ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்

This entry is part 32 of 46 in the series 19 ஜூன் 2011

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

 

முதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். இந்தக் குறைந்த பட்ச வன்முறையின் காரணமாக ஒரு பெண்மணியின் முதுகுத் தண்டுவடம் முறிந்து இனி வாழ்நாள் முழுவதும் இடுப்பிற்குக் கீழே உறுப்புகள் செயல் இழந்த நிலையில் பிறர் தயவில் நாட்களைக் கழிக்க வேண்டியதாகியிருக்கிறது.

 

நாட்டின் துரதிருஷ்டம் ப. சிதம்பரம் போன்ற ஒருவர் மத்திய உள்துறை என்னும் பொறுப்புமிக்க இருக்கை யில் உட்கார முடிகிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்ட பிறகு இவ்வாறான அனர்த்தங்கள் நிகழத்தான் செய்யும்.

 

பொதுவாக தில்லியின் நிலைமையே விசித்திரமானது தான். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பழியை மற்றவர் மீது போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள வசதியான நிர்வாக அமைப்பு. மத்திய ஆளுகைப் பிரதேசம் என்பதால் தனி துணை மாநிலத் தகுதி, ஆகையால் தனி சட்டமன்றம், தனி முதல்வர், அமைச்சர்கள். நகர நிர்வாகத்திற்கென ஒரு மாநகராட்சிக் கழகம். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் தலை நகரம் என்பதால் மத்திய ஆட்சியாளர்களின் தலையீடும் அத்து மீறல்களும் இருக்கும். யார் எதற்குப் பொறுப்பு என்று தெரியாமல் நாம் குழம்பும்போது அனைவருமே அதிகாரம் செய்வதில் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் எதாவது சிக்கல் என்றால் இது என் வேலை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். தில்லியில் ஒரு பத்திரிகைக்காரனாக நான் இருந்த நாட்கள் மிகக் குறைவே என்றாலும் இந்தக் குளறுபடிகளை அதிக அளவில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது சுமார் ஐம்பது ஆண்டுகளூக்கு முன்பிருந்த நிலைமை. இன்று நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது என்று யூகிக்க முடிகிறது.

 

ராம் லீலா மைதான போலீஸ் வன்முறை, ஊடகங் களில் இடைவிடாது பேசப்படவே மத்திய உள்துறை அமைச்சரே தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.  ஆனால் அவர் அளித்த சமாதானமே அவருக்கு ஜனநாயகம் என்றால் என்ன வென்றே தெரியாது என்பதை உறுதி செய்தது.

 

ராம் லீலா மைதானத்தில் கூடியது அனுமதி பெறப்படாத கூட்டம் என்று கூறினார், ஜனநாயம் தெரியாத உள்துறை அமைச்சர். அப்படிக் கூறி மக்கள் பலாத்காரமாக அங்கிருந்து அகற்றப்பட்டதை நியாயப் படுத்தினார்.

 

ராம் லீலா மைதானத்தில் அன்றிரவு முதியோர், பெண்கள் குழந்தைகள் என இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் விழித்திருந்த சமயம் கூட எவ்வித வன்முறையிலாவது இறங்க வேண்டும் என்கிற பிரக்ஞைகூட இன்றி பாபா ராம்தேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டும்தான்  இருந்தனர்.

 

போலீசாரின் அட்டகாசமான வருகையாலும், தடிகளால் தட்டி எழுப்பப்பட்டும் திடுக்கிட்டு எழுந்த மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்தனர். அதற்குள் வலுக்காட்டாயமாக அவர்களை மைதானத்திலிருந்து விரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கண்ணீர்ப் புகை உயர் அழுத்தத் தண்ணீர் வீச்சு என்றெல்லாம். இடையே பிரம்படியும் நடந்தது. மக்கள் சிதறி ஓடுகையில் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் ஒருவர் மீது பலர் விழுந்து வாரிக்கொண்டும் ஓட வேண்டியதாயிற்று.

 

நள்ளிரவில் மைதானத்திலிருந்து விரட்டப்படும் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் எங்கே போவார்கள் என்று போலீசாரோ , தில்லி நிர்வாகமோ, மத்திய உள்துறையோ கவலைப் பட வில்லை.

 

அனுமதி பெறாமல் கூடிய கூட்டம் என்பதே அவர்கள் அனைவரின் வாதமாக இருந்தது. ராம் தேவ் சார்பில் யோகாசனப் பயிற்சி என்று சொல்லித்தான் அனுமதி பெறப்பட்டதாம். ஆனால் அதை சத்தியாகிரகக் கூட்டமாக மாற்றிவிட்டார்களாம். அது பெரிய குற்றமாம். ஆனாலும் அங்கே கூடியவர்கள் சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டுப் பழகிய அமைதியான குடிமக்கள்தான். சமூக விரோதிகளோ, சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாச வேலைகளில் ஈடுபடும் போக்கிரிகளோ அல்லர். மேலும் கூட்டத்தை நெறிப் படுத்தவும் ஒழுங்குசெய்யவும் அங்கே பாபா ராம்தேவ் ஆசிரமத் தொண்டர்களும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அந்த மக்கள் வேளை கெட்ட வேளையில் மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டனர்.

 

முதலில் சில அடிப்படையான விஷயங்களை நம் காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இன்று நடப்பில் இருந்து வருகிற சட்டங்கள், குறிப்பாகக் குற்றவியல் சட்டங்கள் ஹிந்துஸ்தானம் ஒரு அந்நிய ஆதிக்கத்தில் காலனியாக இருந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டவை. ஒரு ஏகாதிபத்திய ஆட்சி தனக்குக் கீழ் அடக்கியாளப்படும் வேற்று மக்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள். ஒரு அந்நிய ஏகாதிபத்தியம் தனது காலனியின் மக்களை ஆள்வதற்கான கண்ணோட்டத் துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்தாம் அவை.

 

நியாயப்படி ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியேறிவிட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவு செய்த 1945-46 காலகட்டத்திலேயே அடுத்து ஆட்சி செய்ய உரிமை பாராட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை நடப்பில் உள்ள எல்லா சட்டங்களையும் பரிசீலனை செய்து ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குடியரசாக மாறப் போகிற நாட்டின் சட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய நிபுணர்கள் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்கு வர வேண்டும் என்று துடித்த காங்கிரசுக்கு நாடு பிளவு பட்டாலும்  பரவாயில்லை, நாற்காலியில் உட்காரத் தாமதம் ஆகக் கூடாது என்பதில்தான் கவனம் இருத்ததேயன்றி அதில் எல்லாம் புத்தி போகவில்லை.

 

1950-ல் ஒரு குடியரசாக ஹிந்துஸ்தானம் அறிவிக்கப் பட்ட பிறகாவது ஒரு குடியரசு நாட்டுக்குக் குற்றவியில் உள்ளிட்ட எல்லாச் சட்டங்களும் எப்படி இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து இருக்கும் சட்டங்களில் தக்க மாற்றம் செய்வதோ புதிதாகச் சட்டங்கள் இயற்றுவதோ மேற்கொள்ளப்பட்டிருக்க்க வேண்டும். ஆனால் இது பற்றிய பிரக்ஞையே இன்றி அரசியல் சாசனம் ஒன்றை இயற்றினால் போதும் என்று இருந்துவிட்டார்கள். இந்த சாசனமுங்கூட அப்போதிருந்த சூழலின் தாக்கத்துடன்தான்  உருவாக்கப்பட்டது.

 

மத அடிப்படையில் முகமதியர்களுக்கான தனி நாடாக பாகிஸ்தான் என்கிற துவேஷத்தில் பிறந்த செயற்கை தேசம் ஹிந்துஸ்தானத்தைக் கூறு போட்டிருந்ததால் மத அடிப்படையில் பாகிஸ்தான் தோன்றியிருந்தாலும் அதற்காக ஹிந்துஸ்தானத்தில் உள்ள முகமதியர் களுக்கு இனி  தங்களுடைய எதிர்காலம் என்ன வாகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நினைப்பில் அரசியல் சாசனம் உருவாக்கபட்டமை யால்தான் சிறுபான்மையினருக்கு வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சலுகைகளும் உரிமைகளும் சாசனத்தில் இடம் பெற்றன.

 

நமது அரசியல் சாசனம் அவசரக் கோலத்தில் இயற்றப்பட்டதால்தான் அறுபது ஆண்டுளுக்குள் அதில் கணக்கு வழக்கில்லாமல் திருத்தங்கள் செய்ய நேர்ந்துள்ளது.

 

அரசியல் சாசனம் என்பது அகராதிபோல் தலையணயாக இருக்கக் கூடாது. நாலைந்து பக்கங்களுக்குள் அடிப்படை யான சில விஷயங்களைப் பேசிவிட்டு முற்றுப்பெற வேண்டும். அப்போதுதான் அதன் மீது உண்மையான மரியாதை இருக்கும். காலகாலத்திற்கும் அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். காலப்போக்கில் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங்களூக்கு ஏற்ப நிலைகளுக்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றி வந்தால் போதுமானது. அப்போது அரசியல் சாசனத்தைக் கூண்டில் ஏற்ற வேண்டிய நிலைமை வராது.

இப்பொழுது ஏதேனும் சட்டமியற்றப்படும்போது அதனால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் உடனே நீதி மன்றத்திற்குப்போய் வலுவான துணைக்கு அரசியல் சாசனத்தை சாட்சிக் கூண்டில் ஏற்ற முடிவதற்குக் காரணமே அது தேவையில்லாமல் பல விஷயங்களை யும் பேசுவதுதான்.

 

எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை எவ்வாறிருக்கும் என்ற முன்யோசனையோ தொலை நோக்குப் பார்வையோ இன்றி இயற்றப்பட்ட, அப்போதிருந்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சாசனம் காலாவதி யாகி விட்டது. இதில் மேலும் மேலும் திருத்தங்களைச் சேர்த்து ஊதிப் பெருக்கிக்கொண்டிராமல் மொத்தத்தை யும் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய மாறியுள்ள சூழலையும் எதிர்காலத்தில் நிலைமைகள் எவ்வாறு இருக்குமென்பதை இன்றுள்ள நிலையின் அடிப்படை யில் கணக்கிட்டும் முற்றிலும் புதியதாக ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்காவிட்டால் நமது நாட்டிற்கு விமோசனம் இல்லை.

 

இப்பொழுதுள்ள சாசனம் குடியரசின் இலக்கணப்படி வழிகாட்டும் நெறியின் கீழ் சில அடிப்படை உரிமை களை வழங்கியுள்ளது. இதில் உறுதி செய்யப்படுள்ள பேச்சுரிமையும் எழுத்துரிமையும் முக்கியம். நமது இறையாண்மைக்குக்கும் சமூக நலனுக்கும் குந்தகம் விளைவிக்காத, நமது நாட்டின் நலனுக்கு விரோதமாக வேற்று நாட்டுக்குச் சாதகமாக இந்த உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யலாகாது என்பதையும் வலியுறுத்தினால் போதுமானது.

 

அரசியல் சாசனத்தைப் புதிதாக இயற்றுவதுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது நலனுக்காக இயற்றிய குற்றவியல் சட்டங்களையும் பரிசீலனை செய்து தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும்.

 

உதாரணமாக 144-வது விதி என்கிற ஊரடங்குச் சட்டம் மக்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்று கூட இடமளிக்கக் கூடாது எனபதற்காகவே ஆங்கிலலேய ஏகாதிபத்தியம் இயற்றியது. அதேபோல் எல்லாவற்றுக்கும் காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற நிபந்தனையும் ஏகாதிபத்தியம் இயற்றியதுதான். இவை ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில்தான் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்குப் பொருந்தாத தாகவே இருக்கும்.

 

ஒரு மக்களாட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். ஆட்சி நிர்வாகப் பொறுப்பை அவர்கள் அவ்வப்போது ஒரு குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தக் குழுவின் செயலாற்றும் முறையைக் கவனித்து தொடர்ந்து அதனிடம் பொறுப்பை ஒப்படைத்தோ அல்லது வேறு குழுவிடம் பொறுப்பை மாற்றியோ அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆக இவ்வாறு பொறுப்பை மக்களாகிய எஜமானர்கள் மாற்றுவதால் பொறுப்பை ஏற்கும் சேவகர்களான குழு தன்னை எஜமானர்களாக நினைத்துக் கொள்ளத் தொடங்கி, தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமை கொண்டாடி அதிகாரம் செலுத்தத் தொடங்குவது மக்களாட்சிக்கு முரணானது. பொறுப்பை ஏற்று நிர்வாகம் செய்து நாட்டை நடத்திச் செல்வதால் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே அது எதிர்பார்க்க முடியும்.

 

நமது நாட்டில் தேர்தலின்போது மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள்தான் எஜமானர்கள் என்கிற நினைப்பு வருகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிந்த சூட்டோடு சூடாக அது மறந்து போகிறது. பொறுப்பை ஏற்கும் குழுவும் சரி, அதனைக் கண்காணிக்க வேண்டிய மாற்றுக் குழுவும் சரி, தங்களை எஜமானர்களாகக் கருதிக்கொள்ளத் தொடங்கி விடுகின்றன. இது மக்களாட்சிக்கு விரோதமனது.

 

ஒரு மக்களாட்சியில் மக்கள் அமைதியாகத் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக பொது இடத்தில் கூடுவதற்கு எவரிடமும் அனுமதி பெறத் தேவை யில்லை. அவ்வாறு கூடப் போவதாக முன்கூட்டித் தெரிவித்துவிட்டால் போதுமானது. தேவைப்பட்டால் தங்களூக்குக் காவல் துறையின் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் எஜமானர்கள் திரண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் சட்டம் ஒழுங்கு பராமரிப்பாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக.

 

மக்கள்  எவரின் இயல்பு வாழ்க்கைக்குக்கும்  குந்தகம் ஏற்படாதவரை, பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காதவரை, வன்முறையில் இறங்காதவரை அவர்களின் கூட்டத்திற்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது காவல் துறையின் கடமை. ஏனென்றால் காவல் துறை என்பது மக்கள் நியமித்த சேவகர்களின் நிர்வாகத்தில் செயல்படுவது. எனவே மக்கள்தான் அதன் நிஜமான எஜமானர்கள். காவல் துறை மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய துறை. மற்ற துறைகளும் இவ்வாறே.

 

இந்த நியாயமான மக்களாட்சி முறையை நன்கு அறிந்திருந்ததால்தான் ஜயப் பிரகாஷ் நாராயண் போலீசார் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதை தேச விரோதம் என்று இந்திரா காந்தி சொன்னார்.

மக்கள் என்று குறிப்பிடும்போது அது பெரும்பான்மை யான, அமைதியை விரும்பும், வம்பு தும்புகளுக்குப் போகாத, போக விரும்பாத பொது மக்களையே அது குறிக்கும். நிலைமை எல்லை மீறிப் போனாலன்றி அவர்கள் தெருவில் இறங்கிக் குரல் கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் அமைதியான முறையில் மக்கள் தங்கள் கருத்தை வெளியிடும்போது அவர்களை வன்முறைக்குத் தூண்டுவது பொறுப்பற்ற காவல் துறை யினரின் செய்கைதான்.

 

எனக்குத் தெரிந்து மக்களாட்சித் தத்துவத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தவர் அண்ணா அவர்கள் தான். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அண்ணா அவர்கள் துறைச் செயலர்களை மட்டுமின்றி அடிநிலை அதிகாரிகளைக் கூடத் தயக்கமின்றி அழைத்துப் பேசுவார்கள். ஒரு கோப்பை நீங்கள் எடுத்துப் புரட்டும்போது உங்களுக்கு அதில் ஏதோ வொரு அவசரத் தீர்வுக்காகக் காத்திருக்கும் ஒரு மனிதரின்  முகம் தெரிய வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொல்வார்கள்.

 

அண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே போக்குவரத்து துறைத் தொழிலாளர் களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் நிகழ்ந்த போது மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேடிச் சென்று அவர்களை சமாதானப் படுத்தினார்கள். இங்கு வர ஏன் இவ்வளவு தாமதம் என்று மாணவர்கள் அதட்டலாகக் கேட்டபோது போக்குவரத்துத் தொழிலாளர் கள் பஸ்களை சாலையில் சீட்டுக் கட்டை ஜிக் ஜாகாக நிறுத்தி வைத்துவிட்டதால் வர முடியாமல் போய்விட்டது என்று ஓரு குழந்தையைப் போல் சமாதானம் சொன்னார்கள். அண்ணாவுக்கு அன்று உடம்பு வேறு சுகமில்லாமல் இருந்தது எனக்குத் தெரியும். அண்ணாவுக்குத் தொண்டை வறண்டு குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்கள். ஆத்திரம் அடங்கியிராத மாணவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட மறுத்தார்கள். எனக்கு ரத்தம் கொதித்தது. மிகவும் சிரமப்பட்டு எனது உணர்வை அடக்கிக் கொண்டேன்.

 

அண்ணா அவர்கள் மக்களாட்சி என்றால் என்ன என்பதை மிகச் சரியாக அறிந்திருந்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

 

இன்றைக்கு உள்ள முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் மக்களின் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்பதற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பதே பெருந்தன்மையான செயல் என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள்.

 

ராம் லீலா சம்பவம் எனக்கு இன்னொரு சம்பவத்தையும் நினைவுறுத்தியது.

 

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை செயல் படுத்துவதற்காக கர்நாடகக் காவல் துறை கோஷ்டி கேரளத்தில் வசித்த குற்றவாளி அப்துல் நஸார் மதனியைக் கைது செய்யச் சென்றது. இந்தச் சம்பவம் நடந்து இன்னும் ஓர் ஆண்டுகூட ஆகவில்லை.  சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில்தான் நடந்தது.

 

ஒரு குற்றவாளியைக் கைது செய்ய கேரளக் காவல் துறையின் உதவியை கர்நாடகக் காவல் துறையினர் முறைப்படி கேட்டனர். பெயருக்கு கேரள காவல் துறையினர் அவர்களுடன் மதனி இருக்கும் இடம் சென்றனர். ஆனால் அவர்களால் அந்த இடத்தை நெருங்கவும் இயலவில்லை. மதனி கைது செய்யப் படுவதைத் தடுக்க ஏராளமான கூட்டம் அங்கு கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தை மீறி உள்ளே செல்ல காவல் துறையினரால் இயலவில்லை. காவல் துறையினர் தங்கள் கடமையைச் செய்யவிடுமாறு மன்றாடியும் கூட்டம் அதற்கு இணங்க வில்லை.

 

உயர் நீதி மன்றத்தின் உத்தரவுப்படி ஒரு குற்றவாளி யைக் கைது செய்து அழைத்துப் போக வந்த காவல் துறையை உள்ளே நுழைய விடாமல் ஒரு கூட்டம் தடுக்குமானால் நிச்சயமாக அது சமூக விரோதக் கும்பல்தான். நியாயப்படி அதைக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகை வெடித்தும் பிரம்படி கொடுத்தும் கலைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. கையைப் பிசைந்து கொண்டு காத்திருந்தார்கள். எட்டுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு அன்றைய கேரள இடது கம்யூனிஸ்ட் தலமையிலான கூட்டணி ஆட்சி கெஞ்சிக் கூத்தாடி தான் கைது செய்யப்படுவதற்கு மதனியிடம் ஒப்புதல் பெற்றது. அங்கே உள்ள மாவட்ட மாஜிஸ்தி ரேட்டிடந்தான் சரணடைவேன் என்று மதனி நிபந்தனை விதித்தார். அதற்குக் கேரள அரசும் கர்நாடகக் காவல் துறையும் ஒப்புக்கொண்டன. மதனி மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் அவரை கர்நாடகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்டார். கர்நாடக காவல் துறையினர் ராஜ மரியாதையுடன் மதனியை அழைத்துச் சென்றனர்.

பல குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்ற வாளியைக் கைது செய்து அழைத்துச் செல்ல தடை செய்த கூட்டத்தைக் கலைக்க இயலும் என்ற போதிலும் ஒரு வார காலம் பொறுமையாகக் காத்திருந்து குற்றவாளி தானாக மனம் இரங்கி தன்னை ஒப்படைத்துக் கொண்ட பிறகு கர்நாடகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

 

அப்துல் நஸார் மதனி என்கிற தேச விரோதக் குற்றவாளியின் விஷயத்தில் இவ்வளவு பொறுமையாக இருந்ததும் காவல் துறைதான். தில்லியில் ராம் லீலா மைதானத்தில் நள்ளிரவில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி அடித்து விரட்டி யடித்ததும் காவல் துறைதான். அந்த நள்ளிரவு வேளை யில் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் எங்கே போவார்கள் என்கிற யோசனைகூட இல்லாமல் விரட்டியடித்த தில்லி காவல் துறையினர் யாருடைய ஏவலாளிகள்? மக்களிடம் அப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது?

 

மதனி விஷயத்தில் ஒருவிதமாகவும் பாபா ராம் தேவ் விஷயத்தில் வேறு விதமாகவும் நடந்துகொள்ளும் மனப் போக்கு நமது காவல் துறையினரிடமும் நிர்வாகத்தின ரிடமும் ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்?

 

என்ன நடக்கிறது எனது தேசத்தில்?

+++++

மலர்மன்னன்-


 

Series Navigationமுதுகில் பதிந்த முகம்கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
author

மலர்மன்னன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்ல ?

    பாரத தேசம் கொடூரமாக சபிக்கப்பட்டிருந்தாலன்றி இப்படிப்பட்ட தலைமையும் அதிகாரவர்க்கமும் அமையப்பெற்றிருக்காது. என்று விடிவுகாலமோ ?

  2. Avatar
    Srinivasan V says:

    மிகத் தெளிவான துல்லியமான நேர் கொண்ட பார்வை.
    என்ன நடக்கிறது நம் நாட்டிலே என்பது வேதனை அளிக்கிறது.
    கோர்வையாக எழுதி பகிர்ந்துகொண்டமைக்கு வந்தனமு.
    நன்றி
    வணங்கி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன். v

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *