சுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை கனிமொழி.
1972 என்று நினைக்கிறேன். மதியழகன் மிகவும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தம்பி கிருஷ்ணசாமி நடத்திய தென்னகம் நாளிதழ் கட்சிப் பத்திரிகை போல் இல்லாமல் செய்தித்தாளாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக செய்தி ஆசிரியராக நான் அங்கு தினமும் சில மணி நேரம் செலவிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டதால் தென்னகம் அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டம் அது.
அச்சமயம் சென்னை புறநகர்ப் பகுதியான ஒரகடத்தில் பெற்றோரை இழந்த சிறுமியருக்கான காப்பகம் ஒன்றை நடத்தச் சிலர் முன்வந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர், கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ஸ்ரீமதி சத்தியவாணி முத்து. காப்பகத்தைப் பிரபலப்படுத்த பத்திரிகையாளன் என்ற முறையில் நான் பங்காற்ற வேண்டும் என்று சத்தியவாணி முத்து விரும்பினார். நல்ல காரியமா யிற்றே, நானும் ஒப்புக்கொண்டேன். காப்பகத்துக்குக் கனிமொழியின் பெயர் சூட்ட விரும்பினார் சத்தியவாணி முத்து. அப்போதுதான் கனிமொழி யார் என்று தெரிய வந்தது. கருணாநிதியை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனிமொழியின் பெயரைக் காப்பகத்திற்குச் சூட்ட சத்தியவாணி முத்து திட்டமிட்டார்.
என் மகள் கனிமொழியின் தாயார் தர்மாம்பாள் என்று சொல்கிற அளவில் தான் அன்று கருணாநிதிக்கும் கனி மொழி குடும்பத்திற்கும் உறவு முறை இருந்தது. இதன் காரணமாகவே கனிமொழி என்கிற குழந்தை மீது எனக்குத் தனிப் பரிவு இருந்தது. அந்தக் குழந்தையைச் சந்திப்பதற்கு முன்பே!
ஒரகடம் குழந்தைகள் காப்பகத்திற்கு குழந்தை கனிமொழியின் பெயர் சூட்டப்படுவதாக அறிந்தபோது ஒரு வகையில் அது பொருத்தம்தான் எனக் கருதி மகிழ்ச்சி தெரிவித்தேன். காப்பகம் திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு கனிமொழி அழைத்து வரப்பட்டாள். அன்று குழந்தை கனிமொழி என்னிடம் மிகவும் ஒட்டுதலாக நடந்துகொண்டாள். நிகழ்ச்சி நடந்தேறி விடை பெற்றுச் செல்கையில் மீண்டும் ஒருமுறை கன்னங் குழியச் சிரித்து, போய்வரேம்ப்பா என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அன்றுடன் குழந்தை கனிமொழியுடனான எனது தொடர்பு முற்றுப் பெற்றுவிட்டது. அவள் வளர்ந்து பெரியவளாகிற தருணங்கள் எதுவும் என் மனதில் பதிய வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிஞராக கனிமொழி பொதுத் தளத்திற்கு வந்து நின்றபோது கருணாநிதியின் மகளா இந்தக் கனிமொழி என்று வியக்க வேண்டிய தாயிற்று. ஏனெனில் கனிமொழியின் கவிதைகள் திராவிட இயக்கச் சாயல் சிறிதுமின்றி, சுயமாக வெளிப்பட்டிருந்தன. கனிமொழி தனது நிலையின் விளைவாகச் சுயமாகவே வளர நேரிட்டு, சுயமாக சிந்தனை வயப்பட்டுக் குமுறியதால் உருவான கவிதைகள் அவை. ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் அவள் கவிதைகளில் வடிகால் தேடிக்கொண்டதும், அந்தக் கவிதைகள் கவிதைகளாகவே அமைந்ததும் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தன.
கனிமொழிக்கு அப்போதெல்லாம் தான் கருணாநிதியின் மகள் எனபதான பிரமைகள் ஏதும் இருக்கவில்லை. தந்தையின் தலைமையில் இயங்கிய தி.மு.க.வில் ஈடு பாடு எதுவும் இருந்ததுமில்லை. இவை எனது அனுமானங்கள்தாம். கனிமொழியின் கவிதை மொழிகளே எனது அனுமானங்களுக்கு வலுவான அடித்தளம். ஏனெனில் கனிமொழியுடன் நேரடித் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ள எனக்கு எவ்விதத் தூண்டுதலும் இல்லை. கனிமொழியை அவள் எழுதிய கவிதை களுக்காகப் பாராட்டி ஒரு கடிதம் கூட நான் எழுதியதில்லை. பொதுவாக அவ்வாறு எவருக்கும் கடிதம் எழுதும் வழக்கம் எனக்கு இல்லை. ஆகையால் எனக்குள் நானாகவே நான்கு வயதுக் குழந்தை கனிமொழி பெரிய மனுஷியாகக் கவிதைகள் எழுதும் அளவுக்கு வளர்ச்சி அடைந்ததில் மகிழ்வதோடு இருந்துவிட்டேன். ஆனால் மனதில் ஒரு நாலு வயதுக் குழந்தையின் பிம்பமாகவே கனிமொழி பதிந்துவிட்டிருந் தாள். என் மடியில் உட்கார்ந்து கன்னங் கூழியச் சிரித்து மழலை பேசிய கனிமொழி! இன்றுங்கூட என் மனதில் கனிமொழியின் தோற்றம் அப்படித்தான் பதிந்துள்ளது.
வளர்ந்து பெரியவளான கனிமொழியை எதிர்பாரத விதமாக நாலைந்து ஆண்டுகளுக்குமுன் சென்னையில் சந்தித்தபோது மகிழ்ச்சியடைந்தேன்.
காலச்சுவடு கண்ணன் சென்னை திருவல்லிக்கேணியில் அலுவலகத்தை விரிவு படுத்தி புத்தக விற்பனையைப் பெரிய அளவில் விருத்தி செய்ய முனைந்தபோது பலரையும் அழைத்திருந்தார். விசேஷ அழைப்பு எனக்கும் வந்திருந்தமையால் சென்றிருந்தேன். அங்கு கனிமொழியும் வந்திருக்கக் கண்டேன். நாலு வயதுக் குழந்தையாகப் பார்த்த கனிமொழியை ஒரு பெண்மணியாக!
கனிமொழி அப்போது ஓர் அரசியல்வாதியாகியிருக்க வில்லை. கனிமொழியிடம் நான் ஒரகடம் சம்பவத்தைச் சொல்லி நினைவிருக்கிறதா என்று கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆமாம், எல்லாம் கனவு போலிருக்கிறது என்று சிரித்தாள். அதே கன்னங் குழிகிற சிரிப்பு! உங்களைச் சந்தித்தைப் பற்றி அப்பாவிடம் சொல்கிறேன் என்றாள். வேண்டாம் என்றேன் அவசரமாக. ஏன் என்றாள் வியப்புடன்.
போயும் போயும் அவனையெல்லாம் ஏன் சந்திதாய் என்றுதான் சொல்வார், சந்தோஷப்பட மாட்டார் என்று சொன்னேன். கனிமொழி மேலும் விளக்கம் எதுவும் கேட்கவில்லை. அவ்வளவில் கனிமொழியுடனான எனது இரண்டாவது சந்திப்பு முற்றுப் பெற்றது.
காலஞ்சென்ற தி.ஜ.ர.வின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருப்பதை அறிந்து, அவரது நூல்களை நாட்டுடமையாக்கினால் ஓரளவு நிவாரணம் கிட்டும் என்று கருதி அவருடைய பேத்தி நிர்மலாவை கனிமொழிக்கு அறிமுகம் செய்து முதல்வர் கருணாநிதியிடம் நேரடியாகவே பரிந்துரைக்க வேண்டினேன். கண்டிப்பாக அப்பாவிடம் சொல்கிறேன் என்று நிர்மலாவிடமிருந்து விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டாள். ஒரு சில மாதங்களில் நாட்டுடமையாகும் நூலகளீன் ஆசிரியர்கள் பட்டியல் வெளியாயிற்று. அதில் தி.ஜ.ர.வின் பெயரும் இருந்தது.
தி.ஜ.ர. நூல்களை நாட்டுடமையாக்கும் முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிலர் அதற்கு முயற்சி எடுத்திருந்தனர். ஆனால் அவரது நூல்கள் நாட்டுடமியாவதற்கான உத்தரவாதம் ஏதும் இருக்கவில்லை.
கனிமொழிக்கு அரசியல்வாதியாக ஆவதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்திருக்கும் என்று என்னல் கூற முடியாது. ஆனால் அவளது மனநிலையையும் இயல்பையும் ஓரளவு யூக்கிக்க முடிவதால் ஆசைகாட்டப்பட்டே அவள் அரசியலுக்குப் போயிருப்பாள் என்று நினைக்கிறேன். சிரமம் இன்றியே தந்தையார் வழியில் ஏராளமான செல்வம், தந்தையார் ஏற்பாட்டில் தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அதன் மூலம் அதிகார பீடங்களின் அணுக்கம், சகவாசத் தாக்கத்தால் இதுதான் அரசியல் என்கிற தவறான முடிவு செய்துவிட்ட அவசரம், இவை யெல்லாம் கடைசியில் என் மடி மீது அமர்ந்து மழலை பேசி மகிழ்வித்த குழந்தை கனிமொழியை தில்லி திஹார் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறது.
பெரிய பெரிய பகல் கொள்ளைக்காரர்கள் அரசியல் தலைவர்களாக கெளரவம் குலையாமல் அதிகாரம் செலுத்திக்கொண்டு திரிகையில் பக்குவம் போதாத, முதிர்ச்சி இல்லாத குழந்தை கனிமொழி அரசியலில் இறங்கி இதுதான் அரசியல் சம்பிரதாயம் என முடிவு செய்து ஏதோ விளையாட்டு மாதிரி நடந்து அதன் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
கற்பனைக் கெட்டாத அளவு பணப் புழக்கம், அதிகாரம், இளம் வயது எல்லாம் சேரும்போது முதலில் எல்லாம் இன்ப மயமாக இருந்தாலும் முடிவு பெரும் சங்கட மாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் அந்தச் சங்கடம் தீர்வதில்லை.
பழுத்த அரசியல்வாதி எனில் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிட்டு எதுவுமே நடகாத மாதிரி திரும்பவும் ஆட்டத்தைத் தொடங்கக் கூச்சமில்லாமல் வந்து உட்கார்ந்துகொள்வார்கள். ஆனால் கனிமொழி அப்படியல்லவே1
மகளே கனிமொழி, நீ ஒரு கவிஞராகவே இருந்து கொண்டிருக்கலாகாதா?
மகளே கனிமொழி, என்னிடம் துரும்பளவு சொத்தோ, சேமிப்போ, வசதி என்று சொல்லப்படுகிற வீடு வாசல் வண்டி ஆள் அம்பு என்று எதுவுமோ இல்லவே இல்லை. மிகவும் குறைவான எனது தேவைகளுக்கு மாதா மாதம் எங்கிருந்தோ அளவாக என் குல தெய்வம் கொடுத்து விடுகிறாள். சமயங்களில் எனக்கே ஆச்சரியமாகக் கூட இருக்கிறது. இப்படி அமைந்திருக் கிற வாழ்க்கையில் எனக்கு ஒவ்வொரு அணுப் பிரமாண அவகாசமும் பேரனந்தமாகவே உள்ளது.
பேரானந்தமாக இருப்பதற்கு அளவிறந்த செலவம், அதை மேலும் பெருக்குவதற்கான முயற்சிகள், அதிகாரம் இவையெல்லாம் அவசியமே இல்லை என்று நான் சொன்னால் அதை ஒப்புக்கொள்வாயா கவியுள்ளம் படைத்த மகளே, கனிமொழி?
+++
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
- கதையல்ல வரலாறு (தொடர்) 1
- சலனப் பாசியின் பசலை.
- நிழல் வேர்கள்
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
- காற்றும் நானும்
- ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
- சமன் விதி
- புறமுகம்.
- புழுக்கம்
- நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
- (71) – நினைவுகளின் சுவட்டில்
- சனி மூலையில் தான் நானும்
- வினா ….
- இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
- மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
- பிறந்த மண்
- காலம் – பொன்
- ப.மதியழகன் கவிதைகள்
- காட்சியும் தரிசனமும்
- ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
- சின்னப்பயல் கவிதைகள்
- காகித முரண்
- அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
- விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
- மேலதிகாரிகள்
- அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
- என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
- கவிஞனின் மனைவி
- வாழ்தலை மறந்த கதை
- ஊதா நிற யானை
- இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
- “அறுபத்து நான்காவது நாயன்மார்“
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
- பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
- திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
- இருள் குவியும் நிழல் முற்றம்
- பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
- பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..