ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

 

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

 

பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பக்கிம்மின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண  நூல்களில் ஒன்று.

மேதினிப்பூரில் 1856ம ஆண்டு வரை ஒரு கான்வென்ட் பள்ளியில் கடுமையான பள்ளிப் படிப்பை முடித்த பக்கிம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார்.

1857ம வருடம் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 1858ம் ஆண்டு பல்கலை கழகத்தில் BA பரீட்சையை எழுதினர். ஆறு தாள்கள் கொண்ட தேர்வில் அவரால் ஒரே ஒரு தாளில் மட்டும் தேர்வு பெற முடியவில்லை. அது எந்த தாள் தெரியுமா? மொழிப் பாடமான வங்காள மொழிப் பாடத்திற்கான தாள். கருணை மதிப்பெண்களாக ஏழு மதிப்பெண்கள் போடப்பட்டதால் பக்கிமும் அவர் நண்பர் ஜாது நாத் பாசு அவர்களும் தேர்ச்சி பெற்றனர். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பை பெற்றனர்.

படிப்பை முடித்துக் கொண்டு அரசாங்க வேலையில் துணை நீதிபதியாகவும் பின்னர் துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார். ஆங்கில அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தாலும் தன் பணியை அவர் சிறப்புறச் செய்து வந்தார்.

அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். அவரே பக்கிம்மின் வாழ்க்கைத் துணைவி ஆனார்.

பக்கிமின் முதல் நாவலான ராஜ்மோகனின் மனைவி (1864) என்ற நாவல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865ம வருடம் வெளியானது. கபால குந்தளம், மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் ஆனந்த மடம் போன்றவை அவருடைய மிகச் சிறந்த நாவல்கள். அவர் எழுத்தாளராக வாழ்ந்த காலங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளை நாளிதழ்களுக்கும் தினசரி தாள்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அரசியல்,பொருளாதாரம்,சமுகம்,மதம்,தத்துவம் மற்றும் விஞ்ஞானம் என்று அவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று கூறலாம்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவர்  தனது பணியிலிருந்து 1891ம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் இருந்த சொற்ப காலத்தை ஆன்மிகத்தில் கழித்தார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56ம் வயதில் இயற்கை எய்தினார்.

தாகூர் அவரது மறைவின் பொழுது இவ்வாறு குறிபிட்டார்.” பக்கிம் பெயருக்கோ பணத்திற்கோ எழுதவில்லை. ஒரு பண்பட்ட மனத்தின் உன்னதமான அழகான எண்ணங்களை அற்புதமான வார்த்தைகளில் சித்தரிப்பதற்காக எழுதினர்.” நிஜம்தான்.

அத்தியாயம் 1

பகுதி-1ஆதி

என் எழுத்தின் நோக்கம்.

                  ஹிந்துக்களில் பலரும்,ஏன் அனைவருமே ஸ்ரீ கிருஷ்ணனை ஒரு அவதார புருஷனாகவே நம்புகின்றனர்.வங்காளத்தில்  அனைத்து கிராமங்களிலும் கிருஷ்ண வழிபாடு என்பது பரவலானது. ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா கோவில்களிலும் , எல்லா இல்லங்களிலும் வழிபடப் படுபவர். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட தினம் அவருடைய பூஜைக்கென்று ஒதுக்கப் படுகிறது. கோலாகலமான கொண்டாட்டங்கள், ஸ்ரீகிருஷ்ண ஊர்வலங்கள் என்று ஊரே அமர்க்களப்படும். காற்று ஸ்ரீ கிருஷ்ண நாமவளிகளாலும் கிருஷ்ண கீர்த்தனைகளாலும் நிரம்பி இருக்கும்.அணியும் ஆடைகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் வண்ணப் படங்கள்; மேனி முழுவதும் பச்சை குத்தல்களாய் ஸ்ரீ கிருஷ்ணரின் சித்திரங்கள் என எங்கும் ஸ்ரீ கிருஷ்ணர்தான்.. வங்காளிகள் குறிப்புகள் எழுதும் முன்னரோ அல்லது கடிதம் எழுதத் தொடங்குவதற்கு முன்னரோ ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் என்று எழுதிய பின்னரே தொடங்குவர். ஸ்ரீ கிருஷ்ணர் பெயரால் அளிக்கப் படும் தானங்களும் ஏராளம். வங்க தேசத்து பறவைகள் கூட ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா என்று கூவக் கற்றுக் கொள்கின்றன. எங்கும் கிருஷ்ணர் எதிலும் கிருஷ்ணர் என்பது வங்க தேசத்தின் குரல் மட்டுமல்ல; அது  நம் பாரத தேசத்தின் குரல்.

                வங்க தேசத்தினர் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு அவதார புருஷனாக வரித்து விட்டதால் அங்கு கிருஷ்ண உணர்வில் மூழ்கிக் கிடப்பது ஒன்றே தர்மத்தை ஏந்தி செல்லும் வழியாக இருக்கிறது. இதில் சந்தேகமில்லை.தன் மூசசுக் காற்றில் கூட கண்ணனை சுமக்கும் மக்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரை விட வேறு எது சத்தியமாக இருக்கும்? ஆனால் இது போன்ற கடவுள் நம்பிக்கையாளர்களின் கடவுள் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்? தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமான கடவுள் எவ்வாறு பிள்ளை பிராயத்தில் வெண்ணை திருடனாக, இளம் வயதில் ஸ்திரீ லோலனாக , முடிவில் துரோணாச்சாரியார் போன்ற மூத்த குருமார்களை ஏமாற்றிக் கொன்ற கொலைபாதகனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது? ஹிந்து மதத்தை விமர்சிப்பவர்களின் வாதமே இது போன்ற பகுத்தறிவற்ற ஹிந்துக்களை எப்படி நம்புவது என்பதுதான். இத்தகையவர்கள் எப்படி நேர்மையுடன் இருப்பார்கள்? இந்த வாதங்களை மறுக்கக் கூடிய ஒரு வங்காளியைக் கூட நான் இது வரை சந்தித்ததில்லை.

ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனக்கு அளவு கடந்த பக்தி என்பதால் என் பகவானின் பழக்க வழக்கங்கள் எனக்கு தெரியும். புராணங்களையும் ,இதிகாசங்களையும் தலை கீழ் பாடமாக கற்றவன் நான். அதன் விளைவால் இதுவரை ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்கள் முற்றிலும்  தவறானவை என்பதை அறிந்து கொண்டேன். கட்டுக் கதைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் உட்பொருள் மிகவும் தூய்மையானது. துல்லியமானது. பிரமாண்டமானது. மனித வரலாறு முழுவதிலும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் ஒரு உதாரண புருஷன் இல்லை என்பதை கண்டுணர்ந்தேன். எனது இந்தப் பணியின் இரண்டு முக்கிய நோக்கங்களில் ஒன்று நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை விளக்குவதாகும். இரண்டாவது ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு பாரத வீர புருஷர்களின் நடுவில் மகா புருஷராக திகழ்கிறார் என்பதை விளக்குவதாகும்.

ஸ்ரீ கிருஷ்ணரைத் தேடி

என் வாசகர்களில் பெரும்பாலானோர் பகுத்தாய்ந்து பார்ப்பவர்கள். அவர்களால் ஸ்ரீ கிருஷ்ணரை வானத்திலிருந்து வந்துதித்த அவதார புருஷனாக ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் முன் நிற்கும் முதல் கேள்வி ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பாரத தேசத்தில் இருந்ததற்கான உத்திரவாதம் என்ன? ஸ்ரீ கிருஷ்ணர் நிஜமாகவே இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்திருந்தார் எனில் அவர் எப்படி இருப்பார்? இது போன்ற கேள்விகளுக்கு நான் விடை காண முயல்கிறேன்.

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய தகவல்கள் நமக்கு மூன்று மூல நூல்களிலிருந்து கிடைக்கின்றன. அவை 1) மகாபாரதம்.2)ஹரி வம்சம்.3).புராணங்கள்.

மேற் சொன்னவற்றில் புராணம் எண்ணிக்கையில் பதினெட்டு. நமது ஜனங்கள் பெரும்பாலோர் அத்தனை புராணங்களும் ஒரே ஆசிரியரால் எழுதப் பட்டவை என்று கருதுகிறார்கள். மாறுபட்ட கதை சொல்லும் விதம், ஒரே கதை ஒவ்வொரு புராணத்தில் ஒவ்வொருவிதமாக சொல்லப் பட்ட விதம், கதைக் குறியீடுகள் போன்றவை புராணங்கள் பல பண்டிதர்களால் பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கப் பட்டு தொகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு புராணமே பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பௌராணிகர்களால் பல்வேறு வடிவங்களை பெற்றது என்று நம்புவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

மொத்தப் புராணங்களிலும் சிலவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புராணங்களில் அவரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

1.பிரம்ம புராணம். 2.விஷ்ணு புராணம்.3.வாயு புராணம்.4.ஸ்ரீமத் பாகவதம்.5.பிரம்ம வைவத்ர புராணம். 6.ஸ்கந்த புராணம்.7.வாமன புராணம்.8.கூர்ம புராணம்.

ஆனால் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் புராணங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கூறப்பட்டுள்ள சில செய்திகள்    ஹரி வம்சத்திலும் ஏனைய புராணங்களிலும் இல்லை என்றே கூறலாம்.மகாபாரதம் பாண்டவர்களின் கதை என்பதும், அதில் கிருஷ்ணரைப் பற்றி சொல்ல நேர்ந்தது தற்செயலானது என்பதும் காரணமாகும். மகாபாரதம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் நண்பன் என்பதோடு முடிந்து விடுகிறது. பாண்டவர் தவிர்த்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் மகாபாரதத்தில் குறைவே.

மகாபாரதத்தில் கூறப் படாத செய்திகளை சொல்வதற்காகவே கூறப் பட்ட புராணம்தான் ஹரிவம்சம் என்று அதில் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகின்றனர். ஸ்ரீமத் பாகவதத்திலும் இது போன்ற தெளிவான குறிப்புகள் உள்ளன. வியாச பகவான் மகாபாரதத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை என்பதை சூசகமாக ஒப்புக் கொள்கிறார்..இதன் காரணமாக நாரதர் வியாசரை ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி தனியாக ஒரு நூல் எழுதப் பணிக்கிறார்.

மகாபாரதம் காலத்தால் புராணங்களுக்கும்,ஹரிவம்சத்திற்கும் முந்தையது என்பது தெளிவாகிறது.மகாபாரதமே ஒரு கற்பனைக் கதை என்னும்பொழுது ஹரிவம்சமோ,ஸ்ரீமத் பகவதாமோ மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை மாந்தரை தமது நூல்களின் காவியத் தலைவனாக முன் வைக்கும்பொழுது அந்த பாத்திரத்தின் மீது நமக்கு எவ்வாறு நம்பகத்தன்மை ஏற்படும்?

என் சத்திய ஆராய்வில் மகாபாரதத்தில் கூறப் பட்டுள்ள செய்திகளில் ஓரளவாவது உண்மை ஒளிந்துள்ளதா என்ற என் நெடும்பயணத்தில் நான் இரண்டு சவால்களை சந்திக்க நேர்ந்தது. முதலாவது நம் பாரத மக்கள் புராணங்களை இயற்றியது ரிஷிகள் என்பதால் அவற்றில் ஒரு சிறு தவறு கூட இராது என நம்புவதுதான். மற்றொரு சவால் மேலை நாட்டு அறிஞர்களின் பார்வையில் நலிந்த,அடிமை இந்தியர்களுக்கு போராடும்  வலிமையுடன் கூடிய கடந்த காலம் என்ற ஒன்று கிடையாது என்பதாகும். அத்தகைய மேலை நாட்டு “சான்றோர்களை”  விமர்சிக்க வேண்டியது எனது தற்சமய நோக்கமன்று. அவர்கள் தற்சமயம் சமஸ்க்ருத கிரந்தங்களுக்குள் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு அவர்களை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. என் அவசியம் எல்லாம் என் இந்திய மக்களை பற்றியது மட்டும்தான். நமது துரதிர்ஷ்டம் நம் நாட்டு அறிஞர்கள் சிலர் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுவதை கண்மூடித்தனமாக நம்புவதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். கண்பார்வையற்ற ஒரு மாற்று திறனாளி வேறொரு கண்பார்வையற்ற மாற்று திறனாளியை நம்புவதைப் போல.இது போன்ற ஆங்கிலமயமாக்கப் பட்ட இந்தியர்களும் எனது  இந்த புத்தகத்தைப் படிப்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்த மெய்மைக் கூறுகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.

வரலாற்றுப் பார்வையில் மகாபாரதம்.

ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் ஒரு பாத்திரமாக அறிமுகம் ஆவது மகாபாரதத்தில்தான். மகாபாரதம் என்பது இயற்கைக்குப் புறம்பான , சாத்தியமற்ற, குழப்பமான நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும் பொழுது அதனை எவ்வாறு ஒரு வரலாற்று ஆய்வு நூலாக கொள்ள முடியும்? அர்த்தமற்ற பிதற்றல்கள் மலிந்த மகாபாரதத்தை முற்றிலும் வரலாற்று ஆய்விற்கு அப்பால் பட்ட நூல் என்று ஒதுக்கி விட முடியாது. தோன்றிய நாளிலிருந்தே மகாபாரதத்தை நமது நாட்டினர் ஒரு இதிகாசமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஐரோப்பியர்கள் அதனை காவியமாகக் கொள்கிறார்களே தவிர வராலற்று நூலாக ஏற்றுக் கொள்வது இல்லை.இதி-ஹா-ஆசம்{ முன்னால் நிகழ்ந்தது என்ற பொருள் படும் வடமொழிச் சொல்}-இதிகாசம் என்ற பெயர் பெற்றுள்ளதால் இதனை முற்றிலும் கற்பனைக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. மகாபாரதத்தில் சில பகுதிகளை கற்பனைப் புனைவு என்றும், சில பகுதிகளை வரலாற்று நிகழ்வுகளாகவுமே கொள்ள வேண்டும்.

எல்லா கலாச்சாரங்களிலும்  வரலாறும், புனைவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. மற்ற நாடுகளில் உள்ள தொல் நூல்களில் காணப்படும் அளவை விட மகாபாரதத்தில் கற்பனைப் புனைவுகள் அதிகம் இருப்பதற்கு காரணம் உள்ளது.

இயற்கையை  மீறிய, உண்மைக்குப் புறம்பான கூறுகள் ஒரு தொல் நூலினுள் இரண்டு காரணங்களுக்காக உள்ளே நுழைகின்றன.முதலில் நூலாசிரியரே நிறைய கட்டுக் கதைகளை மூல நூலில் அவிழ்த்து விடுகிறார். காலப் போக்கில் மூல நூல் திரியத் தொடங்குகிறது. மாற்றி சித்தரிக்கப் படுகிறது.

நமது இதிகாசங்கள் வாய் மொழி மூலமே அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப் பட்டன. எனவேதான் மகபாராதத்தில் காணப் படும் வரலாற்று செய்திகளுடன் கட்டுக் கதைகளும் , உண்மைக்குப் புறம்பான கற்பனைப் புனைவுகளும் கலந்திருக்க வேண்டும். இந்த காரணத்தால்தான் மகாபாரதத்தில் மற்ற நாட்டு தொல் நூல்களில் காணப் படுவதையும் விட அதிகமான கட்டுக் கதைகள் மலிந்து காணப் படுகின்றன.

மற்ற நாடுகளில் தோன்றிய ஆவணங்களையும் விட மகாபாரதம் தான் தோன்றிய பாரத மண்ணில்மிக பிரசித்தி பெற்ற ஆவணமாக மாறத் தொடங்கியதால் காலங்கள் தோறும் மகாபாரத ஆசிரியர்கள் தன் வாசகர்களுக்கு தன் கற்பனைத் திறத்தை கலந்து புனை கற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ரோமாபுரி,.கிரேக்க . நாட்டு ஆசிரியர்களைப் போல தாம் இயற்றிய நூலில் கையொப்பம் இடும் பழக்கம் இல்லாதவர்கள் நமது பண்டைய நூலாசிரியர்கள் . இதன் காரணமாக கால ஓட்டத்தில் ஒரு படைப்போ ஆவணமோ மூல நூலை விட்டு அதிக தூரம் வந்து விடுவதை தவிர்க்க முடிவதில்லை.

ஆயினும் மகாபாரதத்தில் முற்றிலும் வரலாற்று செய்திகள் இல்லை என்று புறந்தள்ளி விட முடியாது.

 

பாண்டவர்கள்

பண்டைய சமஸ்க்ருத நூல்களை ஆராய்ந்த பின்பு நான் ஒரு முடிவுக்கு  வந்துள்ளேன். யுதிர்ஷ்டர் அலெக்சாண்டர் சக்கரவர்த்தியை எதிர்த்த சந்திர குப்தரின் காலமான கி.பி.335க்கு முன்னால் சற்றேறக் குறைய 1115 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதுதான் அந்த முடிவு.

மகாபாரதத்தின் மூலப் பிரதியில் பாண்டவர்கள் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஜெர்மானிய  அறிஞர் லேசன் என்பவர் மகாபாரதத்தில் கூறப்படும் மகா யுத்தம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால தேசத்தவருக்கும் இடையில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். இவர் கூற்றை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அந்த மகாயுத்தம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால தேசத்தினருக்கும் இடையில் என்ற போதும் பாண்டவர்களை புறக் கணிக்க இயலாது. ஏன் எனில் பாஞ்சால மன்னனின் மருமக்களாகிய பாண்டவர்கள் மாமனாரை எதிர்த்து திருதராட்டினனின் புதல்வர்கள் வரும்பொழுது உதவிக்காக போர் புரிந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஐரோப்பியர்கள் பாண்டவர்களின் இருப்பை பற்றி ஐயப்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. மகாபாரதத்தின் சமகால நூல்கள் எதிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு காணப் படாததே இதற்கு காரணம். இதற்கு என்னால் எளிய முறையில் விடை அளிக்க முடியும். இந்திய பாரம்பரியத்தில் வரலாற்று தொகுப்பு எழுதும் பழக்கம் இருந்தது கிடையாது. உதாரணமாக எந்த இந்திய தொல் நூலிலும் மாவீரன் அலெக்ஸாண்டர் படையெடுப்பு குறித்து தகவல்கள் இல்லை. அதற்காக அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படை எடுத்து வரவில்லை என்று அர்த்தமாகாது.

எனவே நம்மால் பாண்டவர்கள் இருப்பைப் பற்றியோ இருப்பின்மை பற்றியோ அறுதியிட்டு கூற முடியாது.

மகாபாரதத்தில் இடை செருகல்களும் திரிபுகளும்

இதுகாறும் நான் கூறியவற்றில் இருந்து மகாபாரதத்தில் வரலாற்றுக் கூறுகளும் இருக்கின்றன என்பதற்கு காரணங்கள் உள்ளன.எனவே இந்த வரலாற்று கூறுகளிலிருந்துஸ்ரீ கிருஷ்ணரை வடிவமைப்பது ஒன்றே என் பணியாக என் முன் நிற்கின்றது.  அத்தகைய வரலாற்று கூறுகள் என்று நம்பப் படுகின்ற பகுதிகளிலிருந்துதான் என்னால் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை வெளிக் கொணர இயலும்.  மற்ற நூல்களான ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும்,ஹரி வம்சம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகிய நூல்களில் மட்டும் காணப்படும் செய்திகளையும் கணக்கில் எடுத்து கொள்ள போகிறேன்.சில பகுதிகள் மேற்கூறிய மூன்று புத்தகங்களில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளன. மகாபாரதத்தில் இந்த குறிப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.இருப்பினும் நாம் ஒன்றை கவனத்தில்கொள்ள வேண்டும்.மகாபாரதத்திற்குப் பின் எழுதப்பட்ட நூல்களில் வரலாற்றிலிருந்து விலகிய உண்மைக்கு எதிரான கற்பனைப் புனைவுகளே மிகுந்து காணப்படுகின்றன.. இடைச் செருகல்களும்,கற்பனை திரிபுகளும் மிகுந்து காணப்படுகின்றன .கால ஓட்டத்தில் மிகைப் படுத்துதலும் மாற்றி கூறுதலும் தவிர்க்க இயலாத மனித இயல்பு.

 

மகாபாரதத்தில் செயற்கையும், இயற்கை மிகுதலும்

மகாபாரதத்தை முழுமையாகப் படிப்பவர்களுக்கு அது மூன்று தனி தனி தளங்களில் இயங்குவது விளங்கும். முதல் தளத்தில் மகாபாரதத்தின் ஊடுசரமாக விளங்கும் பிரதான கதைப் பகுதி. இது முற்றிலும் வரலாற்று ஆவணமாகவே விளங்குகிறது. இரண்டாவது தளம் நாடகப் படுத்த வேண்டிய காரணத்தால் பிரதான கதைப்பகுதி மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும். மூன்றாவது தளம் என்பது மூலக் கதைக்கு சற்றும் தொடர்பில்லாத புனை கதைகளின் தொகுப்பாகும்.

எனவே மூலக் கதையை மற்ற இரண்டு தளங்களிலிருந்து எப்படி பிரித்து எடுப்பது என்று பார்ப்போம்.

1.மகாபாரதத்தில் எந்தப் பகுதியாக இருப்பினும் அதில் உள்ள இடைச் செருகல்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

2.முற்றிலும் செயற்கையான அல்லது மிகு இயற்கையான நிகழ்வுகளை ஒதுக்கி விட வேண்டும்.

3.இடைச் செருகல் இன்றி இயல்புடன் சில பகுதிகள் தோன்றினாலும் அவை உண்மைக்குப் புறம்பானவைகளாகத் தோன்றுமேயானால் அவற்றையும் கணக்கில் கொள்ளக் கூடாது.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை