”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே அந்தச் சோறும், கூட்டும் அந்தப் பிச்சைக்காரனின் உடலினுள் தெம்பை ஏற்றி அவன் பேச்சுக்கு ஒரு புது சக்தி கொடுத்தது. ”மகராசியா வாழணும்மா”- அவளுடைய வாழ்க்கையே இவன் நாக்கில் இருப்பது போல்தான் வாழ்த்தும் கூறி விட்டான்.
அங்கங்கே சில முணுமுணுப்புகள், ”கண்டவன் காசு கரிக் கட்டையாய் போகுது” என்று, அக்கம் பக்கத்தார் சொல்லும் அளவுக்கு அது என்ன கண்டவன் சொத்தா? அவளது கணவன் சொத்தில் தானே வாரி வழங்குகிறாள்?
இப்படி நீங்கள் அந்தக் காலத்தில் நினைத்திருந்தால் அப்போதைய சட்டப்படி தவறுதான். இசக்கி அம்மாள் ஊரிலுள்ள அனைவருக்குமே அபிமானி. சிலருக்கு அவள் பாரியின் பரம்பரை, ஆனால் அவளது ஒரே ஒரு எதிரி கணவன் சண்முகப்பிள்ளையின் அக்கா மகன். அதாவது மருமகன் பதினான்கு வயது ரெங்கம் பிள்ளைதான். அவன் சண்முகம் பிள்ளையின் ஐம்பது ஏக்கர் நிலத்திற்கும் அடர்த்தியான தோப்பு ,வீடு யாவற்றிற்கும் வாரிசு ஆயிற்றே, ரெங்கம் பிள்ளை என்ற பெயருடைய எந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துவிடத் தோன்றும் அவளுக்கு. அத்தகைய உணர்ச்சியை அவன் அவளது மனத்தில் ஊன்றிவிட்டான். அவள் நெற்றியெல்லாம் ”சுரீர்! சுரீர்!” எனக் குத்தியது. சண்முகம் பிள்ளை நேற்று அவளது முடியைப் பிடித்து அடித்த அடிதான் இன்று அவளின் தலைவலிக்குக் காரணம். நாலு நாட்களுக்குப் பின்னால் நேற்றுதான் ரெங்கம் பிள்ளை மாமாவைப் பார்க்க வந்தான். தன் மருமகனைக் கண்டதுமே சண்முகம் பிள்ளை தலை கீழாய்த் துள்ளிக குதிப்பார். அவன் செய்யும் அசட்டையான காரியங்களையும் அசாத்தியமாகப் புகழ்வார். அப்படியிருக்க அவன் செய்யும் சிறிது பயனுள்ள காரியங்களுக்கு மகுடமே சூட்டி விடுவார். ஆனால் தன் சொந்த மகளைக் கண்டும் காணாமலும் வளர்த்து வந்தார்.
”ஏ இசக்கி! வயல்லே தண்ணி நிக்காண்ணு பார்த்துக் கிட்டு வர்றேன். மருமகப் பய வந்திருக்காமுல்லா! மொச்சைக் கொட்டையும் கடலைத் தீயலுமுன்னா அவனுக்கு உசிரு. பய மூக்கு முட்டச் சாப்பிடுவான். மொச்சைக் கொட்டைக் கடலைத் தீயலும், பயறுத் தொவையலும், முட்டையும் , முருங்கைக்காய் அவியலும் முக்கியம். கூட ரெண்டு மூணு வை!”, என இசக்கி அம்மாளிடம் கட்டளை இட்டு விடடு வயலுக்குச் சென்று விட்டார் மாமா.
கணவனின் கட்டளையில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது! பின்வாசலில் கழுவ இட்டிருந்த எச்சில் தட்டத்தை எடுத்தாள். முந்தைய நாள் பழைய கஞ்சியைத் தட்டு நிறைய விட்டாள். காளான் பூத்த அந்தக் கஞ்சியின் புளிச்ச வாடை உடலைக் குமட்டியது. சிறிது உப்பை அள்ளிப் போட்டு, ஒரு நார்த்தங்காத் துண்டையும் இட்டுத் திண்ணுலே” என மருமகனுக்குக் கட்டளை இட்டாள்.
அத்தையின் அமர்க்களத்தில் அத்தனையும் தின்று விட்டான். பின் அத்தையைக் காணாது தோட்டம் சென்று வாந்தியாகக் கொப்பளித்தும் விட்டான். மாமா மட்டும் அறிந்தால் இன்று அத்தையின் இடத்தில் அடுத்தவள் இருப்பாள்.
ரெங்கம் பிள்ளைக்குப் பசி வயிற்றைப் பிய்த்து எடுத்தது. ஆத்திரமாய் ஆற்றங்கரைக்கு ஓடினான். அரை அடி ஆழத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்தான். மாமாவின் தோப்பிற்குள் நுழைந்து தென்னை மரத்தில் ஏறிப்பத்துப் பதினைந்து இளநீரையும், விளையாத தேங்காய்களையும் பறித்து எறிந்தான். ஒரு ஓலையில் தேங்காய்களைக் கட்டி ஈஞ்சப் படப்பில் பத்திரமாக வைத்தான். ஆற்றங்கரையில் ஓலைக் குடிசையில் இருக்கும் இட்லியாச்சியிடம் சென்றான்.
”யாச்சி! கோரங்கால்லே கொஞ்சம் தேங்காயைப்பறிச்சுப் போட்டிருக்கேன். கொஞ்சம் கழிச்சு வருவேன். தேங்காயும், நெய்யும் நெறைய விட்டுத் தோசை சுட்டு வச்சிரு, என்னா?
கிழவிக்குப் பலத்த சந்தோஷம், ருசியுடன் சுட்டுக் கொடுக்கப் போகும் நான்கு தோசைகளுக்காகக் கிடைக்கப் போகும் பதினைந்து தேங்காய்களை எண்ணி, ஒத்தைப் பல்லிலும் அமர்க்களமாய்ச் சிரித்தாள்.
சண்முகம் பிள்ளை வயலுக்குச் சென்றால் குறைந்தது நான்குமணி நேரமாவது ஆகும் என இசக்கி அம்மாளுக்குத் தெரியும். சண்முகம் பிள்ளையின் கட்டளைப்படி தீயல் குழம்பும், பல வகையறாக்களும் வைத்து, தாயும், மகனும் மட்டும் சட்டமாகச் சாப்பிட்டார்கள். சண்முகம் பிள்ளைக்காகச் சாப்பாட்டையும், கூட்டு இருந்த தூக்கு வாளியையும் தனியாக எடுத்து, கைக்கு எட்டாத உயரமான கருப்பட்டி பந்தயத்தின் மேல் வைத்தாள். தெருவில் வாயாடி பண்ணிய இருவர் பேச்சில் ஈயாடிப் போனதிலிருந்து தன் பண்ணையார் கணவரின் வருகையை உணர்ந்தாள். வந்ததும் வராததுமாக, ”பய சாப்பிட்டானா?” என ஒரு கேள்வி கேட்டார்.
”நீங்க வருகுது வரை அவனைக் காக்க வைப்பேனா. அப்பதே அவன் மூக்கு முட்ட அடிச்சாச்சு” சமாளித்தாள்?
” லே! தீயக்குழம்பு எப்படிலே” மாமா கேட்டார்.
”படு ஷோரு மாமா”- நம்மால் வீட்டில் குழப்பம் எதற்கு? என சமாளித்தான். பசி குடலைப் புரட்டியது. இட்லியாச்சி ருசியாக நெய் தோசைச் சுடடு வைத்திருப்பாள். மாமாவைக் காணாது இட்லியாச்சி வீட்டிற்குச் செல்ல நினைத்தான். அப்போது மாமாவின் வார்த்தை தலையில் இடி இடித்தது போல் இருந்தது.
”லே! ஆற்றிலே தண்ணி துறந்து விட்டிருக்காம்லே! ஆத்துப் பக்கம் போகாதே!”
இட்லியாச்சியைப் பார்க்கணும்ண்ணா ஆற்றைக் கடக்கணுமே! வயிறு குமட்டிக் கொண்டிருந்தது. ஆத்திரத்தில் அவனுக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அடுக்களையைப் பார்த்தான். அத்தையைக் காணவில்லை, மேல் பலகை மீது ஏணியைச் சாய்த்தான். ஒவ்வொரு கம்புப படிகளிலும் கவனமாகக் காலூன்றி ஏறினான். தீயக்குழம்பையும் சோற்றையும் எடுத்தான். ஏணி சறுக, பானை உடைய டமார்…..டமார்…..என்ன சத்தம்?……என்ன சத்தம்?……
மாமாவின் கேள்விக்கு விடை தோன்றி விஷயத்தை அம்பலப்படுத்த, அத்தையின் தலைமுடி மாமாவின் கையில், ”உலுக் உலுக்கெனக்” குலுக்கிய குலுக்கலில்தான் அத்தைக்கு இன்று தலைவலி. ”புள்ளே! என் சொத்துக்குக் காரணவஸ்தனுக்கா இப்படித் துரோகம் பண்ணினே!” எனக் கூறி அத்தையின் உடம்பை மத்தளமாய் அடித்தார்.
மாமாவுக்கு அன்று ரொம்ப சீரியஸ், உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. எலும்பு புடைக்க ‘நரைமுடி’ சிலிர்த்திருந்தது. ஆனாலும் அவரது மீசை எலுமிச்சைப் பழத்தைக் குத்தி வைக்கும் அளவிற்குக் கூராக இருந்தது. இடை இடையே ”ரெங்கா! ரெங்கா!;;- என உறுமிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் மாமாவின் உடம்பைப் பார்த்து விட்டு ”முகத்திலே சாவுக்குள்ள ஐசுவரியம் வந்தாச்சு! ஒரு வாரம் தேறாது!” எனச் சொல்லி விட்டார். இதுதான் சமயமென இசக்கி அம்மாள் மருமகனைப் பற்றி நன்றாக ‘கோள்’ மூட்டினாள். விரல்களைத் தன் கண்களில் குத்திக் கண்ணீரைச் சுரக்க வைத்தாள். எப்படியும் சொத்து சட்டப்படி அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. எனினும் எப்படியாவது அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையாவது அபகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டாள்.
”ஆனாலும் இந்தப் பய என்னைப் பார்க்க வரல்லியே இசக்கி!”- மாமா.
”ஆமா! எத்தனை பேர் கிட்டே சொல்லி விட்டாச்சு! பாசம் இருந்தாத்தானே”-இசக்கி
”ஆமா! இந்தப் பயலுக்கு ஒரு காசு கொடுக்கக் கூடாது. ஏ இசக்கி, எனக்கு உறைப்பா ஏதாவது திங்கணும்ண்ணு இருக்கு! பாஞ்சாலியம்ம வீட்டில் போய்க் கொஞ்சம் கருக்கலிட்ட நெல்லிக்காய் வாங்கி வாயேன்! அவளோட கைராசி ரெம்ப ருசியா இருக்கும்”.
இசக்கிக்குத் தெரியாமல் சேமித்து வைத்த பணம் தலையில் பொட்டலமாய் இருந்தது. பாஞ்சாலியம்ம வீட்டிற்கு இசக்கி சென்று வர, கால்மணி நேரமாவது ஆகும். அதற்குள் அங்கிருந்த கம்பௌண்டரிடம் மருமகனைக் கூப்பிடச் சொல்லி அனுப்பினார். மருமகனும் பாசத்தோடு ஓடிவந்தான். அதற்குள் இசக்கியும் வந்து விட்டாள்.
மாமா அவசர அவசரமாக ”லேய்! என்னை நீ பார்க்க வரல்லியே! என் சொத்து மட்டும் உனக்குப் போரும் என்னா? ஒளிஞ்சி போ” எனக் கோபத்தில் திட்டுவது போல் பணப் பொட்டலத்தைக் காரியமாக அவனிடம் எறிந்தார். தன் பொறுப்பு முடிந்த திருப்தியில் மாமா கண்களை மூடிக் கொண்டார்.
ரெங்கன் ”மாமா” எனக் கதறினான். கணவனென்ற உறவு தூரப்பட்டது போல் ஏமாற்றத்தில் சண்முகம் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசக்கி.
குறிப்பு – திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரச குடும்பத்தில் ஆட்சிக்கு உரிமையுடையவர் மருமகன் முறையில் வருபவரே என்பது வரலாறு. அதே வழியில் திருவிதாங்கூரில் சில சாதியினரிடமும் தந்தையின் சொத்து மருமகனுக்குச் செல்ல வேண்டுமென்ற நியதி இருந்தது.
குமரி எஸ். நீலகண்டன்
- ரீங்கார வரவேற்புகள்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தூசி தட்டுதல்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- நகர் புகுதல்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- சாலைக் குதிரைகள்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- அரசியல் குருபெயர்ச்சி
- சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்
- முகபாவம்
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- அகம்!
- அரசியல்
- ஒரு பூ ஒரு வரம்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- யார்
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- நட்பு
- நம்பிக்கை
- இவைகள் !
- கை விடப்பட்ட திசைகள்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது