ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து

This entry is part 33 of 42 in the series 22 மே 2011

முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும்! 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது! விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] கதிரடி வாங்கினர்! ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது! மேலும் IAEA விபத்தின் விளைவு வீரியத்தைக் குறிப்பிடும் போது, தகுதிநிலை:4 [Level:4 Accident Category] என்ற பிரிவில் வகுத்தது. அந்த அளவுக் கோலின்படி டோகைமுரா விபத்தை வெளிமண்டலக் கதிர்த்தீண்டல் மிகுதியாகப் பரவாத, வெறும் கதிரடி விபத்து எனக் காட்டியது!

1986 இல் நேர்ந்த செர்நோபிள் பெரு வெடிப்புக்கும், 1979 இல் நிகழ்ந்த திரி மைல் தீவு விபத்துக்கும் அடுத்தபடி மூன்றாவதாகக் கருதப்படுகிறது, ஜப்பான் டோகை முராவில் விளைந்த கதிரடித் தீங்குகள்! விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர்! தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள்! ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர்! டோகைமுராவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன! வீதிகள், தெருக்கள் மறிக்கப் பட்டு வாகனங்கள் தடுக்கப் பட்டன! ரயில் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்த மாயின!

டோகைமுராவில் பூரணத் தொடரியக்க அபாயம் எவ்விதம் ஏற்பட்டது ?

டோகைமுரா டோக்கியோவிலிருந்து நேர் வடகிழக்கே சுமார் 87 மைல் தூரத்தில் உள்ளது. மிகச் சிறிய டோகைமுரா செறிவு யுரேனியத் தொழிற்கூடம் ஜப்பான் அணுஎரு மாற்றுக் கம்பெனிக்கு [Japan Nuclear Fuel Conversion Co.(JCO)] உரிமை யானது. அது சுமிடோமோ உலோகச் சுரங்கக் கம்பெனியின் [Sumitomo Metal Mining Co.] கிளை நிறுவகம். டோகைமுரா யுரேனியத் தொழிற் கூடம் அணுமின் நிலையங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவப்பட வில்லை. அல்லது பயிற்சி பெற்ற பணியாளர் பங்கு கொண்டு அணு எருவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வாணிபத் தொழிற் சாலையும் அன்று. ஆராய்ச்சி அணு உலைகளுக்கு மட்டும் வேண்டிய சிறிதளவு செறிவு [18.8%] யுரேனியத்தை அவ்வப்போது தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதால் சிறப்புத் திறமையோ அன்றி போதிய அணு விஞ்ஞான அறிவோ எதுவும் இல்லாத சாதாரண நபர்களே டோகைமுரா தொழிற்கூடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்!

ஆண்டுக்கு 3 டன் செறிவு யுரேனியம்235 [20% Enriched U235] தயாரிக்கும் மிகச் சிறிய டோகைமுரா தொழிற்கூடம் 1988 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. ஜப்பானின் ஏனைய செறிவு யுரேனியச் சாலைகள் யாவும் பாதுகாப்பான திரவ மற்ற ‘வரட்சி முறையைப் ‘ [Dry Process] பின்பற்றும் போது, டோகைமுரா மட்டும் அபாயம் மிகுந்த திரவம் பயன்படும் ‘ஈர முறையைக் ‘ [Wet Process] கையாள டிசைன் செய்யப் பட்டது! 1980 இல் கிடைத்த இயக்க லைஸென்ஸ் விதிப்படி டோகைமுரா ‘ஒரு சமயத்தில் 18.8% செறிவு யுரேனியம் 5.3 பவுண்டு கூடத்தில் உற்பத்தி செய்யலாம் ‘. அதற்கு மிகையான எடைச் செறிவு யுரேனியம் தயாரித்தால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ [Criticality Accident] நேர வாய்ப்புள்ள தென்று தடுக்கப் பட்டுள்ளது!

அணுஎரு மாற்றல் முறையில் யுரேனியம் ஆக்ஸைடு [U3 O8] திரவம் அடுத்து ஒரு திரவக் கலனில் நைட்டிரிக் அமில ரசாயத்துடன் கலந்து யுரேனில் நைட்ரேட் திரவமாக [Uranyl Nitrate Solution] மாறுகிறது. இறுதியில் திடவத் துணுக்குகள் ‘கீழ்த்தங்கு கொப்பரை ‘ [Precipitation Tank] அடியில் சேர்ந்தபின் திரவம் மட்டும் மேலே நிற்கும்.

அமில ரசாயனச் சேர்க்கையால் எழும் புறவீச்சு வெப்பத்தைத் [Exothermic Chemical Reaction] தணிக்க கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றிலும் நீரோடும் பைப்பு போர்வை போல் [Water Cooling Jacket] அமைக்கப் பட்டிருக்கும்.

அணுக்கருப் பூரணத் தொடரியக்க அபாயம் [Criticality Danger Event] நேராமல் தடுக்கக் கீழ்த்தங்கு கொப்பரையில் நுழையும் திரவத்தில் யுரேனியக் கலவை நிறை, கொள்ளளவு இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டு [Enriched Uranium Mass & Volume Limitation] குறிப்பிட்ட வரையரை அளவை மீறவே கூடாது! மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும்! அவ்விதம் திரவ அளவைக் கட்டுப்படுத்த கீழ்த்தங்கு கொப்பரைக்கு முன்பு ஓர் ‘இடைவிலக்குக் கிணறு ‘ [Buffer Column] அமைப்பாகி உள்ளது.

எதிர்பாராமல் யுரேனியம்235 நிறையோ, கொள்ளளவோ வரையரை மீறி பூரணத் தொடரியக்கம் நேர்ந்தால், அணுக்கரு இயக்கத்தைத் தடுப்பதற்கு ‘நியூட்ரான் விழுங்கிகள் ‘ [Neutron Absorbers] தயாராக அமைக்கப் பட வேண்டும்! அணுக்கரு இயக்கத்தால் எழும் வீரிய கதிர்வீச்சைக் குறைக்கக் கவசங்கள் [Radiation Shieldings], பணியாளிகளை எச்சரிக்கை செய்ய கதிர்வீச்சு மானிகள் [Radiation Monitors with Alarms] இருக்க வேண்டும். அவ்விதத் தடுப்பு ஏற்பாடுகள் இல்லா விட்டால், ‘அணுவியல் நெறியாட்சி ஆணையகம் ‘ [Nuclear Regulatory Authories] அந்தத் தொழிற்சாலைக்கு இயக்க லைஸென்ஸ் [Operating License] தராது.

ஜப்பானில் லைஸென்ஸ் பெறும் போது, எப்படியோ டோகைமுரா யுரேனியத் தொழிற்கூடம் தப்பி விட்டது! கூடத்தின் உள்ளே கதிர்வீச்சை எச்சரிக்கக் கூச்சல் ஒலி இருந்ததே தவிர, பாதுகாப்புக்கு வேறு நியூட்ரான் விழுங்கிகளோ அன்றிக் கதிர்க் கவசங்களோ எதுவும் வைக்கப் பட வில்லை!

போதிய விஞ்ஞான அறிவற்றுப் பணி செய்வோரும், எந்த வித மேற்பார்வையும் இன்றிப் பயங்கரமான செறிவு யுரேனிய திரவத்தைக் கையாண்டு கலன்களில் மாற்றி வந்தார்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோகைமுரா கூடத்தில், அணுவியல் நெறியாட்சி ஆணை யகத்தின் அனுமதியின்றி, திரவ மாற்று முறையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது! அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது! பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது! அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது! அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது! அவ்விதமே டோகைமுராவில் அன்று விபத்து தூண்டப் பட்டுப் பெருந் தீங்கு விளைந்தது!

மூன்று நபர்கள் அன்று வேலையை விரைவில் முடிக்க ஒரு வாளி அளவு ஊற்றுவதற்குப் பதிலாக ஏழு வாளி செறிவு யுரேனிய ஆக்ஸைடு திரவத்தைக் கொப்பரையில் கொட்டினார்கள்! ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது! இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது! மேற்பார் வையாளர் ஒருவர் அருகில் நின்று ஏழாவது வாளி திரவத்தை ஊற்றாமல் தடுத்திருந்தால் அன்று பயங்கர விபத்தே நேர்ந்திருக்காது!

செறிவு யுரேனியத் திரவச் சேர்க்கையால் பூரணத் தொடரியக்க விபத்து!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக ‘ஜோயோ வேகப் பெருக்கி ஆய்வு அணு உலைக்கு ‘ [JOYO Experimental Fast Breeder Reactor] வேண்டிய 18.8% யுரேனியம்235 அணு எருவைத் தயாரிக்க டோகைமுராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது! ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது! அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது! உடனே அணுக்கருப் பிளவுகளால் வெப்பமுடன் காமா, நியூட்ரான் கதிர்வீச்சுக்களும் வெளியேறின!

ஆயினும் கொப்பரையில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லை! அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின! யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது! திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது! அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின! கதிர்மானிகள் தொடர்ந்து கூச்சலிட்டன! தவறு செய்த மூன்று நபர்களும் உடனே ஓடிச் செல்லாமல் உள்ளே நின்று தொடர்ந்து கதிரடி பெற்றார்கள்! உள்ளே ஓடி வந்த மேலதிகாரிகளும் என்ன நிகழ்ந்து விட்டது என்று முதலில் அறியாமல் திகைத்து நின்று அவர்களும் கதிர்வீச்சில் தாக்கப் பட்டனர்!

கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றியுள்ள தணிப்பு நீர் ஓட்டத்தை நிறுத்தியதும் [Precipitation Tank Jacket water cooling] தொடரியக்கம் நின்றது. போர்வை நீரே வேக நியூட்ரான்களை மிதமாக்கி முதலில் யுரேனியத்தில் அணுக்கருப் பிளவுகள் ஆரம்பித்தன! அடுத்தும் தொடர்ந்தன! இயக்குநர் போர்வை நீரை நிறுத்தி, நியூட்ரான் விழுங்கியான போரிக் ஆஸிட் திரவத்தைக் [Boric Acid Solution] கொப்பரைத் திரவத்தில் கலந்ததும், பூரணத் தொடரியக்கம் நிரந்தரமாய் நின்றது. அடுத்து நியூட்ரான் துகள்களை நிறுத்திக் காமாக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்க கவசத் தகடுகள் [Radiation Shieldings] கொப்பரையைச் சுற்றிலும் வைக்கப் பட்டன! அப் பணிகளை வரிசையாக நின்று அடுத்தடுத்துச் செய்த 27 நபர்களும் கதிரடி சிறிதளவு பெற்றார்கள்.

விபத்தின் விளைவில் பணியாளர் பட்ட வீரிய கதிரடிகள்

IAEA இன் ‘அகில நாட்டு அணுக்கரு நிகழ்ச்சியின் தகுதிநிலை ‘ [International Nuclear Event Scale (INES)] விதிப்படி டோகைமுரோ விபத்து தகுதிநிலை:4 [Level:4] என்று தீர்மானம் ஆனது! தகுதிநிலை:4 என்றால் ‘அது ஓர் கதிரடி விபத்து, கதிர்த்தீண்டு விபத்தன்று [An Irradiation Accident, not a Contamination Accident] ‘ என்று மதிப்பீடு பெறும். செர்நோபிள் விபத்து தகுதிநிலை:1, திரி மைல் தீவு விபத்து தகுதிநிலை:3.

கொப்பரை அருகில் வேலை செய்த கூடத்தின் மூன்று பணியாளர் பேரளவு நேரடிக் கதிரடி [Severe Acute Dose] பெற்று ஜப்பான் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர்! 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின! அவரது குருதியில் வெள்ளைச் செல்கள் [White Blood Cells] எண்ணிக்கை பூஜிய அளவுக்குப் போய் விட்டது!

மூன்று மாதங்களில் அவர் மாண்டார்! அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார்! சாதாரணமாக 800 Rem கதிரடித் தாக்கல் மனிதரின் மரண அளவைக் குறிக்கிறது!

மற்றும் 119 பணியாளர் 100 மில்லி ரெம்முக்கும் மிகையாக [over 100 mRem] பெற்றதாக அறியப் படுகிறது. 56 பணியாளர் எதிர்பாராமல் 2.5 mRem கதிரடி வாங்கினர். பிறகு கீழ்த்தங்கு கொப்பரையைக் காலிசெய்த 21 நபர்கள் வரை யரைக்கு அதிகமான கதிரடியைப் பெற்றனர். அடுத்து புறத்தே வாழ்ந்த 436 நபர்களைச் சோதித்ததில் எவரும் வரையரைக்கு மிஞ்சிய கதிரடியை [5 mRem/year] வாங்கியதாக அறியப்பட வில்லை. கூடத்திற்கு அருகில் வெளியே இருந்த 7 பேர் 1.5 mRem கதிரடி பட்டதாகத் தெரிய வருகிறது.

விபத்து நிகழ்ந்த போது கூடத்தின் காற்றோட்ட ஏற்பாடுகளை நிறுத்த மறந்து விட்டதால், கட்டிடத்தின் உள்ளிருந்த ஐயோடின்-131 [Radioactive Iodine-131] கதிர்வீச்சுத் தீண்டிய வாயுக்கள் பல நாட்கள் வெளியே அனுப்பப் பட்டுப் பரவின. 4300 curie நோபிள் வாயுக்கள், 54 curie கதிர் ஐயோடின் வெளியேறி யிருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மணி நேரங்களுக்குப் பிறகு கூடத்துக்கு அருகில் [1150 அடி தூரத்திற்குள்] 39 வீடுகளில் வாழ்ந்த 161 மாந்தர் வேறு இடத்துக்குக் கடத்தப் பட்டனர். கவசங்களும், மணற் பைகளும் வைத்து கதிர்வீச்சுகளைக் குறைத்து இரண்டு நாட்கள் கடந்து, அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரப் பட்டனர்! விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர்! அந்தக் கட்டுப்பாடு அடுத்த நாள் நீக்கப் பட்டது. IAEA பூதள மண்ணையும், விளைந்த காய்கறிகளையும் சோதித்ததில் ஐயோடின்-131 கதிர்மூலகம் எதுவும் பாதுகாப்பளவை மீறியதாகக் காண வில்லை.

ஜப்பான் விபத்து போல் பாரத யுரேனியச் சுத்தீகரிப்புச் சாலைகளில் நிகழுமா ?

2000 ஆம் ஆண்டு ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணையகம் டோகை முராவின் இயக்க லைஸென்ஸை நிராகரித்தும் தொழிற்கூடம் மூடப்பட்டது! அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை! அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன! யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை! நியூட்ரான் பிறப்பதை விரைவில் கண்டு பிடித்து, நியூட்ரான் விழுங்கிகளை கண்ணிமைப் பொழுதில் கலத்தினுள் உட்செலுத்தும் சுய ஏற்பாடுகள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன!

ஜப்பான் தேச மின்னாற்றலில் 36 சதவீதம் 53 அணுமின் நிலையங்கள் பரிமாறும் அணு மின்சக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது! அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும்! டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே! டோகைமுரா விபத்துக்கு ஒரு காரணம், அணுவியல் தொழிற்கூடத்தில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி உளவி அறிந்து கட்டுப்படுத்த மேற் குறிப்பிட்ட பேரவை அதிகாரி ஒருவர் டோகைமுராவில் இல்லாமல் போனது!

டோகைமுராவில் நடந்தது ஜப்பானின் முதல் தீவிர விபத்து! 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது! ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை! பாரதத்தில் மூன்று யுரேனியக் கழிவுச் சுத்தீகரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே பூரணத் தொடரியக்க விபத்துகள் [Criticality Accident] எதுவும் இதுவரை ஏற்படாத வண்ணம் நன்கு பயிற்சி பெற்ற எஞ்சினியராலும், இயக்குநராலும் அவை வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆனால் மனிதத் தவறுகள், கவனக் கோளாறுகள், யந்திரப் பழுதுகள், முறையான பராமரிப்பின்மை, நெருங்கிய மேற்பார்வை யின்மை ஆகிய ஏதாவது ஒரு பிழையால் விபத்து நிகழ வழி பிறக்கலாம் என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியாது!

தகவல்:

1. Tokaimura Accident ‘s Third Anniversary By: Dr. Najmedin Meshkati [Sep 24, 2002], Los Angeles, California.

2. Tokaimura Criticality Accident, Nuclear Issues Briefing Paper #52 [June 2000]

3. The Tokaimura Accident: Nuclear Energy & Reactor Safety By: Michael E. Ryan, University of Buffalo, New York [October 2002].

4. The Tokaimura Accident www.joewien.de/tokaimura.htm

5. Nuclear Accident in Japan, Tokaimura Accident, The Energy Advocate

6. Japan’s Nuclear Criticality Accident at a Fuel Conversion Facility, Japan Atomic Industrial Forum, Inc ((Dec 9, 1999)

7. Safety of Nuclear Power Reactors (March 29, 2011)

8. Wikipedia – Tokaimura Nuclear Accident (May 5, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *