வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்

Spread the love

 

 Cover image

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து  கொள்ளட்டும்.

 

Fig 1 The court martial is over

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 2 Here is a demand


வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடை யிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

 

Fig 3 We have to evacuate the town

 

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்செர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [55 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [45 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant) [30 வயது]

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -3 பாகம் -10

மூன்று அங்க நாடகம்

 

Fig 4 We should leave the town

 

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  இராணுவ நீதிமன்றம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  இலையுதிர் காலத்து காலை நேரம்.

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர் மையத்தில் கட்டப் பட்டிருக்கும் பிரிட்டீஷ் இராணுவத் தலைமை ஆணையகம்.  கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறைக்கள அரண்கள்.  இராணுவக் காவலன் ஒருவன் கைதிகள் தனிப் பேச்சறைக் கதவைத் திறந்து,  ஜூலியா உள்ளே அனுமதிக்கப் படுகிறாள்.  இரவில் சரிவரத் தூங்காது, ஜூலியா பாதி மயக்க நிலையில் மெதுவாய் நடந்து வருகிறாள்.    காவலன் ஜூலியாவிடம் பரிவோடு நடந்து கொள்கிறான்.   கைதி ரிச்செர்டைக் காலையில் காண வந்த  ஜூலியா, உண்மையைச் சொல்லி, தான் அவனைத் தப்ப வைக்கப் போவதாய்க் கூறுகிறாள்.  இராணுவ நீதிமன்றம் கூடுகிறது.  ரிச்செர்டை விசாரணைக்கு இழுத்து வருகிறார் இராணுவக் காவலர்.  கூடவே ஜூலியாவும் வருகிறாள்.

இராணுவ நீதிமன்றத்தின் ஆலோசனை மாளிகை [Council Chamber] குற்ற விசாரணை செய்யத் தயார் ஆகிறது.  அறை பெரிதாகத் தெரிகிறது.  நடுவில் ஒரு மேஜை நாற்காலியும், பின்னால் பல நாற்காலிகளும் போடப் பட்டுள்ளன.   மேஜர் சுவிண்டன்  இராணுவ உடையில் முன் நாற்காலியில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருக்கிறார்.  தனியாக இருக்கும் அவரை நோக்கி ஸார்ஜென்ட் வந்து சல்யூட் செய்து ஜெனரல் பர்காயன் வருகையை அறிவிக்கிறான்.  பிறகு பல இராணுவ அதிகாரிகள் வந்து அமர்கிறார்.  ரிச்செர்டு அழைத்துவரப் படுகிறான்.  கூடவே ஜூலியாவும் வருகிறாள். நீதி மன்ற வழக்காடல் தொடங்குகிறது.  தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப் பட்ட குற்றவாளி தன் பதியில்லை என்று ஜூலியா கத்துகிறாள்.  சாட்சி சொல்ல ரிச்செர்டின் சகோதரன் கிரிஸ்டி அழைத்துவரப் படுகிறான்.  சிறைக் கைதி பாதிரி ஆண்டர்சன் என்று நிரூபிக்கப் படுகிறது.   ஆயினும் ரிச்செர்டு டச்சியான் தூக்கு தண்டனை மாற்றப் பட வில்லை.

 

Fig 5 I do not consider the threats


[முன்வாரத் தொடர்ச்சி]

 

ஜெனரல் பர்காயின்:  [மேஜரைப் பார்த்து]  சுவிண்டன் !  [கடிதம் ஒன்றைக் காட்டி]  இது என்ன வென்று தெரியுமா ?

மேஜர் சுவிண்டன்:    ஜெனரல் !  எனக்குத் தெரியாது !   உமக்கு வந்த கடிதம் பற்றி எனக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஜெனரல் பர்காயின்:   சில நாட்களில் புரட்சிக் கூட்டத்தின் தலைவர் ஒருவர் இங்கு வந்து நம்முடன் ஏதோ சுய ஆட்சி பற்றிப் பேசி உடன்பாடு செய்து கொள்ளப் போகிறாராம்.   அவரை நாம் எப்படி நடத்துவது என்பது பற்றிக் கடிதம் வந்துள்ளது.

மேஜர் சுவிண்டன்:   என்ன  உடன்பாடு ?  அவர்கள் சரணடையப் போகிறாரா ?

ஜெனரல் பர்காயின்:   கலகம் ஆரம்பித்துள்ள ஸ்பிரிங் டவுனில் நேற்று முளைத்த தலைவன் ஒருவன் நம் ஆட்களைத் துரத்தி விட்டானாம்.   அவனைத்தான் இங்கு அனுப்பப் போகிறார்.   அதாவது இங்கு வருபவன் முக்கிய ஒரு புரட்சிக்காரன் .

மேஜர் சுவிண்டன்:  பூ இவ்வளவு தானா ?

ஜெனரல் பர்காயின்:   அவரை உம்மால் முறைப்படி கவனித்துக் கொள்ள முடியுமா ?

மேஜர் சுவிண்டன்:   அவர் நம்மிடம் சரண் அடையப் போகிறார் அல்லவா ?

ஜெனரல் பர்காயின்:  இல்லை !  உமக்கு இந்த பரபரப்புச் செய்தி புரிய வில்லை.  உடனே நாம் வெளியேற வேண்டுமாம் தெரியுதா ?   “பிரிட்டனே !  வெளியேறு,” என்பது அவரது திடீர்க் கட்டளை !   நாமெல்லாம் ஆறு மணி நேரத்துக்குள் ஸ்பிரிங் டவுனை விட்டு வெளியேற வேண்டுமாம் மேஜர் !

மேஜர் சுவிண்டன்:  [கோபத்துடன்]  காட்டுத்தனமான கடும் கட்டளை இது.

ஜெனரல் பர்காயின்:  சொல்வீர் !  எப்படி இதைக் கையாள்வது மேஜர் ?

மேஜர் சுவிண்டன்:   [கோபத்துடன்]  நமது படையைத் திரட்டி நேராக ஸ்பிரிங் டவுன் புரட்சிக்காரரை ஒரே மூச்சில் தாக்கி வீழ்த்துவது !

ஜெனரல் பர்காயின்:   பக்கத்து அறைக்குப் போய் இதுபற்றிப் பேசுவோம்.

[பக்கத்து அறைக்குப் போகிறார்]

மேஜர் சுவிண்டன்:   எனக்கு உடன்பாடில்லை ஜெனரல் !   நாம் இதற்கு இணங்கக் கூடாது !   இதைச் சொல்ல வேண்டியது என் கடமை ஜெனரல் ! இந்தக் கலகக்கார மந்தையின் பயங்காட்டுவதற்கு நாம் அஞ்சி அடிபணியக் கூடாது.

ஜெனரல் பர்காயின்:   ஒருவேளை நான் வேலையை விட்டு விலகி பதவி உனக்கு மாறினால் என்ன செய்வாய் ?

 

Fig 6 I will wipe out

மேஜர் சுவிண்டன்:   நாம் இதற்கு முன் குவபெக்கிலிருந்து [Quebec] தெற்கே இடம் பிடிக்கச் சென்றது போல் செய்வோம் !   நியூ யார்க்குக்கு வடக்கே ஜெனரல் ஹௌவ் [General Howe] நாடு பிடிக்கச் சென்றது போல் செய்வோம் !   நாம் அல்பனியில் [Albany]  இணைப்புக் கூடாரம் போட்டு நமது ஐக்கிய படையினர்  புரட்சிப் பகைக் கூட்டத்தைத் தகர்க்கும்.   இதெல்லாம் பிரிட்டீஷ் வரலாறு !   பழைய சரித்திரம் மீள்கிறது ஜெனரல் !   புது சரித்திரம் பழைய சரித்திரத்தின் நிழலே !

ஜெனரல் பர்காயின்:  [கேலியாக] இது போல் லண்டனில் இருக்கும் நமது பகைமைத் தனத்தையும்  அழித்து ஒழிப்பீரா மேஜர் ?

மேஜர் சுவிண்டன்:  எந்த பகைமைத் தனத்தைக் குறிப்பிடுகிறீர்  ஜெனரல் ?

ஜெனரல் பர்காயின்: [அழுத்தமாக]  மோசடி,  போலிப் பகட்டு, பதவித் தகுதியின்மை, அரசாங்க இடையூறு போன்றவை சில !  [கவலையுடன்] நான் இப்போது கேள்விப் பட்டது என்ன தெரியுமா ?  ஜெனரல் ஹௌவ் இன்னும் நியூ யார்க்கில்தான் தங்கி இருக்கிறாராம் !

மேஜர் சுவிண்டன்:  [அதிர்ச்சியுற்று] அட கடவுளே !   அப்படியானால் அவர் அரசாங்க மேலதிகாரியின் ஆணைகளை மீறி இருக்கிறார் !

ஜெனரல் பர்காயின்:  [அமைதியாக]  ஜெனரல் ஹௌவ் எந்த ஆணையும் பெற்றுக் கொள்ள வில்லை !   லண்டனில் யாரோ சில மேலதிகாரிகள் அறிந்தோ அறியாமலோ ஆணையை அனுப்பாமல் இருந்து விட்டார்.  கடமையைச் செய்யாது ஏதோ விடுமுறையில் சென்று விட்டதாக நான் அறிகிறேன்.   தவிர்க்க முடியாத அதன் பயங்கர விளைவு என்ன ? இங்கிலாந்து இப்போது செல்வம் கொழித்த அதன் அமெரிக்க காலனியை இழக்கப் போகிறது !  நீயும் நானும் சில தினங்களில்  ஸரடோகாவில் [Saratoga] வெறும் 5000 பேரை வைத்துக் கொண்டு 18,000 புரட்சிக்காரரோடு இக்கட்டான நிலையில் போராடப் போகிறோம் !

மேஜர் சுவிண்டன்:  [அழுத்தமாக] அப்படி நடக்கவே நடக்காது ஜெனரல் !

ஜெனரல் பர்காயின்:  [ஆவேசமாக] என்ன சொன்னாய் ?  மேஜர் நான் சொல்வது உண்மையாய் நடக்கப் போகிறது !

மேஜர் சுவிண்டன்:  பிரிட்டீஷ் சாம்ராஜியத்தில் சூரிய அத்தமனமே இல்லை ஜெனரல் !  வரலாற்றை மாற்றி அமைக்க முயலாதீர் !  பிரிட்டீஷ் ஆதிக்கம் கல்வெட்டாய்  வெட்டப் பட்டுள்ளது !  வரலாறு மீளப் போகிறது.

 

Fig 7 England will lose her American colonies.

ஜெனரல் பர்காயின்:  மேஜர் !   பிரிட்டீஷ் காலனி எங்கும் புரட்சி ஆணிவேராய் ஊன்றி தலை தூக்கி விட்டது !  அமெரிக்க காலனியில் சூரியன் அத்தமிக்கப் போகுது !     இந்தியாவும் எதிர்காலத்தில் அமெரிக்காவைப் பின்பற்றப் போகுது !   பிரிட்டன் வரலாறு மாறப் போகுது !  இப்போது நம்  கேள்வி :  ஸ்பிரிங் டவுனை நாம் இழக்காமல் கைவசம் வைத்துக் கொள்ள முடியமா என்பதுதான் !

மேஜர் சுவிண்டன்:   [மனம் சற்று மாறி]  கடவுளே !  இதென்ன கேடு காலம் நமக்கு ? நாமெல்லாம் சீக்கிரம் அழியப் போகிறோம் !   வாருங்கள், கிளம்புவோம் !

[இருவரும் போகிறார்கள்]

 

[தொடரும்]

*******************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  The Complete Plays of Bernard Shaw, Odhams Press Ltd, London

(l)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 11, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationநீங்காத நினைவுகள் – 10கூரியர்