சூபி கவிதை மொழி

This entry is part 29 of 29 in the series 25 டிசம்பர் 2011

பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய இறையியலுக்கு எதிராக உள்ளதுதான் என்பது போன்று இவ்விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.

தமிழ் சூபிக்கவிஞர்களின் மொழியையும், கலாச்சார நிலைபாட்டையும் புரிந்து கொள்வதில் இன்னும் தெளிவுகள் உருவாக வேண்டும். தற்போது சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்ட சில கவிதைவரிகளுக்கான சில வாசிப்புகளை கவனிப்போம்.

1) நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய்.

முதல்நிலை அர்த்தம்

ரஸுல் என்பதன் பொருள் இறைத்தூதர்.

தூதர் என்பவர் யார்.. இறைவனின் தூதுத்துவத்தை(வஹி) கொண்டு வந்தவர். இறைவனே அவனது வார்த்தைகள் மூலம் தூதுத்துவமாய் இப்புவிக்குள் வந்ததை இவ்வரிகள் குறியீட்டுப் பொருளின் குறிப்பீடு செய்கின்றன.

இந்த குரான் எனக்கு வஹிமூலம் அருளப்பட்டது(6:19)

எந்த மனிதரிடத்திலும் அல்லாஹ் பேசுவதில்லை வஹியைத் தவிர…..(42:51)

இரண்டாம் நிலை அர்த்தம்

பீர்முகமதுஅப்பா தன்பாடல்களில் நபிகள்நாயகத்தை நயினார்முஹம்மதனார்,ஆண்பிள்ளைச் சிங்கம் அஹமதுவாம், வேதநபி மிகுராஜிலுன்னை என்பதாக பலவிதமாய் பொருள்சார்ந்தும் அழைக்கிறார்.எனவே இவ்விடத்தில் மனித தோற்ற வரலாற்றோடு இணைத்துப் பார்த்தால் குரானிய கருத்துப்படி ரஸுல் என்ற சொல் அல்லாஹ்வின் முதல் தூதரும், முதல் மனிதருமான ஆதம்நபியைக் குறிப்பிடுகிறது.

நான் மனிதனைப் படைத்து அதில் என் உயிரைப் புகுத்தினேன்(அத்தியாயம் அல்ஹிஜ்ர் 15:29)

இறைவனுக்கு உருவம் இல்லை. ஆனால் உயிராக இருக்கிறான்.அந்த உயிரின் அம்சத்தை ஆதமுக்கு கொடுத்தபோது இறைவனின் உயிரும் பண்பும் ஆதமிடம் இடம் பெயர்கிறது.இதன் அடிப்படையிலேயே இறைவன் தன் ரூஹை கொடுத்து இப்புவிக்குள் ரஸுலாக(ஆதம் நபிஎன்ற தூதராக) வந்திருக்கிறான்.

எரியும் ஜோதியிலிருந்து ஒரு சுடரை பற்ற வைக்கிறோம்.இப்போது ஜோதி சுடராக இருக்கிறது.ஜோதியும் சுடரும் ஒன்றானதாகவும் இருக்கிறது.வேறுவேறானதாகவும் இருக்கிறது.இதுதான்அல்லாஹ் புவிக்குள் ரஸுலாக வந்த கதை.

2) நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்

இறைவன் தனக்குத் தானே வணக்கம் செய்தான் என்பதான பொருளை இவ்வரி நேரடியாகச் சொல்வது போல் தொனிக்கிறது. ஸுஜுது என்ற சொல் வணக்கம் செய்தல்/புகழ்ச்சி செய்தல் என்பதான குறியீட்டு அர்த்தம் கொண்டது.

எப்படி .. எதன்வழி…அல்லாஹ் தன்னத் தானே வணக்கம் செய்தான்?

தொழுகையின்போது ஓதுகிற அல்ஹம்துசூராவின் மூலமாகத்தான்.

எல்லாப்புகழும் அல்லாவுக்கே

அவன் அகிலத்தை (படைத்து) பராமரிப்பவன்

அளவற்ற அருளாளன்/நிகரற்ற அன்புடையோன்/

தீர்ப்புநாளின் அதிபதி

உன்னையே வணங்குகிறோம்/உன்னிடமே உதவியும் தேடுகிறோம்

எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக.

எவர்களின்மீது நீ அருள்புரிந்தாயோ அவ்வழியில்

அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல..

நெறிதவறியோர் வழியுமல்ல..

இது அல்லாஹ் ஜிப்ரயில்(அல) மூலமாக முகமதுநபிக்கு அருளப் பெற்ற வசனங்கள்.அல்லாஹ்வை வணங்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வசனங்கள்.

இதற்கு ஆதாரமாக பீர்முகமது அப்பா எழுதிய முந்தைய வரியையும் இணைத்துப் பொருள்காண்வேண்டும்.

நீயே உனை புகழ்ந்துற்ற அந்நாளுன்னை நீயுணர்ந்து

நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்

இங்கு புகழ்ந்துற்ற என்பது குரானின் அல்ஹம்து சூராமூலம் அல்லாஹ் தன்னையே தான் புகழ்ந்தது குறிப்பிடப்படுகிறது.

இதில் அல்லாஹ் தன்னப்பற்றியே புகழ்ந்துரைகின்றான்.மரியாதை செய்கிறான். உன்னையே வணங்குகிறோம்/உன்னிடமே உதவியும் தேடுகிறோமென பிற மனிதர்களை வணங்கச் சொல்வதற்கு முன்மாதிரியாக தானே இவ்வசனங்களைச் சொல்லித் தருகிறான்.இது ஒருநிலையில் அல்லாஹ் தன்னைப் புகழ்வதாக/வணங்குவதாக/ஸுஜூது செய்வதாக குறியீட்டு நிலையில் தர்க்கம்சார்ந்த நுட்பமான பொருளைத் தருகிற்து.

இது இப்பிரதியின் முதல்நிலை அர்த்தம்மட்டுமே. இன்னும் இதனை பன்முகவாசிப்புக்கு உட்படுத்தினால் இன்னும் பல அர்த்தங்கள் கிடைக்கக் கூடும்.

3)சக்தியாய் சிவனாய் இந்த தாரணி தன்னிலாக்கி

முதல்நிலை அர்த்தம்

சக்தி என்பதன் பொருள் வல்லமை. சிவன் என்பதற்கு செம்மை/பூரணத்துவம் என்பது புராதன தமிழ் அகராதியின் பொருள்.வல்லமையோடும்,செம்மையாகவும் இந்த பூமியை இறைவன் ஆக்கியதை குறிப்பிடும் வரியாகும்.

இரண்டாம்நிலை அர்த்தம்

சக்தியாய் சிவனாய் என்பது பெண்ணுருவாகவும்,ஆணுருவாகவும் இந்த உலகம் உருவானதைக் குறிப்பிடுகிறது.

மூன்றாம்நிலை அர்த்தம்

மூலப்பொருள் சிவமாகிறது. படைப்பியக்க நிலை சக்தியாகிறது.இதனை சூபிய உரையாடலின்வழி லாஹூத்,இறைமை நிலையாகவும்,ஜபறூத் செயற்குணங்கள் கொண்டதாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

அறிவியல் நிலையில் சிவம் என்பது பொருள்(matter) சக்தி என்பது ஆற்றல்(energy)என்பதாகவும் பொருள்படுகிறது.

நான்காம்நிலை அர்த்தம்

பூரகம்,இரேசகம்,கும்பகம் என மூச்சுப் பயிற்சி நிலைகள் உள்ளன். பூரகம் உள்வாங்கும் மூச்சு,இரேசகம் வெளிவிடும் மூச்சு கும்பகம் உல்ளே நிலைநிறுத்தும் மூச்சு.

யோக பரிபாஷை அடிப்படையில் உள்வாங்கும் மூச்சு சக்தியாகவும், வெளிச் செல்லும் மூச்சு சிவமாகவும் குறிப்பீடு செய்யப் படுகின்றன.அல்லாஹு என்ற சொல்லில் அல்லா… உள்வாங்கி நிலைநிறுத்தும் மூச்சாகவும்,ஹு.. வெளிவிடும் மூச்சாகவும் உள்ளது

ஐந்தாம்நிலை அர்த்தம்

சிவனருணன், சிவமயம் என்பவற்றில் அருணன் என்பது சூரியன், ஒளி ஆகிய பொருள் கொண்டு ஒளிச் சூரியன், ஒளிமயம் என்பதான அர்த்தம் பெறுகிறது.

ஆறாம்நிலை அர்த்தம்

சிவமரம் என்பது உடலை மரத்துக்கு ஒப்புமை செய்வதாகும்.

திதிவரிதாகி நின்ற சீவனும் சிவனும் கூட்டி

இது பீர்முகமது அப்பாவின் பிறிதொரு பாடல்வரி. இங்கு சிவன் என்பது உடலாகவும்,சீவன் என்பது உயிராகவும் அர்த்தம் பெறுகிறது.

பீர்முகமது அப்பாவின் சர்ச்சைக்குரியதாய் நினைத்த பாடல்வரிகள் எவ்வளவு துல்லியமாய் குரானிய அடிப்படையிலும் தமிழிலக்கிய மரபின் வகையிலும் சிறந்து விளங்குகின்றன… . இன்னும் ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள்.புதிய வாசிப்பு அனுபவங்கள் கிடைக்கும். அர்த்தங்கள் தெளிவாகும்.

