கன்னியப்பன் கணக்கு

author
1
0 minutes, 23 seconds Read
This entry is part 8 of 8 in the series 4 ஏப்ரல் 2024

மீனாக்ஷி சுந்தரமூர்த்தி

அந்த கிராமத்திற்குள் ஜட்கா வண்டி வருவது எப்போதாவதுதான், ஈசுவரன் கோவில் தெருவில் தடக் தடக் என்று வண்டி திரும்பியது  உழவு மாடு ஓட்டிக்கொண்டு தோளில் கலப்பை ஏந்தி வயலுக்குப் போகிறவர்களும், வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கப் போகிறவர்களும் யார் வீட்டிற்கு? என்று நிதானித்தார்கள். கிணற்றிலிருந்து நீர் சேந்திக் கொண்டிருந்தவர்கள் , அடுப்பில் காபி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று  பெண்களும்  வாசலுக்கு வந்து பார்த்தனர்.’பட்டாளத்துக்காரர் மாதிரி இல்ல இருக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனார்கள். கரிய நிற நங்கையின் முகத்தில் பூசிய பாண்ட்ஸ் பவுடர் போல வானம் வெளுத்துக் கொண்டிருந்தது .இப்போது பிள்ளையார் கோவில் தெருவில் திரும்பி முதல் வீட்டில் நின்றது குதிரை வண்டி.அதிலிருந்து ,நல்ல நிறமும், உயரமும், நடிகர் ஜெமினி கணேசனைப் போன்ற வட்டமுகமும், இராணுவ மிடுக்கும் கொண்ட இருபத்தைந்து வயது ஆறுமுகம் இறங்கினான்

எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு ஜெயா குளித்து முடித்து ஊதாநிறப் பாவாடையும், மஞ்சள் நிற இரவிக்கையும், சிவப்பு நிற தாவணியும் அணிந்து அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த கன்னியப்பன்,’ வாய்யா  ராசா,பயணமெல்லாம் சொகமா இருந்துச்சா? என்று வரவேற்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான் ஆறு . ‘லோகு’ என்று குரல் தந்தார், முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டே,’ வாப்பா ஆறு,’ என்று வந்தாள் மாமி..’ வாடா மாப்ளே ‘ என்று ஓடிவந்து தோளில் தட்டி ஆறுமுகத்தின் இடது கையிலிருந்த இராணுவப் பச்சை நிறப் படுக்கைச் சுற்றை (ஹோல்டாலை) வாங்கிக்கொண்டான் நடேசன். வலது கையிலிருந்த பெட்டியை எதிரில் வந்து நின்ற ஜெயாவிடம் தந்தான் ஆறு. இரண்டு கட்டு பெரிய ஓட்டு வீடு அது. இரண்டு புறமும் திண்ணை. அதைத் தொடர்ந்து பெரிய நிலைவாயில்,தேக்குமரக் கதவோடு, அதைத் தொடரும் நடைப்பகுதி அதில் இரட்டைக் கதவுகள் கொண்ட வாயில் தாண்டினால் எதிரில் கைப்பிடிச் சுவரோடு பெரிய முற்றம்,அதன் இருபுறமும் பெரிய கூடமும்  எதிர்எதிராக இரண்டு அறைகளும். முற்றத்தில் இறங்கி ஏறினால் இன்னொரு நடைப்பகுதி, அதனையடுத்து இரண்டாம் கட்டு ஆரம்பம். அங்கு சற்றுச் சிறிய முற்றம்,  அதன் ஒருபுறம் நீண்ட தாழ்வாரத்துடன் கூடிய சமையலறை, இன்னொரு பக்கத்தில் நீளமான கூடம் அதில் இரண்டு தொம்பைகள்.அதன் ஒரு புறம் பெரிய பூஜையறை, எதிர்ப்புறம் விசாலமான அறை ஒன்று, இந்த முற்றத்தில் இறங்கி ஏறினால் சிறியதோர் நடைப்பகுதி அதில் பின்வாயிற் கதவு திறந்தால் செந்நிறச் சதுரக்கல்  பதித்த தரையில் நடுவில் இராட்டினத்தோடு கிணறு, அருகினில் உயரமான துணி துவைக்கும் கல். இலேசான புளிப்பில் இனிக்கும் கனிகள் தரும் மாமரம் கிணற்று மேடையில் கவிந்திருந்தது. பரந்து விரிந்த தோட்டத்தில் தென்னையும், பலாவும், கொய்யா,நெல்லியும், கிச்சிலியும்,வாழையும், பவழமல்லியும் பூவரசனும் கிளை விரித்திருந்தன. இடையில் சாமந்திப் பூக்களும், கனகாம்பரமும்,மல்லிகையும்,,வித வித டிசம்பர்ச் செடிகளும் நிறைந்திருந்தன.

வீட்டின் எதிர்ப்புற காலி இடத்தில் எருதுகளுக்கும், பசுக்களுக்குமான மாட்டுத் தொழுவம் வைக்கோல் போருடன் இருந்தது. .,’

‘தம்பி குளிக்க வெந்நீர் வச்சிருக்கேன், ‘ஜெயா சோப்பு,துண்டு எடுத்து வை’

மாமி நான் வாய்க்காலுக்குப் போய் குளிச்சிட்டு வரேனே?

‘சரிப்பா, .

நடேசன் ஒரு கையில் ஹமாம் சோப்பும், கட்டம்போட்ட கதர்த்துண்டும் எடுத்துக் கொண்டான். இருவரும் தெருவில் இறங்கி நடந்தார்கள்

வழிநெடுக,’ ராஜத்தோட ஜாடை அப்படியே இருக்கு’

‘நல்லா இருக்கியாப்பா?’ பத்திரமா இருப்பா, இந்த சீனாக்காரனுங்க

பொல்லாதவனுங்க?

என்று நல விசாரிப்புகள். காவேரித் தண்ணீர் குறையாமல் ஓடும் வாய்க்கால், பாதம் பட்டதும் சில்லென்று உச்சிவரை ஏறியது.நீந்தியும், குடைந்தும் நீராடியும் ஆசை தீராமலே கரை ஏறி தலை துவட்டிக்கொண்டு வேட்டியை கட்டிக்கொண்டு திரும்பினார்கள் . ஜெயா இலை போட லோகாம்பாள் சுடச்சுட இட்டிலியும்,இடியாப்பமும், தேங்காய்ப்பாலும்  பறிமாறினாள், 

அம்மியில் அரைத்தெடுத்த தேங்காய்ச் சட்டினியில் ஜெயாவின் கைமணம், பூண்டு காரச்சட்டினியில் லோகாம்பாளின் பரிவு தொனித்தது. மாமாவிற்கு, வெள்ளிப் பூணிட்ட கைத்தடியும், மாமிக்கு காஷ்மீரத்துச் சால்வையும் நடேசனுக்குக் கைக்கடிகாரமும், ஜெயாவிற்கு வெள்ளிக்கொலுசும் வாங்கி வந்திருந்ததைத் தந்தான் ஆறு, எல்லோர் முகமும் மத்தாப்பூவாய் ஆனது.

ஆறுமுகத்தின் தாய்மாமன் வீடு இது.கடந்த மூன்று வருடங்களாகதான் உறவு தொடர்கிறது.

கன்னியப்பனின் ஒரே தங்கை இராஜம். ஊரில் பெரியவருக்கு நல்ல மரியாதை, விவசாயம்தான் தொழில் பூர்வீக நிலபுலன்கள் ஏராளம். அப்படியிருந்தும் வசதியான இடம் தேடாமல் படிப்பும் அரசாங்க உத்தியோகமும் மதிப்பு என்று பெரியவர் டவுனில் கோர்ட் குமாஸ்தாவாக இருந்த பாலசுந்தரத்திற்கு இராஜத்தை விமரிசையாக மணம் முடித்துத் தந்தார். இரண்டு பிள்ளைகள் பிறந்தகத்தில்தான் பிறந்தனர். அம்மாவும், அண்ணி லோகாம்பாளும் பார்த்துக் கொண்டனர். மூன்றாவது மகனுக்குப் பாலு அங்கேயே பார்த்துக் கொண்டார். இராஜத்தின் அம்மா காலமாகி விட்டிருந்ததால்.

 இதை ஒரு காரணமாக்கிப் பெரியவரிடம் சண்டையிட்டார் கன்னியப்பன், வேறொரு காரணமும் ஊடாடியது. ஐந்து ஏக்கர் நஞ்சை நிலத்தைப் பெரியவர் இராஜத்திற்கு எழுதி வைத்ததைச் சொன்னது,

‘ இப்ப அவளுக்கு நெலத்த எழுதறது தேவையா?

‘ ஏண்டா ரெண்டு வீடு, தென்னந்தோப்பு, புஞ்சை 12 ஏக்கர், நஞ்சை 15 ஏக்கர் ஒனக்குப் போதாதா?’

‘ ஒரு அடி மண்ணகூட தரக்கூடாது. எல்லாமே எனக்குதான் சொந்தம்’ மகனின் பிடிவாதமும், தன்னலமும்,பெரியவரை வெகுவாகத் தாக்கியது.ஆற்றாமையைச் சிவனிடம் காட்டி தேற்றிக் கொள்ளப் பார்த்தார்.

அடுத்த ஆறே மாதத்தில் ஒருநாள் பெரியவர் சிவன் கோவிலுக்குச் சென்று வந்தவர் ராத்திரி தூக்கத்திலேயே சிவலோகப் பதவி பெற்றுக் கொண்டார். இந்த விஷயம் தெரியாமலே ஒருநாள் சின்னச் சண்டை ஒன்றில் கணவரிடம் கோபித்துக் கொண்டு ஒன்றரை வயதுக்  குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டாள். இராஜம் குதிரை வண்டியில் வந்து இறங்கியபோது பகல் ஒருமணி இருக்கும்.  வயலிலிருந்து வந்த கணவனுக்குப் பறிமாறிக் கொண்டிருந்தாள் லோகு.

‘வாம்மா இராஜம், என்ன திடீர்னு, கடுதாசி போட்டிருந்தா ரயிலடிக்கு உங்க அண்ணன் வந்திருப்பாரே’

‘திடீர்னு வரணும்னு தோணிச்சு அண்ணி’

‘வாடா செல்லம்’ லோகு குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

கன்னியப்பன் இலையைப் பார்த்தே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

வந்தவளை வா என்றுகூடச் சொல்லவில்லை. 

இராஜம் அண்ணனுக்கு ஏதோ யோசனை போல, என்று நினைத்துக்கொண்டு கிணற்றடிக்குச் சென்று முகம்,கைகால் கழுவிக்கொண்டு வந்தாள்.லோகு குழந்தைக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தாள். கணவன் மீதிருந்த கோபத்தில் காலையிலிருந்து பட்டினி என்பதால் ஒரே பசி, தானே இலையை எடுத்து விரித்து அண்ணனுக்கு எதிரில் அமர்ந்தாள். சோறு எடுத்து வைத்துக் குழம்பு ஊற்றிப்  பிசைந்தபோது, கையை உதறிக்கொண்டு எழுந்தார் கன்னியப்பன்.

‘இதென்ன சத்திரமா சாவடியா? சோறு வடிச்சுக் கொட்ட?’

என்னண்ணா கோபம்?

அண்ணனாவது, மண்ணாவது? நீ எதுக்கு வந்தேனு தெரியும்’

‘இராஜம் உக்காந்து சாப்பிடுமா, உங்கண்ணன் ஏதோ கோபத்துல சொல்றாரு’

‘ஏங்க புள்ள வெயில்ல அலைஞ்சு வந்திருக்குது, கெளம்புங்க அப்புறமா பேசுங்க’

‘ஏண்டி வக்காலத்து வாங்கறியா?’

ஒன்றும் புரியாமல் அதிர்ந்து இலையை விட்டு எழுந்தாள் இராஜம்.

‘அந்தக் கிழம் சொல்லிடுச்சா? இந்தா எடுத்துட்டுப் போ, இதுக்குதானே வந்தே?’

அலமாரியிலிருந்து எடுத்துவந்த பத்திரங்களை அவள்முன் வீசினார் கன்னியப்பன், ஒன்றும் பேசாமல் ஏதோ விளங்கியது போல் குழந்தையை வாங்கிக்கொண்டு நடந்தாள் இராஜம். லோகு செய்வதறியாது கண்கள் குளமாக நின்றாள். அதுதான் இராஜம் கடைசியாகப் பிறந்தவீட்டிற்கு வந்தது. அதற்குப்பின் திடீரெனக் கணவர் மாரடைப்பில் இறந்தபோதும் பிறந்த வீட்டிற்கு வரமறுத்துவிட்டாள். எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்த பெரியவனுக்குக்  கருணை அடிப்படையில்  அப்பாவின் வேலை கிடைக்கும்வரை படாதபாடுபட்டு பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்தாள். கன்னியப்பனும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பிள்ளைகள் நல்லநிலைக்கு வந்தபோது அவள் இல்லை. ஓடாய் உழைத்துத் தேய்ந்ததில்  சீக்கிரமே ஓய்வு தந்துவிட்டது மரணம். 

எதையும் கணக்கப் போட்டு பார்க்கும் கன்னியப்பன் தங்கையின் சாவுக்குச் சென்றபோது சின்னவன் ஆறு அப்போதுதான் இராணுவத்தில் சேர்ந்திருந்தான்.அவனைத் தனக்கு மருமகனாக்க எண்ணினார். உருகிக் குழைந்துப் பேசி உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.அந்த வலையில் விழுந்தவன் ஆறு மட்டும்தான், அண்ணன்கள் என்ன சொல்லிப் புரிய வைப்பதெனத் திகைத்தனர். ஜெயா எனும் காந்தம் இழுத்தது அவனை, இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் விடுமுறையில் வரும்போது முதலில் மாமா வீட்டிற்குதான் வருகிறான். அப்படிதான் இப்போதும் வந்திருக்கிறான்.

 மதிய நேரம்  கன்னியப்பன் தென்னந்தோப்பிற்கும்,நடேசன் வயலுக்கும் சென்றிருக்க லோகு அப்போதுதான் முன்கட்டுக் கூடத்தில் படுத்திருந்தாள். கிணற்றடியில் ஆறுமுகமும் ஜெயாவும் பேசிக் கொண்டிருந்தார்கள் 

‘ஜெயா காலைக்காட்டு, அடடா கொலுசே இப்பதான் அழகாயிருக்கு’

‘அட போ மாமா, வேற எதுவும் வாங்கிட்டு வரலையே நீ,’

என்ன வேணும் ஜெயா?

‘பெரிய ஜிமிக்கியும் தோடும், வைர அட்டிகையும் வாங்கிட்டு வந்திருக்கலாமே?’

‘எதுக்கு வாங்கிட்டு வர்ரது? நீயே வந்து பார்த்து வாங்கிக்கலாம்’

அவள் கரத்தைப்பற்றி இழுத்து மார்பில் சாய்த்துக்கொண்டான்.

‘இன்னும் ஒருவாரத்தில் பெரியண்ணாகிட்டப் பேசி நாள் குறிச்சிட்டு வரேன்.’

மறுநாள் காலையில் ஒருவாரத்தில் வருவதாகச் சொல்லி எல்லோரிடமும் விடைபெற்றான். அடுத்த வாரம் மாமா வீட்டிற்குத் தன் குடும்பத்தோடு ஆறு வந்தபோது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. பர்மாவிலிருந்து வந்திருந்த  பக்கத்து கிராமத்து பெரியதனக்காரரின்  மகனுக்கு ஜெயா நிச்சயம் செய்யப்பட்டு  மணநாளும் குறித்து விட்டிருந்தார்கள். கன்னியப்பன் கறாராகப் பேசினார். லோகு முன்பு போலவே செய்வதறியாது நின்றாள். ஜெயாவின் விருப்பமில்லாமல் செய்துவிட்டதாக நினைத்து கிணற்றடியில் அவளிடம் தனியாகப் பேசச் சென்றான் ஆறு.

,’ஜெயா இப்பவே எங்களோடக் கெளம்பு ‘

‘எதுக்கு மாமா, எவ்ளோ பெரிய எடத்துக்கு வாழ்க்கைப் படப்போறேன்?’

‘நீ இல்லன்னா நான் எப்படி இருப்பேன் ஜெயா?’

‘மாமா சினிமா வசனமெல்லாம் பேசாதே’

‘நானு பணக்கார வீட்டுக்குப் போறது ஒனக்குப் பொறாமை’

‘இவளிடம் என்ன பேச்சு, நானே நெறைய சொல்லிட்டேன்

ஆறு வாடா, உன் மனசுக்கு நல்லபொண்ணு கெடைப்பா’

நடேசன் அணைத்து அழைத்துச் சென்றான். 

குதிரைவண்டி இவர்களை இரயிலடியில் விட்டபோது ,

வைர அட்டிகையைக் கழுத்தில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயா ,ஆறே மாதத்தில் வெறும் நெற்றியைக் காட்டப்போகும் நிலைக்கண்ணாடியில்.

Series Navigationஎன் பெயர்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Valava.duraiyan says:

    மீனாட்சி ஒரு பெரிய நாவலைச் சாமர்த்தியமாகச் சிறுகதையாக்கிவிருக்கிறார். வீட்டு வருணனை மிக அருமை. வீடு கண்முன் வருகிறது. மார்பில் சார்ந்த ஜெயா மனம் மாறுவதில் யதார்த்தம் இல்லை. சினிமா பாணி தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *