ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

author
5
2 minutes, 32 seconds Read
This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார்

மாக்கன சித்திர கோபுர நீள்படை

வீட்டிலி ருத்திய நாளவன் வேரற

மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்  மருகோனே

 

பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்  (அசோகவனத்தில்) (சீதாபிராட்டியை) சிறை வைத்தபோது,  அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமபிரான்.

 

அந்த ராமபிரானின் மருமகன்,

 

ராமாயண காவ்யத்தை வால்மீகி முனிவர் உரைத்தபடி என் சென்னியிலிருத்த இறைஞ்சுகிறேன்.

 

 

 

 

 

சமீபத்தில் மதிப்பிற்குறிய விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சீதாயணம் என்ற பெயரில் படைத்துள்ள ஓரங்க நாடகத்தை வாசிக்க நேர்ந்தது.  இந்த சுட்டியில்  –  http://jayabarathan.wordpress.com/seethayanam/  *சீதாயணம்* என்ற இந்த படைப்பு அன்பர் அவர்களால் அவருடைய இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த படைப்பை அன்பர் அவர்கள் நூலாகவும் வெளியிட்டுள்ளார். திண்ணை தளத்தில் கோட்டுச் சித்திரங்களால் ஆன படங்களுடன் தொடராகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் படைப்பினூடே ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் இன த்வேஷம், ஹிந்துமதக்காழ்ப்பு மற்றும் வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல அபுரிதல்களை பகிர்ந்துள்ளார். இந்த விஷயங்களை அன்பர் அவர்களால் பகிரப்பட்ட கருத்துக்களின் சாரம் சார்ந்தும் மேலும்  மூல சான்றாதாரமான வால்மீகி ராமாயணம் சார்ந்தும் பின்னர் பார்ப்போம்.

 

அன்பர் அவர்கள் தன் ஓரங்க நாடகத்தின் முகவுரையில்,

 

\\ வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. \\

 

எனவும்

 

\\  இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. \\

 

கருத்துப் பகிர்ந்துள்ளார்.

 

தான் பகிருவதான ராமகதை மெய்யென்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற காவ்யம் மூலம் நாம் அறியும் ராமகதை பொய்க்கதை எனவும் அன்பர் அவர்கள் கருத்துப்பகிர்ந்துள்ளார்.

 

ராமகதை சரித்ரத்தில் உண்மையாக நிகழ்ந்ததா என்பது சரித்ர ஆராய்ச்சிக்குறியது.  சரித்ர பூர்வமாக இந்த விஷயம் சார்ந்த பரிச்சயம் இல்லாத நான் அந்த விஷயத்தைப் பற்றி இங்கு என் கருத்துக்களை முன்வைக்கப் போவதில்லை.

 

ராமகதையைச் சொல்லும் வால்மீகி ராமாயணம் என்ற காவ்யம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டது.  இமயம் முதல் குமரி வரை இன்றும் பல கோடி மக்களால் இந்தக் காவ்யம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. படிக்கப்பட்டு வருகிறது.

 

பல்லாயிரம் ஆண்டுகள் முன் படைக்கப்பட்ட இந்தக் காவ்யத்தில் இடைச்செருகல்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்பது புரிந்துகொள்ள முடிந்த விஷயம் தான்.  ஆனால் ராமாயண காவ்யத்தில் நுழைக்கப்பட்ட இடைச்செருகல்கள் மிகுந்த ப்ரபாவம் மிக்கவையா? இவை வால்மீகி முனிவர் படைத்த மூல காவ்யத்தை உருத்தெரியாமல் சிதைத்துள்ளனவா?

 

நம்மிடையே இன்று புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் ப்ரபாவிக்கப்பட்டு வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம் என்ற மூலநூலுடன் முற்றிலும் வேறுபட்டு கிட்டத்தட்ட ஒரு பொய்க்கதையாக நம்மிடையே உலா வருகிறதா?

 

இந்த விஷயத்தையே  தற்போது நாம் விசாரிக்க உள்ளோம்.

 

சம்ஸ்க்ருத பாஷையிலோ அல்லது வால்மீகி ராமாயண நூலிலோ சிறியேனுக்கு ஆழ்ந்த பாண்டித்யம் இல்லை.  ஆயினும் பல வருஷங்களாக வால்மீகி ராமாயண நூலை வாசித்து மற்றும் கேட்டு வரும் எனது வாசிப்பனுபவமே எனது விசாரத்திற்கு அடிப்படை.

 

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த அன்பர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்து நம் புரிதலை மெருகேற்ற விழவதே என் ப்ரயாசை.

 

நான் அறிந்து என்னால் முழுமையும் சீர்படுத்த முடியாத விஷயம் எனது கலப்பு மொழிநடை. என் இயல்பு மொழிநடையில் வ்யாசத்தை எழுதிச் சென்று அன்ய பாஷாப்ரயோகங்கள் உள்ள இடங்களில் இயன்ற வரை தமிழ்ப்பதங்களை அடைக்குறிக்குள் இட்டுள்ளேன். பின்னிட்டும் ஏதாவது அன்ய பாஷைப்பதம் விளக்கப்படாதிருந்தால் அதை விளக்குகிறேன்.

 

 

பாரதம் முழுதும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் பற்பல பாட பேதங்களுடன் புழக்கத்தில் இருந்துள்ளது.  பரோடா ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் (Baroda Oriental Institute) என்ற நிறுவனம் 1960 ம் வருஷம் முதல் 1975ம் வருஷம் வரை 15 வருஷ காலம் உழைத்து கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடி ப்ரதிகளை பரிசீலனை செய்து பரோடா க்ரிடிகல் எடிஷன் என்ற வால்மீகி ராமாயண ப்ரதியை ப்ரசுரம் செய்துள்ளனர்.  பல சம்ஸ்க்ருத அறிஞர் பெருமக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு அறுதியான ப்ரதி ப்ரசுரமாக முனைந்துள்ளனர்.

 

இந்த முயற்சியையும் இதற்கு முன் இந்தியவியலாளர்கள் ராமாயண காவ்யத்தை ஆராய்ந்ததையும் பரிசீலித்து ஸ்ரீமான் ராமாஷ்ரய ஷர்மா என்ற அன்பர் ஒரு வ்யாசமாக ஆங்க்லத்தில் தொகுத்துள்ளார். இந்த வ்யாசம் அதன் ஒட்டு மொத்த மொழியாக்கம் அன்று. மாறாக, ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசத்தின் சாராம்சப்படி வால்மீகி ராமாயணம் என்ற நூல் பக்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்  ஆய்வாளர்கள் போன்ற பலராலும் எவ்வாறு அணுகப்படுகின்றது  என்பதைப் பகிரும் முயற்சி. ஸ்ரீ ஷர்மா அவர்களது மூல ஆங்க்ல வ்யாசம் http://www.indologica.com/volumes/vol21-22/vol21-22_art19_RSHARMA.pdf  என்ற சுட்டியில் காணக்கிடைக்கும்.  அந்த வ்யாசத்தை வாசித்தவதானித்து வால்மீகி ராமாயணத்தையும் அணுகி எனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளேன்.

 

இந்த வ்யாசத்தில் ஸ்ரீ ஷர்மா அவர்கள் ராமாயண காவ்யத்தை அணுகுதல் என்ற விஷயத்தில் 5 விதமான பார்வைகளை முன்வைக்கிறார். அவையாவன :-

 

1.  தொன்மையான மரபு சார்ந்த பார்வை

2. ராமாயண காவ்யத்திற்கு விரிவுரை எழுதிய விரிவுரையாளர்களின் பார்வை

3. ராமாயண காவ்யத்தின் முதல் காண்டமான பாலகாண்டமும் கடைசீ காண்டமான உத்தர காண்டமும் பிற்சேர்க்கை என்ற முடிபுகளுடைய இந்தியவியலாளர்களின் பார்வை.

4. க்ரிடிகல் எடிஷனில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களின் பார்வை.

5. டாக்டர் ஜே.எல்.ப்ராக்கிங்க்டன் (Dr.J.L.Brockington) அவர்களின் பார்வை

 

 

1. தொன்மையான மரபு சார்ந்த பார்வை :-

 

ராமபிரான் த்ரேதாயுகத்தைச் சார்ந்தவர் என மரபார்ந்த ஹிந்து கருதுகிறார்.  நவீன அறிஞர்கள் கையாளும் காலக்கணிப்பு முறையின் பாற்பட்ட யுகக்கணிப்பின் படி இது சற்றேறக்குறைய 8,67,102 பொ.மு காலத்தைச் சார்ந்ததாகும். ராமாயண காவ்யத்தை இயற்றிய ஆதிகவியாகிய வால்மீகி முனிவர் ராமபிரானின் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறார். வால்மீகி முனிவர் இயற்றிய சம்பூர்ண ராமாயணம் என்பது சதகோடி ச்லோகங்களால்  (நூறு கோடி)  ஆன ராமாயணம் என்பது மரபு சார்ந்த பார்வை.  தற்போது புழக்கத்தில் உள்ள 24000 ச்லோகங்களால் ஆன வால்மீகி ராமாயணம் என்பது சதகோடி ச்லோகங்களால் ஆன ராமாயணத்தின் சுருக்கமான வடிவம் என மரபாளர்கள் கருதுகிறார்கள்.

 

காலக்ரமத்தில் பாரதம் முழுதும் ராமகதை பரவியதில் தேசமுழுதும் பாடபேதங்கள் உள்ள பல முழுமையான பாடாந்தரங்கள் (Recensions) புழக்கத்தில் இருந்திருக்கின்றன.    இதைத் தவிர வால்மீகி ராமயணத்தை அடியொற்றி தமிழில் கம்பநாட்டாழ்வாரால் இயற்றப்பட்ட ராமாவதாரம் என்ற கம்பராமாயணம் மற்றும் அவதி பாஷையில் துளசிதாசரால் இயற்றப்பட்ட ராம்சரித்மானஸ் போன்று பல பாஷைகளில் பல அருட்கவிகளால் ராமாயண காவ்யம் பாடப்பெற்றுள்ளது.  வால்மீகி ராமாயணத்தின் புழக்கத்தில் உள்ள விவிதமான முழுமையான பாடாந்தரங்களையும் (Recensions) பற்பல பாஷைகளில் இயற்றப்பட்ட ராமாயண காவ்யங்களையும் மரபாளர்கள் அதிகாரபூர்வமானவை என்றே கருதுகின்றனர்.  இவற்றை ஆர்ஷ வசனம்  –  அதாவது – இறையருள் பெற்ற அருளாளர்களின் கருத்துக்கள் என்றே மரபாளர்கள் கருதுகின்றனர். இவற்றில் உள்ள பாடபேதங்களை அந்தந்த சம்ப்ரதாய பிரிவுகளைச் சார்ந்த வேறுபாடுகள் என்று மட்டிலும் மரபாளர்கள் கருதுகின்றனர்.

 

இது போன்ற ஒரு பார்வை விக்ஞான பூர்வமான ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களால் ஏற்கப்படுவதில்லை.

 

2. விரிவுரையாளர்களின் பார்வை :-

 

வால்மீகி ராமாயணத்திற்கு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வ்யாக்யானங்கள் (விரிவுரைகள்) எழுதப்பட்டுள்ளன.  இவற்றில் சுமார் 6 வ்யாக்யானங்கள் இன்று அச்சில் உள்ளன.  இவை பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டவை.  மஹேச்வர தீர்த்தரால் எழுதப்பட்ட தத்வதீபம், கோவிந்தராஜரால் எழுதப்பட்ட பூஷணம் அல்லது கோவிந்தராஜீயம், மாதவ யோகிகளால் எழுதப்பட்ட அம்ருத கடகம்,  நாகோஜிபட்டர் எனும் ராமவர்மரால் எழுதப்பட்ட திலகடீகை, சிவசஹாயரால் எழுதப்பட்ட சிரோமணி டீகை மற்றும் த்ர்யம்பகராஜ மகி அவர்களால் எழுதப்பட்ட தர்மாகூட டீகை போன்றவை அச்சிலுள்ள ஆறு ப்ரபலமான வ்யாக்யானங்களாகும்.

 

முழுமையான பாடாந்தரங்கள் (Recensions) கிட்டத்தட்ட ஸ்திரமான பின்னும் —  வாய்மொழியில் மனனம் செய்யப்பட்ட காலத்திலிருந்து படைப்புகள் மிக அதிகமாக எழுத்தில் வடிக்கப்பட்ட  காலத்திலும் —  எழுதப்பட்டவை இந்த வ்யாக்யானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வ்யாக்யானங்களும் ராமாயண காவ்யத்தில் உள்ள பாடபேதங்களை ப்ரஸ்தாபித்துள்ளன.  மேலும் வ்யாக்யான கர்த்தர்கள் இந்த பாடபேதங்களைப் பற்றிய தங்கள் அபிப்ராயங்களை தங்கள் வ்யாக்யானங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

ஏற்கத் தகுந்த பாடங்கள் ஏற்கவொண்ணா பாடங்கள் என வ்யாக்யான கர்த்தாக்கள் பாடங்களை ஏற்றும் மறுதலித்தும் உள்ளனர்.

 

ஏற்கத் தகுந்த பாடங்களை முறையே ப்ராசீன (தொன்மையான) ஸாம்ப்ரதாயிக ( மரபு சார்ந்த)  பஹுபுஸ்தக சம்மத ( பல நூற்களால் ஏற்கப்பட்ட) என்ற அடைமொழிகளால் அங்கீகரித்துள்ளனர்.

 

ஏற்கவொண்ணா பாடங்களை முறையே அபாங்க்த ( மரபு சாராத) ஆதுனிக கல்பிதா: பாடா: ( நூதன சிந்தனையில் கல்பிக்கப்பட்ட பாடங்கள்) ப்ரக்ஷிப்த (இடைச்செருகல்கள்)  என்ற அடைமொழிகளுடன் மறுதலித்துள்ளனர்.

 

இது போன்ற மறுதலிப்புகள் ஒரு ச்லோகத்தின் பாதிவரி (hemistich) அல்லது முழுச்லோகம் (verse) அல்லது ஒரு சர்க்கம் (Canto) என்ற அளவுக்கு மட்டிலும் வ்யாக்யான கர்த்தாக்களால் மறுதலிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த வ்யாக்யான கர்த்தாவும் வால்மீகி ராமாயணத்தின் எந்த ஒரு காண்டத்தையும் இது சற்றளவேனும் சந்தேகத்திற்குறியது என ஒதுக்கவில்லை என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. எல்லா வ்யாக்யான கர்த்தாக்களின் நோக்கமும் ராமாயண காவ்யத்தின் ஆழ்கருத்துக்களை விரிவுரை செய்தல் என்றிருந்தாலும் இந்த ஒரு முயற்சி தான் நூலை கருத்தாழத்துடன் ஆராயும் செயல்பாட்டின் முதற்படி என்பது குறிப்பிடத் தக்கது.

 

நூதன ஆராய்ச்சியாளர்கள் இந்த முதல் முயற்சி அல்லது முன்னகர்தலில் இருந்து மேலும் முன்னகர்ந்து தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் என அவதானிக்கலாம்.

 

3. ராமாயணத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்ற கருத்துக்கள் கொண்ட இந்தியவியலாளர்களின் பார்வைகள் :-

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகில் இந்தியவியல் ஆய்வுகள் (Indological Studies) ப்ரபலமாகி வருகையில் இந்தியவியலாளர்களின் பார்வை ராமாயண காவ்யத்தின் பால் சென்றது.  ராமாயண காவ்யம் மூன்று விவிதமான முழுமையான பாடாந்தரங்களில் (Recensions) புழக்கத்தில் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொண்டனர். வடமேற்கத்திய, கிழக்கத்திய, தெற்கத்திய பாடங்களான (North Western, East and Southern) இவற்றை “A”, “B” மற்றும் “C” என இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

 

ஜெர்மனி தேசத்தைச் சார்ந்த டாக்டர். ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி (Dr. Hermann Georg Jacobi)  (11-02-1850  —  19-10-1937) மற்றும் ஆர்த்தர் ஆண்டனி மேக்டொனல் (Arthur Anthony Macdonell) (11-05-1854  —  28-12-1930) என்ற இரு இந்தியவியலாளர்களின் ராமாயண ஆய்வுகள் முக்யமானவையாகக் கருதப்படுகின்றன.

 

டாக்டர் ஜேக்கபி பெர்லின் பல்கலைக்கழகத்தில் கணிதத்தைப் பாடமாக கற்றாலும் பின்னர் பான் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்க்ருதத்தில் பட்டம் பெற்றார். ஜோதிஷத்தில் *ஹோரை* என்ற விஷயத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1893ம் வருஷம் டஸ் ராமாயணா (Das Ramayana) என்ற தலைப்பில் ராமாயண ஆய்வை ஜெர்மானிய பாஷையில் பதிப்பித்தார்.

 

ஹிந்துஸ்தான ராணுவத்தில் பணி புரிந்த சார்லஸ் அலெக்ஸாந்தர் மேக்டொனல் (Charles Alexander Macdonell) என்ற ராணுவ வீரருக்கு முஜஃபர்பூரில் மகனாகப் பிறந்தவர் ஆர்த்தர் ஆண்டனி மேக்டொனல் ( Arthur Anthony Macdonell) . இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் 1883 ம் வருஷம் லெய்ப்ஜிக் (Leipzig) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  வேதங்கள் மற்றும் சம்ஸ்க்ருத பாஷையில் பல ஆராய்ச்சிகள் செய்து நூற்கள் பல இயற்றினார் இவர்.

 

இந்த இருவரின் ராமாயண ஆராய்ச்சிகளும் ஆய்வாளர்களால் முக்யமானவையாக கருதப்படுகின்றன.

 

இவர்களது கருத்துக்களைப் பார்க்குமுன் விவிதமான முழுமையான பாடாந்தரங்கள் (Recensions) எவ்வாறு புழக்கத்துக்கு வந்தன என்பது பற்றியதான டாக்டர். பி.எல். வைத்யா (Dr.P.L.Vaidya) அவர்களது கருத்தைப் பார்ப்போம்.  ராமாயண க்ரிடிகல் எடிஷன் முயற்சியின் பதிப்பாசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர் ஸ்ரீ வைத்யா அவர்கள்.

 

ராமாயணம் ஆதிகவி வால்மீகி அவர்களால் இயற்றப்பட்டது எல்லோரும் அறிந்த விஷயம்.  தன்னால் இயற்றப்பட்ட காவ்யத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார். இந்த சிறுவர்கள் ராமாயண காவ்யத்தை அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையில் இசையுடன் பொலிவு மிக பாடினார்கள்.  இதற்குப் பின் இந்த காவ்யத்திலும் இசையின் சுவையிலும் மனதைச் செலுத்திய பாணர்கள் பலர் இந்த காவ்யத்தைக் கற்றனர். இந்த பாணர்கள் பல குழுக்களாக தேசமுழுதும் சென்று இந்தக் காவ்யத்தை பாடிப் பரப்பியிருக்க வேண்டும்.  இவ்வாறான தேசமுழுதுமான ப்ரசாரத்தில் மூல காவ்யத்தின் பாதையில் பாணர்கள் ராமாயண காவ்யத்தில் பல ச்லோகங்களை மட்டுமில்லாது பல சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சேர்த்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பரப்பப்பட்ட காவ்யம் அந்தந்த ப்ரதேசத்தில் உள்ள பாணர்களாலும் அத்யயனம் செய்யப்பட்டு அவர்களால் உள்வாங்கப்பட்டு பிற்காலத்தில் எழுத்தில் வடிக்கப்படுகையில் முழுமையான பாடாந்தரங்களாக (Recensions) உருப்பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

 

முதன் முதலாக ராமாயண காவ்யத்தின் பல்வேறு பாடாந்தரங்களை (Recensions) ஆய்வுக்குட்படுத்திய ஜேக்கபி அவர்கள் கணிசமான அளவு அவற்றில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்கிறார்.   ஒரு பாடாந்தரத்தில் பரிசீலனை செய்யப்பட்ட செய்யுள்கள்  கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மற்றொரு பாடாந்தரத்தில் வேறுபடுவது அவரால் ஆய்வில் கண்டறியப்பட்டது.

 

வெவ்வேறு பாடாந்தரங்களுக்கிடையே கண்டறியப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி  ஒரே பாடாந்தரத்தில் விவரிக்கப்பட்ட சில சம்பவங்கள் மற்றும் சில பகுதிகளின் நம்பகத் தன்மையை முதன் முதலாக கேழ்விக்கு உட்படுத்தினார் ஜேக்கபி அவர்கள். இரண்டாம் காண்டம் முதல் ஐந்தாம் காண்டம் வரையிலும் முறையே அயோத்யாகாண்டம், ஆரண்ட்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் ஆகிய காண்டங்களையே வால்மீகி முனிவர் வடித்த மூல ராமாயணத்தைச் சார்ந்த பகுதிகளாக இவர் கருத்துப் பகிர்ந்தார். முதலாவதான பாலகாண்டம் மற்றும் அறுதியான உத்தரகாண்டம் போன்ற காண்டங்கள் வால்மீகி ராமாயணத்தின் முற்சேர்க்கையாகவும் பிற்சேர்க்கையாகவும் (prefixed and suffixed) பிற்காலத்தில் ஒரு அல்லது பல ஆசிரியர்களால் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என மரபிலிருந்து பெருமளவு விலகி துணிவான மாற்றுக்கருத்தை முதலாவதாக முன் வைத்தார்.

 

எப்போது ஜேக்கபி அவர்கள் இது போன்றதொரு கருத்தை முன்வைத்தாரோ அவரைத் தொடர்ந்த மேற்கத்திய மற்றும் ஓரியண்டல் ஆய்வறிஞர்கள் பலரும் அதே கருத்தை அடியொற்றினார்கள்.

 

ஜேக்கபி மற்றும் மேக்டொனல் இருவரும் எழுப்பிய ஆக்ஷேபங்களும் அவற்றை பரிசீலனை செய்த அறிஞர்களின் கருத்துக்களையும் பார்ப்போம்.

 

1.  முரண்படும் அனுக்ரமணிகைகள் :-

 

ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதல் மற்றும் மூன்றாம் சர்க்கங்களில் ராமாயணத்தின் அனுக்ரமணிகை (ராமாயண கதையின் உள்ளடக்கம் – Table of Contents) சொல்லப்படுகிறது. இந்த அனுக்ரமணிகைகள் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகிறது என்றும் வெவ்வேறு காலத்தில் ராமாயண காவ்யத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மேக்டொனல் தன்னுடைய ” A History of Sanskrit Literature” என்ற நூலில் ஆக்ஷேபம் தெரிவித்துள்ளார். ஒரு அனுக்ரமணிகையில் முதல் மற்றும் கடைசீ காண்டங்கள் சொல்லப்படுவதில்லை என்றாலும் மற்றொன்றில் அவை சொல்லப்படுகின்றன.  ஆகவே எந்த அனுக்ரமணிகையில் முதல் மற்றும் கடைசீ காண்டங்கள் சொல்லப்படுகின்றனவோ அது பிற்சேர்க்கை எனக் கருதப்பட வேண்டும் என்பது அவர் ஆக்ஷேபம்.  அறிஞர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனது ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.  ஆய்வுக்கு அவர் கையாண்ட பாடாந்தரம் / பாடாந்தரங்கள் எவை என்றதான குறிப்புகளை அணுக முடியவில்லை.

 

தற்போது புழக்கத்தில் இருக்கும் கோரக்பூர் அச்சகத்து வால்மீகி மூல ராமாயண நூலின் படி பாலகாண்டத்தின் முதல் மற்றும் மூன்றாம் சர்க்க சுருக்கங்களைப் பார்ப்போம்.

 

முதல் சர்க்கம் (அத்யாயம்) நாரத வால்மீகி சம்வாதமாக (உரையாடால்) விவரிக்கப்படுகிறது. இது காவ்ய பீஜமாகக் (விதை) கருதப்படுகிறது.  நற்குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்ற மானுடன் யாரையும் நீங்கள் அறிவீர்களோ என வால்மீகி முனிவர் நாரதரைக் கேழ்க்கிறார். நாரதர் அப்படிப்பட்ட குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற இக்ஷ்வாகு குலதிலகமான ராமபிரானைப் பற்றிச் சொல்லுமுகமாக ராமாயணத்தின் கதைக்கருவை வால்மீகி முனிவரிடம் விவரிக்கிறார்.  இதுமுதல் சர்க்கத்தில் விவரிக்கப்படுகிறது.  ச்லோக எண்கள் 8 முதல் 97 வரை பாலகாண்டம் முதலாக உத்தரகாண்டம் வரையிலான கதைக்கரு இந்த ச்லோகங்களில் விவரிக்கப்படுகிறது.  ச்லோகம் 98 முதல் 100 வரை இந்த ராமாயணத்தை வாசிப்பதன் பலன் யாது என விவரிக்கப்படுகிறது. இது பால ராமாயணம் என்றும் சம்க்ஷேப ராமாயணம் (சுருக்கமான ராமாயணம்) அழைக்கப்படுகிறது.

 

தமஸா நதிக்கரையில் ஸ்னானத்திற்காக வந்த வால்மீகி முனிவர்  அங்கே வேடனொருவன் ஒன்று கூடியிருக்கும் ஆண் பெண் புறாக்களில் ஆண் புறாவை தன் அம்பினால் கொய்வதைக் கண்ணுறுகிறார்.  தன் துணையான ஆண் புறாவைப் பறிகொடுத்து அழும் பெண் புறாவைக் கண்டு விசனப்படுகிறார்.  உடன் கருணையும் கோபமும் ஒருங்கே மேலிட வேடனைக்குறித்து அவர் வாயிலிருந்து அவரை அறியாது ஒரு ச்லோகம் உதிக்கிறது.  தன் வாயிலிருந்து ஏன் இப்படி ஒரு ச்லோகம் தன்னையறியாது வந்துள்ளது என்று யோசிக்கையில் ப்ரம்மதேவன் அவர் முன் ப்ரத்யக்ஷமாகிறார்.  ப்ரம்மன் வால்மீகி முனிவரை ராமகதையை எழுதுவதற்குப் பணிக்கிறார்.  மேலும் அவரால் எழுதப்படும் ராமகதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மானுடரால் கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார்.  இவையெல்லாம் சிந்தனையில் ஓட ஆசனத்தில் அமர்ந்து முனிபுங்கவர் த்யானத்தில் ஆழ்கையில் ராம கதை அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வுகளாக வெளிப்படுகிறது. இங்கும் முழு ராமகதை ராமபிரான் பிறப்பிலிருந்து ராமபட்டாபிஷேகம் வரையிலும் பின்னர் சீதா பிராட்டியை விஸர்ஜனம் செய்வது வரை அவர் மனக்கண்ணில் தோன்றுகிறது. இது மூன்றாவது சர்க்கத்தில்.

 

 

 

இதை வாசித்த பின்பு ஸ்ரீ ஜேக்கபி அவர்களது ஆக்ஷேபத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  ஏனெனில் ஆக்ஷேபத்தில் சொல்லப்பட்ட விஷயங்களின் பாற்பட்டு இங்கே விவரணைகள் இல்லை. தற்போது புழக்கத்தில் உள்ள ராமாயண காவ்யத்தில் முதல் மற்றும் மூன்றாம் சர்க்கங்களை வாசிக்கையில் இரண்டிலும் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டங்களின் சுவடுகளைக் காண இயலும். முதல் சர்க்கத்தில் அஸ்வமேத யக்ஞமும் மூன்றாம் சர்க்கத்தில் சீதாபிராட்டியின் பரித்யாகமும் சொல்லப்படுகிறது. அப்படியானால் மேக்டொனல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட Recension வேறாக இருக்கலாம் எனத்தெரிகிறது.

 

 

பின்னிட்டும் வால்மீகி ராமாயணத்தில் அனுக்ரமணிகை என்ற படிக்கான பதம் காணக்கிட்டுவதில்லை.  மேலும் முதல் சர்க்கத்தில் சொல்லப்படும் நாரத வால்மீகி சம்வாதம் கதா பீஜமாக மட்டிலும் சொல்லப்படுகிறது. மூன்றாம் சர்க்கத்தில் வால்மீகி முனிவரின் ஹ்ருதயத்தில் விதையிலிருந்து கிளைத்தெழுந்த வ்ருக்ஷமாக ராமகதை விரிவடைகிறது.  ஆகவே ராமகதை முறையாக வால்மீகி முனிவரின் ஹ்ருதயத்தில் கிளைத்தெழுந்த படிக்கு முறைப்படியான உள்ளடக்கம் (அது உள்ளடக்கம் என சொல்லப்படாவிடினும்) மூன்றாம் சர்க்கத்தில் மட்டிலும் உள்ளது என்பது இந்த ஆக்ஷேபத்திற்கு சமாதானமாகச் சொல்லப்படுகிறது.

 

2. யுத்தகாண்டத்தின் இறுதியில் காவ்ய ப்ரசஸ்தி சொல்லப்படுவதால் காவ்யம் அத்துடன் நிறைவு பெறுகிறது

 

யுத்தகாண்டத்தின் கடைசீ சர்க்கமான 128ம் சர்க்கத்தில் 107ம் ச்லோகமுதல் 125ம் ச்லோகம் வரை காவ்யத்தின் பலச்ருதி (காவ்யத்தை வாசிப்பதால் கிட்டும் பலன்) / காவ்ய ப்ரசஸ்தி (காவ்யத்தின் புகழ்) சொல்லப்படுகிறது.  ஆகையால் காவ்யம் இத்துடன் நிறைவு பெறுகிறது என்பதும் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்பதும் மேக்டொனல் அவர்களால் “A History of Sanskrit Literature” என்ற அவரது நூலில் ஆக்ஷேபிக்கப்படுகிறது.

 

ஸ்ரீ ஷர்மா அவர்கள் இதற்கான சமதானத்தைப் பதிவு செய்கிறார்.

 

உத்தரகாண்டம் என்ற பாகத்தின் குணாதிசயத்தை அறியாமை இந்த பாகத்தை பிற்சேர்க்கை என்று சொல்லத்தூண்டுகிறது. உத்தரகாண்டம் என்ற பாகத்தில் *உத்தர* என்ற பதம் சுட்டும்படிக்கு இந்த பாகம் காவ்யத்தின் அனுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது வாஸ்தவம் தான்.  ப்ரதான காவ்யத்தில் ராம ராவண மோதல் விவரிக்கப்பட்டு பின்னர் அது  ராவணவதத்துடன் நிறைவு பெறுகிறது. இதில் ராம குணார்ணவம் முழுதும் ஆழ்ந்து விவரிக்கப்பட்டாலும் ராவணனுடைய சரித்ரம் மற்றும் சௌர்யம் தெரிவிக்கப்படாமையால் ராமபிரான் எப்படிப்பட்ட ஒரு வ்யக்தியை சமர் செய்து வென்றான் என்ற முழுமையான ஒரு சித்திரம் கிட்டுவதில்லை என்ற குறைபாடு உத்தரகாண்டத்தில் சரிசெய்யப்படுகிறது.

 

ப்ரதான காவ்யத்தின் முக்ய கரு ராம ராவண மோதல் (ஸ்ரீ ஷர்மா அவர்களின் கூற்றுப்படி).  ஆகவே அது நிறைவு பெற்ற படிக்கு யுத்தகாண்டத்தின் அறுதியில் காவ்யப்ரசஸ்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் முழுமையான காவ்யம் (உத்தரகாண்டத்துடன் கூடிய படிக்கு) நிறைவு பெறுகையில் அங்கும் காவ்ய ப்ரசஸ்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆகவே உத்தரகாண்டத்துடனேயே ராமாயண காவ்யம் நிறைவு பெறுகிறது என்பது நோக்கத்தக்கது.

 

ஆயினும், க்ரிடிகல் எடிஷனில் இரண்டு காவ்யப்ரசஸ்திகளும் பிற்சேர்க்கை என்று சுட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

 

3. மூல ராமாயணத்தின் நிஜமான பகுதிகள் என்று இந்தியவியலாளர்கள் கருதும் இரண்டு முதல் ஆறு வரையிலான காண்டங்களில் பால காண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளைத் தொடர்பு படுத்தும் படிக்கான குறிப்புகள் இல்லையாதலால் முதல் மற்றும் ஏழாம் காண்டங்கள் பிற்சேர்க்கை என்பது ஆக்ஷேபமாக முன்வைக்கப்படுகிறது.

 

இரண்டு முதல் ஆறாம் காண்டம் வரையில் விவரிக்கப்படும் எண்ணிறந்த நிகழ்வுகளின்  சுவடுகளை முதல் மற்றும் ஏழாம் காண்டத்தில் காண இயலும் என்பதாலும் பால காண்டம் மற்றும் உத்தரகாண்டங்களில் சொல்லப்படும் விஷயங்களன்றி அவற்றை முழுமையாக அவதானிக்க முடியாது என்பதாலும் இது சரியான ஆக்ஷேபம் இல்லை என நிராகரிக்கப்படுகிறது.  இதை விளக்குமுகமாக பல நிகழ்வுகள் அனுபந்தமாக ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசத்தில கொடுக்கப்பட்டு அவை முதல் மற்றும் ஏழாம் காண்டத்துடன் சம்பந்தப்பட்டவை என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

 

அனுபந்தத்தில் கொடுக்கப்பட்ட குறிப்புகள் புழக்கத்தில் உள்ள ராமாயண ப்ரதியுடன் பரிசீலனை செய்த படிக்கு அதில் ஒரு நிகழ்வு இங்கு உதாரணமாக வைக்கப்படுகிறது.

 

விஸ்வகர்மாவினால் நிர்மாணம் செய்யப்பட்ட லங்காபுரி  :-

 

சுந்தரகாண்டம்  –  சர்க்கம் -2 ச்லோகங்கள் 18-20

 

4. இரண்டு முதல் ஆறாம் காண்டங்களில் சொல்லப்படும் விஷயங்களில் சில பாலகாண்டத்துடன் ஒத்துப்போகாததால் பாலகாண்டம் மூலகாவ்யத்தின் அங்கம் ஆகாது என்று ஆக்ஷேபம் சொல்லப்படுகிறது.  முழு ராமாயண காவ்யத்தில் இப்படிப்பட்ட முரண்களாக இரண்டு விஷயங்கள் மட்டும் சொல்லப்படுகின்றது. அவற்றைப் பார்ப்போம்.

 

 

1.  ஆரண்ய காண்டத்தில் ராமபிரான் இளையபெருமாளான லக்ஷ்மணரை *அக்ருததார:*(மனைவியற்றவன்) என்ற பதத்தினால் சுட்டுகிறார் எனினும் பாலகாண்டத்தில் லக்ஷ்மணருக்கும் ஊர்மிளைக்குமான விவாஹம் முன்னமேயே விவரிக்கப்பட்டுள்ளது.

 

अपूर्वी भार्यया च अर्थी तरुणः प्रिय दर्शनः |

अनुरूपः च ते भर्ता रूपस्य अस्य भविष्यति ||

 

அபூர்வீ   பார்யயாசார்த்தீ தருண: ப்ரிய தர்சன:

அனுரூபஸ்ச தே பர்தா ரூபஸ்யாஸ பவிஷ்யதி

 

“மனைவியற்றிருக்கும் இவனுக்கு (சஹோதரனான லக்ஷ்மணன்)  ஒரு மனைவி தேவை. ஆகவே பொலிவும் இளமையும் பொருந்திய இவன் உன்னுடைய ரூப சௌந்தர்யங்களுக்குப் பொருத்தமானவன்” என்று ராமபிரான் ஹாஸ்யம் மிக சூர்ப்பணகையிடம் தெரிவிக்கிறார்.

 

www.valmikiramayan.net என்ற தளத்தில் இந்த சம்பவம் ஹாஸ்யமும் ச்லேடையும் மிக விவரிக்கப்பட்டுள்ளது:-

 

The word apuurvi means in the viewpoint of Rama ‘one who has been missing the company of wife for a long’ but in Shuurpanakha’s view it is ‘one who is missing the company of ANY wife for a long…’ The word bhaaryaa ca arthii is from Rama’s view ‘desiring his own wife, Urmila’ but in Shuurpanakha’s view ‘desiring ANY woman as wife’ and the word te bhartaa is declined as te.abhartaa= te a bhartaa ‘unfit to be your husband’ because of your ruupasya asyaa ‘by your aspect, your repulsive aspect.’ Govindaraja.

 

In another way akR^ita daaraH ‘already a married man’ apuurvii ‘one who does not have the comfort from wife’ so bharyayaa ca arthii; a + puurva bhaaryayaa ca arthii ‘for a new wife, also, desiring one; one who is desiring new wife; thus you are a fitly wife for him by your aspect, anuruupascha te . This is on joculary side of the statement.

 

அபூர்வீ பார்யயாசார்த்தீ (அக்ருத தார:) என்பது ஹாஸ்யம் பொங்கவும் ச்லேடையுடனும் சொல்லப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

 

2. பாலகாண்டத்தில் விவாஹத்திற்குப் பிறகு பரதன் தன் தாய்மாமனோடு கேகயபுரிக்கு சென்றதாக விவரிக்கப்பட்ட பின்பும் அயோத்யாகாண்டத்தில் மந்தரை பரதனை *பாலன்* (சிறுவன்)  எனக்குறிப்பிடுவது முரண்பாட்டைச் சுட்டுகிறது.

 

டாக்டர் சி.எம்.பௌரா (Dr C.M.Bowra) என்ற அறிஞர் இதை விளக்குகிறார். ராமாயண காவ்யம் வெகுகாலம்  வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்த படிக்கு இது போன்ற மிகவும் அரிதான முரண்பாடுகளை வைத்து காவ்யத்தின்  ஆசிரியர் யார் என்ற விஷயத்தையோ காவ்யத்தின் நம்பகத்தன்மையையோ கேழ்விக்கு உட்படுத்த முடியாது என மறுதலிக்கிறார்.

 

 

“The conditions of oral performance may mean that sooner or later a poet contradicts himself or muddles something in his narrative.  There are few heroic poems in which some such contradiction which can not be found. The poet so concentrates on his immediate task that may not remember all that has gone before or foresee all that will come later. The chances are that any such sllip will be of little importance, since, if the poet does not notice it, it is not likely that his audience will notice it either.  But when this poem is written down and subjected to sharp eyes of critical scholars, what was originally a trivial slip may be regarded as a grave error and made a foundation for bold theories of multiple authorship.”

 

C.M Bowra, “Heroic Poetry, PP-299-300, London, 1952

 

 

 

ஸ்ரீ ஜேக்கபி அவர்களின் மற்றைய ஆக்ஷேபங்களையும் அதற்கான சமாதானங்களையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

 

 

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!*

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்!* செம்பொன்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!*

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

————————

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

Similar Posts

5 Comments

  1. Avatar
    தெ. ஞானசுந்தரம் says:

    இது மிகவும் சிறந்த ஒரு கட்டுரை. இதுபோன்ற பதிவுகள் பல வருதல் வேண்டும். கட்டுரையாசிரியருக்கு என் பாராட்டுதல்கள்.

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  3. Avatar
    paandiyan says:

    மறைந்த மலர்மன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க திரு க்ருஷ்ணகுமார் அவர்கள் எழுதிய முதல் கட்டுரை எப்படி திண்ணையில் பிரபலம் ஆனதோ , அதே போல இந்த கட்டுரையும் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பது என் அவா..

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீ பாண்டியன் தங்கள் அவாவினுக்கு நன்றிகள்.

    ராமாயணப் படைப்பாய்வை இந்த வ்யாசம் பேசுகிறது என்றாலும் இடைவிடாது ஊடே ராமகதையையும் பேசுகிறது.

  5. Avatar
    paandiyan says:

    அது தவிர இந்து மத விரோதியான கி.வீரமணியின் பாராட்டுக்குப் பாத்திரமாகி வீரமணியின் விஷம் கக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதைப் பெருமையுடன் காண்பித்திருக்கிறார் தமது தளத்தில்: http://jayabarathan.wordpress.com/seethayanam/#comment-116105

    திரு. ஜெயபாரதன் அவர்கள்,

    வணக்கம். தங்களது மின்அஞ்சல் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி!

    துணிச்சலான தங்களது ‘சீதாயணம்’ ஒரு புதிய சிந்தனை. இராமாயணம் நடந்த கதை என்பதை எங்களைப் போன்றவர்களால் ஏற்க முடியாது என்றபோதிலும், தங்களது கருத்து வடிவம், எழுத்து நடை எல்லாம் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்துள்ள நிலையில் இவ்வளவு சிறப்புடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

    அந்நூல்பற்றி நான் விரைவில் சென்னை பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் விளக்கி உரையாற்றவிருக்கிறேன்.

    நிறைய இதுபோல் சுதந்திர சிந்தனையுடன் எழுதுங்கள்.

    இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.

    தங்களன்புள்ள,
    கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *