ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1

க்ருஷ்ணகுமார்

 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

வள்ளல் அருணகிரிப் பெருமான் – கந்தர் அனுபூதி – பாடல் – 51

சீக்கியர்களின் மதநூலான குருக்ரந்த் சாஹேப்பில் மூல்மந்தர் (மூல மந்திரம்) என்றழைக்கப்படும் முதற்பாடல்

சரியான உச்சரிப்பைச் சுட்ட தேவ நாகர லிபியிலும் ஆங்க்ல லிபியிலும் தட்டச்சப்பட்டுள்ளது

இக் ஓம்கார்

इक ओम्कार

ik OmkAr

பரம்பொருள் ஒன்றே

ஸத்நாம்

सत् नाम

sat nAm

என்றென்றும் உண்மையென அறியப்படுபவர்

கர்தா புரக்

करता पुरख

kartA purak

உலகத்திற்கும் மற்றும் அனைத்துக் காரணங்களுக்கும் காரணமானவர்

நிர்பவ்

निर्भाओ

nirbhav

பயமற்றவர்

நிர்வைர்

निर्वैर

nirvair

அவருக்கு யாரிடமும் பகைமை இல்லை

அகால் மூரத்

अकाल मूरत

akAl mUrat

அவர் அழிவற்றவர்

அஜூனி

अजूनि

ajUni

பிறப்பிறப்புகளுக்கு அப்பாற்பட்டவர்

சை பங்க்

शै भङ्ग्

Sai(n) bhang

ஸ்வயம் ப்ரகாசமானவர்

குரு ப்ரசாத்

गुरु प्रसाद

guru prasAd

குருவின் கருணையால் அறியப்படுபவர்

வாஹே குரு தீ கால்ஸா! வாஹே குரு தீ ஃபதே!

WahE guru dhI khalsA WahE guru dhI phathE!

வல்லமை படைத்த குருவின் இயக்கம் கால்ஸா; அவருக்கு வெற்றி உண்டாகட்டும்.

—- xxxxxx

மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம் சில உண்மைகள், சில நற்கருத்துக்கள், சில சரித்ரத்திற்கு மாறான கூற்றுகள், தகவற்பிழைகள், வெறுப்புக்கருத்துக்கள் போன்ற கலவையால் சமைக்கப்பட்டது என்பது என் தாழ்மையான அபிப்ராயம். நான் ஏற்கும் மற்றும் மறுக்கும் கருத்துக்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன அதற்கான காரணங்களுடன். என் கருத்துக்களிலும் பல அன்பர்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். கவனப்பிசகால் பிழைகளும் இருக்கலாம். அவற்றையும் நான் அறிய விழைகிறேன்.

அதற்கு முன் :-

ஹிந்தி, பஞ்சாபி, ஆங்க்லம், தமிழ் இந்த மொழிகள் இங்கு முன் பின் சொன்னபடி நான் தினப்படி அதிகமாயும் குறைவாயும் உபயோகிக்கும் மொழிகள். சில நிமிடத்துளிகள் என் குடும்பத்தாருடன் தமிழில் தொலைபேசியில் உரையாடுவது மட்டும் தமிழில் என் தொடர்பு. அதை மனதில் இருத்தி இரண்டரை தசாப்தமாய் கிட்டத்தட்ட இவ்வாறே வாழ்ந்துவரும் என் மொழிக்கலப்பை க்ஷமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயன்ற வரை மொழிநடையை சீர்திருத்தியே வ்யாசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னும் என் மொழிநடையைத் தூய தமிழில் அன்புள்ள அன்பர்கள் குற்றம் கண்டால் அதில் எனக்குப் பிணக்கோ அல்லது வாத விவாதங்களோ இல்லை. அவர்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

கடும் குளிரில் கைவிறைக்க மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த பரிச்ரமத்துடன் எழுதப்பட்டது இந்த வ்யாசம். அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சமர்ப்பித்த மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாகச் சமர்ப்பிக்கப்படும் இந்த வ்யாசத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எதிர்வினையாற்றப்பட்ட வ்யாசத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் உடன்பட்டும் ஒவ்வாத கருத்துக்கள் சுட்டப்படும் காரணங்களின் பாற்பட்டு மறுதலிக்கப்பட்டுமுள்ளன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் கருத்துக்களில் மட்டும் தான் குற்றங்கள் காணப்பட்டன. வ்யக்தி விசேஷத்தில் அல்ல.

ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் என என்னால் அன்புடன் விளிக்கப்பட்டு நம்முடன் சலிக்காது உரையாடி மகிழ்ந்த சலியாத் தொண்டர் ஓய்விலா எழுத்தாளர் த்ருடமான ஹிந்துத்வவாதி வினயமிகு ஆன்மிகவாதி ஒப்பிலா மனிதர் எனப்பன்முகப் புகழ் வாய்ந்த அவர்களுடைய மறக்கவியலா நினைவுகளின் பாற்பட்டு சமர்ப்பிக்கப் படுவது இந்த வ்யாசம். தன்னுடைய எஜமானன் என்று அப்பெருந்தகை சொல்லும் கருமாணிக்கமாம் கண்ணன் தன் திருதாள்களடைந்த அவர் தம் எண்ணங்களும் நினைவுகளும் நம்மை வழிகாட்டட்டும் எனக் கார்முகில் வண்ணனவனையும் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனையும் இறைஞ்சுகிறேன்.

உத்தர பாரதத்தில் ரீடா சாஹேப் குருத்வாரா (சீக்கியர் கோவில்) என்று ஒரு குருத்வாரா மிகவும் ப்ரசித்தம். இது உத்தராகண்ட் மாகாணத்தில் உள்ளது. பரேலிக்கு (உ.பி) அருகில் உள்ள டனக்பூர் (உத்தராகண்ட்) என்ற இடத்தில் இருந்து 166 கிலோமீட்டர் தொலைவிலும் நானக்மத்தா என்ற இடத்தில் இருந்து 209 கிலோமீட்டர் தொலைவிலும் (சாலை மார்க்கமாக) உள்ளது இந்த ஸ்தலம். குருநானக் தேவ் மஹராஜ் அவர்கள் தனது முதல் சிஷ்யரான பாய் மர்தானா (Bhai Mardana) அவர்களுடன் இந்த ஸ்தலத்திற்கு வருகை தந்துள்ளார். பாய் மர்தானா முஸல்மானாகப் பிறந்து குருநானக் மஹராஜ் அவர்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சிஷ்யராகச் சேர்ந்தவர். குருவும் சிஷ்யரும் இந்த ஸ்தலத்திற்கு வந்த போது பாய் மர்தானாவுக்குப் பசியெடுக்கையில் வேறெதுவும் கிட்டாத போது குரு மஹராஜ் அங்கிருந்த பூவந்திக்காய்களை (சீயக்காய் – Soapnut) இவருக்கு உண்ண அளித்ததாகவும் அது தித்திப்பாக இருந்ததாகவும் செவிவழிச்செய்தி. குருதசமேஷ் (பத்து சீக்கிய குருமார்) பற்றிப் பேசும் நூலான ஜனம்சாகியில் இது பற்றிக் குறிப்பில்லாத போதும் சீக்கிய சம்ப்ரதாயத்தின் செவிவழிச்செய்தியாக இது ஏற்கப்படுகிறது. இன்றும் குருத்வாராவுக்கு வணங்கச்செல்லும் தர்சனார்த்திகளுக்கு ப்ரசாதமாக தித்திப்பான பூவந்திக்காய்கள் கொடுக்கப்படுகின்றன.

இதை நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் கசப்பான காய்களை இனிப்பாக மாற்றியது குருமஹராஜ் அவர்களின் சித்தி (sidhi) (Miracle). அவருடைய சமத்காரம். அது அமானுஷ்யமானது. மஹாத்மா காந்தியின் மரணம் என்ற இந்த வ்யாசத்தில் மதநல்லிணக்கம் மற்றும் மதஒற்றுமை என்ற கனி கருப்பொருளுடன் ஒவ்வாதவாறு க்றைஸ்தவ மத மேட்டிமை மற்றும் ஹிந்து மதத்தின் மீது மட்டிலுமான குற்றச்சாட்டுக்கள் என்ற காயாக படைக்கப்பட்டுள்ளது.

சரித்ரத்தை அணுகுவதற்குக் கறாரான அணுகுமுறை வேண்டும். விருப்பு வெறுப்புகள் இல்லாது ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் விஷயம் சரித்ரம். சரித்ரத்தைத் தொகுப்பதில் மத நம்பிக்கை, சொந்த விருப்பு வெறுப்புகள் இவையெல்லாம் அறவே இருக்கலாகாது. மாறாக சரித்ரத்தை சொல்லுவது போல் தோற்றமளிக்கும் இந்த வ்யாசம் சொந்த மத நம்பிக்கைகள், சொந்த மத விருப்பு வெறுப்புகள் இவற்றுடன் சிலப்பல சரித்ர உண்மைகளையும் ஒன்றாகக் கலந்து சமைக்கப்பட்டுள்ளது.

மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்பது மிகவும் ஆதர்சமான விஷயம். இந்த அறிய கோட்பாட்டை மதங்களிடையே மற்றும் சமயங்களிடையே உள்ள ஒற்றுமைகளைப் போற்றுதல் என்ற படிக்கு விளக்குதல் கோட்பாட்டை நேர்மறையாக விளக்குதல் ஆகும். மதங்களிடையே நிகழும் பூசல்களை விளக்கி அதனால் ஏற்படும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி அதன்மூலம் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் நன்மை பயக்கும் என்பதை விளக்குதல் இதே கோட்பாட்டை எதிர்மறையாக விளக்குதலாகும்.

ஹிந்துஸ்தானத்தில் பல சமயங்கள் மற்றும் பல மதங்கள் புழங்கின புழங்கி வருகின்றன. விவித சமயங்களினிடையே கருத்துப் பரிமாற்றங்கள் எவ்வாறு இருந்தன அவற்றைத் தெரிவிக்கும் ஆவணங்கள் யாவை என்பதை வாசிக்கையில் அந்த ஆவணங்களின் படி சமயங்களிடையே காணப்பட்ட ஒற்றுமைகள் யாவை என்பதையும் பட்டியலிடமுடியும். அவ்வாறு பகிர்வது நேர்மறையான விளக்கம். ஆதர்சமான விளக்கம். காந்தியடிகளின் மரணத்தை முன் வைத்து மத ஒற்றுமையைப் பற்றி வ்யாசம் பேச முனைந்தாலும், வ்யாசத்தின் ஒட்டு மொத்த த்வனி மதஒற்றுமைக்கு புறம்பானதாகக் காணப்படுகிறது.

எதிர்மறையாக மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைச் சொல்ல விழைந்து மத வேறுபாடுகளைக் கருத்துச்ச் சமநிலையுடன் சொல்ல விழைவோர் மதப்பூசல்களைப் பற்றிச் சொல்ல விழைந்தால் ஹிந்துஸ்தானத்தில் தழைக்கும் அனைத்து மதங்களிலும் செயல்பட்டு வரும் மத அடிப்படை வாதத்தை / மத அடிப்படை வாதிகளைப் பற்றிக் காய்த்தல் உவத்தல் இல்லாது சொல்ல வேண்டும். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் அடிப்படை வாதிகள் இருப்பது போன்றும் ஹிந்து மதத்தினர் மட்டும் மற்ற மதத்தினரை ஹிம்சை செய்வதாகவும் வ்யாசத்தில் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவ அடிப்படைவாதத்தை / இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ அடிப்படை வாதிகளைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாதது கருத்துச் சமநிலையின்மையை ப்ரதிபலிப்பதின்றி சில வாசகங்கள் அப்பட்டமாய் க்றைஸ்தவ மத மேட்டிமையையும் பறை சாற்றுகின்றது.

ஆனால் காந்தியடிகளின் மரணத்தை முன்வைத்து அதனுடன் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றி விதந்தோந்தும் ஒரு வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமையை மட்டிலும் தனித்து ப்ரகாசிக்கச் செய்து மேலும் ஹிந்து மதத்தை மட்டிலும் அடிப்படைவாதம் உள்ளதாக ஹிந்துக்களை மட்டும் அடிப்படைவாதிகளாக சித்தரித்தல் கருப்பொருளைச் சிதைப்பதாக மட்டிலும் தான் அமையும்.

———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx

முதலில் வ்யாசத்தின் சில நிறைவான அம்சங்கள் ( அதில் உள்ள குறைகளுடன் கூடி)

1. நிறைகள் :-

\\\\இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!\\\

நான் ஹிந்து மதத்தின் படி ஒழுகுபவன். மஹாத்மா காந்தியடிகளின் ராமபக்தி நான் மிகவும் போற்றும் விஷயம். அதே போன்றே அவரது எளிமையும்.

ஆனால் காந்தியடியகளின் அரசியல் கருத்துக்கள், ப்ரம்மசர்யத்தை முன்னிறுத்தி அவர் செய்த வேதனையளிக்கும் சோதனைகள், மதஒற்றுமை என்ற பெயரில் ஹிந்துக்கள் ஹிம்சிக்கப்பட்ட போதெல்லாம் அஹிம்சாவாதியான அவர் ஆதரித்தமை, அரசியலில் எதேச்சாதிகாரத்தைக் கையிலெடுத்து ஜனநாயகத்தைப் படுகுழியிலாழ்த்தி ஸ்ரீ சுபாஷ் சந்த்ரபோஸ் போன்று ஜனநாயக ரீதியில் வென்ற தலைவர்களை ஒடுக்கியமை மற்றும் முடிவிலே “என்னைப் பிளந்து பின் தேசத்தைப் பிளப்பீர்” என்று சொன்ன காந்தியடிகள் தேசப்பிரிவினையை மௌனமாக அங்கீகரித்தது போன்றவை நான் ஏற்கஒண்ணாத விஷயங்கள். சில கருத்துக்களில் மட்டும் காந்தியடிகளின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு மிகப்பல கருத்துக்களில் அவர் கருத்துக்களில் எனக்குக் கடுமையான முரண் என்பது என் நிலைப்பாடு. இதை முதலில் சொல்லி மற்ற விஷயங்களைப் பகிர்வது என்பது நேர்மையான போக்கு என்பதால் நான் காந்தியடிகளுடன் உடன்படாத கருத்துக்களை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

சாகும் தருவாயில் இறைவன் பெயரைச் சொல்லிச் சாவது என்பது அறிதானதும் ஹிந்துக்கள் போற்றக்கூடியதும் ஆன நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். குலசேகராழ்வார் இயற்றிய முகுந்தமாலையிலும் இது பற்றி ச்லோகம் காணக்கிட்டும். கொடூரமாக ஸ்ரீ நாதுராம் கோட்சே அவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்குந்தருவாயிலும் ராம நாமத்தைச் சொல்லி காந்தியடிகள் இறந்தார் என்றால் எந்த அளவு சதா ராம நாமம் அவரது உளத்தில் உறைந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க இயலும். நான் மிகவும் போற்றும் ராம் கதாவாசக் (உபன்யாசகர்) பூஜ்ய ஸ்ரீ மொராரி பாபு (Morari Bapu) அவர்கள் காந்தியடிகள் பிறந்த அதே குஜராத் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவரது இணைய தளத்திலும் இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். காந்தி மகானின் உயர்வான ராமபக்தியில் ஒருதுளி நம் எல்லோருக்கும் கிட்டுவதாக. வாழ்க நீ எம்மான்.

ஆனால் காந்தியடிகள் “ஹே ராம்” என்று சொல்லி இறந்தது சரித்ர ரீதியாக சந்தேகத்திற்கப்பாற்பட்டு நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயமன்று என்பதும் நோக்கத் தக்கது. விக்கிபீடியாவில் இன்னமும் விவாதாஸ்பதமாக உள்ள விஷயம் இது. இந்த சுட்டியில் http://en.wikipedia.org/wiki/Talk%3AMahatma_Gandhi/Dying_words_controversy விவாதத்தைக் காணலாம். இந்த விஷயத்தில் ஆழ்ந்த கருத்துள்ள அன்பர்கள் சரித்ர ஆவணங்களின் பாற்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் இந்த விவாதத்தில் பங்கெடுத்து விஷயத்திற்கு மேல் அதிகத் தெளிவு கொடுக்கலாம்.

இந்த விவாதத்தில் சமீபமாக இணைக்கப்பட்ட விஷயம் காந்தியடிகளுக்கு உதவியாளராக இருந்த ஸ்ரீ கல்யாணம் என்ற அன்பர் இதை மறுத்துள்ளமை. காந்தியடிகளுடன் அவர் உயிர் பிரியும் சமயத்தில் உடன் இருந்த இரு சிறுமியரான ஆபா மற்றும் மனு இருவரும் — ஆம் காந்தியடிகள் “ஹே ராம்” என்று சொல்லி இறந்தார் என்று பகிர்ந்துள்ளனர். மற்றும் அங்கிருந்த பல சாக்ஷியினர் தங்களுக்கு இது சம்பந்தமாக ஏதும் தெரியாது என்று சொல்லியுள்ளனர்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதித பாவன சீதாராம் ( தர்மத்திலிருந்து பிறழ்ந்தவர்களை பாவனமாக்குபவர் ராம பிரான்)

ஈஸ்வர அல்லா தேரோ நாம் *அவரவர் சம்ஸ்காரங்களின் படி* (அவரை ஈஸ்வர் எனவும் அல்லாஹ் எனவும் போற்றுகின்றனர்)

ஸப்கோ ஸன்மதி தே பக்வான் (எல்லோருக்கும் நன்மதியைக் கொடுப்பாய் இறைவா)

என்று வாழ்நாள் முழுதும் ராம நாமத்தைக் கேட்டு எளிமையாக வாழ்ந்த அந்தப் பெருந்தகை இறக்குந்தருவாயிலும் ராம நாமத்தைச் சொல்லியே இறந்திருப்பார் என்று எமது நம்பிக்கை ஆழமாகப் போதிக்கிறது.

ஆம். அவர் வாயிலிருந்து இறக்குந்தருவாயில் சொல்லிய ராம நாமம் அடுத்தவரால் கேழ்க்கப்பட்டிருந்து ஆவணப்பட்டிருந்தால் அது சரித்ரமாகிறது. இல்லையேல் சரித்ரமாகாது. அவ்வளவே.

எனது நம்பிக்கைக்கு ஆதாரம் சரித்ர நிகழ்வுகள் அல்ல. தர்ம நூற்கள் மற்றும் தர்மத்தின் வழி ஒழுகும் சான்றோர்களின் போதனைகள்.

நம்பிக்கையைச் சரித்ரத்துடன் கலத்தல் கருத்துத் தெளிவு நல்காது.

\\\\\\\காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்!\\\\\\\

தேசப்பற்றுள்ள பல கோடி ஹிந்துஸ்தானியரில் நானும் ஒருவன். இன்னமும் என்னைப் போன்றே பலருடைய உளங்களிலும் கனன்று கொண்டிருக்கும் விஷயம் அகண்ட ஹிந்துஸ்தானம். ஆகவே தேசப்பிரிவினை என்பது பெரும்பாலான ஹிந்துஸ்தான மக்கள் தங்கள் மனதில் சுமக்கும் துன்பப் பெருஞ்சுமை என்றால் மிகையாகாது. திரும்பவும் பிளக்கப்பட்ட நிலப்பரப்புகள், நேபாளம், தென்னிலங்கை போன்ற பகுதிகள் ஹிந்துஸ்தானத்தில் இணைய வேண்டும் என்பது மிகப்பல ஹிந்துஸ்தானியரின் விருப்பம். இதைச் சொல்கையிலேயே இந்த விஷயத்தில் என்னுடன் மிகவும் ஒத்த கருத்துள்ள —– நம்மிடையே உரையாடி சில நாட்கள் முன் அமரரான —— என்னுடைய மற்றும் வாசகர்கள் பலரின் பேரன்பிற்குறிய —— ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களை —— என் நெஞ்சாரக் கண்ணீருடன் நினைவு கூர்கிறேன்.

பொதுவாக மஹாத்மா காந்தியடிகளைப்பற்றிப் பேசும் காந்தி பக்தர்கள் காந்தியடிகளால் தேசப்பிரிவினையைத் தடுக்க இயலாமையைப் பற்றிக் குறை கூறி நான் கண்டதில்லை.

அப்படி இருப்பினும் கூட வ்யாசத்தில் இந்த விஷயம் உளந்திறந்து சொல்லபட்டதற்கு எமது நன்றி.

\\\\\ உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்!\\\\

மிகவும் அருங்கருத்து. நான் முற்றிலும் ஏற்கும் கருத்து. காந்தியடிகளுக்கு ஹிந்து மத நூற்கள் இளமையில் போதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வாழ்நாள் முழுதும் ஹிந்து மத நூற்களையும் மாற்று மத நூற்களையும் வாசித்துள்ளார் என்று அறிவேன். இந்தக் கருத்தைச் சொல்கையில் ஹிந்துக்களிடையே பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே இந்த உயர்ந்த கருத்து இருந்துள்ளது என்பதைச் சொல்வதும் கூட மிக முக்யம்.

ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)

உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.

\\\\\\\\\அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !\\\\\

உண்மை தான். நான் முற்றிலும் ஏற்கும் அருங்கருத்து இது. ஆனால் வ்யாசத்தில் துரத்ருஷ்டவசமாய் இதற்கு நேர் மாறாக தனித்ததாய ஹிந்து மதத்தின் மீது மட்டிலுமான குற்றச்சாட்டுகள் மற்றும் க்றைஸ்தவமத மேட்டிமை உரத்துப் பேசப்பட்டுள்ளன என்பதை மறுக்க இயலாது.

———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx

2. தகவற் பிழைகளும் க்றைஸ்தவ மேட்டிமை பரப்புரைகளும் :-

1. ஏசுபிரானை சரித்ர மாந்தர்களுடன் சேர்த்தமை :-

Trinity என்ற க்றைஸ்தவர்களின் மதநம்பிக்கையான பிதா – சுதன் – பரிசுத்த ஆவி என்ற விஷயத்தை நான் மதிக்கிறேன். க்றைஸ்தவர்களுக்கு மட்டுமல்ல —– ஏசுபிரான் என்று க்றைஸ்தவர்கள் நம்பும் தேவமைந்தன் சொன்ன விஷயங்களில் பொதுவிலே எல்லோரும் ஏற்கும் விஷயங்களுமுள்ளன. அவற்றை நான் மிகவும் போற்றுகிறேன். அப்படியே ஹிந்து மத நூற்களில் போதிக்கப்பட்ட விஷயங்களும். சத்யம் வத – உண்மை பேசு – என்ற கூற்றினை உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் வேத நூற்கள் பேசுகின்றன. உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் தானே இது.

ஏசுபிரான் என்ற க்றைஸ்தவர்களின் கடவுட்கோட்பாடு எனது மத நம்பிக்கைக்குப் புறம்பான ஆனால் க்றைஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற விஷயம். ஏன் சிலப்பல வேறுபாடுகளுடன் இஸ்லாமிய சஹோதரர்களும் ஈசா-அலே-சலாம் அவர்களை அவர்களது குரான்-ஏ-ஷெரீஃப்பின் படி போற்றுகிறார்கள் என்பது நான் அறியும் விஷயம். ஏசுபிரான் என்ற கடவுட்கோட்பாட்டை நான் விவாதத்திற்கப்பாற்பட்டதாகவும் க்றைஸ்தவ இஸ்லாமிய மத நம்பிக்கைக்குறியதாகவும் கொள்கிறேன். அதை மிகவும் மதித்துப் போற்றுகிறேன்.

ஆனால் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்த ஒரு நபர் என்றால் நான் கட்டாயம் அக்கூற்றைப் பரிசீலனை செய்யத் தக்க ஆவணங்களை அணுகி அலசுவேன்.

ஏசுபிரான் மிகப்பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. யஹூதிகள் அவரைத் தண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. உலக நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவர் மரித்த பின்னும் மீண்டும் உயிரெழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு அளவற்ற புகழ் அவருக்கு இருக்கும் பக்ஷத்தில் அவர் புகழ் அல்லது அவர் பகர்ந்த கருத்துக்களில் மற்றையோருக்குக் கருத்து வேறுபாடுகள் போன்றவை —– அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பகுதிகளில் எந்த அளவுக்குப் பரவியிருக்க வேண்டும். அவரைப்பற்றி எந்த அளவுக்குப் போற்றியும் அவருடன் முரண்பட்டும் நூற்கள் பல எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவர் காலத்தில் யஹூதிகள் மற்றும் பாகனியர்களின் (Pagan) மதங்கள் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஏசுபிரான் அவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு நபராகச் சொல்லப்படுகையிலும் கூட அவர் வாழ்ந்த சமகாலத்திலும் அதற்குச் சற்றே பிந்திய காலத்திலும் எழுதப்பட்ட யஹூதிய பாகனிய நூற்களில் அவர் பற்றிய குறிப்புக்கள் கூட காணப்படவில்லை என்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் திண்ணை தளத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம்.

\\\\உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’,\\\\\\\\இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்!\\

மஹாத்மா காந்தி மற்றும் புத்த பிரான் போன்று சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மக்களுடன் தேவமைந்தனாகிய ஏசுபிரானை இணைத்ததை சரித்ரத்தின் பாற்பட்டு ஏற்க இயலாது. இதுவரை கிடைத்த சான்றுகளின் படி ஏசுபிரானை சரித்ரத்தில் வாழ்ந்த நபராகக் கொள்ள இயலாது. இருப்பினும் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்த நபர் என்பதைப் பரிசீலிக்கத் தக்க ஆவணங்கள் ஏதும் முன்வைக்கப்பட்டால் அதன் பாற்பட்டு அக்கூற்று மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட இயலும்.

ஏசு அவர்களின் பிறப்பு, சிலுவையில் அறையப்பட்டது; மரித்தது; உயிர்மீட்டெழுந்தது இவையெலாம் மெய்ப்பாடு என்று நம்பிக்கை மட்டும் சார்ந்து உரத்துப் பேச முயலாது சரித்ரச் சான்றுகளின் படி விஷயத்தை அணுக வேண்டும் என்பதை அழுத்ததுடன் சொல்ல விழைகிறேன். கூடவே பைபிளியல் அறிஞரான அன்பர் தேவப்ரியா சாலமோன் அவர்கள் முன்வைத்த ஏசு பிறந்த நகரம், அவர் பிறந்த திகதிக் குறிப்புகள், அவர் மரித்தமை, அவர் உயிர் மீட்டெழுந்தமை மற்றும் இன்ன பிற தகவல்களில் உள்ள சுவிசேஷ வேறுபாடுகளையும் நினைவு கூர்கிறேன். சரித்ர ரீதியில் ஏசுபிரானை நிறுவ இதுபோன்ற சுவிசேஷ வேறுபாடுகளும் சமன்வயம் செய்யப்படுதல் அவசியம்.

பூமி ஸ்திரமாக வைக்கப்பட்டுள்ளது அதை நகர்த்த இயலாது என்று பைபள் கூறுகிறது – The Earth is firmly fixed; it shall not be moved(Psalms 104.5). ஆனால் இன்று விக்ஞானம் பூமி சுழல்கிறது என்று சொல்கிறது. பூமி நகராது என்ற கூற்றை மதநம்பிக்கை என்று கூறினால் பிணக்கே இல்லை. ஆனால் பூமி நகராது என்ற கூற்றை விக்ஞானம் என்று கூறினால் கண்டிப்பாகப் பிணக்கு வரும். அதே போல சந்தேகத்திற்கப்பாற்பட்டு ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இதுவரை தெளிவாக இல்லாது போது உண்மையாக சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மாந்தர்களுடன் ஏசுபிரானை ஜபர்தஸ்தியாக இணைப்பதால் மட்டும் அவருக்கு ஒருவர் சரித்ர ஆதாரத்தைக் கொடுத்து விட முடியாது. மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் இவற்றுடன் ஜபர்தஸ்தியாக பச்சைமிளகாயைச் சேர்ப்பதன் மூலம் மட்டும் பச்சை மிளகாய் என்ற பழம் இனிக்கும் என்று சாதிக்க முனைதல் எப்படியோ அப்படியே சரித்ரச்சான்றுகளல்லாத படிக்கு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் ஏசுபிரானை சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மாந்தர்களுடன் பட்டியலிடுதல் நோக்கப்படும்.

நான் சரித்ரத்தை வாசித்த வரை இந்த விஷயத்தில் இன்னமும் எனக்கு வினாக்கள் உண்டு. ஆனால் இன்று உலகத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் பைபிளியல் முரண்பாடுகள் ஏசுபிரானை சந்தேகத்திற்கப்பாற்பட்டு சரித்ர நாயகனாக சுட்டவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன்.

\\\\ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது.\\\\

மஹாத்மா காந்தியின் மரணத்தையும் அத்துடன் கூடவே மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற விஷயங்களைப் பேசும் ஒரு வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமை ஏன் ஜபர்தஸ்தியாக நுழைக்கப்பட்டுள்ளது என்ற வினா எழுகிறது.

உலகிலே க்றைஸ்தவ மதம் Crusade, Inquisition போன்ற உக்ரமான வழிமுறைகளாலும் பரப்பப்பட்டது என்பதும் சரித்ரம்.

பதினோராம் நூற்றாண்டு துவங்கி இருபதாம் நூற்றாண்டு வரை க்றைஸ்தவ மத நம்பிக்கையை ஏற்காதோரை முறையாகத் திட்டங்கள் தீட்டி சிலுவைப்போர்கள், நீதிமன்ற விசாரணைகள் எனப் பல வழிமுறைகளில் பலவந்தம் செய்து அச்சமூட்டி க்றைஸ்தவ மதம் பலவந்தமாக திணிக்கப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

க்றைஸ்தவ மதத்தை இமயத்தளவு ஓங்கி உரத்துப் பேச முனைந்தால் அதற்கு முறையாக க்றைஸ்தவ மத மேன்மை பற்றி தனியாக ஒரு வ்யாசமெழுதலாமே. உலகத்திலேயே மிக உயர்ந்த மலை இமயம். சிலுவை இமயத்தளவு உயர்ந்தது என்றால் மற்றைய மதங்கள் அதற்குக் கீழே என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு அன்பர் பேச முற்படல் ஒரு அன்பருடைய தனி விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம். தனிப்பட்டதாக அதில் எனக்கு ஆக்ஷேபமேதுமில்லை. ஆனால் அதனுடன் கூடவே மத ஒற்றுமை மத நல்லிணக்கம் போன்ற உயர்ந்த கோட்பாடுகளும் பேசப்பட்டு ஹிந்து மத அடிப்படைவாதம் என்றும் ஹிந்துக்கள் அடிப்படைவாதிகள் என்ற படிக்குமான கருத்துக்களும் உரத்துப்பேசப்பட்டால் இது கருத்துக்களில் முன் பின் உள்ள வெளிப்படையான முரண்பாடுகளாகவே காணப்படும். கருத்துச் சமநிலைப் பிறழ்வாகக் காணப்படும்.

ஹிந்துமதம் மட்டும் அடிப்படைவாதமுள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு ஹிந்துமதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் அடிப்படைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு க்றைஸ்தவமதம் குற்றமற்றதாகவும் அடிப்படைவாதமற்றதாகவும் இமயமளவு உயர்ந்த மேட்டிமை பொருந்தியதாகவும் சொல்லப்படுவதால் ஏன் என்னால் க்றைஸ்தவ மத மேட்டிமை வாதத்தை ஏற்க இயலாது என்பதைச் சொல்லுமுகமாக Inquistion, Crusade போன்ற விஷயங்களைப் பற்றி ப்ரஸ்தாபிக்க அவசியமும் எழுகிறது.

சிலுவை ஓங்க முடிந்தமை உலகளாவிய சிலுவைப் போர்களாலும் என்பதும் கூட நிதர்சனம் தானே.

நம்பிக்கையின் அடிப்படையில் சிலுவையில் ஏசுபிரானின் குருதி உள்ளது. பின்னிட்டும் சரித்ரத்தின் அடிப்படையில் க்றைஸ்தவ மதத்தை ஏற்காத ஆனால் பலவந்தத்துக்கும் சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்ட உலகளாவி மாற்று மதத்தைப் பேணிய எண்ணிறந்த சஹோதரர்களுடைய குருதியும் நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட குருதியுடன் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை எப்படிப் புறக்கணிக்க இயலும்.

சிலுவைப் போர்களால் பெருக்கெடுத்த ரத்தச் சகதியில் ஆணிவேர் போன்று சிலுவை ஆழமாக ஊன்றப்பட்டும் இமயமளவு அது காட்சியளித்தால் நோக்கப்பட வேண்டியது சிலுவை எந்தளவுக்கு உயர்ந்தது என்று மட்டுமல்ல…………………….

ரத்தச் சகதியில் ஆணிவேர் போன்று ஆழமாக ஊன்றப்பட்டும் இமயமளவு இச்சின்னம் உயர்ந்துள்ளது என்றால்…..

க்றைஸ்தவத்துடன் மாற்றுக்கருத்துக் கொண்டு அதை ஏற்க மறுத்துப் போராடிய மாற்றுமதத்தவர் எத்துணைபேர்………..

அன்பைப் போதிப்பதாக மலைப்ரசங்கம் செய்யும் தத்துவத்தைக் கொண்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் செய்த வதங்கள் எத்தனை………..

குவிந்த பிணங்கள் எத்தனை…………..

பெருக்கெடுத்த உதிரம் எவ்வளவு………….

என்பதும் நோக்கப்படும்.

சிலுவை இமயமளவு உயர்ந்ததை மட்டிலும் நோக்குபவர்கள் க்றைஸ்தவர்கள் மட்டிலும்………

குவிந்த பிணங்களின் எண்ணிக்கைகளயும் அழித்தொழிக்கப்பட்ட மாற்று மதச் சுவடுகளையும் பெருக்கெடுத்த உதிரத்தையும் மட்டும் கணக்கெடுப்பவர்கள் இந்த பயங்கரங்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்படும் மாற்று மதத்தவர்கள் மட்டிலும்………

மத ஒற்றுமையை அலச வேண்டி மதப்பூசல்களை அவதானிக்க விழைபவர்கள் கருத்து சார்ந்து கருத்துச் சமநிலை சார்ந்து நோக்க வேண்டியது இரண்டு விஷயங்களையும்.

ஏன் இன்னமும் கூட சுவிசேஷக்கூட்டங்கள் என்ற பெயரில் க்றைஸ்தவ ப்ரார்த்தனைகளால் கால் முடங்கியவர்களை நடக்க வைப்போம், கண்ணிழந்தவர்களைப் பார்க்க வைப்போம், தீரவியலா வ்யாதிகளைக் குணப்படுத்துவோம் என்றெல்லாம் பார்க்கிறோமே. அறிவு பூர்வமாக இவையெல்லாம் சாத்யமா?

அப்படிப்பட்ட சிலுவைப்போர்கள், பலவந்தம், சித்ரவதை மற்றும் அறிவு பூர்வமாக ஏற்க இயலா சுவிசேஷ அற்புதங்கள் போன்ற உந்து சக்திகள் இமயமளவு ஏன் வானளவு கூட சிலுவையை உயர்த்த இயலுமே.

நிதர்சனம் இப்படி இருக்க க்றைஸ்தவ மத மேட்டிமைவாதிகளால் உரத்துப் பேசப்படும் அன்பு, தொண்டு மற்றும் த்யாகம் போன்ற விஷயங்களை யதார்த்தமாக மட்டும் கொள்ள இயலுமா அல்லது வானளாவ / இமயமளாவ ஏற்கவொண்ணா உந்து சக்திகளால் உந்தப்பட்ட சிலுவையில் பூசப்பட்ட வண்ண முலாம் என ஏற்க இயலுமா என்பதை இதை வாசிக்கும் வாசகர்களே அவதானிக்கலாம்.

க்றைஸ்தவ மதத்தையோ அல்லது க்றைஸ்தவ மதப்படி ஒழுகும் அன்பர்களையோ குற்றங்காணுமுகமாய் இவை சொல்லப்படவில்லை. மாறாக ஏமாற்று ஜாலவித்தைகளாக இல்லாது மதமாற்றம் ஒன்றையே குறியாகக் கருதாது சமூஹத்தில் இடுக்கண்களுக்கு உட்படும் அன்பர்களின் இடுக்கண்களைக் களையும் தொண்டார்வமுள்ள க்றைஸ்தவ ஸ்தாபனங்கள் எவையெவையோ அவையனைத்திற்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள்.

ஹிந்து மதத்தைப் பற்றியும் ஹிந்துக்களைப் பற்றியும் எண்ணிறந்த குற்றங்களை அடுக்கும் அன்பர்கள் மாற்று மதங்களை முன் வைத்து மாற்று மதத்தைப் புழங்குபவர்களால் நிகத்தப்படும் அந்யாயங்களை மற்றும் பயங்கரவாதங்களைப் புறந்தள்ளுதல் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளுக்கு எள்ளளவும் வலு சேர்க்காது என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டி இக்கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்து உலகமளாவி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அப்பாவி உயிர்களைக் கொன்று குவிப்பவர்கள் இஸ்லாமியப்பெயர் தாங்கிகள் என்று புறந்தள்ளப்பட்டு குரான்-ஏ-ஷெரீஃபிலிருந்து அன்பைப் போதிக்கும் ஓரிரு வாசகங்கள் சுட்டப்படும்.

க்றைஸ்தவ மிஷநரி அடிப்படை வாத சக்திகளின் பழிச்செயல்களும் இழிசெயல்களும் புறந்தள்ளப்பட்டு பைபளிலிருந்து அன்பைப் போதிக்கும் ஓரிரு வாசகங்கள் சுட்டப்படும்.

ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்று மதத்தினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு அதற்காக நீதி மன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் மட்டிலும் ஹிந்துப்பெயர் தாங்கிகள் அல்லர். அவர்களெல்லாம் ஹிந்து மதத்தினர்……… அப்போதெல்லாம் ஹிந்துக்கள் தங்கள் தர்ம நூற்களிலிருந்து அன்பைப்போதிக்கும் வாசகங்களை உதாஹரிக்கக் கூடாது…………

என வாத விவாதம் செய்வது…………..

மதசார்பின்மை…….. மத ஒற்றுமை பேணல்………… மத நல்லிணக்கம் பேணல் …………..

என்றால்………………….

அனைத்து மதங்களைச் சார்ந்தோரும் தாங்கள் தங்கள் அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் உலகம் அமைதியின் பாற்பட்டதாகுமா என அவதானிக்க வேண்டும்.

2. ஹிந்து இயக்கங்கள் பற்றிய பக்ஷபாத துஷ்ப்ரசாரம் :-

\\\\மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்!\\\\\\\\\\\ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்.\\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.\\\\\\

இணைய தளத்தில் தமிழில் எழுதுபவர்களில் மிகவும் தூய்மையான தமிழில் எழுதுபவர்களில் ஒருவராக நான் மிகவும் மதித்துப்போற்றுவது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களை. அதுவும் மாற்று மொழிச்சொற்களை (ஆங்க்லச் சொற்களை) அன்பர் அவர்கள் கையாளும் விதத்தை நான் மிகவும் உகப்புடனும் கவனத்துடனும் நோக்குவதுண்டு. கவனப்பிசகாக RSS என்ற சரியான சொல் வ்யாசத்தில் தவறாக தட்டச்சப்பட்டுள்ளது. முதலில் அது RSSS அல்ல. மாறாக RSS – RashtrIya svayamsEvak Sangh – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (சம்ஸ்க்ருத உச்சரிப்புப் படி) – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஹிந்தி உச்சரிப்புப் படி). ஸ்வயம்சேவக என்பது ஒரே சொல். இரண்டு தனிச் சொற்களல்ல. பிழைதிருத்துமுகமாக மட்டும் இந்த விபரத்தைப் பதிவு செய்கிறேன். க்ஷமிக்கவும்.

இளவயதில் நான் சங்கத்தில் பயிற்சி பெற்ற ஸ்வயம்சேவகன். ஹிந்துஸ்தானமெங்கிலும் சங்கத்தில் பாடப்படும் ஒரு சம்ஸ்க்ருதப் பாடலும் அதன் உத்தேசமான மொழியீடும் கீழே தரப்பட்டுள்ளது.

யம் வைதிகா மந்த்ரத்ருச: புராணாம்

இந்த்ரம் யமம் மாதரிச்வானமாஹு:

வேதாந்தினோ நிர்வசனீயமேகம்

யம் ப்ரம்ஹ சப்தேன விநிர்திசந்தி

சைவாயமீசம் சிவ இத்யவோசன்

யம்வைஷ்ணவா விஷ்ணுரிதிஸ்துவந்தி

புத்தஸ்ததார்ஹன் இதிபௌத்த ஜைன:

ஸத்ஸ்ரீ அகாலேதி சசிக்க சந்த:

சாஸ்தேதி கேசித் கதிசித் குமார:

ஸ்வாமீதி மாதேதி பிதேதி பக்த்யா:

யம்ப்ரார்த்தயந்தே ஜகதீசிதாரன்

ஸ ஏக ஏவ ப்ரபுரத்விதீய:

பரம்பொருள் ஒருவரே. அவரை வைதிக சமயத்தினர் இந்த்ரன், யமன், மாதரிச்வான் எனவும் வேதாந்திகள் நிர்குண நிராகார ப்ரம்மம் எனவும் சைவர்கள் சிவன் எனவும் வைஷ்ணவர்கள் விஷ்ணு எனவும் பௌத்தர்கள் புத்தர் எனவும் ஜைனர்கள் அர்ஹர் எனவும் சீக்கியர்கள் ஸத்ஸ்ரீ அகால் எனவும் போற்றுகின்றனர்.

இது கருத்து ரீதியாக சங்கத்தினர் (RSS ஸ்வயம்சேவகர்கள்) எப்படி பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற சிறு விளக்கம். ஹிந்துஸ்தானமுழுதிலும் போர், இயற்கைப்பேரிடர்கள் போன்று அசம்பாவிதங்கள் நிகழ்கையில் சங்கத்தினர் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என அனைத்து மதத்தினருக்கும் எப்படி உதவுகின்றனர் எனபது உலகமறிந்த உண்மை. இச்சேவைகளின் போது குறைகள் காண்பவரும் உண்டு. மிகவும் கடினமான காலங்களில் செய்யப்படும் சேவைகளில் குறைகள் வாஸ்தவத்திலும் இருக்கலாம் தான். ஆனால் ஸ்வயம்சேவகர்கள் மதங்கள் கடந்து அனைத்து மதத்தைச் சார்ந்தவருக்கும் சேவை செய்துள்ளமையை யாரும் மறுக்க இயலாது. முஸல்மான் மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்கள் பலரும் கூட இவற்றைப் போற்றியுள்ளனர் என்பதும் உண்மை . சங்கத்திலும் சங்கத்தின் கருத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளிலும் இவை ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளன. RSS இயக்கத்துடன் மதவெறியைச் சம்பந்தப்படுத்திப் பேசியமையால் உண்மையை விளக்க மேலே கண்ட சில கருத்துக்கள்.

இத்தகவல்கள் மதவெறியைச் சுட்டுகின்றனவா என்பதை நடுநிலை பிறழா வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.

ஸ்ரீ விநாயக் தாமோதர் சாவர்க்கர் (வீர சாவர்க்கர்) அவரைப் பற்றிய துரபிப்ராயம் அவர் பெயரின் முன் இடப்பட்ட எதேச்சாதிகாரி, காந்திக்கொலைச் சதித்திட்ட குழுவின் தலைவர் போன்ற வெறுப்புமிழும் அடைமொழிகளிலிருந்து தெரிகிறது. ஓரிரண்டு நூற்களை வாசித்து இந்த வ்யாசம் எழுதப்பட்டதும் தெரிகிறது.

ஸ்ரீ சாவர்க்கர் பற்றி துஷ்ப்ரசாரம் செய்வதற்கு முன் சாவர்க்கர் எழுதிய நூற்களை வாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை உள்வாங்க வேண்டும். அவரை ஏற்பவர்களின் அவரை எதிர்ப்பவர்களின் நூற்களை வாசிக்க வேண்டும். அதற்குப் பின் அவரைப்பற்றி நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் இரண்டையும் சரித்ரம் சார்ந்து தெரிவித்தல் சமநிலை கொண்டதாக இருக்கும். அவ்வாறில்லாது ஹிந்து இயக்கங்களின் மீதான வெறுப்பையும் சாவர்க்கர் மீதுள்ள வெறுப்பையும் மட்டும் ஆதாரமாக்கி எழுதப்புகின் கருத்துக்களில் முரண்களும் தகவற்பிழைகளும் அதீத வெறுப்பும் மட்டும் விஞ்சி நிற்கும்.

3. ஸ்ரீ சாவர்க்கர் பற்றிய தவறான கருத்துக்கள் :-

1. \\\\\\ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்\\\\\ –

சாவர்க்கர் ஒரு பொழுதும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் ஸ்வயம்சேவகராக இருந்ததில்லை என்பது சரித்ரம். ஸ்ரீ சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்ததில்லை எனினும் அவர் RSS இயக்கத்தினரின் அன்புக்குப் பாத்ரமானவர் என்பதும் உண்மை. அவருடைய இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கில் ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். பின்னிட்டும் ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் RSS இயக்கத்தில் இருந்தமைக்கு சரித்ர பூர்வ ஆவணங்கள் (RSS இந்து போராட்டத் தளபதி என்றெல்லாம் அடைமொழி விளித்தமையால்) ஏதும் இருக்குமாயின் (புகைப்படங்கள் இத்யாதி இத்யாதி அல்ல – ஆவணங்கள்) அவற்றை முன் வைக்கலாமே. அப்படி இயலாவிடின் இது கண்டிப்பாகத் தகவற்பிழையாக மட்டும் கருதப்படும்.

2. \\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின!\\\\

அதீதமான வெறுப்பின் பாற்பட்ட ஒரு வாசகம் இது என்றால் மிகையாகாது.

1984ம் வருஷம் ஹிந்துஸ்தானத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் தனது பாதுகாவலரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது பல வன்முறையாளர்கள் 3000க்கும் மேற்பட்ட சீக்கிய சஹோதரர்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் காங்க்ரஸ் கட்சியைச் சார்ந்த நபர்களான ஸஜ்ஜன் குமார், லலித்மாகன், எச்.கே.எல் பகத், பல்வான் கோகர், ஜக்தீஷ் டைட்லர் போன்ற பலரின் மேல் நீதிமன்றங்களில் வழக்குப் பதியப் பட்டு வழக்குகள் நடந்தன. இதை காங்கரஸைச் சார்ந்த சில / பல வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று சொல்வது எப்படி காங்க்ரஸ் கட்சி வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வது எப்படி?

யஹூதிகளை அழித்தொழிக்க விழைந்த (holocaust) இனப்படுகொலைத் திட்டங்களில் பரங்கிய ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கினை “A moral Reckoning” என்ற நூல் விவரணம் செய்கின்றது என்றாலும் ——– இனப்படுகொலைத் திட்டங்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் தீட்டப்பட்டது என்று விவரிப்பது எப்படி பரங்கிய ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சார்ந்த சிலரும் யஹூதிய இனப்படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று விவரிப்பது எப்படி?

ஹிந்து மஹாசபையைச் சார்ந்த சில நபர்கள் சதித்திட்டத்தில் ஈடுபட்டனர் என்று சொல்வதற்கு மாறாக ஹிந்து மஹாசபையில் காந்தியைக் கொல்ல சதித்திட்டங்கள் உருவாகின என்று சொல்வது எப்படி?

சரித்ரம் என்ற துலாக்கோலால் அளக்கப்பட்டுப் பகிரப்படுபவை நேர்மறையான மற்றும் எதிர்மறையான தகவல்கள். ஹேஷ்யங்கள் என்ற குங்கிலியத்தால் மூட்டப்பட்ட நெருப்பால் எரிந்து புகைபவை வெறுப்புக்கள்.

3. \\\\போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்\\\\\

வீரசாவர்க்கர் தலைமையில் காந்தியைக் கொல்லத் திட்டங்கள் உருவாகின என்று வ்யாசம் சொன்ன போதும் போதிய சாக்ஷி இல்லாது போனதால் சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர் என்றும் வ்யாசம் சொல்கிறது.

ஹிந்துஸ்தானத்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதாடி நீதிபதி வழக்கை சாக்ஷி சம்மன் களுடன் விசாரித்து ஸ்ரீ சாவர்க்கர் குற்றமற்றவர் என்று விடுதலை கூடக் கொடுத்தாகி விட்டது. அதற்குப்பின்னரும் வெறுப்பின் அடிப்படையில் மட்டும் தானே வீரசாவர்க்கர் தலைமையில் காந்தியடிகளைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டது எனச் சொல்ல இயலும். இது விண்ணுலகு ஏகிய காந்தியடிகளுக்குக் கூட அடுக்குமா?

தேசத்தந்தை என்று மிக உயர்வுடன் போற்றப்படும் மஹாத்மா காந்தியடிகளின் கொலை பற்றிய வழக்கை விசாரணை செய்த ஹிந்துஸ்தான நீதிமன்றங்கள் எவ்வளவு முனைப்பு எடுத்திருக்கும். அவ்வளவு உயர்ந்த ஒரு மனிதரின் கொலை பற்றிய வழக்கில் அந்தக்கொலையை நடத்தி முடிக்க சதித்திட்டம் தீட்டுவதற்கு ஒரு குழு இயங்கி அக்குழுவிற்கு ஒருவர் தலைவராக இருந்திருந்தால் அவருக்கு தண்டனையே கொடுக்காது விடுவிக்க ஹிந்துஸ்தான நீதிமன்றம் தகுதியற்ற மற்றும் திறமையற்ற நீதிமன்றமா?

வ்யாசம் ஸ்ரீ வீரசாவர்க்கரை மட்டுமன்று RSS இயக்கத்தையும் காந்தியடிகளின் கொலையுடன் வெறுப்பின் பாற்பட்டு மட்டும் சரித்ர ஆதாரங்கள் சாராது நீதி மற்றும் நேர்மை சாராது சம்பந்தப்படுத்துகிறது. நீதிமன்றங்கள் இவ்விஷயத்தில் தன்னிலையைத் தெளிவு படுத்திய பின்னும்.

வ்யாசத்தில் தகவல்கள் முன் பின் முரணாக உள்ளதா? வெறுப்பினால் முரண்பாடுகள் காணப்படுகின்றனவா? ஹிந்துஸ்தான நீதிமன்றத் தீர்ப்புகள் பரிகசிக்கப்படுகின்றனவா?

உலகில் உள்ள எந்த ஒரு மனிதரையும் முழு முற்றாகக் கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ பார்க்காது நிறை குறைகளை அளந்து பார்த்தே ஒரு மனிதரை முழுமையாக ஏற்றாலோ அல்லது புறந்தள்ளலோ கருத்துச் சமநிலை உடையோரின் முறைப்பாடு. ஆனால் வ்யாசத்தில் விவாதிக்கப்படும் மனிதர்கள் ஒட்டு மொத்தமாக உயர்த்தப்பட்டு அல்லது படு மட்டமாகத் தாழ்த்தப்பட்டு ஆதாரங்களின் படி இல்லாது சொந்த விருப்பு வெறுப்புக்களால் காழ்ப்பு மிக விமர்சிக்கப்பட்டுள்ளமை வ்யாசத்தில் கருத்துச் சமநிலை இல்லாமையை சுட்டிக்காட்டுகிறது.

அன்பர் ஈவெரா அவர்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை மற்றும் அவரது செயல்பாடுகளில் எனக்குக் கடுமையான வேறுபாடு உண்டு என்றாலும் கூட பல லக்ஷக்கணக்கான மக்களுக்கு அவர் பெரியார் என்பதையும் நான் அறிவேன். எனக்கு அவர் கருத்துக்களில் உடன்பாடு இல்லை மற்றும் அவரது செயல்பாடுகளில் எனக்கு முரண்பாடு உண்டு என்பதற்காக அன்பர் அவர்களை அவர் செய்யாத குற்றத்துக்காகத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதோ அல்லது அவரை ஏகவசனத்தினால் சுட்டுவதோ பண்பார்ந்த செயலாகாது. இவ்விஷயம் அன்பர் ராமசாமி நாயக்கர் அவர்களைப் பொறுத்தவரை எந்தளவுக்குப் பொருந்துமோ அதே அளவுக்கு ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களுக்கும் பொருந்தும்.

\\\\\சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! \\\\\

காந்தியடிகள் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூஹத்தினருக்காக செய்த பணிகளை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

காந்தியடிகளின் விதேசி சாமான் களை பஹிஷ்கரிக்கும் போக்கை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

காந்தியடிகளின் எளிமையை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

ஹிந்துக்கள் மாற்று மதத்தவரால் ஹிம்சிக்கப்படுகையில் அஹிம்சாவாதியான காந்தியடிகள் அதை சஹித்துக்கொள்ளுமாறு போதித்ததை அவர் எதிர்த்தார். மதசார்பின்மை என்ற பேரில் மாற்று மதத்தவரின் வெறிப்போக்குகளை காந்தியடிகள் கண்டுகொள்ளாமல் இருந்தததை அவர் எதிர்த்தார். இந்த தேசம் துண்டாடப்படுவதை அவர் எதிர்த்தார்.

எதேச்சாதிகாரப்போக்கு இருந்தது ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களுக்கா காந்தியடிகளுக்கா என்பதை சரித்ர நிகழ்வுகளின் பாற்பட்டு விவாதித்தால் தனித்து ஒரு வ்யாசமெழுத வேண்டும்.

\\\\உங்கள் புத்திரரில் யார் உத்தமன் என்று ஒருவர் கிராமத்தான் ஒருவனைக் கேட்டாராம். இது அவன் பதில் : ” அதோ வீட்டுக் கூரைமேல் தீ வைக்கிரானே அவன்தான் என் உத்தம புத்திரன்,” என்றானாம். ஆமாம் கோட்ஸே, வீர சாவர்க்கர் இவர்கள்தான் இந்தியாவின் உத்தம புத்திரர்.\\\\

போதிசத்வ பாபாசஹேப் அம்பேத்கர் அவர்கள் தலித் சஹோதரர்களின் சமூஹ முன்னேற்றத்துக்குப் பணி செய்த அன்பர்களில் ஒருவராக மிக உயர்ந்த சான்றோராக ததாகதராக (கருணை மிக்கவராக) முன்னிறுத்தப்படுபவர். பாரத அன்னை பெற்றெடுத்த அருந்தவப்புதல்வரும் போதிசத்வர் ( ஞானி) என போற்றப்படும் அவரே ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் தலித் சஹோதரர்களுக்குச் செய்த பணி கௌதம புத்தரின் பங்களிப்புக்குக் குறையாதது என்று சொன்ன பின்னரும் பிறிதொருவரின் சான்றிதழும் கூட பாரத அன்னையின் அருந்தவப்புதல்வர்களில் ஒருவரான வீர சாவர்க்கர் அவர்களுக்கு வேண்டுமோ?

வீரசாவர்க்கர் என்ற மாமனிதரைப்பற்றிப் பொய்யுரை பரப்புபவர்கள் பரப்பட்டும். அந்தமான் சிறையில் இருந்து வெளிவர அவர் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பித்ததை குறைகூறுபவர்கள் கூறட்டும்.

அந்த உயர்ந்த சான்றோரின் மாண்புகள் சிலவற்றைக் கருத்துச் சமநிலை கொண்டோரின் வாசிப்புக்காகக் கீழே சமர்ப்பிக்கிறேன். அதற்குப் பின்னரும் அவரைப் போற்றுதலும் தூற்றுதலும் அவரவர் விருப்பம்.

கீழ்க்கண்டவை ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் போதிசத்வ பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் பற்றித் தமிழ் ஹிந்துவில் சமர்ப்பித்த வ்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள். சுட்டி http://www.tamilhindu.com/2012/12/bodhisatvas-hindutuva-1/.

—————–************—————-************—————–************—————-************—————–************—————-************—————–************

”’வீர சாவர்க்கரை பொறுத்த வரையில் சாஸ்திர அடிப்படையிலான சாதி அமைப்பு ஒரு மனநோய். இந்த சமூக மனநோய்க்கான மருந்து இந்த சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிப்பதுதான்.”

V.D.Savarkar, Samagra Savarkar Vangmaya, Vol-3 ed. SR Date, Maharashtra Prantik Hindu Sabha, Pune, pp 497-9

“சாதி பிரிவுகளும் சாதுர் வர்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே. அவற்றுக்கும் சனாதன தர்மத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இன்று சாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சனாதன தர்மம் ஒன்றும் செத்துவிடாது”

V.D.Savarkar, SSV, Vol-3 1930: Essays on the abolition of caste, p.444

“நம் சகோதரர்களில் லட்சக்கணக்கானவர்களை தீண்டத்தகாதவர்களென்றும், விலங்குகளைக் காட்டிலும் கீழானவர்களாகவும் பார்க்கும் பார்வை மனித குலத்துக்கும் நம் ஆன்மாவுக்கும் அவமானம் தீண்டமை கொடுமை முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பது என் திடமான உறுதியாகும். தீண்டாமை அழிக்கப்படுவதுதான் ஹிந்து சமுதாயத்துக்கு நன்மை. இந்து சமுதாயத்துக்கு நன்மையோ இல்லையோ, ஏன் நன்மை ஏதாவது இதனால் இருந்தது என்றாலும் கூட, இந்த கொடுமை அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் அறத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், மானுடத்துவத்தின் அடிப்படையில் தீண்டாமையை அழிப்பதுதான் மிக முதன்மையான அறக் கடமையாகும்..”

V.D.Savarkar, SSV, Vol-3 1927, p.483

“ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் செய்து வரும் பணிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமென்றால் தீண்டாமையை அகற்றினால் மட்டும் போதாது; அதற்கு சாதுர்வர்ண கோட்பாடும் அழிய வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ள வெகுசில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”

Dr.Bhimrao Ramji Ambedkar’s letter quoted by Dhananjay Keer, Veer Savarkar, Popular Prakashan, 1950:1966, p.190

“1933 இல் பாபா சாகேப் அம்பேத்கரின் ஜனதா சிறப்பு இதழ் வீர சாவர்க்கர் செய்து வரும் சமூக சீர்திருத்த பணிகளால் தலித்துகளுக்கு கிடைக்கும் பங்களிப்பு கௌதம புத்தரின் பங்களிப்புக்கு குறையாதது என புகழ்ந்தது”

Janata special number, April 1933, p.2 (quoted in Dhananjay Keer, 1950:1966 p.195)

—————–************—————-************—————–************—————-************—————–************—————-************—————–***********

ஹிந்து மஹாசபை என்ற இயக்கத்தை காந்தியடிகளின் படுகொலையுடன் மட்டிலும் சம்பந்தப்படுத்தி அந்த இயக்கம் பரிச்சயம் செய்யப்பட்டுள்ளது. RSS மற்றும் ஹிந்துமஹாசபை போன்ற இயக்கங்கள் மதவெறியுடன் சம்பந்தப்பட்டதாய் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமூஹ முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டமை ஹிந்துஸ்தானத்துச் சான்றோர்களால் எவ்வாறு பாராட்டப்பட்டது என்று பார்த்தோம். இந்த இயக்கத்தைச் சார்ந்த மற்றொரு சான்றோரான பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் மாண்பையும் உடன் பார்த்தல் இந்த இயக்கம் தேசத்திற்கு எப்படிப்பட்ட உன்னதமான மனிதர்களை அளித்துள்ளது என்பதும் விளங்கும்.

பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் முதலில் ஹிந்து மஹாசபையில் இருந்து பின்னர் பாரதீய ஜனசங்கம் என்ற கட்சியை 1951ம் வருஷம் துவங்கி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். காஷ்மீரத்துக்கு என்று ப்ரத்யேகமாக ஷரத்து 370 — அரசியல் சாஸனத்தில் வழங்கப்பட்டதை ஹிந்து மஹாசபைக் கட்சியுடன் சேர்ந்து கடுமையாக எதிர்த்தார். அச்சமயங்களில் காஷ்மீரத்து கவர்னரை ஜனாதிபதி (சத்ர்-ஏ-ரியாசத்) என்றும் காஷ்மீர முக்ய மந்த்ரியை ப்ரதம மந்த்ரி என்றும் அழைத்து வந்தனர். ஒரே தேசம் ஆனால் இரண்டு ஜனாதிபதி இரண்டு ப்ரதம மந்த்ரி என்ற அவல நிலை.

“ஏக் தேஷ் மே தோ விதான், தோ ப்ரதான் ஔர் தோ நிஷான் நஹீன் சலேகா நஹீன் சலேகா” (ஒரே தேசத்திற்கு இரண்டு அரசியல் சாஸனம், இரண்டு ப்ரதம மந்த்ரி, இரண்டு தேசியச் சின்னங்கள் என்ற நிலை தொடரலாகாது) என்ற அவல நிலையை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்ந்தன.

அச்சமயங்களில் காஷ்மீரத்துக்குச் செல்வதற்கு “பர்மிட் முறை” யும் பாரத சர்க்காரால் முறைப்படுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் காஷ்மீரத்துக்குச் சென்று இந்த அவலங்களை எதிர்த்து போராட விழைந்தார். ஆனால் பாரத சர்க்கார் அவருக்கு காஷ்மீரத்துக்குச் செல்ல அனுமதி மறுத்தது. பர்மிட் தர மறுத்தது. என்னுடைய தேசத்தில் ஒரு பகுதிக்குச் செல்ல எனக்கு முழு சுதந்திரம் உண்டு என அனுமதி மீறி காஷ்மீரத்தில் 11-5-1953 ல் நுழைந்த அவர் கைது செய்யப்பட்டு ஆங்கே ஒரு பாழடைந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மிக மோசமான அந்தச் சூழ்நிலையால் அவர் உடல்நிலை கெட்டது. நோய்வாய்ப்பட்டார். அவருடைய வைத்தியத்திற்கு பொறுப்பான டாக்டருக்கு ஸ்ரீ முகர்ஜி அவர்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை உள்ளது என்று சொல்லப்பட்டிருந்தும் அவருக்கு பெனிசிலின் செலுத்தப்பட்டது. 23-06-1953ல் அவர் காஷ்மீரத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

ஆனால் இவரது போராட்டம் மற்றும் மர்மமான சாவால் சுணங்கிய பண்டித நேரு அவர்களின் சர்க்கார் பர்மிட் முறையை காஷ்மீரத்தில் ரத்து செய்ய நேர்ந்தது. சந்தேஹாஸ்பதமான மரணமானால் சவப்பரிசோதனை செய்யப் படவேண்டும் என்ற சட்ட விதிமுறை இருந்தபின்னும் சர்க்கார் இவரது இறந்த உடலுக்கு சவப்பரிசோதனையும் நிகழ்த்தவில்லை. அவரது உடலை தில்லிக்கு எடுத்து வருவதைக் கூட பாரத சர்க்கார் அனுமதிக்கவில்லை. ஆகையால் அவரது உடல் நேராக கொல்கொத்தாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பாதுகாவலில் வைக்கப்பட்டு இருந்த இவர் மர்மமான முறையில் இறந்ததை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என இவரது அன்னை ஸ்ரீமதி ஜோக்மயா தேவி விண்ணப்பித்துப் பின்னர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் மன்றாடியும் கூட பண்டித நேரு அவர்கள் விசாரணைக்கு மறுத்து விட்டார்.

மர்மமான முறையில் பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் இறந்த பின்னும் சட்டப்படி இறந்த உடலை சவப்பரிசோதனைக்கும் உட்படுத்தவில்லை இறந்த மர்மத்தை விசாரணையும் செய்யவில்லை. பண்டித நேரு அவர்கள் —–தான் காஷ்மீரத்தில் ஸ்ரீ முகர்ஜி கைதில் இருந்த சமயத்தில் —— அங்கு பொறுப்பில் இருந்தவர்களிடம் விசாரித்து விட்டதாகவும் ——- தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் —— அவர் சாவில் ஏதும் மர்மம் இல்லை என்றும் அறிவித்து விட்டார். தீர்ந்தது விசாரணை. நிலைநாட்டப்பட்டது நீதி என்பதை கருத்துச் சமநிலையுடையோர் ஏற்பரோ?

2004ம் வருஷம் பாரதத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் இறந்தது பண்டித நேரு அவர்களின் சதித்திட்டங்களால் தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பார்க்க சுட்டி http://articles.timesofindia.indiatimes.com/2004-07-07/india/27144866_1_nehru-j-k-conspiracy. ஸ்ரீ வாஜ்பாய் அவர்கள் அதே செய்தியில் ஸ்ரீ முகர்ஜி அவர்களின் உயிர்த்யாகத்தால் காஷ்மீரம் தேசத்திலிருந்து துண்டாடப்படுவதிலிருந்து தப்பித்தது என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால் ஸ்ரீ முகர்ஜி இறந்த பின் காஷ்மீரத்து ஜனாதிபதி பின்னர் மற்ற மாகாணங்கள் போன்று கவர்னர் என அழைக்கப்படலானார். காஷ்மீரத்து ப்ரதமமந்த்ரியும் பின்னர் முக்யமந்த்ரி என அழைக்கப்படலாயினர். பின்னர் பாரதத்தின் பல சட்டங்களும் காஷ்மீரத்துக்கும் விரிவு படுத்தப்பட்டது. இது பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் பலிதானத்தினால்.

வ்யாசம் ஸ்ரீ சாவர்க்கர் அவர்களை, “”””சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி!”” என்று பழிக்கிறது. ஆனால் காங்க்ரஸ் தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ சுபாஷ் சந்த்ரபோஸ் அவர்களை பதவியிறக்க முனைந்த காந்தியடிகளை விமர்சனம் செய்ய யோசித்திருக்கவும் இயலாது. நிறைகளால் மட்டும் நிறைந்த மாந்தராக ஒருவரை முன்னிறுத்த முனைந்தால் குறைகளைக் கூட ந்யாயப்படுத்தலாமே?

மர்மமான முறையில் இறந்த உடலுக்கு சவப்பரிசோதனைகூட செய்யாதது போதாதென்று விண்ணப்பித்தும் மன்றாடியும் விசாரணை செய்யக்கூட அறவே மறுத்து தான் தனிப்பட்ட முறையில் விசாரித்த படிக்கு மரணத்தில் மர்மமில்லை என்று தீர்மானம் செய்த பண்டித நேரு அவர்களின் செயல்பாடு எதேச்சாதிகாரமானதா அல்லவா என வாசகர்கள் அவதானிக்கலாம்.

ஹிந்து மஹாசபையினரை மதவெறியர்கள் என்று குற்றம் சாட்டியதல்லவா? ஸ்ரீ சாவர்க்கர் அவர்களது சமூஹ முன்னேற்றப் பணிகளைப் பார்த்தோம். ஸ்ரீ முகர்ஜி அவர்களின் காஷ்மீரத்திற்கான போராட்டத்தையும் பலிதானத்தையும் பார்த்தோம். ஹிந்து மஹாசபை என்ற இயக்கம் தேசத்திற்குத் தந்த பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களைப் பற்றி மேலும் வ்யாசத்தில் அவதானிக்கையில் அவர் மற்ற மதத்தைச் சார்ந்த சான்றோர்களை எப்படி மதித்தார் என்பதையும் பார்ப்போம்.

————

Series Navigationஅக்னிப்பிரவேசம்-24ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.