யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்

This entry is part 46 of 46 in the series 19 ஜூன் 2011

“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் இலக்கணம் என்றே விதித்துக் கொள்ளலாம், தற்காலப் படைப்பிலக்கியப் போக்கை அடையாளம் கண்டுகொள்வதற்கு. கதைக்குள்ளேயேயிருந்து பதமாகக் கதையை வெளியே எடுத்துப்போட வேண்டும். அது வாசக சுதந்திரத்திற்கு விசாலமான வெளியைக் கொடுத்து வாசகனை கெளரவிப்பதாக அமையும்.

 

இந்த விதியிலிருந்து வழுவாமல் ஒரு முயற்சியில் இறங்கி, அதில் கணிசமான வெற்றியையும் பெற்று விட்டிருக்கிறார்,

க. முத்துக்கிருஷ்ணன் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது, அவரது ‘யாதுமற்றவர்’ என்கிற நாவலைப் படித்து முடிக்கிற போது.

 

தமது கவிதைகளாலேயே பெரிதும் அறியப்படுகிறவர், முத்துக் கிருஷ்ணன். என்றோ எழுதப்பட்டிருப்பினும் இன்றைக்கும் அபாரமான வீச்சுடன் நினைவு அடுக்குகளில் இறங்கியிருக்கும் சில வரிகளைத் தம்முள் பொதிந்து கொண்டுள்ள கவிதைகளை இயற்றியிருப்பவர். முழுமையாக ஒரு கவிதையைச் சொல்வதற்குச் சட்டென ஞாபகம் இல்லாமல் போனாலும் சில கவிதைகளின் நறுக்குத் தெறித்தாற்போன்ற பல வரிகள் வார்த்தை பிசகாமல் நிரந்தரமாக நினைவில் தங்கியிருக்கச் செய்ய இயலுமானால் அதுவும் பாராட்டுக்குரியதுதானே!

 

மேலும், முழுக் கவிதையும் நினைவில் இருப்பதற்கு வாய்ப்பாடு மாதிரியாகவும் சூத்திரம் போலவும் அதில் சந்த அமைப்பு இருப்பது அவசியமாகிறது என்பதும், இன்றைய கவிதைகள் பலவும் அவ்வாறான பலத்தில் நிற்பவையல்ல என்பதும் தெரிந்த விஷயந்தான்.

 

கவிதையை கவனம் செய்யும் முத்துக்கிருஷ்ணன் நாவல் எழுதுகிறபோது அதுவும் கவிதைக்குரிய லட்சணங்களை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவது இயற்கை. யாதுமற்றவரின் அத்தியாயங்கள் பலவும் கவிதையின் சாயலுடன் அமைந்து விட்டிருப்பதற்கு இதுதான் காரணமாயிருக்கும். யாதுமற்றவர் என்கிற தலைப்பேகூட மிகவும் தீர்மானமாகப் பிரகடனம் செய்கிற  ஒரு கவிதையின் கடைசிவரி போன்ற முத்தாய்ப்பாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தைத் தொடங்குமுன்னும் கவிதை நயம் மிக்க கீதையின் வரிகளை அவர் பயன்படுத்திக் கொள்வதும் அவரது நாவலுக்குக் கவிதையின் ஆளுமையைத் தருகிறது. அதேபோல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இறுதி வரியாக அந்த அத்தியாயத்தின் பிரதான நபர் தனது பெயரை அறிமுகம் செய்துகொள்வது பாட்டாகப் பாடும் விடுகதையின் அவிழும் புதிராகச் சிரிப்பூட்டி விடை பெறுகிறது.

 

க.முத்துக்கிருஷ்ணன் பல ஆண்டுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் பணி செய்து ஓய்வு பெற்றிருப்பவர். அந்த நெடிய ஆண்டுகளின் பாதிப்புதான் யாதுமற்றவராகப் பட்டைப்பிலக்கிய நயத்துடன் பதிவாகியிருக்கிறது. செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளனாக எனக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துடன் உறவாடிய அனுபவம் கணிசமாகவே உண்டு. யாதுமற்றவர் நாவலைப் படிக்கிறபோது கழிந்துபோன அந்த நாட்களின் சம்பவங்களையும், அவற்றின் பிரதான நபர்களையும் திரும்பவும் எதிர்கொள்வதான உணர்வு வரவே செய்தது.

 

ஒரு நூற்றைம்பது பக்கங்கள் மட்டுமே நீளும் நாவலில் வெகு விரைவாகக் காட்சிகள் மாறுவதுபோல சம்பவங்களும் அவற்றில் பிரதான பாத்திரம் வகிக்கும் நபர்களும் வந்து போகையில் சிலரை மாத்திரமே மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பை முத்துக் கிருஷ்ணன் தருகிறார். இப்படிச் செய்வதாலேயே அந்தச் சிலரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என்கிற ஆதங்கத்தை வாசக மனதில் அவரால் ஏற்படுத்திவிட முடிகிறது. வெறும் அலுவலக நிகழ்வுகளாகச் சுருங்கிவிடாமல் தலைமைச் செயலகத்திற்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற பிரக்ஞையுடன் வாழ்க்கையின் பிற கூறுகளையும் பதிவு செய்வதாக விரிவடையும் அத்தியாயங்கள், யாக்கையின் வினைகளே வாழ்க்கை எனில் அதற்கு என்ன அர்த்தம் இருக்கக் கூடும் என ஆயாசம் கொள்ள வைக்கின்றன. நேர்மையான உழைப்பையே மூலதனமாக்கொண்டு அடித்தளத்திலிருந்து தொடங்கி உச்சத்திற்குச் செல்லும் அய்யாத்துரை அண்ணன் நாவலாசிரியரே சொல்கிற மாதிரி இன்னும் வயதான நிலையில்

அண்ணாச்சி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட போதிலும் உடன் பிறப்புகளின் குரூரம் அவரைக் குலைத்துப் போடுவதைப் பார்க்கிறபொழுது என்ன இருந்து என்ன என்கிற சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோலத்தான் தகப்பன் சாமிநாதன் சமாசாரமும். எதன்பொருட்டு வாழ்க்கையில் இத்தனை அனுபவங்களும் என்கிற திகைப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் பூடகமாக எல்லாவற்றுக்கும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதை அத்தியாயத் தொடக்கதில் காணப்படும் கீதோபதேச வரிகளும் ஒருவகையில் அந்தந்த அத்தியாயத் தலைப்பும் உணர்த்துகின்றன.

 

‘நான் செயலாற்றத் தேவையில்லை எனினும் விடாது செயலாற்றிக் கொண்டுதானிருக்கிறேன். ஏனெனில், நான் செயலாற்றவில்லையெனில் அனைவரும் செயலாற்றாமல் இருந்துவிடுவார்கள்’ என்கிறான், கண்ணபிரான், கீதையில்.

 

இவ்வாறு இடையறாது செயலாற்றுதலே அவரவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கையென்றும் இது ஆன்மாவின் யாத்திரையில் படிப்படியான பரிணாம வளர்ச்சிக்கான நியதி என்றும் வரையறுக்கின்றது நமது தத்துவ ஞான மரபு.

 

நாவலின் இறுதிக் கட்டத்தில் வருகிற, அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவனல்ல என்று தன்னைப் பற்றிச் சொல்லிகொள்ளும் மானக்கஞ்சார நாயனார் வேதாந்த விசாரத்தில் விஸ்தாரமாக ஈடுபட்டு, யாவரும் யாதுமற்றோரே என்று அறுதியிட்டுக் கூறுவதுபோல் மும்முறை கூவினாலும் உண்மையில் யாதுமானவரே யாதுமற்றவராகவும் இருக்கிறார் என்றும் அதுபோல யாதுமற்றவராய்த் தெரிபவரே யாதுமானவராகவும் இருக்கிறார் என்றும் ஒரு முடிவுக்கு வர அத்தியாயத்திற்கு அத்தியாயம் கீதோபதேசம் காணப்படுகிற முத்துக் கிருஷ்ணனின் நாவல் நம்மைத் தூண்டுகிறது.

 

தேடுதல் நன்று, கிடைக்காமையும் நன்று என்கிறது முத்துக் கிருஷ்ணனின் ஒரு கவிதை. இதைத்தான் சொல்கிறது, இந்த நாவலும்.

 

முத்துக் கிருஷ்ணன் பொறுமையுடன் மேலும் ஒருமுறை தமது பிரதியில் மறு திருத்தம் செய்திருப்பின் யாதுமற்றவரது பல அத்தியாயங்களின் சில பகுதிகள் அறிவிக்கைப் பலகையில் ஒட்டப்பட்ட வெறும் சுற்றறிக்கையாய், ‘காதுள்ள வர்கள் கேட்டுக்கொள்ளுங்கோ’ என்று சொல்கிற மாதிரி அமைவதைத் தவிர்த்திருக்கலாம். கலாப்பிரியா, எஸ். சாமிநாதன் ஆகியோரின் நாவலைப் பற்றிய மதிப்பீடுகள் புத்தகத்திற்கு மேலும் கனம் சேர்க்கின்றன.

 

யாதுமற்றவர் – நாவல்

ஆசிரியர்: க. முத்துக் கிருஷ்ணன்

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்,

12, முதல் பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம்,

சென்னை 600 024 தொலைபேசி: 044-2372 2939

விலை ரூ. 130.

நன்றி: கணையாழி ஜூன் 2011

 

Series Navigationஇப்போதைக்கு இது – 2
author

மலர்மன்னன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *