ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. அபாண்டம்

நம் மீது வீசப்படும்
அபாண்டம்
ஆயிரம் கால்கள் முளைத்த
விஷப் பூச்சியாய் ஊர்ந்து
நம் மனத்தை
அரிக்கத் தொடங்குகிறது

கல்வி நிலையத்தில்
படிப்பவர்கள் மீதும்
அலுவலகத்தில்
பணியாற்றுபவர்கள் மீதும்
இன்னும்
மிக எளிதாக
வீட்டில் வயதானவர்கள் மீதும்
அது வீசப்படுகிறது

அதை வீசுபவர்கள்
எப்போதும் சந்தேக இயல்பினராய்
பொறுப்பற்றவர்களாய் இருக்கிறார்கள்

நேரடியாகவும்
புறங்கூறுதல் மூலமும்
அது எந்தத் தடையுமின்றி
நம்மைத் தைக்கிறது

இந்தக் கசப்பை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
நாம் துன்புறுகிறோம்

அபாண்டம்
எப்போதும் எதிர்வினை
கொண்டது என்பதை
அவர்களுக்குக்
காலம் உணர்த்தும்
தாமதமானாலும் …

2. ஆசையின் ஆயிரம் கரங்கள்

மாதம் தொண்ணூராயிரம் சம்பளத்தில்
அவன் மிதந்துகொண்டிருந்தான்

வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களிலும்
அவனே ‘ ஹீரோ ‘

அப்போது அவன் ‘ சின்ன வீடாக ‘
வந்தவள்தான் சுசித்ரா

அவள் தாழம்பூ மேனியில்
உரசிக்கொண்டே போனது
அவன் வாழ்க்கை
அந்த எல்லா கணங்களும்
தங்க முலாம் பூசிக்கொண்டு பறந்தன

அவன் ஒரு நாள் பணி ஓய்வு பெற
அவள் வில்லியானாள்
சொல்லம்புகளை வீசினாள்

இப்போது அவன் ஆசையின்
ஆயிரம் கரங்கள் பேய் நகங்களுடன்
அவன் கழுத்தையே நெரித்தன

பணப் பயன்கள்
கைக்கு வந்தபாடில்லை
சுகங்கள்கூட
சோகங்களைப் பிரசவிக்கும் தண்டனை
எத்தனையோ பேருக்கு இங்கே ! …

Series Navigation“இன்பப் புதையல்”வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய “சீதை பேசுகிறேன்” எனும் நூல் இப்போது விற்பனையில்.