ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்

 

ஹிந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதாரை அர்ச்சகராக நியமிக்கும் நடைமுறை செயல்பட முடியாமல் உள்ளதாகப் பலருக்குப் பெரிய குறை இருந்து வருகிறது. இதில் வேடிக்கை, இப்படிக் குறைப்பட்டுக் கொள்பவர் களில் மிகப் பெரும்பான்மையினர் ஹிந்து கோயில்களைப்பற்றி அக்கறை ஏதும் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று தேடுவதற்காகவே ஹிந்து ஆலயங்களுக்கு உள்ளே நுழைபவர்கள். இன்னுமொரு வேடிக்கை இதுபற்றி ஆழமான புரிதல் இன்றியும் தற்போதைய நிலவரம் என்ன என்பதையும் அறியாமல் சிலர் இது பற்றிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் விஸ்தாரமாக ஏதோதோ எழுதிக்கொண்டு போவதுதான்.
பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக முடியாதபடி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் சாதி வெறி பிடித்த பிராமணர்கள்தான் என்று குற்றம் சாட்டுவதில் பலருக்கு அலாதியான விருப்பம் இருப்பதும் வெளிப்படை.யாகவே தெரிகிறது. உண்மையில் இதில் ஒரு முடிவு சீக்கிரம் வரவிடாமல் தாமதப்படுத்தி வந்தது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த கருணாநிதி அரசுதான்!
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புராதனமான ஹிந்து ஆலயங்களில் அர்ச்சகராக இருக்கும் சிவாசாரி யார்கள், குருக்கள், பட்டாச்சாரியார் போன்றவர்கள் சமூக அமைப்பின் பிரகாரம் பிராமணர்கள் என்று கருதப்படுபவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
ஸிந்து மாகாணத்தில் ஹுசைனி பிராமணர்கள் என்றே ஒரு பிரிவு இன்றளவும் உள்ளது. இவர்களின் முன்னோர்கள் கர்பலாவில் ஹுசைன் அலிக்குத் துணையாக இணைந்து போரிட்டு மடிந்தவர்களாம்! பொதுவாக அறியப்பட்ட பிராமணப் பிரிவுகளைவிட இப்படி அறியப்படாத பிராமணப் பிரிவுகள் பல உள்ளன. இது தவிர ரங்காச்சாரி என்பவர் உதவியுடன் எட்கர் தர்ஸ்டன் திரட்டிப் பதிவு செய்துள்ள சாதிகள் பற்றிய விவரங் களிலும் பிராமணர்கள் என்று கருதப்படுகிற, பிராமணர்கள் என்று தங்களைப் பற்றி சொல்லிக் கொள்கிற பல பிராமணப் பிரிவுகளும் உண்டு( அவற்றை ஒரு தகவல் விவரத்திற்காகப் பார்வையிடலாமேயன்றி அவர் பதிவு செய்துள்ளவற்றையெல்லாம் வேத வாக்காக ஏற்றுக்கொண்டு விட முடியாது. காலின் மெக்கென்ஸியின் பதிவுகள் அளவுக்கு அவை ஆய்வுச் செறிவும் நம்பகத்தன்மையும் சரியான தகவல்களும் உள்ளவை அல்ல. இருந்தாலும் இந்த விஷயத்தில் உடனே என் நினைவுக்கு வருவது ‘விஸ்வ கர்ம பிராமணர்கள்.’ ஸ்தபதிகள் பல பிராமண விற்பன்னர்களைக் காட்டிலும் ஆகம விதிகளிலும் சாஸ்திர முறைகளிலும், சமஸ்க்ருதம், கிரந்தம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்கள். இவர்களை பிராமண சிரேஷ்டர்கள் என்றே நான் அடையாளப் படுத்துவேன். ஆனால் சமூக அமைப்பு அவர்களை பிராமணர்களாக வகைப்படுத்துவதில்லை.
இவையெல்லாம் சமூகவியல், மானிடவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய சமூக விஷயங்களேயன்றி சமய விஷயங்கள் அல்ல. இவ்வளவும் சொல்லக் காரணம், அர்ச்சகர்கள் பிராமணர்கள் என்பதால்தான் அவர்கள் சார்பாக நீதி மன்றங்களில் வாதாடுவதும் பொது மன்றங்களில் விவாதிப்பதுமாக பிராமணர்கள் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறது. இவர்கள் காமாலைக் கண்ணுடன் எந்தவொரு விஷயமானாலும் அதை பிரமணர் – பிராமணர் அல்லாதார் என்கிற பார்வையுடன்தான் அணுக வேண்டும் என்கிற ஈ.வே.ரா. அவர்களின் உபதேசப்படியே நடந்து பழக்கப்பட்ட விசுவாசம் மிக்க சீடப் பிள்ளைகள் போலும்,. வெங்காயம் என்று அவர் எரிச்சலுடன் சொல் வதைக்கூட நுணுகி ஆராய்ந்து அவர் மகா பெரிய தத்துவத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் சொல்லிவிட்டதாகப் பரவசப்படுபவர்கள், இவர்கள். மிகுந்த எரிச்சலில், – அது உடல் உபாதைகளின் கரணமாகக் கூட இருக்கலாம் – பொதுக்கூட்ட மேடை என்றுகூடப் பாராமல் அவர் உதிர்க்கும் எழுத்தில் குறிப்பிட இயலாத சில சொற்களைக் கேட்கும் பாக்கியம் எனக்கு வாய்த்ததுண்டு. ஆனால் அவற்றுக்கும் பகுத்தறிவுடன் கூடிய உட்பொருளை அவரது சீடப் பிள்ளைகள் யாரும் கண்டறிந்திருந் தாலும் ஆச்சரியமில்லை.
ஒருவர் சொன்னதைச் சொல்லவில்லை என்பதுபோல் சொல்லிச் செல்வது, சொல்லாததைச் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்கு பதில் சொல்வது, சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் புரிந்துகொண்டதுபோல பாவனை கொண்டு அதற்கேற்ப சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது, சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே திசை மாறிப் போவது இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் திராவிட அரசியல் சம்பிரதாயம். இவையெல்லாம் இந்த அர்ச்சகர் விவகாரங்களிலும் தப்பாமல் இடம் பெற்று வருகின்றன.
பொதுவாக எனக்குக் கோயில் ஒழுங்குகளில் ஈடுபாடு இல்லை. வழிபாட்டுக்காக நான் கோயில்களுக்குச் செல்வதென்பது மிகவும் துர்லபமே. சில விக்கிரக வழிபாடுகளை எனது அவசியமும் சந்தோஷமும் கருதி நான் வீட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தாலும் எனது லயிப்பு வேத மார்க்கத்தில்தான். ஹிந்து மதம் என்பதைவிட ஹிந்து சமூகம், ஹிந்து கலாசாரம் ஆகியவற்றில்தான் எனக்கு அக்கறை. ஏனெனில் ஆன்மிகத்தில் ஒரு நிலையைக் கடந்துவிட்டால் மதம் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. எனினும் ஹிந்து மதம் என்பதே ஹிந்து சமூக, கலாசார, தத்துவ ஞான ஆதாரங்களூக்கெல்லாம் அடிப்படையாக இருந்து கட்டிக் காப்பதால் அதுபற்றிய அக்கறையையும் கொள்வது இன்றியமையாததாகிறது. ஆகையால்தான் மதத்தோடு நெருங்கிய பிணைப்புள்ள இந்த அர்ச்சகர் என்கிற விவகாரத்தையும் கவனிப்பது எனக்கு அவசியமாகப் பட்டாலும் இதையும் ஒரு சமூகப் பிரச்சினை யாகவே கண்டு இதுபற்றிப் பேசலானேன். இதில் எனக்கு மதம் என்கிற கண்ணோட்டம் இல்லை யென்றாலும் கோயில் அமைப்பு, கோயில் நடைமுறைகள் முதலனவை மதத்தைச் சார்ந்திருந்து ஒரு கொடி தனது கொழு கொம்பைத் தாண்டி வேறு ஒரு மரத்தையும் பற்றிக்கொள்வதுபோல் பின்னர் மதத்தையும் தாண்டி சமூக விவகாரங்களாக இருப்பதைக் காண்கிறேன். இதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும். கோயில் மண்டபங்களில் நாட்டியாஞ்சலி, இசைக் கச்சேரி போன்ற கலாசார நிகழ்வுகள் சமூகக் கூறுகளேயன்றி அன்றாட வழிபாட்டுச் சடங்காச் சாரங்களில் ஒன்றாக இருப்பவை அல்ல.
ஹிந்து ஆலயங்களில் குழந்ததைளுக்குப் பெயர் சூட்டுவதென்பதோ, ஈமச் சடங்குகள் செய்வதோ நமது வழிபாட்டுச் சடங்கு சம்பிரதாய நடைமுறை யில் இல்லை. குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஓராண்டு நிறைவு பெறும் குழந்தைகளுக்குச் சோறு கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அது கருவறையில் உன்னிக் கிருஷ்ணன் முன்னிலையில் அல்லாமல் வெளித் தாழ்வாரத்தில் நடக்கிறது. திருக்கடையூரில் அறுபதாம் கலியாணம் செய்துகொள்ளும் வழக்கமும் பிராகாரங்களில்தான். பிறந்த நாட்களின்போது விசேஷ அர்ச்சனை செய்து வழிபடும் வழக்கம் உள்ளது. இது தவிர திருமணம் செய்துகொள்வோருக்கு அதைச் செய்து வைத்து அங்கீகாரம் உள்ள சான்றிதழை அதிகார பூர்வமாக வழங்கும் செயல் பாடும் கோயில் நிர்வாகத்தில் உள்ளது. இவை எல்லாவற்றிலும் அர்ச்சகரின் பங்கு பிரதானமாக உள்ளது. ஆனால் அவற்றை யெல்லாம் சமூக நடைமுறைகளாகக் கொள்ள இயலுமேயன்றி கோயில்களில் வழக்கப்படி நடைபெறும் ஆறு கால பூஜை போன்ற விதிக்கப்பட்ட சடங்காசாராமாக எடுத்துக்கொள்ள இயலாது. அர்ச்சகர் பணி என்று சொன்னால் அது அவர் கருவறையில் நின்று உரிய கால நேரப்படி நியமிக்கப்பட்ட பூஜையை முறையாகச் செய்து வருவதே மத சம்பந்தமான பணி எனக் கொள்ள வேண்டும். மற்றவை சமூக நடைமுறைப் பணிகளேயாகும். அவற்றைச் செய்ய மறுக்கவும் அர்ச்ச்கர் என்ற முறையில் அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் பொதுவாக எவரும் அவ்வாறு மறுக்க முன் வருவதில்லை. இதற்குப் பிரதான காரணம் அதில் அவருக்கு வருமானம் கிட்ட வாய்ப்புண்டு.
இன்று 1972-ன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திருத்தச் சட்டம், 2006ன் அவசரச் சட்டம் ஆகியவற்றுக்கெல்லாம் அர்ச்சகர் சங்கத் தரப்பிலேயிருந்து ஆட்சேபம் வருகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் உலகாயதமாக இருக்குமே யன்றி முற்றிலும் மத நம்பிக்கை, மதத்தின் மீதான ஆழ்ந்த ஈடுபாடு, சாதி அபிமானம் ஆகியனவாக இருக்க வாய்ப்பில்லை. இதற்கு ஒருசில விதி விலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.
இந்தத் திருத்தச் சட்டம், பின்னர் வந்த அவசரச் சட்டம் ஆகியவற்றால் நேரடியாகப் பணி நிமித்தமாகப் பாதிப்படையக் கூடியவர்கள் அர்ச்சகர்களே. அவர்கள்தாம் இன்று தொழிற்சங்க அமைப்புபோல அமைத்துக் கொண்டு சங்கத்தின் சார்பில் வாதிகளாக அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் திராவிட அரசியல் வழக்கப்படி பிராமணர்-பிராமணர் அல்லாதார் துவேஷப் பிரசாரத்தைத் திணிப்பது முடி பிளக்கும் வேலையேயன்றி வேறல்ல. வழக்கம் போல் ஹிந்து சமூகத்தில் பிளவுண்டாக்கிக் காரியம் சாதித்துக்கொள்ளப் பார்க்கும் செயல்திட்டம் என்றுதான் இதனைக் காண இயலும். ஏனெனில் நாங்கள் பிராமணர்கள், ஆகவே நாங்கள்தான் கோயிலில் அர்ச்சகர்களாக இருக்க முடியும். பிராமணர் அல்லாதாருக்கு அர்ச்சகராக அருகதையில்லை என்று அவர்கள் வாதாடவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆகமவிதிப் படியிலான கோயில்களில் அர்ச்சகர்களாக பிராமணர்கள் முற்பட்டால் அதையும் தங்கள் நலன் கருதி அவர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.
வேதகால சம்பிரதாயத்தில் கோயில்களோ அர்ச்சகர்களோ, ஏன் புரோகிதர்களோகூட இருந்ததில்லை. வர்ண அமைப்பில் பிராமணக் குடும்பத்தில் குடும்பத் தலைவனே சடங்காரசாரங்கள் அனைத்தையும் வீட்டினுள் செய்து வைப்பான். விக்கிரகங்களின் பிரதிமை, உருவங் களுக்குக் கூட அவசியமின்றி சிறு குடத்தில் உயிர்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக உள்ள ஜீவாதாரமான நீரை ஒரு சிறு குடத்தில் நிரப்பி அதில் இறைச் சக்தியை ஆவாஹனம் செய்து மந்திரங்கள் ஓதி பூஜையைச் செய்து முடிப்பான். இறுதியாக அந்த பூஜையின் பலனையும் இறைச் சக்திக்கே அர்ப்பணம் செய்வதாக “ஸகலம் பரஸ்மை” -எனக்கானது அல்ல- என்று பூஜா பலனையும் இறைவனுக்கே சமர்ப்பணம் செய்து முடிப்பான். அக்னியை இறைச் சக்தியின் பிரதிநிதி யாகக் கொண்டு வீட்டிலேயே அக்னிக் குண்டம் செய்து வைத்துக்கொண்டு ஹோமம் வளர்த்து காலையும் மாலையும் அக்னி ஹோத்ர வழிபாட்டை நிறைவு செய்வான்.
அக்னி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருப்பினும் அது ஒரு தனி மூலகமாகத் தானாகவே இயங்குவதல்ல. அது தோன்றவும் இயங்கவும் வேறு பொருள்கள் வேண்டும். அது சுயம்பு அல்ல. எனவே அது இறைச் சக்தியின் தூதுவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்னிக்கே அவ்வறான மரியாதை அளிக்கப்படுகிறது. மனிதன் தேவர்களுக்குத் தான் அளிக்க விரும்புவதை அக்னியின் மூலமாகவே கொடுத்தனுப்புகிறான். அக்னி அணைந்தால் அதன் கூறு எதுவும் மிஞ்சுவதில்லை. அக்னியுடன் சம்பந்தப்பட்டிருந்தது மட்டுமே வேறொரு தோற்றத்தில் எஞ்சிக் கிடக்கிறது.
ஆக, வெளியிலிருந்து ஒரு புரோகிதன் வந்து சடங்குகளைச் செய்து வைக்கும் வழக்கம் வேத கால பிராமண வீடுகளில் இருந்ததில்லை. சமூகத்திற்குப் பொதுவான நோக்கங்களில் மட்டுமே பிராமணர் திரண்டு அனைவரின் பொது நன்மைக்காகவும் ஊருக்குப் பொதுவாக ஹோமம், யாகம் முதலானவை செய்வதுண்டு. பிராமணன் வைதிக காரியங்களைச் செய்து வைப்பதென்பது க்ஷத்திரிய, வைசியக் குடும்பங்களில்தான். க்ஷத்திரியர் அரசாள்வோராதலால் அவர்களின் ராஜ்ஜிய நலன் கருதியும் பிராமணர்கள் புரோகிதராய் இருந்து யாகம், ஹோமம் முதலானவை செய்து வைப்பர். அவ்வாறான தருணங்களில் மட்டுமே பிராமணர்கள் புரோகிதராக இருப்பர். சில மன்னர்கள் தமது அவையில் நிரந்தரமாகவே பிராமணரை வைத்துக்கொண்டு சமயச் சடங்குகளைச் செய்து வர விரும்பியதுண்டு. இவ்வாறு அரசவைகளில் இடம் பெறும் பிராமணரும் புரோகிதர் என்று கருதப்படாமல் குரு என மதிக்கப்பட்டனர்.
ஆகவே அர்ச்சகர் என்கிற ஒரு நிரந்தரமான பிரிவிற்கே வேத கால சமூகக் கட்டமைப்பில் இடமோ அவசியமோ இருந்ததில்லை. ஆகமங்கள் இயற்றப்பட்டு அவை விதித்த நிபந்தனைகளின்படிக் கோயில்கள் என்ற அமைப்பு வந்த பிறகே அர்ச்சகர் என்ற பிரிவு உருவாகியிருக்கிறது. இவ்வாறு உண்டான பிரிவுகளில் இடம் பெற்றோர் சம்பிரதாயமான சாதி முறை பிராமணர்களாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பதில்லை. சாதி முறை பிராமணர்கள், விஸ்வகர்ம பிராமணர்கள், பண்டாரங்கள், திருக் குலத்தாருங்கூட அர்ச்சகராகப் பொறுப்பேற்றுக் கடமையாற்றி, சுய அடையாளங்களை இழந்து அர்ச்ச்கர் என ஒரு பிரிவாகியுள்ளனர்.
இன்று வட நாட்டில் ஹிந்துக்களின் புனிதத் தலங்களில் உள்ள மிகப் பெரும்பாலான கோயில்கள் இடைவிடாத அந்நியத் தாக்குதல்களால் முற்றிலும் அழிந்து திரும்பவும் கட்டப்பட்டு மீண்டும் தரை மட்டமாக்கப் பட்டு, தமக்கென ஒரு வழிபாட்டுத்தலம் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அவரசர அவசரமாகக் கட்டப்பட்டவையேயன்றிப் புராதனமானவை அல்ல. . முற்றிலும் பக்தி வேகத்தில் கண்ணீர் மல்கி, மனம் கசிந்து ஆவேசத்துடன் கட்டப்பட்டவை. புனித பக்தியின் பீறிட்டெழுந்த உணர்ச்சி வேகமே அவற்றின் சாந்நியத்திற்குப் போதுமானவை. அவற்றுக்கு ஆகம விதிகளின் இலக்கணமோ நிபந்தனைகளோ அவசியம் இல்லை. பொங்கிவரும் பக்தி வெள்ளம் எல்லா அழுக்குகளையும் அடித்துக்கொண்டு போய்விடும். எனவேதான் காசி விசுவநாதரையோ உஜ்ஜயினி மஹா காலேஸ்வரையோ எவரும் தொட்டு வணங்கி மெய் சிலிர்க்க முடியும். என் எஜமானன் விட்டல நாதனைக் கூடக் கட்டி அணைத்து மார்புறத் தழுவிக்கொள்ள முடியும். அவனது திருப்பாதங்களில் சிரம் வைத்துக் கண்ணீரால் அவற்றைக் கழுவ முடியும். அல்லது நண்பா எனத் தோளில் கைபோட முடியும். மகனே என்று கொஞ்ச முடியும். ஆசானே என்று பாதங்களைப் பற்றிக் கொள்ள முடியும். அங்கெல்லாம் ஆகமக் கட்டுப்பாடுகளை களங்கமற்ற பக்திச் சூறாவளி அடித்துக்கொண்டு போய்விட்டது.
இன்று ஹிந்துக்களின் தலையாய புனிதத் தலமான காசியிலேயே விசுவநாதரின் ஆலயம் மிகவும் குறுகலாகத்தான் இருக்கிறது. காசியின் அதிபதியாகவே இருந்து மந்திரம் ஓதி மோட்சத்திற்கு உத்தரவாதம் அளிக்கிற மகோன்னத நிர்மூலனே மிகச் சிறிய வடிவில்தான் தொட்டுணர வாய்ப்பளிக்கிறான். அதற்கு அருகிலேயே ஏளனம் செய்வதுபோல் இடத்தை அடைத்துக்கொண்டு வானளாவி நிற்கிறது ஞானவாபி மசூதி! இங்கே ஆகம விதிகளுக்கு எங்கே இடம் இருக்க முடியும்?
ஆகையால் அதிகம் அந்நிய பாதிப்புக்குள்ளாகாது ஓரளவு இடையூறுகளோடு தப்பித்த மிகப் பெரும்பாலான தென்னகக் கோயில் கள்தாம் ஆகம விதிப்படி இயங்கி வருகின்றன. குறிப்பாகத் தமிழ் நாட்டில்தான் ஆகம விதிகளை அனுசரிக்கும் கோயில்கள் மிக அதிகம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்துமே ஆகம விதிப்படி அமைந்தவை எனக் கூற முடியாது. ஆகம விதிப்படி அமையாத ஆலயங்களை வைதிகக் கோயில்கள் எனலாம். இங்கெல்லாம் அர்ச்சகர் பணி தொடர்பாக எவரும் உரிமை பாராட்ட முடியாது. இங்கு எவரும் அர்ச்சகராகலாம். ஆகியும் உள்ளனர்.
இங்கிலாந்திலேயே ஆக்ஸ்ஃபோர்டு வளாகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து மறைந்த முதுபெரும் வரலாற்று அறிஞரும் ஹிந்து சமய சமூக அமைப்புகளுக்கு அந்நிய மதத்தவரால் விளைந்த பாதிப்புகளையும் தங்கு தடையின்றி விவரித்து மேகத்திய அறிவுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவருமான வங்காளப் பெருமகன் நிரத் சந்திர செளதரி ஹிந்து ஆலயங்கள் பொது சகாப்தம் மூன்று முதல் ஐந்தாறு நூற்றாண்டுகளுக் குள்ளாகத்தான் தோன்றின என்று ஆய்வாதாரங்களுடன் கூறுகிறார். பழைமையான அக்கால கட்டத்து ஹிந்து ஆலயங்கள் இருந்தமைக்கான தடையங்கள் ஆஃப்கானிஸ்தானம் தொடங்கி ஹிந்துஸ்தானத்தில் பல இடங்களில் இடிபாடுகளாகவும் வெறும் அஸ்திவாரக் கட்டமைப்புகளாகவும் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். இவை மடாலயங்களாக மட்டுமே இருந்திருக்கவும் கூடும். வழிபாட்டுக்குரிய ஆலயங்களுக்கும் மடாலயங் களுக்கும் வேறுபாடுகள் இருப்பது இயல்புதானே?
ஆக, வேத கால வாழ்க்கை முறையுடன் ஒப்பிடுகையில் கோயில்களின் தோற்றம் மிகவும் பிற் காலத்தவைதான். மேலும் அவை தோற்றம் கொள்வதற்கென்றே உருவானவைதாம், ஆகமங்கள். ஸ்மிருதிகளின் காலத்திற்கும் பின்னதாகக்கூட ஆகம காலம் இருக்கலாம். மேலும் ஆகமங்கள் தோன்றியது தெற்கில்தான் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவை சமஸ்க்ருதத்திலும் கிரந்தத்திலும் இருந்தாலும்கூட!. மேலும் கிரந்தம் தென்னாட்டிற்கே உரித்தானதாகவும் கருதப்படுகிறது. மட்டுமல்ல, தென்னாடு பல மூல சமஸ்க்ருத நூல்களை இயற்றிய பெருமைக்கும் உரியதுதான்.
ஆலயங்களில் எது எவ்வாறாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு விதிகளுடன் ஆராதனைக்கான விக்கிரகங்களைப் பிராண பிதிஷ்டை செய்யும் முறை, எத்தனை கால எவ்வாறான பூஜை முறை, யார் பூஜைகளையும் வழிபாட்டு முறையையும் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆகமங்கள் நிபந்தனைகளாகவே விதித்துள்ளன. குறிப்பாகத் தென்னாட்டவர் வாசிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகம விதிகளுக்கு கிரந்த எழுத்து பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை யூகிப்பதில் சிரமம் இருக்காது.
தமிழ்நாட்டில் குறிப்பாக சோழர், பாண்டியர், பல்லவர் ஆட்சிக் காலத்திலும் தொடக்க கால சேரர் ஆட்சியிலும்தான் கோயில்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை இரண்டு முதல் ஐந்து பொது சகாப்த ஆண்டுகளில் கட்டப் பட்டவையாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரம் கண்ணகிக்குக் கோயில் கட்டப்பட்டதைப் பேசுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் கோயில்கள் இருந்தமைக்கும் அதில் குறிப்புகள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் வேத காலத்திற்கு மிகவும் பிற்பட்டவை. இக்கால கட்டத்தை ஆகம காலம் எனக் குறிப்பிடலாம். இறை வணக்கத்துக்காகப் பிரத்தியேகமாக ஓர் பொது இடம் தேவை என உணரத் தலைப்பட்டு, கலைத் தாகங்களையும் கலாசாரக் கூட்டங்கள், சமுகக் கலந்துறவாடல்கள் ஆகியவற்றையும் அதோடு கூடவே நிறைவு செய்துகொள்ளவும் அரசர்களும் குறு நில மன்னர்களும் பிற் காலத்தில் ஊர் பிரமுகர்களும் பிறகு மக்களே ஒன்று சேர்ந்தும் மேற்கொண்ட ஏற்பாடுதான் கோயில்களாகத் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனல் சிலம்பில் கோயில்களில் அர்ச்சகராகப் பணியாற்றியோர் யார் என்பதற்குத் தெளிவான குறிப்பு இல்லை.
நாயக்க மன்னர்கள் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம் வந்த பிறகுதான் தமிழகக் கோயில்களில் ஆகம விதிகள் கடுமையாக அனுசரிக்கப் பட்டன என்றும் தகவல் உண்டு. இது ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட நிலைமை. ஒரு வழக்கத்தைச் சம்பிரதாய நடைமுறை எனச் சட்டம் ஏற்றுக்கொள்ள ஒரு நூற்றாண்டுக் காலமே போதுமானது. இதனைத்தான் ஆங்கிலத்தில் கன்வென்ஷன் என்கிறோம். பொதுவாக கன்வென்ஷனுக்கு ஆட்சேபம் எழுவதில்லை- அது இயற்கை நீதிக்கு விரோதமானதாக இருந்தாலன்றி. சதி என்கிற உடன்கட்டை ஏற்றப்படுதலையும் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசத்தையும் சட்ட ரீதியாக எதிர்த்தபோது கன்வென்ஷன் என்கிற ஆயுதத்தைத்தான் முன்வைத்தனர். இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அது புறந்தள்ளப்பட்டது. ஆனால் அர்ச்சகர் விவகாரம் இத்தகையது அல்ல. இதில் உடலுக்கோ உள்ளத்திற்கோ வன்முறைத் தாக்குதலுக்கு வழி இல்லை. அர்ச்சகர் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்றோ தாழ்த்தப்பட்டவன் என அவமதிக்கப்படுகிறேன் எனவோ ஆகம விதிப்படி நடக்கும் ஆலயத்தின் விஷயத்தில் ஒருவர் வாதாட முடியாது. நம்பிக்கையுள்ள ஹிந்துவான நான் ஆலயத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப் படுவதால் அவமானத்திற்குள்ளாகிறேன் என்றுதான் புகார் அளிக்க முடியும். ஏனெனில் இது சமூக உரிமை. முன்னது மத நடைமுறை.
அடுத்தபடியாக, மக்கள் பிரிவுகளே அவரவர் சாதிக்கெனக் கோயில்களைக் கட்டிக் கொண்டதும் இவ்வாறான தூண்டுதலின் விளவாகவே இருக்கக் கூடும். சுய ஆர்வம், சுயாபிமானம் காரணமாகவே இக்கோயில்கள் உருவானமையால் இங்கு நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் சம்பத்தப்பட்ட சுய சாதியினராகவோ அல்லது அவர்களின் புரோகிதர்களான பிராமணர் களாகவோ இருக்கலாம். அவர்கள் யாராயினும் அவ்வாறான கோயில்களில் காலங் காலமாக இருந்து வரும் சமயம் சார்ந்த சம்பிரதாயம் அடிப்படை இயற்கை நீதியின்படியோ நியதியின்படியோ மாற்றப்படக் கூடியதல்ல. அவரவர் சாதிக்கான இத்தகைய சாதிக் கோயில்கள் ஆகம விதியின்படிக் கட்டப்படாதனவாகவே இருந்தாலுங் கூட அந்தந்தச் சாதியினரே மனமுவந்து ஏற்றுக் கொண்டாலன்றி அத்தகைய கோயில்களில் அரசாங்கம் தலையிட்டு சமய நடைமுறை களில் சட்டத்திருத்தமோ அவசரச் சட்டமோ கொண்டு வந்து மாற்றிவிட இயலாது. ஏனெனில் அர்ச்சகரின் பணி என்பது முழுக்க முழுக்க மதம் தொடர்பான சடங்காச்சாரச் செயல்பாடாகும். கோயில் நிர்வாகம், வரவு செலவு, துப்புரவு, ஊதியம் வழங்கல் முதலான சமூகம் சார்ந்த பணிகளுக்கும் அர்ச்சகருக்கும் தொடர்பில்லை. அரசாங்கம் கொண்டு வரக்கூடிய சட்டத் திருத்தங்களோ அவசரச் சட்டங்களோ சமயச் சடங்காச்சாரம் சார்ந்த அர்ச்சகர் நியமனம் பற்றி இயற்றப்பட்டதால் அவை செல்லத்தக்கதல்ல என்றுதான் அர்ச்சகர்கள் சார்பில் வழக்கு முன் வைக்கப்பட்டது. பிராமணர்கள்தான் அர்ச்சகராக முடியும் என்ற வாதம் அதில் முன்வைக்கப் படவில்லை. மத ரீதியிலான ஆகம விதிகள் மீறப்பட முடியாதவை, அரசியல் சாசனத்திற்கு முரணானவை என்றுதான் வழக்காடப்பட்டது. 1972 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்காடுகையில் அர்ச்சகர் பணிக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடியபோது உச்ச நீதி மன்றம் அதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டது.
மேலும் அர்ச்சகர் சங்கங்கள் சார்பில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதால் இது ஒரு தொழிற் சங்க வழக்காடுதலுக்கும் பொருத்தமான லட்சணத்திற்குரியதாகிறது. காலங்காலமாக அர்ச்சகர் என்கிற ஒரே பணியைச் செய்துவரும் எமக்கு வேறு பணி செய்வதற்கான அனுபவமோ திறமையோ இல்லை, இந்நிலையில் அர்ச்சகத் துறையில் இம்மாதிரி வேலை வாய்ப்பைப் பெருக்க வழி செய்வது காலப் போக்கில் எமது வேலை வாய்ப்பினைக் குறைத்துவிடும், இது எங்களின் ஜீவாதார உரிமையைத் தடுப்பதாகும் என அவர்கள் தொழிற் சங்க பாணியில் வாதாட வாய்ப்புண்டு. ஏனெனில் ஹிந்து அறநிலையச் சட்டம் 1959 க்கு 1972-ல் கருணாநிதியின் தி.மு.க. அரசு கொண்டு வந்த ஹிந்துக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்தலாகாது எனக் கோரி உச்ச நீதி மன்றத்தில் சேஷம்மாளும் மற்றவர்களும் தாக்கல் செய்த ரிட் மனுக்களை அர்ச்சகர்கள் பாரம்பரிய உரிமை கோர இயலாது என்றும் அவர்கள் மதத் தலைவர்களோ மடாதிபதிகளோ அல்ல, அவர்கள் வெறும் கோயில் வழிபாட்டு நடைமுறைகளைச் செய்யும் ஊழியர்களே எனவும் கூறித்தான் தள்ளுபடி செய்தது. கோயில் நிர்வாகத்தில் உள்ள எல்லாப் பணியாளர் களையும் போலத்தான் அர்ச்சகர்களும் எனத் தனது தீர்ப்பில் அது சொல்லிவிட்டது. ஆனால் ரிட் மனுக்கள்தாம் தள்ளுபடி செய்யப் பட்டனவேயன்றி வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பு வராமல் தாமதம் ஆவதற்கும் கருணாநிதி அரசுதான் காரணம். ஏனெனில் 1976 வரையிலும் பின்னர் 1989 லிலும் மீண்டும் 1996 லிலும் அடுத்து 2004 லிலும் தி மு க தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
1972 ரிட் மனு விசாரணையில் ஐந்து நீதிபதிகளின் அமர்வு கொண்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு மிக விரிவானதாக உள்ளது. முழுவதையும் எழுதிக் காட்டினால் கட்டுரை மிகவும் சலிப்பூடுவதாக மேலும் நீண்டு விடும். இப்போதே இது சலிப்பூட்டிவிட்டிருக்குமோ என்று அஞ்சுகிறேன். ஏனெனில் எகத்தாளமாகவும் காரசாரமாகவும் அதிகப் பிரசங்கித்தனமாக, எதிலும் சரியான புரிதல் இல்லாவிட்டாலும் தடாலடியாக எதையாவது சொல்லி திசை திருப்புவதாகவும் விதண்டா வாதம் செய்ய இதில் வாய்பு ஏதும் கண்டிபிடிப்பது எளிதல்லவே!
சேஷம்மாள் மற்றும் பலர் வழக்கில் அவர்கள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் வாதாடியவர்களில் பார்ஸிக்காரரான பால்கிவாலாவும் ஒருவர்! அவரை ஒருவளை பிராமண அடிவருடி என நியாயப் படுத்தினா லும் வியப்பில்லை! ஏனெனில் சுப்பிரமணிய சாமி இதில் வாதாடுவ திலிருந்தே அர்ச்சகர்கள் பிராமணர் என்பதால்தானே என்றுகூட குதர்க்க வாதம் செய்பவர்களுக்கு நம்மிடையே பஞ்சமேயில்லை! சுப்பிரமணிய சாமி என்கிற பார்ப்பனர் இரண்டு ஜீ வழக்கில் ராஜா மீது குற்றம் சுமத்தியது அவர் ஒரு தலித் என்பதல்தான் என்று விமர்சனம் செய்தவர்கள்தானே! இதுவும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்!
சேஷம்மாள் மற்றும் பலர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் யாவும் முக்கியமாக அர்ச்சகர் பணி பாரம்பரிய உரிமை என்ற முறையில் வாதிப்பதாகவே இருந்ததால்தான் அர்ச்சகர்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து (நானே பல பொது நல வழக்குகளிலும் நுகர்வோர் வழக்கிலும் வழக்கறிஞர் துணையின்றி ‘Party in Person’ (பார்ட்டி இன் பெர்ஸன்) என்ற தகுதியுடன் வாதாட அனுமதி பெற்று வழக்காடி வெற்றியும் பெற்றிருக்கிறேன்! நான் வழக்குரைஞன் அல்ல என்றாலும்! அதன் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகிறேன்). தொழிற் சங்கப் பிரச்சினை என்ற ரீதியில் இவ்வழக்கைக் கொண்டு போயிருக்கலாம்!
1972 –ன் ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் ஆகம விதிகள் என்கிற வலுவான அடிப்படை இதில் இருப்பதால், ஆகம விதி மீறல் ஏதும் நடைபெற்றால் அப்போது அதனை ஆட்சேபிக்கலாம் என ஒரு முட்டுக் கட்டையை அப்போதைய உச்ச நீதி மன்றம் போட்டுவிட்டதால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு கருணாநிதி அரசால் தீவிர நடவடிக்கை எடுக்க இயல வில்லை. நிலுவையில் உள்ள வழக்கில் திருப்திகரமாக ரிட்டன் ஆர்கியுமெண்ட் (எழுத்து மூல வாதம்) செய்தாக வேண்டுமே! என்னவென்று வாதாடுவது? மேலும் அப்போதைய நேரம் பலவாறான அரசியல் கொந்தளிப்புகள் இருந்த கால கட்டம். ஒருபுறம் எம் ஜி ஆர் எதிர்ப்பு, இந்திரா காந்தியுடன் பகைமை, எம் ஜி ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதாலேயே ஏற்பட்ட பெரும் தலைவலி, நெருக்கடி நிலை எனப்பல சங்கடங்களில் பாவம், இந்த அர்ச்சகர் சமாசாரம் அவருக்கு மறந்தே போயிருக்கலாம். ஒருவேளை இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஹிந்துக்களின் மத சம்பந்தமான விஷயங்களில் வேறு தலையைக் கொடுத்து வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்று சிலர் கருணாநிதிக்கு ஆலோசனை கூறியிருக்கலாம். கொள்கையைவிடப் பதவியில் நாட்டம் மிக்க கருணாநிதியும் சட்டத் திருத்தத்தைக் கிடப்பில் போட்டிருக்கலாம்.
தமிழ் நாட்டில் கருணாநிதி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என்பதால் 2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஓர் அவசரச் சட்டமாகப் பிறப்பித்தார். இதை ஆட்சேபித்து சிவாசாரியார் சங்கமும் , அர்ச்சகர் சங்கமும் உச்ச நீதி மன்றம் சென்றதில் அந்த அவசரச் சட்டமும் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
முதலில் அவசரச் சட்டம் இயற்றும் அளவுக்கு இது ஒன்றும் தலை போகிற காரியம் அல்ல. பல்வேறு காரணங்களுக்காகப் பல்லாயிரம் பேர் வேலையின்றி வருஷக் கணக்கில் வேலையின்றித் திண்டாடுகையில் சில நூறுபேர் அர்ச்சகர் வேலைக்காக முதலில் ஓராண்டு பின்னர் இரண்டு ஆண்டுகள் பயிற்சி என்று பெறும் அளவுக்கு அப்படியொன்றும் நுணுக்கமான தொழிலை அவர்கள் கற்றுவிடவில்லை என்பதாலும் பொறியியற் கல்வி போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரம் பேரே வேலையின்றித் திண்டாடுகையில் இது பெரிதல்ல என்று சான்றோரான நீதிபதிகள் கருதியிருக்கலாம். மேலும் இன்றைய இளம் தலைமுறை அர்ச்சகர்களே அதில் வருமானம் போதாமல் பகுதி நேர வேலையாக மத சம்பந்தம் சிறிதுமில்லாத பணிகளில் ஈடுபடும் நிலையினையும் சான்றோரான நீதிபதிகள் எண்ணிப் பார்த்திருக்கலாம். அத்துடன் அவர்கள் இந்த மனுக்களை விசாரிக்கையில் இது ஆகம விதிகள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சினை; அவசரப்பட்டு இதில் முடிவு செய்யலாகாது எனக் கருதியே தமிழக அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறினர்.
தமிழ் நாட்டில் ஆகம விதிப்படி நடைபெறும் கோயில்கள் 3500-க்கும் அதிகமாக இருப்பதால் அங்குள்ள நிலைமைகளை யெல்லாம் விசாரித்துத் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போதிய அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுதான் மறு தேதி கேட்டுக் கொண்டது.
ஆக, கருணாநிதியின் தி.மு.க. அரசுதான் இவ்வழக்கில் தீர்ப்பு வராமல் கால தாமதம் செய்தது.
2011 மார்ச் மாதம் வரை காருணாநிதியின் ஆட்சிதான் தமிழ் நாட்டில் நடந்து வந்தது. அவசரச் சட்டத்தை முறைப்படுத்த வேண்டியுருப்பதால் உடனடியாக இவ்வழக்கில் தீர்ப்பு வந்தாக வேண்டும் என்று சட்டத் துறையை அவர் ஏன் துரிதப் படுத்தவில்லை?
பெரியாரின் உண்மைத் தொண்டனான நான் இதைச் செய்து முடிக்காவிட்டால் முதல்வராக இருந்தும் பயனில்லை எனச் சூளுரைத்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியவர் தமது தரப்புக் கடமைகளை ஆற்றவிடாமல் தடுத்தது எது?
சன் டிவியுடன் பங்காளிப் பிணக்கு கொண்டு போட்டித் தொலைக் காட்சியைத் தன் பெயரில் தொடங்குவதில் காட்டிய அவசரத்தை அவசரச் சட்டத்திற்குத் தீர்வு கிடைக்கச் செய்வதில் அவர் ஏன் காட்டியிருக்கக் கூடாது? மானாட மயிலாட பார்ப்பதில் செலவிட்ட நேரத்தை ஏன் இதில் செலவிட்டிருக்கக் கூடாது? எந்தப் பார்ப்பனன் அவரைக் கைபிடித்துத் தடுத்தான்? கனவிலும் பார்ப்பன சதி கண்டு திடுக்கிட்டுத் தூக்கம் கலையும் வீரமணியாவது கருணாநிதிக்குத் தார்க்குச்சி போட்டிருக்கலாமே!
இதெல்லாம் போகட்டும், அர்ச்சகர் விவகாரம் பற்றியெல்லாம் வெறும் ஆளான என்னிடம் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் கருணாநிதிக்கே ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்க எது தடுக்கிறது? 2006 ஆம் வருட அவசரச் சட்ட வழக்கில் தீர்ப்பு வருவதற்குக் காலதாமதம் ஆகிறதே அதற்கு யார் காரணம் என நேரடியாக பதில் சொல்லுமாறு அவரைக் கேட்பதுதானே?
ஆகம விதிகள் யாவும் பிற்காலத்தவையே. பழமையான கோவில்கள் மட்டுமே முற்றிலும் ஆகம விதிகளின் பிரகாரம் நடப்பதாகக் கொள்வது சரியாக இருக்கும். புதிது புதிதாகக் கட்டப்படும் கோயில்களில் பல ஆகம விதிகளின்படிக் கட்டப் பட்டிருக்குமானால் அங்கும் அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட சகல நடைமுறைகளும் ஆகம விதிகளின்படியே செயல்பட்டு வரவேண்டும். அவ்வாறின்றி பக்தியின் தூண்டுதலால் கட்டப்படும் வைதிக ஹிந்து ஆலயங்களில் அர்ச்சக நியமங்களை நன்கு அறிந்த நிலையும் அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும் உள்ள எவராயினும் அர்ச்சகராகலாம். உண்மையில் இவ்வாறான வைதிக ஹிந்து ஆலயங்கள் நிரம்ப இருக்கவே செய்கின்றன. அவற்றில் பிராமணரல்லாதாரும் அர்ச்சகராக உண்டு. உடனே எனக்கு நினைவு வருவது பண்டார சாதியினர்.
சாதிக் கோயில்களில் அந்தந்தச் சாதியினர்தான் அர்ச்சகராக முடியும். ஆனால் போலி கவுரவம் காரணமாக பிராமணர்களை அர்ச்சகர்களாக்கிக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்கிறது. மேலும் பிற சாதியினர் வேறு அலுவல்களில் ஈடுபட்டுப் பொருள் தேடுவதில் கவனமாக இருப்பதால் சும்மா இருக்கிற அய்யரைக் கூப்பிடு என்று பிராமணரை அர்ச்சகராக்கும் வழக்கம் சில இடங்களில் வந்துவிட்டது. பிராமணர் பூஜை செய்தால் கோவிலுக்கு சாந்நித்தியம் ஏற்படும் என்கிற தவறான எண்ணத்தாலும் சாதிக் கோயில்களில் பிராமணைரைத் தேடிப் பிடித்து அர்ச்சகராக்கும் நிலை உள்ளது.
குலம் என்பது ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் பெருகி, கொடிவழி தழைத்துப் பங்காளிகள் நிறைந்து அவர்களுக்குள் ஆயிரம் சச்சரவுகள் இருந்தாலும் பிற குலத்தாருடன் ஏதேனும் மோதல் வரும்போது சொந்தப் பிணக்குகளை விட்டுக் கொடுத்து ஒன்று சேர்ந்து கொள்வதுதான். ஒரே சாதியில் பல குலங்கள் உண்டு. ஒவ்வொரு குலக் கோயிலுக்கும் அந்தக் கோயில் அர்ச்சகராக அந்தக் குலத்தவர்தான் வரமுடியும். அவ்வாறு நியமிக்கப் படுபவரின் சந்ததியே பாரம்பரிய அர்ச்சக உரிமை பெறுகிறது. அந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாது போகையில் அதே குலம் சேர்ந்த அக்குடும்பத்தாரின் பங்காளிக்கு அர்ச்சக உரிமை கை மாறுகிறது. இதைத்தான் குல மரபில் பூசாரிகள் வருவதாகக் குறிப்பிட்டேன். தன வணிகரான நகரத்தார் ஒரே சாதியினராயினும் குல அடிப்படையில் தனித் தனிக் கோயிலை முன்வைத்துத் தமக்குள் பிரிவுகள் வைத்துள்ளனர். பிராமணர்களிலும் குலத்தின் அடிபடையில் பிரிவுகள் உண்டு.
மேலும் பறையர் சாதியைச் சேர்ந்தோரில் ஒரு பிரிவினரே வள்ளுவ குலத்தினர். மற்றபடி பறையர் சாதியினரே வள்ளுவர்கள் அல்ல. இது மற்ற சாதிகளுக்கும் பொருந்தும். இதையே பூசாரி குல மரபு எனக் குறிப்பிடுகிறேன். இதைப் பூசாரி சாதி எனக் கொள்ளலாகாது.
பறையர் சாதியில் வள்ளுவர் குலத்தினரே சுத்தமாக அருகிப் போனாலோ எந்த வள்ளுவராவது பூசாரியாக இருக்க மனமின்றி வேறு உத்தியோகம் தேடிப் போய்விட்டாலோ வேறு வழியின்றி சுத்த பத்தம் என்றெல்லாம் உள்ளவராகப் பார்த்து ஒருவரை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஊர்ப் பெரியவர்கள் விண்ணப்பித்துக் கொள்வார்கள். இவர் வள்ளுவராக ஏற்றம் பெறுவார். பின்னர் அவரது பரம்பரை பூசாரியாகத் தொடரும். இது தாழ்த்தப்பட்டவர்கள் அட்டவணைச் சலுகை பெற்றுப் பலவாறான வேலை வாய்ப்புகள் பெற்றதால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு முன் பட்டாளத்தில் ஏராளமாகச் சேர்ந்ததாலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஈர்ப்பால் மதம் மாறிப்போனதாலும் வள்ளுவ குலம் அருகிப் போனது. அதனால்தான் பறைச் சாதியினரே தம்மில் தகுதி வாய்ந்த ஒருவரை வள்ளுவராகத் தேர்ந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. நான் பல பறைச் சேரிக் குடிசைகளில் வசித்து, அவர்கள் தரும் உணவை உண்டு, அவர்களூடைய சமூகப் பழக்க வழக்கங்களை நெருக்கத்தில் பார்த்து விவரங்களைத் தெரிந்துகொண்டவன். சாமிக் கண்ணு என்ற நெருங்கிய நண்பர் சிதம்பரம் பறைச் சேரியில் எனக்கு உறுதுணையக இருந்தவர். அவரது குடிசையில்தான் நான் வசித்தேன்.
திருமாவளவனின் உறவினர் தடா பெரிய சாமி, எம் எல் ஏ வாக இருந்த நல்ல கவிஞரான ரவிக்குமார் இப்படிப் பலரும் என்மீது நெருங்கிய அன்பு பூண்டவர்கள். என் மீது பாசம் மிகுந்த பூங்கொடி என்கிற மார்கரெட் இன்று பெங்களூர் செயின்ட் பேட்ரிக் இண்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்டியூட்டில் பிரின்ஸிபாலாக இருக்கிறாள். இவள் மிகச் சிறு பெண்ணாகச் சாதாரண நிலையில் இருக்கையிலே அவளது சிதிலமான குடியிருப்பில் எனக்காக உணவு சமைத்தது மட்டுமின்றி ஒரே தட்டில் நானும் அவளுமாக உணவு உண்டும் இருக்கிறோம். இவ்வளவும் பதிவு செய்யக் காரணம் நேரடியாகக் கேட்டும் பார்த்தும் அறிந்த விவரங்களே நான் ஆவணப் படுத்துவனவற்றில் கூடுtதல்.
நிறுவனப்படுத்தப்பட்ட எந்த அமைப்பிலும் நான் இல்லை. எனவே விசுவ ஹிந்து பரிஷத்தை இவ்வாறு செயல் படுங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கிற உரிமை எனக்குக் கிடையாது. நான் சொன்னதெல்லாம் அர்ச்சகர் பயிற்சி பெற்றும் வேலை கிட்டாமல் சில இளைஞர்கள் சிரமப் படுகிறார்கள் என்றால் அவர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தை அணுகலாம் என்பதுதான். ஆகம விதிகளின் பிரகாரம் அமையாத வைதிகக் கோயில் களில் அர்ச்சகர் வேலையில் அவர்களை அமர்த்த விசுவ ஹிந்து பரிஷத் நண்பர்களிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் யார் யார் அப்படி இருக்கிறார்கள் என்று நானோ விசுவ ஹிந்து பரிஷதோ தேடிக் கொண்டு போக இயலாது. பிரச்சினை உள்ளவர்கள்தான் அணுக வேண்டும். அல்லது பிரச்சினை உள்ளது என்று அங்கலாய்ப்பவர்கள் வெறும் வாய் உபசாரம் செய்துகொண்டிராமல் முன்னெடுத்து உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆர் எஸ் எஸ் பேரியக்கம் பல்வேறு துணை அமைப்புகளைத் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலைத் திட்டத்தைக் கொடுத்துள்ளது. அதனிடம் திடீரென்று அர்ச்சகர் பணிக்கான பயிற்சி பெற்று வேலை யில்லாமல் இருப்பவர்களுக்கு அர்ச்சகர் வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்க முடியாது. இந்த அமைப்புகள் யாவும் பல நிலைகளில் கூடி விவாதித்து முன்னதாகச் செயல் திட்டமும் இலக்கும் நேர ஒழுங்கும் வகுத்துக் கொண்டு செயல்படுபவை. உடனே இதில் தலையிடுங்கள் என்று ஒரு புதிய வேலைத் திட்டத்தை அவர்கள் மீது திணிக்க இயலாது. முதலில் அவர்களை ஏதோ மடக்கிவிட்டோம் என்று நினைத்து அக மகிழ்ந்து கொண்டிருக்காமல் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் எவரையும் அணுகினால் பலன் கிட்டும். மேலும் இந்த விவகாரம் நீதி மன்ற நிலுவையில் உள்ளது. இதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியார் மீது பழி போடுவது அறியாமை மட்டுமல்ல, அப்பட்டமான துவேஷமும் ஆகும்.
இதில் இன்னொரு விஷயமும் முக்கியம். தற்போது 2006 அவசரச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை மேதகு மூன்று நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஆனால் 1972-க்கான உச்ச நீதி மன்ற வழக்கை விசாரித்து ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது ஐந்து அறிவார்ந்த நீதிபதிகள் அமர்ந்த முழு பெஞ்ச்சு. ஆகவே 2006 சம்பந்தமான வழக்கை முழு பெஞ்ச்சே விசாரித்துத் தீர்ப்பளிப்பதே நடைமுறை. அநேகமாக 2006 வழக்கு முழு பெஞ்ச்சுக்கு மாற்றபடும் நிலை வரக்கூடும்.
முடிவாக இது அர்ச்சகர் பணி உரிமை கோரும் வழக்காக அல்லாமல், கிட்டத் தட்ட வேலை நிரந்தரம் பெற்ற தொழிலாளர்கள் தற்காலிகத் தொழிலாளர் நியமனத்தை ஆட்சேபிக்கும் வழக்கைப் போல வடிவெடுக்க முகாந்திரம் உள்ளது.
ஏனெனில் 1972 சட்டத் திருத்தத்தை ஆட்சேபித்து ரிட் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் பணியில் பாரம்பரிய உரிமை கோர முடியாது, அவர்களும் எல்லா ஆலயப் பணியாளர்களையும்போல வெறும் ஊழியர்களே எனத் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் வேலை நியமனத்தில் ஆகம விதி மீறல் இருந்தால் அவர்கள் நீதி மன்றத்தை அணுக வாய்ப் புள்ளது என்றும் சொல்லியிருக்கிறது. இப்போதே ஏன் இந்த அச்சம் எனவும் கேட்டுள்ளது.
எனவேதான் இந்நிலையில் மூன்றாவது நபராக 2006 வழக்கில் நான் ஒரு எதிர் வக்காலத்து தாக்கல் செய்தால் இந்த வழக்கில் நான் தனிப்பட்ட முறையில் எந்த விதத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் என நீதிமன்றம் முதலில் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்பதால் அதை நான் நினைவூட்ட வில்லை. மாறாக எதிர் மனுதாரர் நான் ஒரு நம்பிக்கையுள்ள மத சடங்காராங்களை அனுசரிக்கும் ஹிந்து என்ற முறையில் எனக்கு இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளது என்று சொல்லி அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமைகளை முன்வைத்தால் இது முற்றிலும் சமய நடைமுறை, சமூக நடைமுறை அல்ல என்று எடுத்த எடுப்பிலேயே மனுவைத் தள்ளுபடி செய்துவிடும் என்று சொன்னேன்.
ஏனெனில் சமூகப் பிரச்சினையான வழிபாடு செய்வதற்காக ஆலயப் பிரவேசம் செய்வதும் சமயச் சடங்கின் பிரகாரம் அர்ச்சகர் பணி செய்யக் கருவறைக்குள் போவதும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்டோர் ஆலயம் வந்து வழிபாட்டில் பங்கேற்பதும் கோயில் கருவறையில் அர்ச்சகராகப் பூசைகள் செய்வதும் வெவ்வேறானவை. முன்னது சமூகப் பிரச்சினை, பின்னது சமயப் பிரச்சினை ஆகவே இதில் இறுதித் தீர்ப்பு வராமல் இந்த எதிர் மனுவை ஏற்க இயலாது என்று உச்ச நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துவிடும்! சட்டம் அறிந்தவர்கள் இவ்வாறுதான் எடுத்துக் காட்டுவார்கள்.
பல வழக்குகளில் நேரடியாகப் பங்கேற்றும், பல வழக்குகளைப் பற்றிய விரிவான பதிவுகளை ஆழ்ந்து படித்தும் பெற்ற அனுபவத்தின் அடிப்-படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறேன். எனது அனுமானத்தில் தவறு இருக்குமானால் சட்ட நிபுணர்கள் அதனைச் சுட்டிக் காட்டுவது எனக்கு மட்டுமின்றி இதில் ஈடுபாடுள்ள அனைவருக்குமே நன்மை பயக்கும்.

+++++

Series Navigationதமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்வேதனை – கலீல் கிப்ரான்