விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

This entry is part 13 of 46 in the series 19 ஜூன் 2011

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

 

தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். அதனால் பின்தொடரும் விடுதலைப் புலிகளின் மனிதப் பலிகடாக்கள் ஆகத்தான் விஜிதாவும் அவளது பெற்றோரும் கோண்டாவில் பிரதேசத்திலிருந்து விஷ்வமடு, முல்லைத் தீவு ஊடாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்தார்கள்.

 

விஜிதாவும் குடும்பத்தாரும் முள்ளிவாய்க்காலில் ஒரு மாதம் போலக் கழித்தார்கள். அதற்கிடையில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகத் தோல்வியுற்றிருந்தது. அரசாங்கத்தின் இராணுவம் முழு வடக்கு பிரதேசத்திலுமே தனது பலத்தை நிரூபித்திருந்தது. அகப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அகதிமுகாம்களுக்கு அனுப்பப்படுவது ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு வரும் பயணத்தின் போது  முக்கியமானதொரு நிகழ்வு நடந்தேறியது. அங்கு வந்த இராணுவம், இடம்பெயர்ந்த மக்களை ஒன்று சேர்த்து ஒரு நாளேனும் விடுதலைப் புலிகளோடு சம்பந்தம் வைத்திருந்தவர்கள் ஒரு புறம் நிற்கும்படியும் மற்றவர்கள் மற்றப்புறம் செல்லும்படியும் கட்டளையிட்டது. அங்கு, முக்கியமாக பெற்றோரிடம் பயப்பட ஏதுமில்லை எனவும் விசாரணைகளின் இடையில் பிள்ளைகள் நிரபராதிகள் எனில் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதாக தாம் உறுதி கூறுவதாக இராணுவத்தால் சொல்லப்பட்டது.

 

அச் சந்தர்ப்பத்தில் தாய்மார்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்கு சரணடையுமாறு சொல்லப்பட்டது. அது அவர்கள் இராணுவம் சொன்னதில் நம்பிக்கை வைத்ததை விடவும், வேறு செய்ய வழியேதுமற்ற காரணத்தினால் செய்யப்பட்டதொன்றாக இருக்கக் கூடும். அத்தோடு 30 வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அப் பிரதேசம் இருந்தமையால் எல்லோருக்குமே விடுதலைப் புலிகளுடன் ஏதேனுமொரு சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. விஷேடமாக இங்கு, அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது. அந்த யதார்த்தத்துக்கு ஏற்ப ஓர் தினமேனும் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருந்திருப்பது என்பது சாத்தியமே.

 

எவ்வாறாயினும் இன்று வரையில், அவ்வாறாக இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எவருமே திரும்பி வரவில்லை. அது பலரோ அல்லது சிலரோ எனச் சொல்வதற்கு அவசரமில்லையெனினும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும். இதுவரை தேடிப் பார்த்ததற்கு ஏற்ப கிளிநொச்சி கோண்டாவில் கிராமத்தில் மட்டும்  பல இளைஞர் யுவதிகள் அவ்வாறு சரணடைந்த பிற்பாடு இன்னும் திரும்ப வரவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

 

இது பாரதூரமான அநீதி எனச் சொல்லாதிருக்க முடியாது. யுத்தத்தின் போது காயமடைதல், மரணமடைதல் பொதுவானது என ஒருவரால் சொல்லலாம். எனினும் யுத்தத்தின் பிறகு பெற்றோரால் சட்ட ரீதியாக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞனொருவன் காணாமல் போவதென்பதை எவராலுமே ஏற்றுக் கொள்ளமுடியுமென நாம் எண்ணவில்லை. மேலே குறிப்பிட்ட விஜிதாவின் குடும்பத்தில் அவளை விடவும் மூத்த அண்ணனொருவரும் அக்கா ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் முடித்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாயுடனும் தந்தையுடனும் வீட்டிலிருந்தது விஜிதா மட்டுமே. வீட்டில் இளையவளான விஜிதாவுக்கு என்ன நடந்ததெனத் தெரியாமல் இன்று அவளது தாய் வீட்டின் முன்னிருந்து ஓலமிடுகிறாள். அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்காலிலிருந்து வந்த அவர்கள் இழந்திருந்தது தமது மகளை மாத்திரமல்ல. அகதி முகாமில் பல துயரங்களை அனுபவித்துவிட்டு வந்த அவர்களது வீடு கூட யாராலோ எரியூட்டப்பட்டிருந்தது. அப் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆட்சி நிறைவுற்ற பிற்பாடே அது எரியூட்டப்பட்டிருக்கிறது.

 

வடக்கின் பிரதேசங்கள் பலவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் வேறொரு ஆட்சி முறையை நடத்திச் சென்றது வரலாற்றில் திடீரென  நடந்த ஒன்றல்ல. அது ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றின் தர்க்க ரீதியான பெறுபேறு. இன்று இது குறித்து நாங்கள் செவியுறுவது என்னவெனில் பிரபாகரன் எனும் அதிபயங்கரமான கலகக்காரரொருவரின் வீரமானது அரசன் ஒருவனால் அடக்கப்பட்ட விதம் குறித்த கதைகளையே. எனினும் வடக்கின் தமிழ்மக்கள் பானையிலிருந்து அடுப்புக்கு இழுத்துப் போடப்பட்டிருப்பதைக் காண்பதற்கு அங்கு செல்ல வேண்டும். தேசியத் தொலைக்காட்சியைப் பார்த்து அதனை அறிந்துகொள்ள முடியாது. எனவே சில கிழமைகளுக்கொரு முறை இக் குறிப்புக்களை எழுதுவது அப் பிரதேசங்களுக்குச் சென்று, அவர்களுடன் வசித்து, அவர்களது பிரச்சினைகளை எங்களது பிரச்சினைகளாக மாற்றிய பிற்பாடுதான் என்பதைக் கூறவே வேண்டும்.

 

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் தம் பிள்ளைகள் குறித்த துயரங்கள் குறித்தோ, பிள்ளைகளை இழந்த காரணத்தால் அவர்கள் அழுது ஓலமிடும் விதங்கள் குறித்தோ நான் இங்கு எழுதவில்லை. அது ஏனெனில் அதைவிடவும் முக்கியமான விடயமொன்று இந் நிலைப்பாட்டில் இருப்பதன் காரணத்தால் ஆகும். அது என்னவெனில் இதற்குள் இருக்கும் பாரதூரமான அரசியல் தவறு. தமிழ் இளைஞர்கள் ஒருமுறை ஆயுதம் எடுத்தது அந்த அரசியல் தவற்றின் காரணமாகத்தான். மென்மேலும் அத் தவறானது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால் அதன் அடுத்த பெறுபேறு தெளிவானது. அத் தவறு என்னவெனில் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துயரம். அன்று அத் துயரமானது இனவாதச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும் அநீதமான மற்றும் சமமற்ற வாய்ப்புக்களும் உரிமைகளும் மூலமாக அவர்கள் மீது செயற்படுத்தப்பட்டிருந்தது. இன்று அதற்கும் மேலதிகமாக அவர்களது பிள்ளைகளை காணாமல் போகச் செய்வதன் மூலமும் வெறுமனே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலமும் தொடரச் செய்யப்பட்டிருக்கிறது.

 

ஆகவே அரசாங்கமானது உடனடியாக காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கும் அத் தமிழ் அன்னையர்களின் பிள்ளைகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனின் போராட்டம் தவறான அத்திவாரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த காரணத்தால், தமிழ் இனவாதத் தலைவர்களாலும் சர்வதேச சக்திகளாலும் அதனை பிரிவினை வாதத் தேவைகளுக்காக பாவிக்கப்பட்டதனால் தேசம் பிளவுபடுவதைத் தடுக்க வேண்டியிருந்தமை உண்மைதான். எனினும் அத் தவறை சீராக்குகையில் குருட்டுத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கும், தமிழ் மக்களை தகர்த்து நசுக்கி விடுவதற்கும் அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது.

 

உதுல் ப்ரேமரத்ன

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationசின்னாண்டியின் மரணம்முதுகெலும்பா விவசாயம் ?
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *