நானும் நாகேஷ¤ம்

This entry is part 11 of 42 in the series 29 ஜனவரி 2012

நான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று நால்வரும் ஒரே காலேஜ். இன்னொன்று நாங்கள் எல்லோரும் நாகேஷ் வெறியர்கள். அந்த காலத்திலேயே ‘ காதலிக்க நேரமில்லை படத்தை பன்னிரெண்டு தடவை ( இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்) பார்த்து பரவசமானவர்கள் நாங்கள். இத்தனைக்கும் அது நாகேஷின் முதல் படம். எங்களுக்கு அந்தப் படத்தில் வரும் நாகேஷின் வசனங்கள் ( சித்ராலயா கோபுவின் வசனங்கள் என்றாலும் ) மனப்பாடம். அதே வெறியுடன் பாடங்களை உருப் போட்டிருந்தால், தங்கப்பதக்கம் வாங்கியிருப்போம். இல்லாததனால் வெறும் ‘ தங்கப் பதக்கம் ‘ தான் பார்த்தோம்.
நாகேஷின் off the cuff காமெண்டுகளை மிகவும் ரசிப்பவர்கள் நாங்கள்.
‘ கொடியிடையாளா? நம்ப ஹீரோயின் அப்படி இல்லையே.. சரி பட்டினி போட்டு சரி பண்றேன். ‘ ( கா.நேரமில்லை)
( நாய் செத்துப் போனவுடன் ) ‘ பேரு வச்சே.. சோறு வச்சியா? ‘ ( சவாலே சமாளி)
( அடிபட்ட நாகேஷிடம் ‘ ஒரு அடி அடிக்கும்போதே ஓடி வந்திரவேண்டியதுதானே ) ‘அவன் என்ன ஒன் டு திரி சொல்லியா அடிச்சான்.. அடிக்கிறான்.. ஆனா உயிர் போக மாட்டேங்குது ‘ ( வீட்டுக்கு வீடு )
( டிரங்கு பெட்டியைத் திறந்து மனைவி பார்வதி பெயரைப் பார்த்து விட்டு) ‘ பார் அவதி.. நல்ல பேரு ‘ ( எங்கிருந்தோ வந்தாள் )
( நான்தான் ஆண்டாள்.. உங்கள் பார்யை ) ‘ பார்யா.. ஆண்டாள்.. இங்கே ஏன் வந்தே சிரிவில்லிபுத்தூர் போகவேண்டியது தானே? ‘ ( உத்தரவின்றி உள்ளே வா )
வழக்கமாக எங்கள் ஊர் சுற்றலில், நடக்கும் சம்பாஷணைகளில், நாகேஷ் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுவார், அவரது வசனங்களின் மூலம். அந்தளவிற்கு நாகேஷ் பைத்தியம் எங்களுக்கு. நானே அண்ணாந்து பார்த்த நாகேஷ், பின்னாளில் என்னுடன் பேசி பழகிய சந்தர்ப்பங்கள் அமைந்தது, நானே எதிர்பார்க்காத ஒன்று.
நாகேஷ் மேடை நாடகங்களின் மூலமாகத்தான் அறியப்பட்டார். திரைக்கு வந்தபின்னும், மேடையை அவர் அவ்வப்போது தொட்டுக் கொண்டேதான் இருந்தார். ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த காலங்களில், எதிர்பாராமல் மாலை படப்பிடிப்பு இல்லையென்றால், பிரபல நாடகங்கள் மேடையேற்றப்படும் அரங்கிற்கு அவராகவே வந்து விடுவார். முழுவதும் பார்த்து விட்டு, ஒப்பனை அறைக்குப் போய் நடிகர்களைப் பாராட்டி விட்டு தான் போவார்.
சிவாஜி ஜெய்சங்கர் நடித்த ‘ கீழ்வானம் சிவக்கும் ‘ கதையை முதலில் நாடகமாகத் தான் போட்டார்கள். விசு கதை வசனம். நடிப்பு அவரது அண்ணன் ராஜாமணி குழுவினர். நடிகர் சங்கத்தில் நாடகம் பார்த்த நாகேஷ், ஒவ்வொரு காட்சியிலும் கை தட்டிக் கொண்டிருந்தார். நாடகம் முடிந்தவுடன் மேடைக்குப் பின்னால் போய் நடிகர் களைப் பாராட்டி விட்டு வந்தார். கூட்டம் எல்லாம் போனவுடன், அதில் நடித்த நடிகர் ஒருவர், கழிப்பறைக்கு போயிருக்கிறார். அங்கே நாகேஷ், வாஷ் பேசினில் கையை விட்டு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். யாரோ புகையிலைக் குப்பையைத் துப்பியதில், தண்ணீர் போகாமல் அடைத்துக் கொண்டிருந்தது அது. அதுதான் நாகேஷ்.
பிரபலமானவர்கள் நாடகம் என்றில்லை. எங்கு நாடகம் நடந்தாலும், கூப்பிட்டால் வந்து விடுவார் நாகேஷ். ஒரு முறை ஐ சி எப் அரங்கில் டி வி எஸ் கம்பெனி ஊழியர்கள் நாடகப் போட்டி நடத்தினார்கள். ஒரு நாடகத்தில் என்னுடைய நண்பன் ஒருவன் முக்கிய வேடம். அதனால் பின்னணி இசை சேர்க்கும் வேலையை என்னிடம் கொடுத்து விட்டார்கள். நானொன்றும் இளையராஜாவோ ரகுமானோ அல்ல. அந்தக் காலத்தில் நிஜ வாத்தியங்களைக் கொண்டு மேடைக்குக் கீழே காட்சிக்குத் தகுந்தாற் போல் கலைஞர்கள் வாசிப்பது மெல்ல மெல்ல ஒழிந்து கொண்டிருந்தது. அதனால் திரை இசையையோ, இசைத்தட்டுகளில் கிடைக்கும் வாத்திய இசையையோ காட்சி வரிசைக்கு ஏற்றபடி பதிவு செய்து, டேப் ரிக்கார்டரில் ஒலிக்க வைத்து விடுவோம். அந்த வேலையைச் செய்யத்தான் என்னைப் போட்டிருந்தார்கள்.
முதல் வரிசையில் நாகேஷ் உட்கார்ந்து, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். வில்லனும் கதாநாயகனும் சவால் விடும் காட்சியில், மிருதங்க ஒலியை மட்டும் ஒலிக்க வைத்தேன். பின்னாலிருந்து ‘ சபாஷ் ‘ என்றொரு குரல் வந்தது. நாகேஷ்! காட்சி முடிவில், விளக்கு அணைக்கப்பட்டவுடன் என் முதுகில் ஒரு தட்டு, கைக்குலுக்கல். நாகேஷ¤டனான முதல் ஸ்பரிசம் அது. நல்ல முயற்சிக்கு உடனே பாராட்டு. அதுதான் நாகேஷ்!
மௌலியின் ‘ அவன் ஒரு தனி மரம் ‘, ‘ ஒரு காந்தி போதும் ‘ போன்ற நாடகங்களில் நாகேஷ் நடித்தார். பாலச்சந்தருடன் அப்போது அவருக்கு பிணக்கு. அதன் தொடர்பாக மௌலி குழுவின் நடிகர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் அந்தக் குழுவின் மூத்த நடிகர் ஏழுமலையின் மகன் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். நான், நாகேஷ், எஸ்.வி.சேகர் மூவரும் ஒரு மூலையில் நின்று கொண்டு ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. நாகேஷ் ஏதோ சொல்ல ஒருவரைக் கூப்பிட்டார். அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. நான் சொன்னேன் : ‘ அவர் காதுக்கு இனிஷியல் இருக்கு.. கே காது. ‘ அது என் சொந்த ஹாஸ்யம் இல்லை. எங்கோ கேட்டது. ஒரு வேளை அது நாகேஷ் ஜோக்காகக் கூட இருக்கலாம். ஆனாலும் வாய் விட்டு சிரித்தார் நாகேஷ். அது..
படங்கள் இல்லாத காலங்களில், பழைய பியட் காரில், தனியாக ஓட்டிக்கொண்டு வருவார். மந்தைவெளியில் நான்காவது டிரஸ்ட் குறுக்குத் தெருவில் இருக்கும் பிள்ளை யார் கோவில் அருகில் நிறுத்திக் கொள்வார். நான் அருகில் வசித்ததால் அடிக்கடி அவரை அங்கே பார்ப்பேன். வெட்டியாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுமி யைப் பார்த்து அவர் சொன்னார்:
‘ சைக்கிள் விடற நேரத்துல செய்யுள் படிக்கலாம்லியோ ‘ சைக்கிள்-செய்யுள்.. எதுகை மோனை இன்ஸ்டன்ட் காமெண்ட்.
ரஜினிக்கு கமலைக் காட்டி நடிக்கக் கற்றுக் கொள்ளச் சொன்னது போல, கமலுக்கு நாகேஷைக் காட்டுவாராம் பாலச்சந்தர். கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாகேஷின் சாபம் வீர்யமானது. ஒரு மேடை நாடக எழுத்தாளர் முதன்முதலாக திரைப் பட இயக்குநராகிறார். நாகேஷ் நடிக்க வேண்டிய காட்சி. விண்வெளி உடை அணிந்து பறப்பது போல அமைத்திருந்தார்கள். நாகேஷைக் கட்டித் தொங்க விட்டுவிட்டார்கள். அற்புதமான நகைச்சுவை வெடிகளை வீசி நடித்து முடித்தார் நாகேஷ். புது கேமரா கலைஞன். நாகேஷின் நடிப்பைப் பார்த்த பரவசத்தில் கேமராவை ஆன் பண்ணவேயில்லை. நாகேஷிடம் சொன்னவுடன் அவருக்கு வந்ததே கோபம். ‘ நீ உருப்பட மாட்டே ‘ என்று சபித்தார். அப்புறம் அந்தக் கேமராமேன் காணாமல் போய் விட்டார். நாகேஷ் ஏன் அப்படிச் சொன்னார்? தூங்கக் கூட நேரமில்லாமல், அப்போது அவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த அழுத்தம்.
எனக்குத் தெரிந்த பல கலைஞர்களின் இல்ல விழாக்களில் நாகேஷை அவரது அந்திமக் காலம் வரை சந்தித்திருக்கிறேன். கையை அழுத்திப் பிடித்துக் கொள்வார். பேசி முடிக்கும் வரை விடவே மாட்டார்.
இலக்கியத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அதனால்தான் ஜெயகாந்தனின் பல படங்களில் அவர் நடித்தார்.
அவர் ரெயில்வேயில் வேலை செய்து கொண்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது, மாம்பலம் சிவா விஷ்ணு ஆலயத்திற்கு எதிரில் உள்ள கிளப் ஹவுஸ் என்கிற கட்டிடத்தில் சிரிகாந்துடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். மாம்பலத்தில் தான் என் பள்ளி நாட்களில் நான் இருந்தேன். நான் வளர்ந்த வீட்டு வாசலில் ‘ தாய் நாகேஷ் நடிக்கும் ‘ என்று நாடகத் தட்டிகூட வைத்திருந்தார்கள். அங்கிருந்து ஆரம்பித்திருக்க வேண்டும் தொடர்பு. இல்லையென்றால் நான் ஏன் நாடகத்துக்கு வர வேண்டும், நாகேஷ¤டன் பரிச்சயம் ஏற்படவேண்டும். பின்னாள் பழக்கத்திற்கு முன்னாலேயே முக்கண்ணன் போட்ட முடிச்சு.
நாகேஷ் என்கிற ஒப்பற்ற கலைஞனை எனக்கும் கொஞ்சம் தெரியும். பெரிய பெருமை அல்லவா அது!
0

Series Navigationவிளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்புஜென் ஒரு புரிதல்- பகுதி 29
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *