண்டவனே! என்னைக் காப்பாற்று; எனக்குப் பழைய உடம்பைக் கொடு’ என்கிற வேண்டுதற் சொற்களை ஞாபகமாய் முணகிக் கொண்டார். அவரும் படுக்கையில் விழுந்த நாளிலிருந்து பிரார்த்தனைப் புத்தகங்களை இடைவிடாது படிப்பதையும், படித்த போதே தம்மைப் பழைய நிலைக்குத் திருப்பச் சொல்லி ஆண்டவனிடம் வேண்டுவதையும் செய்துகொண்டேதான் இருந்தார். ஆனால், பயன் தான் சுன்னமாக இருந்தது.

உடம்பு கெட்டுப் போகும் போதுதான் மனிதனுக்குப் பிரார்த்தனை செய்தல் என்பது பற்றிய நினைப்பே வரும் போலும் என்றெண்ணிக் கொண்டார். இடைவிடாத பிரார்த்தனைகள் பயனளிக்கும் என்றுதான் எல்லா அறிஞர்களும் சொல்லியும் எழுதியும் உள்ளார்கள். ஆனாலும் ஓராண்டுக்காலமாக இடைவிடாது அவர் செய்து வரும் பிரார்த்தனைகளுக்குப் பயனே இல்லாதிருக்கிறதே. ஒருவேளை உடல்நிலை அந்த அளவுக்கேனும் இருப்பதும், நொண்டிக்கொண்டாவது நடக்க முடிவதும், பக்கவாதத்தின் முழுத் தாக்குதலுக்கும் தாம் ஆளாகாதிருப்பதும் அவ்வாறு தாம் செய்துவரும் இடைவிடாத வேண்டுதலின் விளைவுகளாக இருக்குமோ என்கிற கேள்வியும் அவருள் பிறந்தது. இருப்பினும், அதிருப்தியுடன் அந்தக் கூற்றை ஒதுக்கித் தள்ளினார். மனமுருகிச் செய்கிற வேண்டுதலுக்கு ஆண்டவன் இன்னும் செவி சாய்க்கவில்லை என்பது தாங்க முடியாத ஒன்றாக அவருக்குப் பட்டது.

… அன்று மாலை அஞ்சலில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. சங்கம்பட்டி கிராமத்துப் பள்ளிக்கு ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதன் தொடக்க கால ஆசிரியர்களுள் ஒருவர் என்கிற முறையில் அவர் அவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டுமாம். அவர் வந்த பிறகு வண்டிச்சத்தத்துக்கு ஆகும் தொகையைக் கொடுப்பார்களாம். அதில் கலந்துகொள்ள இயலாதிருந்த தமது நிலை குறித்து அவரைத் துயரம் கவ்வியது. அவர் கண்களில் கண்ணீர் ததும்பி விளிம்பு வரை திரண்டு நின்றது. வர இயாலாதிருப்பது குறித்து வருந்தி அவர்களுக்கு ஒரு மரியாதைக் கடிதம் எழுதுவதற்குக் கூட அவர் மகனின் உதவியை நாடியாக வேண்டும்.

கடிதத்தை மடித்துத் தலையணைக்கடியில் வைத்துவிட்டு, அவர் விரக்தியுடன் பழைய நாள்களை அசைபோடத் தொடங்கிய கணத்தில்  உருப்படி இல்லாத ஒரு கூச்சல் அவர் செவிகளைத் தாக்கியது. அவர் ஒரு திடுக்கிடலுடன் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு கவனித்தார். ஒரு நிமிடத்துக்குள் அவர் மருமகள் கண்ணீருடன் அவரது அறைக்கு ஓடிவந்து குழந்தை அருள்மணி படியிலிருந்து உருண்டு விழுந்துவிட்டதாகவும், தலையில் அடிபட்டு இரத்தம் கொட்டுவதாகவும், அவனை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவதாகவும் கூறிவிட்டு ஓட்டமாய் ஓடினாள். அடி எந்த அளவுக்குப் பட்டிருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அவர் கவலைப்பட்டாலும், மருமகள் இருந்த அவசரத்தை புரிந்துகொண்டு அவர் விடை கொடுத்து அனுப்பினார். அவர் மெதுவாக இறங்கிக் கூடத்தை அடையுமுன்னர் அவள் குழந்தையுடன் கிளம்பிப் போய்விட்டிருந்தாள். நொண்டிக்கொண்டே நடந்து வாயிற்கதவு வரை சென்று தாளிடுவது பற்றி அவரால் நினைத்தும் பார்க்கமுடியவில்லை. ‘எந்தத் திருடன் வந்துவிடப் போகிறான்’ என்கிற சமாதானத்துடன் அவர் வாசற்கதவைப் பார்த்த நிலையில் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார். இப்போது அவரது நினைவை யெல்லாம் குழந்தை அருள்மணி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். அவர் தமக்கு மனப்பாடம் ஆகியிருந்த தோத்திரப் பாடல்களை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார். இடையிடையே, ‘ஆண்டவனே! குழந்தையைக் காப்பாற்று. அவனுக்கு ஒரு தீங்கும் வரக் கூடாது’ என்கிற வேண்டுதற் சொற்களை முணுமுணுத்தவாறு இருந்தார்.

மருமகள் திரும்பிய போது இரவு ஏழு மணியாகிவிட்டது. அருள்மணியின் தலையில் பெரிய கட்டுப் போட்டிருந்தார்கள். நெற்றிக்காயம் பெரிதாக இருந்ததால் தையல் போட்டார்களாம். குழந்தையின் தலையில் தலைப்பாகை வைத்தாற்போன்று இருந்த பெரிய கட்டைப் பார்த்ததும்  அவருக்கு அழுகையே வரும் போலாயிற்று.

குழந்தைக்கு அடிபட்ட அந்தக் கணத்திலிருந்து அவருக்கு இருபத்துநான்கு மணி நேரமும் அவனது ஞாபகமாகவே இருக்கலாயிற்று.  தூக்கத்தில் கூட, அருள்மணி, அருள்மணி என்று புலம்பினார். கோவில்களுக்குப் போய்க் குழந்தைக்காக வேண்டுவது போல் அநேகமாக ஒவ்வொரு நாளும் கனவு கண்டார். கோவில்களுக்குச் சென்றே அறிந்திராத அவருக்குக் கனவில் அடிக்கடி கோவில்கள் தோன்றியது வியப்பை அளித்தது.

குழந்தைக்கு ஓரளவுக்குச் சரியாக  ஒரு மாதமாயிற்று. பழைய கலகலப்பு அதன் பிறகுதான் சிறிது சிறிதாக அந்த வீட்டுக்கு வரலாயிற்று.

இதற்கிடையே, தாம் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டுள்ளதால், பள்ளி விழாவில் தம்மால் கலந்து கொள்ள இயலாமை குறித்து வருத்தம் தெரிவித்து அவர் தம் மகனைத் தம் சார்பில் கடிதம் எழுதச் செய்து கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பிவிட்டிருந்தார். விழா நாளன்று அவர் மனமெல்லாம் முப்பதாண்டுக் காலம் தாம் ஆசிரியராய்ப் பணிபுரிந்த நாள்களோடு தொடர்பு பெற்ற நிகழ்ச்சிகளையே சுற்றிச் சுற்றி வந்தது.

… குழந்தை அருள்மணிக்குக் காயம் நன்றாக ஆறத் தொடங்கி விட்டது. பெருக்கல் குறி மாதிரி இரண்டு பிளாஸ்திரிகளைத் தலையின் உச்சியிலும் நெற்றியிலும் மட்டும் ஒட்டி வைத்திருந்தார்கள். அவருக்கு அப்பாடா என்றிருந்தது.  ‘ஏதோ குழந்தை விஷயத்திலாவது என் வேண்டுதலுக்குச் செவி மடுத்தாயே, ஆண்டவனே, உனக்கு ஆயிரம் நன்றிகள்’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.

எனினும் குழந்தையின் நெற்றியிலும் தலையிலும் இருந்த மீதிக் காயங்கள் அறவே மறைந்து தழும்புகள் வரும் வரை தமது வேண்டுதலைத் தொடர்வது என்று அவர் முடிவு செய்தார்,

பத்து நாள்கள் கடந்தன. அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஐந்துக்கெல்லாம் அவருக்கு விழிப்புக் கொடுத்துவிட்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். உட்கார்ந்த தினுசிலேயே ஒரு சுறுசுறுப்பை அவர் உணர்ந்தார். ஒரு கையை அழுத்தமாய் ஊன்றிக் கொண்டாலன்றி, எழவே முடியாது என்றிருந்த நிலையில் விளைந்திருந்த கணிசமான மாற்றம் அவருள் ஒரு துள்ளலை விளைவித்தது. கட்டிலில் உட்கார்ந்தபடியே சட்டெனக் கால்களைத் தொங்கப் போட முடிந்தது. இனி உடம்பு சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையை அன்றைய முன்னேற்றம் அவருள் தோற்றுவித்த போதிலும், ரொம்பவும் உற்சாகமடைய அச்சமாக இருந்தது. தம் உணர்ச்சிகளை ஒரு நிதானத்துக்குள் வைக்க எண்ணினார். கட்டிலிலிருந்து இறங்கி மெதுவாக நொண்டலானார். தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் காலைத் தம்மையும் அறியாது அவர் ஊன்றிக்கொண்டார். அதை எடுத்து வைக்கவும் முடிந்தது. ‘ஆண்டவனே! ஆண்டவனே!’ என்று கண்ணீர் மல்க முனகிக்கொண்டார்.

காலைக் கடன்களை யெல்லாம் மெதுவாக மகனின் ஒத்தாசை இன்றியே முடித்துவிட்டு வந்தார். படுக்கையில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்து தோத்திரங்களைச் சொல்லத் தொடங்கினார். ஆறரை மணிக்கு அறைக்குள் எட்டிப்பார்த்த மகனிடம், “நான் போயிட்டு வந்துட்டேன்ப்பா,” என்றார்.

மகன், வியப்புக்காட்டி, “தனியாகவா? எப்படிப்பா?” என்று கேட்டான்.

 “என்னமோ தெரியல்லே. திடீர்னு காலை எடுத்து வைக்க முடிஞ்சுது. நானே போயிட்டு வந்துட்டேன்.”

 “ரெண்டு காலுமே சுவாதீனமா இருந்ததாப்பா?”

 “ஆமாம். நொண்டியடிக்காம ரெண்டு காலாலேயும் சாதாரணமா நடந்து போனேன்.  ஆனா முதல் நாளானதால மெதுவாவே நடந்து போனேன். எடுத்த எடுப்பிலே ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாது, பாரு.”

மகனின் முகத்தில் வெகு நாள்கள் கழித்து அவர் புன்சிரிப்பைப் பார்த்தார். அப்பாவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்கிற மகிழ்ச்சியைக் காட்டிலும், இனி அவருக்குப் பணிவிடை தேவைப்படாது என்பதால் விளைந்த நிம்மதியே அவன் சிரிப்பில் அதிக அளவில் தெரிந்ததாக அவர் எண்ணினார். ‘என்ன பிள்ளைகள்!’ என்றெண்ணித் தமக்குள் சலிப்படைந்தார்.

அப்பாவுக்கு நடக்க முடிகிற சேதியை மனைவிக்குத் தெரிவிக்க அவன் அவசரமாய் அந்த அறையை விட்டு வெளியே போனான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மருமகள் வந்தாள். அவள் முகத்திலும் சிரிப்பு. மகனைக் காட்டிலும் அதிக அளவில் அகன்றிருந்த வாய். இருக்காதா பின்னே? அவன் பாட்டுக்கு வெளியே போய்விடுகிறான். வீட்டில் இருந்து அவர் தேவைகளை யெல்லாம் கவனித்து அன்றாடம் பணிவிடை செய்து கொண்டிருந்தவள் அவள்தானே?

அறைக்கு வந்ததும் அவள் கூறிய சொற்கள் மகனைவிட மருமகள் ஒரு மாற்று அதிகமோ என்று அவரை நினைக்க வைத்தன. ‘சரியாயிடுத்துன்னு எடுத்த எடுப்பில ரொம்பவும் அலட்டிக்காதீங்கப்பா. கொஞ்சம் நிதானமா, மெதுவாவே நடங்க. அப்புறம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போகுது’ என்று அவள் கூறியதும், முதலில் அவ்வாறு நினைத்தாலும், அவள் போன பிறகு சிந்தித்துப் பார்த்த போது, ‘ஒரு வேளை உடம்பைத் தொல்லைப் படுத்தி நோயை அதிகமாக்கிக் கொண்டுவிட்டால், தான்தானே இன்னும் அதிகமாய்த் தொல்லைப்பட நேரும்’ என்கிற முன்கவன உணர்ச்சியாலும் அவள் தம்மை அப்படி எச்சரித்திருக்கலாமோ என்றும் தோன்றியது. எதற்கும், அவள் கூறியபடி செய்வதுதான் சரி என்று தாமே முதலில் எண்ணியதற்கிணங்க நிதானமாக இருப்பதென்று முடிவு செய்தார்.

… இரண்டு நாள்கள் அதே முன்னேற்றத்துடன் கழிந்தன. அவருள் நம்பிக்கை பெருகிற்று.

மூன்றாம் நாள் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருடைய பழைய மாணவன் ஒருவன் எழுதி இருந்தான். உறையின் வெளியிலேயே தன் பெயரை எழு\தி, ‘பழைய மாணவன்’ என்றும் அடைப்புக் குறிகளுள் குறிப்பிட்டிருந்தான். யார் என்று சரியாக ஞாபகம் வராத யோசனையோடு அவர் உறையைப் பிரித்துப் படிக்கலானார், …

 ‘அன்பும் பண்பும் கொண்ட ஆசிரியப் பெருந்தகை அவர்களுக்கு, அன்னாரின் பழைய மாணவன் சுப்பிரமணியன் தாள் பணிந்து எழுதிக்கொண்டது.                   வணக்கம், அய்யா. தங்கள் முகவரி பள்ளி விழாக் குழுவினரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. பக்கவாதத்தால் தாங்கள் கடந்த சில நாள்களாகப் படுக்கையில் இருப்பதாக அவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன். அதனாலேயே தங்களால் விழாவில் கலந்துகொள்ள இயலாது போயிற்று என்று அறிந்து என் மனம் சொல்லொணாத் துயருற்றது. பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பார்க்கும் ஆவலுடன் அவ்விழாவில் கலந்துகொண்ட எனக்குத் தாங்கள் வர இயலாது போனது பேரதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அதற்கான காரணம் அறிந்து துடித்துப் போனேன்.                                                      அய்யா! அன்றிலிருந்து நான் நாள்தோறும் தங்களுக்காகக் கோயிலுக்குச் சென்று ஒரு மணி நேரம் பிராகாரத்தின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து பிரார்த்தித்து வருகிறேன். தங்களுக்காக நான் பிரார்த்திப்பதைத் தங்களுக்கே எழுதுவது குறித்து என்னைத் தவறாக எண்ண வேண்டாம். இவ்வாறு நான் தங்களுக்கு எழுதுவது பண்புக்குறைவான செயல் என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். இருந்தபோதிலும், நமக்காக நம் பழைய மாணவன் கடவுளிடம் வேண்டுகிறான் என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமன்றோ? அதன் பொருட்டே தங்களுக்கு இதனைத் தெரிவிக்கின்றேன்.                                                            தங்களிடம் எத்தனையோ சுப்பிரமணியன்கள் கல்வி கற்றிருக்கக் கூடும். அவர்களில் இக்கடிதம் எழுதும் யான் யாரென்கிற ஐயம் தங்களுக்கு எழக்கூடும். நான் யாரென்பதை நினைவுபடுத்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இப்போது கூறுகிறேன்.        ஒரு முறை பள்ளிக் கட்டணத்துக்குப் பணம் இல்லாமையால் பக்கத்துப் பையனிடம் பணம் திருடிக் கையும் காசுமாய் நான் பிடிபட்ட போது, ஏழைமையாலேயே நான் அவ்வாறு செய்ததால் மன்னிக்கப்பட வேண்டுமென எனக்காகத் தலைமை ஆசிரியரிடம் வாதாடியதோடு, தங்களால் இயன்ற போதெல்லாம் அதன் பிறகு எனக்குப் பண உதவி செய்தீர்கள். இப்போது ஞாபகம் வந்துவிட்டதல்லவா?                                                  அப்படிப்பட்ட தங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டியதில் – இன்னும் வேண்டி வருவதில் – வியப்படைய ஒன்றுமே இல்லை. எனினும் தங்களுக்காகப் பிரார்த்திக்கச் சிலர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் என்கிற எண்ணத்தாலேயே இதனைத் தங்களுக்குச் சொல்லுகிறேன் என்பதை மற்றுமொரு முறை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தங்கள் உடல் தேறியதும் எனக்கு ஒரு வரி எழுதுங்கள். தங்கள் கைப்பட எனக்கு ஒரு கடிதம் வரும் வரையில் நான் வேண்டிக்கொண்டே இருப்பேன்.                         தங்கள் ஆசியால் நான் தற்போது துணிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். ஓகோ என்றில்லாவிட்டாலும், வறுமை இன்றி வாழ்ந்து வருகிறேன். சென்னைக்கு எப்போதாவது வந்தால், தங்களைச் சந்திப்பேன். எனக்கு இரண்டு குழந்தைகள் – ஓர் ஆண், ஒரு பெண். பிற, பின்.                                                                                                           அன்பு மறவா மாணவன்,                                                         சுப்பிரமணியன்.’        

இருண்டு கிடந்த உள்ளத்தில் யாரோ விளக்கேற்றி வைத்தாற்போல் அந்தக் கணத்தில் அவர் உணர்ந்தார்.  குழந்தைக்கு அடிபட்டதும், தமக்காகப் பிரார்த்திப்பதைத் தற்காலிகமாய்த் தாம் நிறுத்திவிட்டு, அதற்குக் காயம் ஆறப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்த ஞாபகம் வந்தது. முழுவதுமாய்ச் சரியாகும் வரை அதே வேலையாக இருக்கத் தாம் எண்ணி இருப்பதும் நினைவுக்கு வந்தது. தம்மைப் பற்றிய கவலையைத் துறந்து குழந்தைக்காகத் தாம் பிரார்த்தித்ததும், தமக்காக மற்றொருவர் பிரார்த்தித்ததும் தமது முன்னேற்றத்துக்கான காரணங்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார். அது மட்டுமல்லாது, பிறர் தனக்காகப் பிரார்த்திக்கும் அளவுக்கு ஒருவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தார்.

பிரார்த்தனை என்பதன் இலக்கும் அதைச் செய்ய வேண்டிய அடிப்படையும் தமக்குப் புரிய இத்தனை வயதாயிற்றே என்கிற வெட்கமும் அந்த நேரத்தில் அவருக்கு அளவுகடந்து வந்தது!

…….

Series Navigationநம்பலாமா?தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]