எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் இக்கட்டுரை.
கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த ஒரு தாத்தாவின் வாழ்க்கை பற்றிய குறிப்பு இது. தாத்தாவின் பிரதான தொழில் கை வண்டியில் ”வெள்ள முறுக்கு” விற்பது. பெரும்பாலும் சின்ன வயதில் தாத்தாவின் வெள்ள முறுக்கு இல்லாமல் ஒரு நாள் முடிவடைவதே இல்லை. வெள்ள முறுக்கு என்பது வட்டமானது. ஒரே ஒரு பட்டையான வளையம் மட்டுமே கொண்டது. மாவு வற்றல் மாதிரி தான் இருக்கும். ஆனால், அதற்கு எப்படி வெள்ள முறுக்கு என்று பெயர் வந்தது தெரியவில்லை. எல்லோரும் ஊரில் அதை ”வெள்ள முறுக்கு” என்றும் தாத்தாவை “வெள்ள முறுக்குகாரர்” என்றும் தான் கூப்பிட்டார்கள். தாத்தாவை யாரும் பெயர் சொல்லி அழைத்ததாக நினைவில்லை. தாத்தாவின் பெயர் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒரு முறுக்கை தாத்தா 25 பைசாவிற்கு விற்பார். முறுக்கு மிகுந்த சுவையுடன் இருக்கும். கையில் ஐந்தாறு முறுக்குகளை கோர்த்து கொண்டு ஒன்று ஒன்றாக சாப்பிட எளிதாக இருக்கும்.
தாத்தா அதிகமாக பேச மாட்டார். பெரியவர்களிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் வியாபார நிமித்தம் பேசுவார். குழந்தைகளிடம் அதுவும் இல்லை. எப்போதும் ஒரு சோகமான
முகத்துடனேயே இருப்பார். எதையோ இழந்தவர் போல இருப்பார். அவர் கை வைத்த பனியன் தான் போடுவார். தாத்தா ஏன் சட்டை போடுவதே இல்லை என்பது தெரியவே இல்லை. தாத்தாவின் முறுக்கு வண்டி இல்லாத திருவிழாக்களை நினைத்தே பார்க்க முடியாது. விழா நடக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி இருப்பார். இச்சமயங்களில் தாத்தா தெரு தெருவாய் முறுக்கு கூவி விற்பது இல்லை. இரவு நேரங்களில் வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் நடக்கும் போது தாத்தாவிற்கு விற்பனை ஜோராக இருக்கும். வெள்ளிக்கிழமை வாரச்சந்தை தினத்திலும் தாத்தா தெருவில் விற்க மாட்டார். சந்தையில் காலையில் இருந்தே முறுக்கு விற்க தொடங்குவார். காசு போட தாத்தா தனியாக பெட்டி எதுவும் வைத்திருக்க மாட்டார். ஒரு சாக்குக்கு கீழே தான் போட்டு வைத்துக்கொள்வார். தாத்தா பிற தினங்களில் மாலையில் தான் முறுக்கு விற்க தொடங்குவார். வண்டியில் மண்ணெண்ணை சிம்னி விளக்கு வைத்திருப்பார்.
ஒரு நாள் காலையில் என் அப்பாவிடம் உடனே வெள்ள முறுக்கு வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தது நன்றாக நினைவுள்ளது. அப்பாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். நான் விடுவதாக இல்லை. சரி, என்று இருவரும் கிளம்பினோம். எனக்கு முறுக்கு சாப்பிட போகிறோம் என்பதை விட தாத்தாவின் வீட்டை பார்க்க போகிறோம் என்பதும் அதை விட தாத்தா எப்படி முறுக்கு தயார் செய்கிறார் என்பதை பார்க்க போகிறோம் என்பதும் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியது. தாத்தா காலையில் முறுக்கு சுடுவாரா இல்லை சாயங்காலம் சுடுவாரா என்ற சந்தேகம் கலந்த கவலையுடனே நடந்து சென்றேன். அப்பா எரிச்சலுடன் வந்தார்.
தாத்தா வீடு ஊருணியை ஒட்டி இருந்தது. கூரை வீடுதான். தாத்தா வெளியில் உட்கார்ந்து இருந்தார். எனக்கு ஒரே கவலையாக இருந்தது. வீட்டிற்குள் போகவே முடியாது போல இருக்கே என்று தோன்றியது. ஆனால், தாத்தா எங்களை உள்ளே வர சொன்னார். மொத்தமாக ஓர் அறை தான் இருந்தது. ஆனால், சுத்தமாக இருந்தது. பாட்டி தான் முறுக்கு சுட்டு கொண்டு இருந்தாள். பாட்டி தான் முறுக்கு சுடுவாள் என்ற விசயம் அப்போது தான் எனக்கு தெரிந்தது. பாட்டி வட்டமாக மாவை தட்டி வைத்துக் கொண்டாள். பின்பு, ஒரு பட்டை வளையமாக இருந்த அச்சை எடுத்து வட்டமாக தட்டி வைக்கப்பட்டிருந்த மாவின் மீது வைத்து அழுத்தினாள். சுற்றியும் நடுவிலும் இருந்த மாவை எடுத்துவிட்டாள். ஒரு சீரான பட்டை வளையம் உருவாகியது. இதே போல் 3 வளையங்களை உருவாக்கினாள். விறகு அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணையில் போட்டு வறுத்து எடுத்தாள். அப்பா முறுக்கு வாங்கினார். அன்று எனக்கு வழக்கத்தை விட முறுக்கு சூடாகவும் சுவையாகவும் இருந்தது. எனக்கு அங்கேயே இருக்க வேண்டும் போல இருந்தது.
தாத்தாவின் குழந்தைகளை வீட்டிற்குள் தேடினேன். யாரையும் காணவில்லை. பாட்டி என்னிடம் மிகுந்த வாஞ்சையுடன் இருந்தாள். பாட்டி அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் ”எங்களுக்கும் பேரன் இருந்தால் இந்த வயசு தான் இருக்கும்”. ஆனால். எஙகளுக்கு தான் குழந்தையே இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டாள். பாட்டியை பார்க்க பாவமாக இருந்தது. தாத்தாவிடம் எந்த சலனமும் இல்லை. தினமும் எனக்கு தாத்தா வீட்டிற்கு போய் முறுக்கு வாங்கி சாப்பிட வேண்டும் போல இருந்தது.
வயதாக வயதாக வாழ்க்கையில் வெவ்வேறு சுவாரசியங்கள் காத்திருந்தன. வேறு வேறு ஊர்களுக்கு படிப்பிற்காகவும் வேலை விசயமாகவும் சென்றதில் தாத்தாவின் மீதும் முறுக்கின் மீதும் ஈர்ப்பு குறைந்து போனது. ஒரு சந்தர்ப்பத்தில் முறுக்கு மறந்தே போனது.
வாழ்க்கை ஓட்டத்தில் 35 வயதுக்குப்பின் தான் பெரும்பாலானவர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சம நிலை ஏற்படுவது போல தெரிகிறது. வாழ்க்கைப் பாதையை திரும்பி பார்க்க முடிகிறது. ஆசுவாசப்படுத்தி கொள்ள முடிகிறது. ஆனால், தற்போது குறைந்த வயதிலேயே கணினி துறையில் நல்ல ஊதியம் பெற முடிகிறது. வாழ்க்கை சம நிலை சீக்கிரமே வந்து விடுகிறது. வாழ்வாதார தேடுதல் சீக்கிரமே நிறைவடைந்து விடுகிறது. நிறுவனம் விட்டு நிறுவனம் மாறினாலும் சம நிலை பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், வாழ்க்கைப் பாதையை திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? தெரியவில்லை.
இன்று சிறுவர்களுக்கு வெளி உலகை பற்றிய அறிமுகம் அதிகமாகிவிட்டது. இன்று ஊடகங்களின் வீச்சும் மிக மிக அதிகம். அன்று எனக்கு தெரிந்த ஒரே ஐஸ் குச்சி பால் ஐஸ்தான். இன்றைய வெண்ணிலா பிளேவர். இப்பொழுதெல்லாம் சிறிய ஊர்களில் கூட பேக்கரிகளும், ஐஸ்கிரீம் கடைகளும், பெப்சியும், கோக்கும் வந்து விட்டன. சிறுவர்கள் என்ன என்னவோ பிளேவர்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எந்த குழந்தை வெள்ள முறுக்குக்கு ஆசை பட போகிறது?.
இப்பொழுது தாத்தாவை பற்றி ஏதாவது யாருக்காவது தெரிகிறதா என்று ஊரில் விசாரித்தால் பெரும்பாலானவர்களுக்கு நினைவு இல்லை. நினைவு இருந்தவர்களுக்கும் தாத்தா என்ன ஆனார் என்று தெரியவில்லை. தாத்தாவை ஒரு பொருட்டாகவே யாரும் கருதவில்லை. எனக்கு கவலையாக இருந்தது. தாத்தா என்ன ஆனார்? பாட்டி என்ன ஆனார்? முறுக்கை வாங்க ஆள் இல்லாமல் வேறு வேலை ஏதும் செய்தாரா இல்லை பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு சென்றுருப்பாரா என்று யோசனையாக இருந்தது. தாத்தா கடைசிவரை ஆரோக்கியமாக இருந்தாரா? தெரிந்து கொள்ள இயலவில்லை.
எல்லா ஊரிலும் இது போல் ஆப்பக்கார அம்புஜம், புட்டு விற்ற சுப்பம்மா, குச்சி ஐஸ் விற்ற மாடசாமி எல்லாரும் இருந்து தான் இருப்பார்கள். இன்றும் இருக்கலாம். வெள்ள முறுக்கின் சுவை இன்னும் நாக்கில் இருந்து கொண்டே இருக்கிறது. என்னால் முடிந்தது மிக சாதரணன் வெள்ள முறுக்கு தாத்தாவை சாசுவதம் ஆக்கி விட்டேன். ஒரு வரலாறு முடிவு தெரியாமல் அரைகுறையாக எழுதப்பட்டு விட்டது
இக்கட்டுரையை படிப்பவர்கள் தாத்தாவை பெரும்பாலும் கருப்பு நிறமாகத்தான் அடையாளப் படுத்திக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். மாறாக தாத்தா சிவப்பு நிறத்துடன் இருந்தார். ”Face Book” – ஐ ஆரம்பித்த ”Mark Zuckerberg” இடம் வெள்ள முறுக்கு தாத்தாவை கண்டுபிடித்து தருமாறு சொல்லி இருக்கிறேன். அவரும் தினமும் புது புது நண்பர்களை அனுப்பி வைக்கிறார். இன்னும் தாத்தாவை கண்டு பிடித்து தரவில்லை. சரி. நீஙகள் யாரேனும் “Face Book”-ல் அல்லது வேறு எங்காவது வெள்ள முறுக்கு தாத்தாவை பார்க்க நேர்ந்தால் தயவு செய்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். சொல்ல மறந்துவிட்டேன். தாத்தா மீசை வைத்திருக்க மாட்டார்.
lena_an@yahoo.com
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்