Series Navigationஎப்படி இருக்கும்?
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    இஸ்லாமியக் கோட்பாடும் தமிழ் மதக் கோட்பாடும் கைகுலுக்கும் ஓர் உன்னத ஒப்பீடு.
    சக்தியும், சிவனும் ஒன்று. பொருளும் சக்தியும் ஒன்று என்று விஞ்ஞான மேதை ஐன்ஸ்டைன் கூறுகிறார். சிவன் என்பது பொருள், பிண்டம். சக்தி என்பது பிரபஞ்சக் கோள்களின் பிணைப்புப் பசை, இயக்க விசை -சக்தி

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    தக்கலை கவுஸ் முஹம்மது says:

    ஹெச் ஜி ரசூல் அவர்கள் இஸ்லாமிய விஷயங்கள் பற்றி கருத்து எழுதும் போது அவை குர்ஆன், மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் ஆதாரங்களின் படி இருக்கிறதா ? என பார்ப்பதே கிடையாது, முறையாக கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களிடமாவது விளக்கம் கேட்டு தெளிவடைந்த பின் எழுதுகிறாரா ? அதுவும் இல்லை, தான்தோன்றித்தனமாகவே எழுதி விடுகிறார். தனது சொந்த சரக்கை நம்பி பல இடங்களிலும் கடையை விரிப்பதும், பின்னர் கலவரம் வரும்போது தற்காலத்திற்கென மூடிவிடுவதும் இவரது வழக்கம் இப்படித்தான் இணைய தளத்தில் என்னோடு பல நாட்களாக விவாதித்து (?!) விட்டு ( அவரது கடையை விரித்தார் ) பின்னர் அவரது சரக்குகளில் குப்பையிருந்ததால் சுத்தம் செய்து நல்ல முறையில் வியாபாரம் செய்யுங்கள் என விவாதத்தை ( அவ்லியா விஷயம்) திருப்பியதும் , எனக்கு அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் (15.12.11) இதோ படித்து பாருங்கள்

    /// கொஞ்சநாட்களாகவே உங்களோடு இஸ்லாம் குறித்து உரையாடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.வேறொரு சூழலில் தற்போது நான் உள்ளதால் தொடர்ந்து உங்களோடு உரையாட முடியாமல் போகிறது.என்ன காரணமென்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. விவாதிக்க வலு இல்லாமல் ஹெச்.ஜி.ரசூல் தப்பித்து ஓடிவிட்டார் என்பீர்கள். என்றாலும் பரவாயில்லை ///

    இப்போது திண்ணையில் அடிக்கடி வந்து இஸ்லாமிய விஷயங்களை கடை விரித்திருக்கிறார். தான் சர்ச்சைகுரியவனாக எப்பவும் மீடியாவில் உலா வரவேண்டுமென்று நினைக்கிறார் என்றுதான் இவருடைய சரக்குகளை பார்க்கும் போது நமக்கு விளங்குகிறது. சகோதரர் kulachal mu. yoosuf சொன்னது போல

    ///- பீர்முகம்மது அப்பாவை குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகச் சித்திரித்து அது விவாதிக்கப்படுவதைப் பற்றியோ ஞானப்புகழ்ச்சி குர்ஆனின் மொழிபெயர்ப்பாக விவாதிக் கப்படுவதைப் பற்றியோ தாங்கள் கவலைப்படவே மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். தங்களுக்குத் தேவை, இணைய தளமாக இருந்தால் பின்னூட்டம்; பத்திரிகையாக இருந்தால் விமர்சனங்கள்///.

    அன்பு ஹெச் ஜி ரசூல் நண்பரே ! முதலில் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் ஐ கொஞ்சம் அசை போட்டுவிட்டு உங்கள் (அ)நியாயத்திற்குள் சொல்வோம் : 1970 களின் கடைசியில் நடந்தவைகள்… தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம்…. என்கிற ஒரு இயக்கம் வழியாக குலாம் ரசூல் என்ற முஸ்லிம் இளைஞர் ஹெச் ஜி ரசூல் என்று அறியப்படக் கூடிய (?!) ஒரு கவிஞராக உருமாறினார் , உருமாறிய சந்தர்ப்பம் கவிஞரின் நிறம் மாறி கறை படிய தொடங்கியது… எனக்கு தெரிந்து கவிஞர் ஹெச் ஜி ரசூல் ஆகிய உங்களின் முதற் சர்ச்சை இஸ்லாத்தை பற்றியே எழுந்தது .. ஆடு மாடு ,கோழி ஓதி அறுத்தால் ஹலால், ஓதாமல் அறுத்தால் ஹராமா ? என பகுத்தறிவு (?!) முற்போக்கான எண்ணம் (?!) தர்க்க சாஸ்திரம் ( Logic ) போன்றவைகளின் அடிப்படையில் இஸ்லாமில் தெளிவான கட்டளையான அல்லாஹ்வின் சட்டமான ஹலால், ஹராமை விவாத விஷயமாக மையப்படுத்தி 1970 களின் கடைசியில் சர்ச்சையை ஆரம்பித்த அந்த கவிஞர் ஹெச் ஜி ரசூல் இன்றுவரை இது போன்ற பல சர்ச்சைகளையும் குறிப்பாக ( மார்க்க அறியாமையினால் ) இஸ்லாமிய விஷயங்களை அவ்வப்போது கையிலெடுத்துக் கொண்டு இன்றும் சர்ச்சைகளில் சிக்கி அன்றுபோல்(?!) இன்றும் (?!) பிரபலமாகி (?!) கொள்ளும் வி(த)த்தை தக்க வைக்கும் விதமாகவே வழக்கமாகி கொண்டு வருகிறாரே ! என நினைத்து உண்மையாகவே வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பது நிச்சயமான உண்மை. அல்லாஹ்வே அவருடைய எண்ணங்களை மிக்க அறிந்தவன்…..

    அன்பு சகோதரர்களே ! நான் மேலே குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தில் புடம் போட்டு எடுத்த கவிஞர் ஹெச் ஜி ரசூல் இன்றைக்கும் இஸ்லாமிய விஷயங்களை முறையாக அறிந்து கொள்ளாத நிலையிலேயே தனது எண்ணங்களில் தெறித்தவைகளையெல்லாம் ஞானப்புகழ்ச்சி பாடல் சம்மந்தமாக எழுதி (அ)நியாயப்படுத்தியிருக்கும் அவரது செயல் இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் இனி மேலும் இவருடன் நன்மை கருதி விவாதம் புரிவதற்கு இவர் ஏற்றவர்தானா ? இல்லையா ? என நாம் தீர்மானிப்பதற்கு ஏதுவாகவே அவருடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்திருக்கிறார் என்பதை இன்ஷா அல்லாஹ் நம்மால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனது அன்பான கருத்து

    ஒரு முக்கியமான விஷயம் :- கவிஞருடைய இந்த மின்னஞ்சலிலிருந்து ஒரு விஷயம் நமக்கு மிகத் தெளிவாகி விட்டது !…. அல்ஹம்துலில்லாஹ்… அதாவது கழிந்த அவரது 2 -3 மின்னஞ்சல்களில் நான் குரானிய ஆதாரங்கள் ?! தந்தேன் ?! , கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். மூடி மறைத்து நியாயம்தானா ? கவுஸ் முகம்மது பாவனை செய்கிறார், கவுஸ் முகம்மது குழம்பி போயிருக்கிறார், கவுஸ் முகம்மதுக்கு புரியாமல் போனதில் வருத்தம்தான் என்றெல்லாம் சரமாரியாக மீண்டும் மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் , நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒவ்வொரு தடவையும் ஆணித்தரமாக மறுத்து அவரை சார்ந்தவர்களிடம் அந்த ஆதாரங்களை நீங்களாவது கண்டுபிடித்து தெரிவியுங்கள் என்று சவாலாகவே சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்….. கவிஞரை தூக்கி பிடித்து ஆரவாரம் செய்து வந்த வந்த அவரது தோழர்களே ! துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நாசூக்காக ஆனால் பகிரங்கமாகவே நழுவி விட்டார்கள் என்பது இப்போது மிகத் துல்லியமாக குரானிய ஆதாரங்கள் நிச்சயமாக இல்லவே இல்லை ( என்பதன் மூலம் நிதர்சனமாகியுள்ளது…… அப்பப்பா … எத்தனை வாசிப்புகளில் கவிஞர் எப்படியெல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டே வந்தார்….கடைசியில் இப்போது அவரே தூக்கி வீசி விட்டார் என்றே தெரிகிறது ….. எப்படியிருந்தாலும் இந்த பில்டப் எல்லாம் நமது வாதத்திற்கும், படிக்கிறவர்களுக்கும் எந்த வகையிலும் உதவாது என்பதால் core issue ஆன அவ்லியா பற்றிய விவாதத்தை தொடக்கி ஒவ்வொன்றாக நன்மை கருதி விவாதிக்கலாம் என்று நல்லதொரு அழைப்பை விடுத்தேன் ஆனால்…. ?!…. தற்காலிகமாக கவிஞருடன் இது சம்மந்தமான விவாதங்களை நிறுத்த வேண்டிய நிலைக்கு அவருடைய சூழ்நிலை ஆகிவிட்டது என்பதறிந்து நமக்கு ஒரு சிறு ஏமாற்றம் ஆனது என்னவோ உண்மைதான் இருந்தாலும் கவிஞரை நான் நம்புகிறேன் காரணம் எனக்கு அவரை பெர்செனலாக நன்றாகவே தெரியும்… இன்னுமொரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் நன்மை
    கருதி விவாதிக்கலாம் கவிஞரே !…ஓகே,,,,,,,, சரி இனி நமது சர்ச்சைக்குரிய கவிஞரின் (அ)நியாயங்களை சற்று பார்ப்போம் ……..

    கவிஞரின் (அ) நியாயம் ?! – 1 : முதல்நிலை அர்த்தம் ?!
    1) நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய் –பீர்முகமது அப்பாவின் இப்பாடல்வரி இஸ்லாமிய அகீதாவிற்கு விரோதமானது இல்லை என்பதை கீழ்கண்ட வாசிப்புகளின் வழியாக அறிந்து கொள்ளலாம். –ரஸுல் என்பதன் பொருள் இறைத்தூதர். தூதர் என்பவர் யார்.. இறைவனின் தூதுத்துவத்தை(வஹி) கொண்டு வந்தவர். இறைவனே அவனது வார்த்தைகள் மூலம் தூதுத்துவமாய் இப்புவிக்குள் வந்ததை இவ்வரிகள் குறியீட்டுப் பொருளின் குறிப்பீடு செய்கின்றன.இந்த குரான் எனக்கு வஹிமூலம் அருளப்பட்டது(6:19)எந்த மனிதரிடத்திலும் அல்லாஹ் பேசுவதில்லை வஹியைத் தவிர…..(42:51)
    உங்கள் நிலைகள் ?! மற்றும் வாசிப்புகளின் ?! எதிர்ப்பும் , விளக்கமும் :
    முதல் நிலை — கவிஞர் ஹெச் ஜி ரசூலின் வாசிப்பு : அல்லாஹ் இந்த பூமிக்கு வந்தான் (?!) ஆனால் தூவத்துவம் மூலம் வந்தான் .(?!) …. அஸ்தஃ பிருல்லாஹ் ……. என்னே ? நமது கவிஞரின் ஒரு நவீன இஸ்லாமிய கண்டுபிடிப்பு…… ஓ.ஹோ…. இதைத்தான் கவிஞர் ///…பல்துறை சார்ந்த வாசிப்பில்(inter deciplinary approach) ., பின்நவீனத்துவ வாசிப்பில், முறையியல் (Methodology), வாசிப்பின் அரசியல்(politics of reading).. ///போன்றவைகளின் துணையுடன் கண்டுபிடித்தாரோ ? அப்படியானால் இதற்கு முன்னர் பீடிகைகள் பல போட்டாரே !… அதுவெல்லாம் என்னவாயிற்று ? குப்பையில் போட்டுவிட்டாரா ? அல்லது எழுதிய நாம் வாசித்த பல வாசிப்புகளில், எதிலாவது மாட்டிக்கிடுவோம் என தெரிந்தே கை கழுவி விட்டாரா ? தெரியவில்லை …… இதோ அவரது வாசிப்பில் விளைந்த பீடிகைகள் …… /// நீயே உனக்கு ஸுஜுது செய்தாய்.. நியே புவிக்குள் றசூலாக வந்தவன் இரண்டு வரிகளும் அல்லாஹ்வின் மெய்ப் பொருளுண்மையை விளக்கும் வரிகள். இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் அல்லாஹ் குறித்து பீர்முகமது அப்பா எழுதியிருக்கும் 1 முதல் 117 பாடல்களையும் ஏன் பிற பாடல்களையும் வாசித்து வாசித்து ஒவ்வொரு சொல்லாடல்களுக்கும் மெய்ப் பொருளுணர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம்… /// 1 முதல் 117 பாடல்களையும் வாசித்து கவிஞர் மெய்ப்பொருளை (?!) உணர்ந்து கொண்டதும் உடனே கவிஞருக்கு இந்த அர்த்தம் ஞானோதயத்தில் கிடைத்து விட்டதா ? அவருக்கே வெளிச்சம் .நமது அருமை கவிஞர் என்ன அழகாக ஒவ்வொரு தடவையும் வித்தியாசமாக சொல்லாடல் விளையாட்டுகள் மூலம் விளக்கம் (?!) தந்து (அ) நியாயப்படுத்தி நல்லாத்தான் அமர்களப்படுத்தியிருக்கிறார் என்பதை இனியும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதா ? என்ன ? ……………..அன்புக் கவிஞரே !…. நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத விளக்கம் , சஹாபாக்கள் அறியாத விளக்கம் , இவர்கள் வழியாக மார்கத்தை முறையாக கற்றறிந்த எந்த ஒரு அறிஞரும் இதுவரை சொல்லாத ஒரு விளக்கம், இப்படி யாருமே சொல்லாத விளக்கத்தை உங்கள் பன்முக நவீன வாசிப்பில் தோன்றிய ஒரு மெய்ஞ்ஞான (?!) உளறலை நீங்கள் கொட்டியிருப்பது இஸ்லாமிய மார்க்க அடிப்படையை பொறுத்தவரையில் சுத்த அறிவீனம் என்பதை இனியாவது நீங்கள் உணர வேண்டுமானால் எனது சீரியசான அட்வைஸ் .( ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தேன்) உடனே நீங்கள் ஒரு நல்ல விபரமறிந்த ( தயவு செய்து தக்கலை அபீமுஅ ஜமாஅத் ஆலிமை விட்டு விடுங்கள் ) மார்க்க அறிஞரை தொடர்பு கொண்டு உங்கள் நவீன கண்டுபிடிப்பை விவரித்து சொல்லி உங்கள் பன்முக வாசிப்பை உடனே சரி செய்வீர்களேயானால் அது உங்களின் இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது. கால தாமதம் இல்லாமல் செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
    இரண்டாம் நிலை — அபீமுஅ ஜமாஅத் ஆலிமின் வாசிப்பு : தக்கலை அபீமுஅ ஜமாஅத் ஆலிமை விட்டு விடுங்கள் என ஏன் சொன்னேன் தெரியுமா ? இந்த வரிக்கான விளக்கத்தை அவரிடம் கேட்ட போது , மிக அருமையாக விளக்கம் தந்தார் ” சில சமயங்களில் விபத்திலிருந்து தப்பி விட்டால் அல்லாஹ் தான் காப்பாற்றினான் என்று சொல்லுகிறோம் ஆனால் அல்லாஹ் அங்கே நேரில் வந்தா காப்பாற்றினான் ? இல்லையே ! ஆனாலும் நாம் அப்படித்தான் சொல்வோம் இல்லையா ? இதுபோலத்தான் இந்த வரியின் அர்த்தமும்….” அன்பு சகோதரர்களே !… அபீமுஅ ஜமாஅத் ஆலிமின் விளக்கம் ?! எப்படியிருக்கிறது ?! என்பதை புரிந்து கொண்டீர்களா ? … இதுதான் இந்த ஆலிமின் வாசிப்பு
    மூன்றாம் நிலை — சூபிகளின் வாசிப்பு : இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் ( சூபிகளின் )கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் எனவே பீரப்பா இந்த கோட்பாட்டைத்தான் தனது பாடல்கள் வழியாக நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய் என மிக சரியாகத்தானே எடுத்திரைத்திருக்கிறார் -இது சூபிகளின் கொள்கைகளை கண்மூடித்தனமாக நம்பும் ( சில கம்யூனிஸ்ட் கொள்கைகாரர்கள் உள்பட ) மக்களின் சூபி வாசிப்பு
    நான்காம் நிலை — பீரப்பா பக்தர்களின் வாசிப்பு : இன்னும் பல மக்கள் ( பீரப்பா பக்தர்கள் ) இந்த மாதிரியான அர்த்தங்கள் எதுவுமே இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமேயில்லை இவர்களைப் பொறுத்த வரையில் பீரப்பா என்பவர் புகழ் வாய்ந்த, மற்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் அவ்லியா (?!) தான் , எனவே அவர் எழுதிய பாட்டுக்கள் எல்லாமே புனிதமானவைதான் இதில் இவர்களுக்கு எந்த சந்தேகமுமே கிடையாது ?! எல்லாமே இறைவனைப் புகழ்ந்து பாடியவைகள்தான், ஷிர்க்குகள் கிடையாது, இந்த வஹாபிகள்தான் பிரச்சினையை உண்டு பண்ணுகிறார்கள் என்பது இந்த பீரப்பா பக்த கோடிகளின் விசுவாச வாசிப்பு
    ஐந்தாம் நிலை — மாற்று மத அன்பர்களின் வாசிப்பு : கடவுள்களுக்கு பல அவதாரங்கள் உள்ளது எனவே கடவுள் வேறு அவதாரம் வேறு என்றெல்லாம் எங்கள் மதத்தில் கிடையாது இரண்டுமே ஒன்றுதான் என நாங்கள் நம்புகிறோம் , அவதாரங்களையும் வணங்குகிறோம் …. இதுவே எங்கள் அத்வைத கோட்பாடு… அதே கோட்பாடைத்தான் நாங்களும் இங்கே காண்பதால் பீரப்பாவின் சன்னதியில், தர்ஹாவில் அவருடைய கபரை கண்டதும் கையெடுத்து கும்பிடுகிறோம், சில சமயம் எங்களில் சிலர் சாஷ்டாங்கமாக படுத்தும் வணங்குகிறோம் தர்ஹாவில் கிடைக்கும் சந்தனத்தை நெற்றியில் பூசுகிறோம் குத்து விளக்கிலிருந்து இஸ்லாமிய பூசாரியால் தரப்படும் எண்ணையை , தடவும் செய்கிறோம், அவருக்காக வைத்திருக்கும் உண்டியலில் பணத்தை காணிக்கையாக செலுத்துகிறோம். மேலும் அவருடைய ஞானப்பாட்டுக்களில் எங்களின் அத்வைத கோட்பாடுகள் இருப்பதால் அதைப் புனிதமாகவே கருதுகிறோம், அவரது ஆண்டுப்பெருவிழாவில் பக்தியுடன் கலந்து கொள்கிறோம் , அவரது மூன்றாம் சியாரத் ?! என்று சொல்லப்படும் படு விசேஷமான ?! நாள் அன்று கடவுள் அவதாரமாக நாங்கள் நம்பும் பீரப்பாவுக்கு (சாமிக்கு ) கோழி அரிசி போன்றவைகளை காணிக்கையாக கொடுப்பதற்கு அதற்குரிய பணம் கட்டி முறையாக ஜமாஅத் நிர்வாகிகளிடம் ரசீது வாங்கி பின்னர் ரசீதுப்படி அதற்குரிய நேர்ச்சையை வாங்கி குடும்பம் சகிதமாக பீரப்பாவின் அருள் நிறைந்த பிரசாதமாக எண்ணி சாப்பிடுகிறோம்… இப்படி போகிறது இவர்களது அத்வைத வாசிப்பு
    அன்பு சகோதரர்களே !.. நான் வாசகர்களின் நேரம் கருதி இந்த ஐந்து வாசிப்புகளோடு தற்போது நிறுத்திக் கொள்கிறேன்…. கவிஞர் ஹெச் ஜி ரசூல் அவர்களின் புரிதல்படி எக்கச்சக்கமான பன்முறை வாசிப்புகள் ( Multiple Readings ) இன்னும் இருக்கிறது…… இப்போது யோசித்து பாருங்கள் !., தங்களது மனோ இச்சைப் படி அவரவர் புரிதல்களுக்கும், வாசிப்புகளுக்கும், நவீன இஸ்லாமிய கண்டிபிடிப்புகளுக்கும் சூபிகளின் கோட்பாடுகளுக்கும் ஏற்றவாறு ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு விளக்கங்கள் சொல்கிறார்களே ! இதெல்லாம் நமக்கு தேவைதானா ? அன்பு இஸ்லாமிய சகோதரர்களே ! . கொஞ்சமேனும் சீரியசாக சிந்தித்து பாருங்களேன் ! குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் முறையான வாசிப்புகள் நமக்கு தேவையா ? அல்லது இன்னும் பீரப்பா என்கிற தமிழ் சித்தப் புலவரின் ஞானப்புகழ்ச்சியின் பன்முறை வாசிப்புகள்( Multiple Readings ) தேவையா ? அன்பான சகோதரர்களே ! நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்…. நாளை அல்லாஹ்விடத்தில் , மறுமையில் எது நமக்கு பிரயோஜனப்படும் , எது நன்மையை தரும் , ? எது நமக்கு தீமை தரும் ? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியது வருமே !….நீங்கள் புகழ்ந்து பாடிய பீரப்பா கீழ்கண்டவாறு உங்களையெல்லாம் பார்த்து கேட்க நேரிட்டால் என்ன சொல்லப் போகிறீர்கள்? இதோ பீரப்பா போன்றவர்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே என வேதனையுடன் சொல்வதை கொஞ்சம் கேப்போமே !….
    முட்டாள்களே,

    என்ன ஆயிற்று உங்களுக்கு..?

    என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?

    எனக்கு சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி, பக்தி மணக்க , மந்திரங்களும், சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்….

    நெஞ்சு பொறுக்குதில்லையே !

    நான் சொன்னேனா?

    எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும், பாட்டு பாட வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?

    என் ஞானப்பாட்டுக்களுக்கு நானே முழுப் பொறுப்பு !… உங்களை யார் ? நன்மைதான் என நம்பி என் சமாதியின் முன்னால்அமர்ந்து விடிய விடிய படிக்க சொன்னது ?

    என்னை ஏன் இப்படியெல்லாம் இழிவுப்படுத்துகிறீர்கள் ?

    என்னை ஏன் இப்படியெல்லாம் இன்டர் நேஷனல் லெவலுக்கு விளம்பரப்படுத்துகிறீர்கள் ?

    இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள் அவனுக்கு இடை தரகர்கள் தேவையில்லை

    மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.

    ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,

    ஆடு மாடு, கோழி என என் பெயரில் பலி கொடுக்கிறீர்களே ! நான் யாரிடம் சொன்னேன் ?

    இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?

    மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே…

    இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?

    என் மட மக்களே,

    தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த கூத்துக்கும் , கும்மாளத்திற்கும் , பலிக்கும் , நேர்ச்சைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?

    என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு கொக்கரிக்கின்றீர்களே….

    என்ன நியாயம் இது?

    நிறுத்துங்கள்

    எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.

    எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி , குர்ஆன் , நபிவழி என்று போ…

    எனக்காகப் பிரார்த்தனை செய். ஆனால் என்னிடம் பிரார்த்தனை செய்யாதே

    அதைவிட்டு…

    மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.

    உங்கள் யாவருக்கும் எதிராய் நிச்சயமாய் என் விரல் நிளும்… நன்றி : வலையுகம்
    அருமை சகோதரர்களே !. நாளை மறுமையில் பீரப்பா போன்றவர்கள் அனைவரும் நீங்கள் செய்த அத்தனையும் மறுத்து விடுவார் … என்பதற்கு இதோ அல்லாஹ் அவனுடைய திருமறை குர்ஆனில் தெளிவாக சொல்லியிருப்பதை பாருங்கள்

    46:6 அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய
    பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும்
    நிராகரித்து (மறுத்து) விடுவர்

    33:66 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்

    அன்பு சகோதரர்களே !…. மேற்காணப்படும் எச்சரிக்கைகள் நம்மைப் படைத்த அல்லாஹ்வுடையது, எனவே இது ஒன்றும் நமக்கில்லை என அலட்சியம் செய்யவோ, பாராமுகமாக இருக்கவோ, செய்யாதீர்கள் ….
    ஞானப்புகழ்ச்சியோ அல்லது பீரப்பாவோ உதவிக்கு நிச்சயமாக வரவே மாட்டார் என்பதை இனியும் நீங்கள் உணர்ந்து கொள்ள தவறி விடாதீர்கள் என அன்பான சீரியசான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன் , அல்லாஹ் மனித குலத்திற்கு மட்டுமே தந்த சிந்தனைத் திறனை சரியான முறையில் உபயோகித்து உங்களை சிந்திக்கவும் தூண்டுகிறேன் …. இதை எனது கடமையாக எண்ணித்தான் பல இஸ்லாமிய சகோதரர்களின் இத்தனை வசைபாடுகளுக்கும் நிந்தனைகளுக்கும் இடையிலும் உங்கள் எல்லோரோடும் தொடர்ந்து எழுதி வருகிறேன்… இது நம்மை படைத்த அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு இங்கே கூறிக் கொள்கிறேன்… அன்பு சகோதரர்களே !….. சிந்தியுங்கள் … சிந்திப்பவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறான் என்பது அவனுடைய வாக்கு … எனவே கொஞ்சம் சீரியசாகவே சிந்தித்து பாருங்கள் இன்ஷா அல்லாஹ் தெளிவுகள் கிடைக்க நிறைய வாய்ப்புகளை அல்லாஹ் பல வழிகளிலும் தந்து கொண்டே இருக்கிறான் என்பது நிதர்சனம் .

    இனி….. கவிஞர் ஹெச் ஜி ரசூல் அவர்களின் மற்ற வாசிப்புகளுக்குள் நான் செல்லவில்லை, அது தேவையுமில்லை என நினைக்கிறேன் காரணம்….. காரணம் விஷக்கருத்துக்களை packaging மாற்றி, மாற்றி விற்பதற்கு முயலும் ஒரு வி(க)ற்பனைக் கவிஞர்

    இன்ஷா அல்லாஹ் …. நன்மை நாடி இனியும் சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் விவாதிக்கலாம்…..

    வ ஆஹிறு .. த ஃ வானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ……..

    வஸ்ஸலாம்
    சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் …………
    தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்
    Blog: http://haiderghouse.blogspot.com/
    * குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் …………..
    * படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !
    * குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம் !
    * அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *