1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

தமிழகம் தந்த தலைசிறந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்களது வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராக விளங்குபவர் பாரதிதாசனின் மாணவராகிய பட்டுக்கோட்டையார் ஆவார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை ஆகிய மூவரும் தமிழக வரலாற்றில் அடுத்தடுத்த சகாப்தங்களாக அமைந்துவிட்டனர் எனாலம். 1882-ஆம் ஆண்டில் பிறந்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு தமது 39-ஆவது வயதில் மறைந்தார். 1930-ஆம் ஆண்டில் தோன்றிய பட்டுக்கோட்டையார் 1959-ஆம் ஆண்டில் தனது 29-ஆம் வயதில் மறைந்தார். இவ்விரு கவிஞர்களும் மிகக் குறைந்த வயதிலேயே மரணமடைந்தது தமிழர்களின் தவக்குறை ஆகும்.

இவ்விரு கவிஞர்களும் தத்தம் காலத்தை அழகுறத் தம் படைப்புகளில் பிரதிபலித்திருக்கின்றனர். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை ஆகிய மூவருக்கிடையிலும் ஒரு சித்தாந்தத் தொடர்ச்சியைக் காணலாம். பாரதி அடிமைப்பட்ட இந்தியரை மீட்கப் பாடியவர். பட்டுக்கோட்டையாரோ அடிமை இந்தியாவில் பிறந்து சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து சுதந்திர நாட்டில் மக்கள் பட்ட துன்பத்தையெல்லாம் கண்ணுற்று அதனைக் களைவதற்குப் பாடினார். பாரதியின் மேல் பற்று

பாரதிதாசனுக்குப் பாரதியைப் பார்த்துப் பேசி, பழகி உணர்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பட்டுக்கோட்டைக்கு இவ்வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் பாரதியை அவரது எழுத்தின் வழியாக நன்கு பட்டுக்கோட்டை உணர்ந்திருந்தார். தான் பாரதியின் மீது கொண்டிருந்த பற்றினை,

‘‘பாரதிக்கு நிகர் பாரதியே – மண்ணில்

பாரெதிர்த்தாலும் மக்கள்

சீருயர்த்தும பணியில் (பாரதிக்கு)

பாதகம் செய்பவரைப்

பாட்டாலே உமிழ்ந்தான்

பஞ்சைகளின் நிலையைப்

பார்த்துள்ளம் நெகிழ்ந்தான்

பேதங்கள் வளர்ப்பவரைப்

பித்தர் என்றே இகழ்ந்தான்

பெண்மையைச் சக்தியை

உண்மையைப் புகழ்ந்தான்’’ (பாரதிக்கு)

என்று எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றார்.

பாரதியின் மீது அளவற்ற பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தாலும் பாரிதியிலிருந்து பட்டுக்கோட்டையார் பல இடங்களில் கருத்துக்களில் மாறுபடுகின்றார். பாரதியின் கொள்கையை அப்படியே அவர் ஏற்றுக் கொண்டு கவிதை பாடவில்லை. பாரதியின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தன் காலத்தை அறிந்து அதற்கேற்ப தனிவழி வகுத்து அதில் பயணிக்கின்றார் பட்டுக்கோட்டை.

சமுதாய நிலை

‘பாரத ஜனங்களின் தற்கால நிலை’ எனும் தலைப்புள்ள பாடலில் பாரதியார், நாட்டு மக்கள் நிலை கெட்டிருப்பதை எண்ணி நெஞ்சு பொறுக்காமல்,

‘‘நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு)

என்று பாரதி பாடுகின்றார். பாரதியின் பாடலில் அக்கால மக்களின் சமுதாய அவல நிலைமட்டுமே சித்திரிக்கப்படுகின்றது. ஆனால் பட்டுக்கோட்டையார் காலத்தில் இதே நிலை நீடித்தாலும் அவர் அந்த நிலையையை,

‘‘வேப்பமர உச்சியில்நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க’’

என்று எடுத்துரைப்பதுடன் அதற்கு மாற்றான சிந்தனையை,

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே – நீ வெம்பி விடாதே’’

எனப் பட்டுக்கோட்டையார் முன்மொழிகின்றார். மூட நம்பிக்கையை வேரோடு சாய்க்க கவிஞர் இளஞ்சிறார் மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்து வீரமிகுந்த சமுதாயம் உருவாக வழிவகுக்கின்றார். பாரதியின் கருத்தினை உள்வாங்கிக் கொண்டு அதன் அடுத்த படிநிலையில் தனது தனித்திறன் வாய்ந்த கருத்தையும் மக்கள் கவிஞர் எடுத்துரைப்பது போற்றுதற்குரியதாகும்.

ஏன் இப்பாடலில் இளஞ்சிறார்க்கு மக்கள் கவிஞர் மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக்கூறுகிறார்? சிறார்களிடம் கூறினால் எல்லாம் சரியாகிவிடுமா? என்று நமக்கே இதில் ஐயம் ஏற்படுகின்றது. ஏனெனில் நாளைய சமுதாயம் இச்சிறார்களை நம்பித்தானே இருக்கின்றது. இச்சிறுவன் தானே சமுதாயத்தின் வருங்காலம். இவனிடம் கூறினால் தானே எதிர்வரும் சமுதாயம் மூடநம்பிக்கைகளற்ற வலிமையான அறிவார்ந்த சமுதாயமாக உருவாகும். அந்த நோக்கத்தில் தான் மக்கள் கவிஞர் சிறார்களுக்கு அறிவுகொளுத்துகிறார்.

இதுவும் பட்டுக்கோட்டையார் பாரதியிடம் கற்றுக் கொண்ட பாடமே ஆகும். சுதந்திரத்தைப் பற்றிப் பாடிய பாரதி,

‘‘சின்னஞ்சிறு குருவி போலே நீ

பறந்து திரிந்துவா பாப்பா’’

என்று சுதந்திரமாக இரு என்று சிறுவர்களைப் பார்த்துப் பாடம் போதிக்கின்றார். இப்பாடல்வரிகளின் தாக்கத்தை மக்கள் கவிஞரின் பாடல் வரிகளில் எதிரொலிப்பதனைக் காணலாம்.

மேலும் பாரதி அதே பாடலில்,

‘‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம்

என்ன என்று அறியும் திறனுமிலார்!

பஞ்சமோ பஞ்சமென்றே தினம்

பறிதவித்தே தினம் துடிதுடித்தே

துஞ்சி மடிகின்றாரே இவர்

துயர்களைத் தீர்க்க ஒரு வழியுமிலையே’’

என்று மக்களின் துயர் கண்டு குருதிக் கண்ணீர் வடிக்கின்றார். பாரத மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு வகைஅறியாது பாரதி தவித்த காலம் பாரத நாடு அடிமைப்பட்டிருந்த காலம். அதனால் தான் பாரதி கையற்றுப் பாடுகின்றார்.

சுதந்திரம் பெற்றும் இந்நிலை மாறாததைக் கண்ட பட்டுக்கோட்டையார் பாரதி படைத்தளித்த வரிகளை மனதிற்கொண்டு,

‘‘பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனிப்

பண்ண வேண்டியது என்ன மச்சான்?’’

‘‘கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது

சிந்தித்து முன்னேற வேண்டுமடி’’

‘‘வாடிக்கையாய் வரும் துன்பங்களை

இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

‘‘இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது

சேரிக்கும் இன்பம் திரும்புமடி!’’

‘‘நல்லவர் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால்

உள்ளவரின் நிலை என்ன மச்சான்?’’

‘‘நாளை வருவதை எண்ணி எண்ணி – அவர்

நாழிக்கு நாழி தெளிவாராடி!’’

………………………………………………………………………………

‘‘நானே போடப்போறேன் சட்டம் – பொதுவில்

நன்மை புரிந்திடும் திட்டம்!

நாடு நலம்பெறும் திட்டம்!’’

(பட்டுக்கோட்டையார்பாடல்கள்,(வ.த.இராமசுப்பிரமணியம், உ.ஆ.) ப.,270)

என்று சமுதாய நிலை மாற தீர்வு கூறுகின்றார் மக்கள் கவிஞர். ஏனெனில் மக்கள் கவிஞர் நம்மவர் ஆண்ட காலத்தில் வாழ்ந்ததால் மக்கள் நலத் திட்டங்களை, நாட்டினை முன்னேற்றும் திட்டங்களை மக்களாட்சியில் மக்களே இயற்ற வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேறினால் மக்களின் துன்பம் குறைந்து அவர்தம் வாழ்வில் மகிழ்ச்சி நிறையும் என்ற மக்கள் கவிஞரின் எண்ணம் இப்பாடல் வரிகளில் மிளிர்வதைக் காணலாம்.

உழவும் தொழிலும்

இரு கவிஞர்களும் உழவையும் தொழிலையும் போற்றிப் பாடியுள்ளனர். பாரதியார்,

‘‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்

உண்டு களித் திருப்போரை நிந்தனை செய்வோம்’’(ப.58)

என உழவினையும் தொழிலாளரையும் வணங்கினார். பாரத மக்களைப் பார்த்து பாரதி,

‘‘பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் – பிறர்

பங்கைத் திருடுதல் வேண்டாம்’’(ப.211)

‘‘கைத்தொழில் போற்று’’(ப.205)

என்று உழுதுண்டும், கைத்தொழில் செய்தும் வாழுமாறு கூறுகிறார். அதுவே புனிதமானது என்பது பாரதியின் உள்ளக் கிடக்கையாக அமைந்திலங்குகின்றது.

தொழிலையும் தொழிலாளரையும்,

‘‘இருப்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!’’

என விளித்து,

‘‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரந் தொழில் செய்திடுவீரே!

பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்

பிரம தேவன் கலையிங்கு நீரே!’’(பக்.218-219)

என்று பாடுகின்றார்.

பாரதியின் அடிச்சுவட்டில் நடந்து கவிதையாத்த பட்டுக்கோட்டையார் உழவுக் கவிஞராகவே விளங்குகின்றார். உழவினையும், உழவரையும், உழவிற்குப் பயன்படும் மாடு, உழுவதற்குரிய நிலம், பயிர் உள்ளிட்டவற்றைப் பற்றி அதிகமாகப் பாடியுள்ளார். திரையிசையில் உழவர்களைப் பற்றி அதிகம் பாடிய பாவலர் பட்டுக்கோட்டையாரைத் தவிர வேறு யாரும் இல்லை எனலாம்.

பாரதி தொழிலாளரைப் போற்றியது போன்று பட்டுக்கோட்டையார்,

‘‘செய்யும் தொழிலே தெய்வம் – அதில்

திறமை தான் நமது செல்வம்

கையும் காலும் தான் உதவி – கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி!’’

என்று தொழிலைப் போற்றிப்பாடி,

‘‘பயிரை வளர்த்தால் பலனாகும் – அது

உயிரைக் காக்கும் உணவாகும்.!

வெயிலே நமக்குத் துணையாகும்! – இந்த

வேர்வைகள் எல்லாம் விதையாகும்!’’

‘‘……………………………… ……………………………… ………………………… அந்தச்

சாமி மறந்தாலும் பூமி தந்திடும்!’’(ப.கோ.பா.ப.,292)

என்று உழவுத் தொழிலின் சிறப்பினை எடுத்துரைத்து, நம்பிக்கை இழந்து தவிக்கும் தொழிலாளர்க்கு நம்பிக்கையூட்டுகின்றார். நாட்டில் வறுமையும் பசிக் கொடுமையும் தீர வேண்டுமானால்,

‘‘கஞ்சிப்பானை கவலை தீரக்

கலப்பைத் தொழிலை நம்பிடணும்!’’(ப.கோ.பா.ப.,286)

என்று மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.

பாரதி தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பாடினாலும் அவரிலிருந்து மாறுபட்டுத் தொழில் தொழிலாளிக்கு வாழ்வளிக்கிறது. வயலில் வேலை செய்தால் பலரின் உணவுக்குப் பலன் கிடைக்கின்றது என்பதனை அறிந்து தொழிலே தெய்வம் என்று உலகிற்குத் தெளிவுறுத்துகின்றார். மேலும் பலூன் விற்பவர், ரிக்சாவண்டி இழுப்போர், டீ விற்போர், நெசவாளர் எனத் பலதரப்பட்ட தொழில் செய்வோரையும் அத்தொழிலையும் பற்றி மக்கள் கவிஞர் பாரதியை அடியொற்றிப் பாடியிருப்பது நோக்கத்தக்கது.(தொடரும்—–)

Series Navigation6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு