ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

This entry is part 23 of 46 in the series 26 ஜூன் 2011

நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எல்லா மரத்துக்கும் பொருந்தும் விஷயம் தான். அப்படி ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கிற சம்பவங்களை எல்லாம் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார் திரு.சுந்தர ராமசாமி அவர்கள். 1960-களில் எழுதப்பட்ட நாவல் இன்றும் வாசிக்க வாசிக்க சுவை மிகுந்த அனுபவமாகவே இருக்கிறது.

ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது.

இந்த நாவல் ஒரு மரத்தை பற்றி மட்டுமல்ல. மரத்தை அடிப்படையாக வைத்து, சுதந்திர இந்தியா அறுபதுகளில் எப்படி இருந்தது என்பதையும் அழகாக எடுத்துச் செல்கிறது. காதர், தாமு, செல்லப்பன், கடலை தாத்தா, இசக்கி இவர்களுக்கு இடையிலான அரசியல் இன்றும் நிஜ வாழ்க்கையில் மாறாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.

தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரம் யதார்த்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இன்று அது போன்ற மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது. தன் அனுபவங்களை வண்டு சிண்டுகளிடம் சொல்லி மகிழும் தாதாக்களை காண்பதே அரிதாகிவிட்டது. எல்லாவற்றையும் இன்று தொலைகாட்சிகள் தின்று விட்டன.

புளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முதியவர்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையேயான உரையாடல் இந்த நாவலின் தேன் சொட்டு:

“தம்பி எதுக்குடேய் மரத்தே வெட்டிச் சாய்க்கிறாங்க?”

“செடி வெக்கப் போறாங்க”

“எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?”

“காத்துக்கு”

“மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துக் தரும்?”

“அளகுக்கு”

“செடி தான் அளகாட்டு இருக்குமோ?”

“உம்”

“செடி மரமாயுடாதொவ்?”

இளைஞன் கிழவர் முகத்தை பார்த்தான். பொறுமையிழந்து “மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை, வெட்டிவெட்டி விடுவாங்க” என்றான்.

“வெட்டி வெட்டி விடுவாங்கள?”

“ஆமா”

“அட பயித்தாரப் பயக்களா!”

*

Series Navigationகாட்சியும் தரிசனமும்சின்னப்பயல் கவிதைகள்
author

பா.சதீஸ் முத்து கோபால்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லறீனா ஏ. ஹக் says:

    ம்…! என்ன ஒரு அற்புதமான சிருஷ்டி! கால ஓட்டத்தில் எத்தனை ஆயிரம் புதிய நூல்கள் தோன்றினாலும், தனக்கென்று ஒரு தனியிடத்தை நிரந்தரமாக்கிக்கொண்ட நாவல் அது. ரசனைக் குறிப்புக்கு நன்றி சதீஸ்! :)

  2. Avatar
    SOMASUNDARAM says:

    Adakka vilaiyil(actual expenditure) intha noolai KALACHUVADU virpanai(sales) seia vendum.Ellorum padiththu mahizha vendum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *