ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)

This entry is part 11 of 30 in the series 22 ஜனவரி 2012

எழில் இனப் பெருக்கம்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னைப் பார் கண்ணாடியில்

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத்தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

உன்னைப் பார் கண்ணாடியில்

(ஈரேழ் வரிப்பா – 3)

கண்ணாடியில் பார்த்து உன் முகத்திடம் சொல்

இதுதான் தருணம் ! தேவை உனக்கு ஒரு சேய் !

உன்னைப் போலொரு சேயைத் தவிர்த்தால்

உலகுக்குப் புறம்பாய் நடந்து வருவாய்

சேயின் எதிர்காலத் தாய்க் கருவை விலக்குவாய் !

உன்சேய் விழையா ஒரு மாதே இல்லை

சுய சுகத்தில் எவனும் சந்ததி நிறுத்தான் !

அன்னையின் கண்ணாடி நீ ! அதுபோல் நீயும்

தன்னை இளங் குமரியாய்க் காண்பாள்.

உனது சேயைக் காணும் போது

இளமை மீளும் வயதாகும் உனக்கு !

தனித்து செத்தால் அழியும் நின்னெழில் காட்சி !

+++++++++++++

Sonnets : 3

Look in thy glass, and tell the face thou viewest

Now is the time that face should form another;

Whose fresh repair if now thou not renewest,

Thou dost beguile the world, unbless some mother.

For where is she so fair whose unear’d womb

Disdains the tillage of thy husbandry?

Or who is he so fond will be the tomb

Of his self-love, to stop posterity?

Thou art thy mother’s glass, and she in thee

Calls back the lovely April of her prime:

So thou through windows of thine age shall see

Despite of wrinkles this thy golden time.

But if thou live, remember’d not to be,

Die single, and thine image dies with thee.

++++++++++++

தகவல் :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)

5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)

+++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 18, 2012

Series Navigationநல்ல தங்காள்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *