இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….

This entry is part 34 of 46 in the series 19 ஜூன் 2011
தேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி,  மற்றும் பல கட்சிகளும் இணைந்து, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய இலங்கையின் மீதான பொருளாதார தடை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன ஒழிப்பையும் (ethnic cleansing), இனபடுகொலைகளையும் (genocide) 60 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்த்திவரும் இலங்கை அரசை கண்டித்தும், இவற்றையே தனது கொள்கைகளாக கொண்டு தமிழக மீனவர்களையும் கொல்ல துணிந்துவிட்ட சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளுக்கும்/கட்சிகளுக்கும் எதிராகவும் எடுக்கபட்ட  இந்த பொருளாதார தடை மிகவும் வரவேற்க்கதக்க ஒன்று. இந்த தீர்மானத்தின் போது, தீர்மானத்தை வரவேற்றுவிட்டு, வாக்களிக்காமல் திமுக வெளி நடப்பு செய்தது மிகவும் கண்டிக்க தக்கது. இத்தருணத்தில், ஈழ தமிழர்கள், இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்பதை எல்லோருக்கும் நினைவுறுத்துவது அரசியல் விழிப்புணர்வு உள்ள அனைவரது கடமையாகும்.
மக்கள் உரிமைகளை பற்றி மறந்து போன இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளுக்கும், வியாபார உலகின் நன்மைகளை குறிவைத்து மேற்கொள்ளபடும் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கும்,  ராஜிவ் காந்தியின் இழப்புக்கு பழி வாங்கும் நோக்கில், ஒரு இனபடுகொலைக்கும் உறுதுணையாக செயல்பட துணிந்துவிட்ட, காந்தியத்தை என்றோ மறந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் அதிமுக தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கும் இந்த தடை (economic sanctions on SriLanka) போற்ற தக்கதாகும்.
30 இலட்சம் (3 million) ஈழ தமிழர்கள் அகதிகளாகவும், 200,000 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளில் போரினால் இறந்து பட்டும், 50,000 தமிழர்கள் ஒரே வாரத்தில் கொன்று குவிக்கபட்டும், எந்த ஒரு கண்டிப்பையும் தடைகளையும் இலங்கையின் மீது தீவிரமாக செலுத்தாத உலக நாடுகள் சபைக்கும் கண்டணம் தெரிவிக்கும்  வகையில் உள்ளது இந்த பொருளாதார தடை தீர்மானம் என்று சொல்வது மிகையாகாது.  இலங்கையுடன் பொருளாதார, வியாபார, போர்த்தளவாட வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கும்  அந்நாட்டினை, (இந்தியா உட்பட) சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த தடை செல்லுபடியாகும். குறிப்பாக, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் கண்டனதிற்குரியதாகும். இந்தியா என்பது காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ, அல்லது ஒரு சில பத்திரிக்கை ஆசிரியர்களோ மட்டும் அல்ல. பல்வேறு தேசிய மொழி இனங்களின் ஜனநாயக கூட்டமைப்பாகும்.
தமிழகம் இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும்.  இந்தியாவில் தனது வியாபார, தொழில் நிறுவனங்களை நிறுவவும், முதலீடும் செய்ய விரும்பும் எந்த ஒரு அரசும், வணிக நிறுவனங்களும் இலங்கைகுறித்து தனது கொள்கைகளை மாற்றி, ஈழ தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இலங்கையை நிர்ப்பந்தம் செய்யாமல், இலங்கையுடன் உறவு கொள்ளுமாயின், அந்த நிறுவனங்களை இந்திய-தமிழகத்தில் தடை செய்யவும் மக்கள் குரல்கள் ஒலித்தோங்கும்.
Series Navigationகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”அரச மாளிகை ஊக்க மருத்துவர்
author

செந்தில் முத்துசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *