ஆனியன் தோசை

This entry is part 34 of 46 in the series 5 ஜூன் 2011

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.”

Global warming caused by increased industrial pollution; privatization of ‘public’ resources such as water; the clearing of land or marshes to make way for farmers trying to eke out more profits on the international markets or for multinational companies looking to build new factories.

http://yaleglobal.yale.edu/article_list/2?gclid=CMalr4yTkqkCFcZ56wodKG1Miw

வருடம் – 1980.

மே மாதம். காலை ஆறுமணி.

புதுப்பேட்டை புதிதாய் தெரிந்தது.

எப்போதும் என் ஊர் புதிதாக தான் எனக்குத் தெரியும்.

புதுப்பேட்டை – நகரமும் இல்லாத முழுவதும் கிராமென்றும் சொல்ல முடியாத ஒரு ஊர். பண்ரூட்டி க்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய கிராமம்.  பண்ரூட்டியிலிருந்து ஒரே ஒரு பஸ் காலை ஆறரை மணிக்கு எங்களூர் வழியாக சென்னைக்கு போகும்.

மெயின் ரோடில் இருக்கும் அக்பர் பாயின் ரைஸ்மில் தான் புதுபேட்டையின் கோயம்பேடு.

அங்கேதான் பஸ் ஏற வேண்டும்.

ரைஸ்மில் சுற்று சுவரில், கிருஷ்ணா டுரீங் டாக்கீஸில் புதிதாக திரையிடப்பட்டிருந்த  “ஏணிப்படிகள்’ படத்து போஸ்டரில் பாதி கிழிக்கப்பட்டிருந்தது.

அப்பாவும் நானும் பத்து நிமிடம் முன்னால் ரைஸ்மில் வாசலில் வந்து நின்று விட்டோம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு சென்னக்கு செல்கிறேன்.

ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில் அப்பாவின் நெருங்கிய நண்பர் ராமசாமி காரில் சென்னை போனார்.

அப்பாவின் கம்பெனியின் தலைமை அலுவலகம் சென்னையில்.

அதில் ஏதோ வேலை இருப்பதாக அப்பாவும் கிளம்ப, நானும் அழுது பிடித்து வெகேஷனுக்கு கிளம்பினேன்.

சரோஜி பெரியம்மாவீட்டில் தங்கினால் சென்னையை சுற்றி காட்டுவார்கள்.

நிறைய இடங்களை காட்டினார்கள். வள்ளுவர் கோட்டம், ஜூ, மியூசியம் இப்படி பல.

இப்போது பிளஸ் படிக்க சென்னை கிளம்புகிறேன்.

பத்தாம் வகுப்பில்- பள்ளியிலேயே இரண்டாம் ரேங்க்.

கணிதத்தில் பள்ளியிலேயே முதல். மிக சந்தோஷம்.

அதே பள்ளியில் படிக்க தான் எனக்கு ஆசை.

ஆனால் என் பள்ளியில் ஆங்கில மீடியம் கிடையாது.

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதாம்.

எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டப்படனுமாம்.

அதனால், சென்னை பயணம்.

அங்கே என் சகோதரிகள் இருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

அப்பாவுக்கு குடும்பத்தை சென்னைக்கு நகர்த்த ஆர்வம்.

அம்மாவும் தூபம் போட்டிருந்தாள்.

என்னை சென்னை பள்ளியில் சேர்த்துவிட்டு, சென்னைக்கு குடும்பத்தை கொண்டு செல்வதற்கு நிலைமையை ஆராயவும் அப்பாவின் இப்போதைய சென்னை பயணம்.

ஆனால் எனக்கு சென்னைக்கு மொத்தமாக குடியேற விருப்பமில்லை.

நாங்கள் இருந்த வீடு, தெரு, ஊர் எல்லாமே சந்தோஷ சுரங்கங்கள்.

எங்கள் வீடு ஒரு சொர்க்கம்.

நூறு தென்னை மரங்கள். பத்து மாமரங்கள். கொய்யா, மாதுளை, நார்த்தாய் .. இப்படி மரத்து பெயரை சொன்னால், அந்த மரம் இருக்கும். சந்தனமரம்,தேக்கு மரம் போன்ற காட்டு மரங்களை தவிர.

பஸ் வருகிறதா என்று, அப்பா வாயில் இருந்த வெற்றிலை சாற்றை, அருகிலிருந்த குப்பை தொட்டியிலில் துப்பிவிட்டு, எட்டி பாத்தார். மணி 6:20.

“கரெக்ட் டையத்துக்கு இன்னும் 10 நிமிஷம் இருக்கு. இவனுக எப்போ கரெக்ட் டையத்து வந்து கிழிச்சானுக?” – அப்பா முணுமுணுத்தார்.

“அப்பா.. நாம குடும்பத்தோட மெட்றாஸ் ஷிஃப்ட் ஆகணுமா?”

“வேற வழியில்லடா. நீ படிக்கணும். உன் அக்கா ரெண்டு பேரும் படிச்சு வேலைக்கு போகணும், இன்னும் ஒரு அக்காவையும் சேர்த்து மூணு பேருக்கு கல்யாணம்  செய்யணும். இங்க இருந்தால் ஒண்ணும் வேலைக்கு ஆகாது..” – அப்பா-  அந்த வயதில்- எனக்கு புரியாத நிதர்சனத்தில் பேசினார்.

மேலும் நிமிடங்கள் அமைதியாய் கழிந்தன. காய்கறிகடை பெருமாள் கடையைத் திறந்தப்படி கேட்டார்: “என்ன சாமி, பையனை பிளஸ் டூ சேக்க சென்னைக்கு போறீங்களா?”

“ஆமாம்ப்பா..”

பஸ் வந்தது- நிறைய காலியாக. பிரச்னை இல்லாமல் ஜன்னலோர சீட் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

“ரெண்டு மெட்றாஸ்.”- அப்பா டிக்கட்டை வாங்கி சட்டைப் பையில் பத்திரப்படுத்திக்  கொண்டார்.

பஸ் புதுப்பேட்டை எல்லையைத் தாண்டிய போது மணி 6:40.

அக்னி நட்சத்திரம் – சுட்டெரிக்க, வைகாசி மாத வைகறையில் உற்சாகமாய் பவனி வர ஆரம்பித்தான் சூரியன்.

விழுப்புரம் தாண்டியதும் நான் தூங்க ஆரம்பித்தேன்.

“வண்டி இங்கே பத்து நிமிஷம் நிக்கும். டிஃபன் சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம்” – நடத்துனர் உரக்க சொன்னதை கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

“எந்த ஊருப்பா? மெட்றாஸா?”

அப்பா தலையில் லேசாக தட்டி என்னை அமைதி படுத்தியப்படி

”இல்லடா மதுராந்தகம்.  சாப்பிட நிறுத்தியிருக்காங்க. ஏதாவது சாப்பிடறையா? மணி ஒன்பதரை ஆகப் போறது. பசிக்கும்..”- அன்பாக கேட்டார்.

எனக்கும் பசித்தது.

“சரிப்பா.”

ஹோட்டல் ஸ்ரீராம் சைவம்.- பெயர் பலகை புதுப்பேட்டை ‘ஸ்ரீராம் ஓட்டல்’ போர்ட்டை விட ஒன்றும் வித்தியாசமாக இல்லை. இத்தனைக்கும் மதுராந்தகம் சென்னைக்கு மிக அருகில். என்னுள் ஒரு கேலி நகைப்பு.

ஹோட்டலுக்குள் சென்று கைகளை கழுவிக் கொண்டு, சாப்பாட்டு மேஜை நாற்காலியில் அமர்ந்தோம். நால்வர் சாப்பிடலாம். நாங்கள் இருவர் அமர்ந்தோம்

“என்ன சார் வேணும்?” சர்வர் கேட்டார்.

“என்ன இருக்கு?” அப்பா.

சர்வர் ஒரு பெயர் பட்டியலை சொன்னார்.

அதில் ஒரு பெயர் எனக்கு வித்தியாசமாக இருந்தது.- ஆனியன் தோசை.

அது என்ன ஆனியன் தோசை?

தோசை தமிழ். ஆனியன் தமிழா இல்லை வேற என்ன பாஷை?

“என்னடா வேணும்?” அப்பா கேட்டார்.

“அது வந்து.. ஆனியன் தோசை..” தயங்கியப்படி சொன்னேன்.

“ரெண்டு ஆனியன் தோசை..”  சர்வரிடம் அப்பா.

சர்வர் நகர்ந்தார்.

“அப்பா..”

“என்னடா.. “ அப்பா சந்தேகமாக பார்த்தார்.

“தோசை சரி. அதென்ன ஆனியன் தோசை?”

அப்பா சிரித்தப்படி சொன்னார்:

”வெங்காய தோசை.. இங்லீஷ்ல ஆனியன்  தமிழ்ல வெங்காயம். புரியறதா?”

அப்பா புன்னகைத்தார்.

என்னப்பா எப்போதுமே எனக்கு ஹீரோதான். நல்ல அப்பா.

சரியாக இருபதாவது நிமிடத்தில் பஸ் சென்னையை நோக்கி புறப்பட்டது.

2011. 23 மே மாதம்.

கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் முடிந்து விட்டன நான் புதுப்பேட்டையிலிருந்து பிளஸ் டூ படிக்க புறப்பட்டு.

பிளஸ் டூ முடித்து பின்பு இளம் கலை, முதுகலை கணிதம்.

பிற்பாடு கணினியில் முதுகலை பட்டம். தனியார் கம்பெனியில் வேலை.

இடையே புகையிலை புற்றினால், 1999ல் அப்பா மரணம் என நாட்கள் இல்லை ஆண்டுகள் கரைந்தன.

இத்தனை வருடங்களும் நான் என் பள்ளித்தோழன் ஸ்ரீதருடன் தொடர்பில் இருந்தேன்.

அவன் வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்கள். பிளஸ்டூ அதே பள்ளியில் முடித்து, கடலூர்

அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முடித்து அதோடு திருமணம் முடித்து [எத்தனை முடித்து?] அதன் பின் அவன் குடும்ப பிஸினஸ்-நெசவுத் தொழிலில் புகுந்து இன்று சிறந்த, அவன் மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழில் அதிபர்களில் ஒருவனாக இருக்கிறான். அதோடு பொழுது போக்கிற்காக ரியல் எஸ்டேட் வியாபாரம் ஆரம்பித்தான்.

இப்போது ஜவுளி பிஸினஸை விட ரியல் எஸ்டேட் பிஸினஸில் அதிக லாபம்.கவனம்.

நான் பிறந்து, வளர்ந்து பத்தாம் வகுப்பு வரை படித்த வீட்டை மீண்டும் வாங்கும் ஆசையில் வருகிறேன்.

ஸ்ரீதருக்கு கூட நான் சொல்லவில்லை.

“என்னடா இது திடீர்னு புறப்பட்டு வரே. என்ன விஷயம்.?” குரலில் ஆச்சர்யம்.

“ஸர்ப்ரைஸ்டா. வந்து சொல்றேன்”.

 

 

சென்னையிலிருந்து,

“காலை ஆறு மணிக்கு வெயிலுக்கு முன்னாடி புறப்படுடா” அம்மா சொல்லிக் கிளம்பினேன்.

நல்ல அக்னி நட்சத்திர வெயிலில் புதுப்பேட்டையில் இறங்கினேன். மணி இரண்டு.

“வாடா…” ஸ்ரீதர் வரவேற்றான். அடிக்கடி வியாபார விஷயமாக சென்னை வந்தால்

சந்தித்துக் கொள்வோம். சில சமயங்களில் என் வீட்டிலேயே தங்கவும் செய்வான்.

“எப்படி டா இருக்கே”

“நான் நல்லா இருக்கேன். டிராவல் எப்படி. ஒரே வெக்கையா இருந்திருக்குமே.”

“ஆமாம்.”

“சரி வா வீட்டிற்கு போய் ரிலேக்ஸ் செய்த பிறகு பேசலாம்”

அவன் வீடு மெயின் ரோடிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும்.

கார் விஸ்தாரமான ஒரு பங்களாவின் முன் போய் நின்றது.

மரங்கள் இல்லாத வீடு. வெறும் கட்டிடம் மட்டுமே.

அவன் வீட்டு சென்ட்றலைஸ்ட் ஏசி இயந்திரத்தின் சப்தம் மட்டும் ரீங்காரமாக கேட்டது. தெருவில் எல்லா வீடுகளும் ஓடிழந்து ஒட்டிய வீடுகளாய்.

“எலந்த பயம்” –

தெருவின் அமைதியை கிழித்தப்படி ஒரு கிழவியின் குரல் இலந்தை பழம் விற்றது.

“என்னடா கிட்டத்தட்ட முப்பது வருஷம் கழிச்சு வந்திருக்கே… எதாவது மாற்றம் தெரியுதா?”

–              ஸ்ரீதர்.

“ம்.. ஏசி மெஷின் சப்தம் புதுசா இருக்கு. எலந்த பழம் இந்த நேரத்தில விக்கறது மாறல.அதோட பண்ரூட்டி ரயில்வே ஸ்டேஷன்ல சோழன் எக்ஸ்பிரஸ் இந்த நேரத்தில வந்து கிளம்பற சப்தமும் மாறல. இந்த தெருவுல உன் வீடு உட்பட ரெண்டு மூணு வீடுகள்தான் ஒட்டிய வீடுகள். மெட்றாஸ் டெரஸ் வீடுகள் இப்ப எல்லா வீடுகளும் ஒட்டிய கான்கிரீட் வீடுகளாக இருக்கு. என்ன முன்ன இருந்த மாதிரி நிறைய மரங்கள் இல்லே. மரங்கள் நிறைய குறைஞ்சிருக்கு.காட்டிடங்கள் நிறைய ஆகி யிருக்கு.. பார்த்த உடனே எனக்கு தோன்றது இதுதாண்டா. மற்றப்படி…இன்னும் இரண்டு நாளுக்கு இருப்பேன் இல்லே. அப்புறம் சொல்றேன்.”

ஒரு வறட்சி புன்னகையோடு நான் பேசுவதை கேட்டப்படி என் லக்கேஜை ஸ்ரீதர் சுமந்தப்படி வர, அவன் பங்களாவிற்குள் நுழைந்தோம்.

 

“இதுதாண்டா என் ஆசை. எனக்கும் நாப்பத்தஞ்சு ஆச்சு.  இன்னும் மிஞ்சிப் போனால் பத்து வருஷம் சம்பாதிக்கலாம்னு இருக்கேன். அதற்கு பிறகு, நான் பதினைந்து வயசு வரை வாழ்ந்த அந்த பொற்கால வாழ்க்கைக்கு திரும்பப் போக விருப்பம்”.

மெல்லியப் புன்னகையோடு ஸ்ரீதன் கேட்டான்: “ஓகே. உன் பிளான் என்ன?”

“எங்க ஃபேமலி வாழ்ந்த அந்த வீட்டை, திரும்ப அந்த மில் ஓனர் கிட்டேந்து வாங்கி ரீமாடல் செய்து வித் ஆல் மாடர்ன் அமெனிடீஸ்.. இங்க வந்து குடியேற ஆசை..”

“அந்த வீட்டையா..” ஸ்ரீதர் சற்றி இழுத்தான்.

பின் “உனக்கு ஏன் இந்த ஆசை. சென்னையிலே நல்ல செளகர்யமான இடத்திலே அத்தனை வசதிகளோட நல்ல மாளிகை மாதிரி ஒரு வீடு. அதை விட்டுட்டு. இங்க எதுக்கு நீ வந்து கஷ்டப்படணும்..”

“இது கஷ்டம் இல்லேடா. என் கனவு. “

“சரி உன் விருப்பம். நாளைக்கு அந்த வீடு இருக்கிற இடத்தைப் போய் பார்த்துட்டு  பிறகு என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். உன் ஆசையை கெடுப்பானேன். உன் ஆசை நிறைவேறினால் சரி” –

மிகவும் விட்டேத்தியாகப் பேசினான்.

அவனின் இந்த மாதிரியான வெளிப்பாடு எனக்கு வியப்பாக இருந்தது.

முகத்தில் சூரியன் குத்தினான்.

கிராமங்களில் எட்டு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்திருப்பது படு பாதக செயல்.

பதறியப்படி எழுந்திருந்தேன்.

டூத் பிரஷ்ஷை வாயில் வைத்தப்படி முதல் மாடியிலிருந்த பாரபட் சுவரில் சாய்ந்தவாரு தெருவை நோட்டம் விட்டேன்.

எதிர் வீட்டுப் பெண் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

கடைசி வீட்டிலும் அதே காட்சி.

பொதுவாக நான் பெண்களை அவ்வளவாக கவனிக்க மாட்டேன் அதுவும் இந்த வயதில்.

ஆனால் அந்த இரண்டு பெண்களிடமும் ஒரு விஷயம் என் கவனைத்தை ஈர்த்தது. இருவரும் நைட்டியில்.

கிராமங்கள் வளர்கின்றனா? இல்லை வீக்கமா?

“என்னடா சைட் அடிக்கிறையா?”- ஸ்ரீதர் சிரித்தப்படி வந்தான்.

“இந்த வயசுல சைட்? அடப் போடா..”

“பின்ன அந்த பொண்ணையே பார்த்துகிட்டிருக்கியே அதான் கேட்டேன்”

“அது இல்ல.. நான் பிறவியிலேயே ஹார்ட் பேஷண்ட் உனக்கு தெரியும். என்னையே எங்க வீட்ல காலைல 6 மணிக்கு அப்புறம் படுக்க விடமாட்டாங்க அந்த காலத்துலே. ஆறு மணிக்கு கிட்டத்தட்ட இந்த ஊரே குளிச்சு முடிச்சிடும். இப்போ என்னடான்ன மணி எட்டாகப் போகுது. இப்போதான் கோலம் போடறாங்க. அது சரி இவங்க வீட்ல இருக்கிறவங்க எப்போ வேலைக்கு போவாங்க? “

“ஏன் கேக்குறே..” என கேட்டவன் தெருவில் கண்ணை செலுத்தி, “அதோ பாரு அந்த பொண்ணு வேலைக்கு கிளம்பிட்டாள். அவள் வீட்டுக்காறன் ஆறு மணி ஷிஃப்ட். போயிருப்பான்.”

அந்த பேச்சை தொடர விரும்பாதவனாக,

“சரி அதை விடு. நீ குளிச்சு முடிச்சு டிஃபன் சாப்பிடு. நான் என் ஆஃபீஸ் போய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு வரறேன்”.

நான் பிறந்த தெருவினுள் நுழைந்த போது, மூச்சு திணறியது. ஆனந்தம். சந்தோஷம்.

தாயின் கருவறைக்குள் சிசு வாக நுழைவது போல ஒரு உணர்ச்சி.

‘என்னை பெற்றவள் ஒரு தாய் என்றால் என் வீடு இன்னும் ஒரு தாய்.

என்னை வளர்த்த இந்த தெருவும் ஒரு தாய் தானே.’ பைத்தியகாரத்தனமாக எண்ணங்கள் சிதறின.

“டேய் இதாண்டா உன் ஜன்ம ஸ்தலம்” – ஸ்ரீதர் வறண்ட குரலில் சொன்னான்.

‘நூறு தென்னை மரங்கள். பத்து மாமரங்கள். கொய்யா, மாதுளை, நார்த்தாய்.. அப்போவே பெரிசா இருக்குமே. இப்போ இன்னும் பெரிசா, பிரம்மாண்டமான டிரங்க்ஸோடா..’ மகிழ்ச்சியோடு நிமிர்ந்தவன் அந்த பிரம்மாண்டமான தட்டித் தடுப்புகளை கண்டு அதிர்ந்தேன்.

“என்னடா இது?”

“பெரிய வெளிநாட்டு கம்பெனிகாரன் அதாண்டா MNC வாங்கிட்டான். தோப்பை அழிச்சிட்டு ஃபெக்டரி கட்டப்போறானாம்..” – என் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியையும் வேதனையையும் புரிந்தவனாக ஸ்ரீதர் சொன்னான்.

“இந்த இடத்திலேயா. இது குடியிருப்பு பகுதியாச்சே..எல்லாம் மாறுது அந்தந்த காலகட்டதிற்கு எது வலியதோ அதையொட்டி எல்லாம் மாறுது.”

முணுமுணுப்பில், எனக்குள் எழுந்த ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும்,சோகத்தையும் விழுங்கியப்படி ஒரு நிமிடம் அந்த தட்டி தடுப்புகளை வேதனையோடுப் பார்த்தேன், நான் பிறந்த வீட்டிற்கு எதிரில் தெருவில் இருக்கும் புங்க மரத்தை பார்த்து சற்று வியந்தவனாக,

“புங்க மரத்தை அதுவும் தெருவுல இருக்கிற மரத்தை விட்டு வச்சிருக்காங்கலே..”

“இன்னும் கவர்ண்மெண்ட்ல இந்த தெருவுக்கு ரோடு போடல..” என்றான்.

அமைதியாக அவன் காரில் ஏறி அமர்ந்தேன்.             —by Ravi.Srikumar

 

Series Navigationவிசையின் பரவல்கருப்புக்கொடி
author

இரவி ஸ்ரீகுமார்

Similar Posts

2 Comments

  1. Avatar
    R.Ganesan says:

    Dear Mr.Ravi,

    I read your story. I adore on the decent and experienced tamil stories specially in this site. Really the feelings in your story I can’t believe… the same experiences I have had in my life!! Super. The way of your presentation also very fine. Keep it up and all the best.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *