“அறுபத்து நான்காவது நாயன்மார்“

This entry is part 35 of 46 in the series 26 ஜூன் 2011

பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் ஒருவராக வைத்து போற்றத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார். அவர் சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். சொற்பொழிவின் மூலம் ஈட்டிய பொருள் அனைத்தையும் கோவில் திருப்பணிகளுக்காகச் செலவிட்டவர் வாரியார் ஆவார். தனிப்பட்ட முறையில் அதிகமாக திருப்பணிகளுக்கு வாரிவழங்கிய வள்ளல் கிருபானந்தவாரியாரே ஆவார்.
தமக்கென்று எதனையும் சேர்த்து வைக்காத பெருந்தகையான கிருபானந்த வாரியார் தமிழ் நாட்டிலுள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் செங்குந்த வீர சைவ மரபில், மல்லையதாசருக்கும், கனகவல்லி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக 1906 –ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள் அவதரித்தவர். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி என்பதாகும்.

கல்வியும்-மணமும்

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து அவருக்குக் கல்வி கற்பித்தார். வாரியாரைப் பள்ளிக்கு அனுப்பாமல் அவருக்கு வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார் என்பது நோக்கத்தக்கது. நன்னூல் முதலான இலக்கண நூல்களையும், தேவாரம், நளவெண்பா, ஒளவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் வாரியாருக்குக் கற்பித்து, அவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் செய்தார். கீர்த்தனைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள் மட்டுமின்றி வாரியாருக்கு அவரது தந்தையார் வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். வாரியாருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மனப்பாடம் செய்ததுதான் தம் வாழ்நாளில் தாம் அடைந்த பெருஞ்செல்வம் என்று வாரியார் குறிப்பிடுகிறார். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது பத்தொன்பதாவது வயதில் மணந்தார்.

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

இசைச் சொற்பொழிவாற்றல்

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். வாரியார் தமது 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணச் சொற்பொழிவுகள் செய்யத் தொடங்கினார். அவருடைய சொற்பொழிவுகள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களும் அவரது உரையை மனம்மகிழ்ந்து கேட்டனர். அவர் தமது “ஆன்மிகச் சொற்பொழிவில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறினார். பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய சொற்பொழிவுகளை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

தனது இசை ஞானத்தால் அவர் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் அம்மனத்தின் வெள்ளி விழாவின் போது அவருக்கு, “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அதுமட்டுமின்றி மிகச்சிறந்த நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்ட அறிஞர்கள் இதுகாறும் இதனை அறியவில்லையே என்று அவரை வியந்து பாராட்டினார்கள். ‘‘வாரியார் வாக்கு கங்கை நதியின் வெள்ளப்பெருக்கைப் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன“ என்று அறிஞர்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக முறையிலான தன்மை அனைவரையும் கவரும். அவரது சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.ஒருமுறை சொற்பொழிவின்போது வாரியார் சுவாமிகள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ‘நீ உனது வீட்டில் எத்தனையாவது குழந்தை? என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் ‘‘நான்தான் எனது வீட்டில் கடைசிக் குழந்தை” என்று கூறினான். அதனைக் கேட்ட வாரியார், ‘‘தம்பி நீதான் உன்வீட்டில் கடைசிக் குழந்தை என்பதை நீ முடிவு செய்து சொல்லக் கூடாது. அதனை உனது தந்தையார்தான் முடிவு செய்வார்” என்று கூறவே அவையினர் அனைவரும் மகிழ்ந்து சிரித்தனர்.

வாரியாருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின. ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ஐயா இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இஸலாம் சமயத்தைச் சார்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவறல்லவா. இது குறித்துத் தங்களின் கருத்து என்ன? தாங்கள் இதற்கு என்ன கூறவிழைகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு வாரியார், இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே. என்று கூற அனைவரும் அது எவ்வாறு பொருந்தும் என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் மற்றவர்கள் இதனை எவ்வாறு பொருத்துப் போவார்கள்? சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா? என்று கேட்டனர். இதனைக் கேட்ட வாரியார், முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். வேறுபட்ட இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது.

மழையை நாடியிருக்கும் சகோரம் என்ற பறவைபோல அவரது சொற்பொழிவைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

பத்திரிக்கைப் பணி

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

தமிழ்ப்பணி

வாரியார் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலையில் பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றித் தமக்கு சடக்கரமந்திரத்தை உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

இறைப்பணியும், முக்தி பெறலும்

தமது சொற்பொழிவின் வாயிலாக் கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் இறைப்பணிக்கே வாரியார் செலவிட்டார். தமக்கென்று எந்த ஒரு பொருளையும் அவர் வைத்துக் கொண்டதே கிடையாது எனலாம். வயலூர் முருகனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார். அக்கோயிலின் திருப்பணியை முன்னின்று நடத்தினார். அக்கோயில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல முருகன் திருத்தலங்களையும் புதுப்பித்து கோயில் திருப்பணி செய்தார். இவ்வாறு அவர் செய்த்தால் தான் அவரை திருப்பணிச் செம்மல் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். கிருபானந்த வாரியார் கந்தவேளை எந்த வேளையும் மறவாது வணங்கி முருகன் அருள் பெற்ற அடியவராகத் திகழ்ந்தார். எங்கு சென்றாலும், எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் முருகனை வழிபடாது எந்தப் பணியையும் அவர் தொடங்க மாட்டார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பலநாடுகளுக்கும் சென்று தமிழ்த் திருப்பணி ஆற்றியவர் வாரியாராவார்.

இங்ஙனம் இசையாலும், தமிழாலும், இசையாதவரையும் இசைவித்த திருமுருக கிருபானந்த வாரியார், 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் நாள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தமது விமானப் பயணத்திலேயே கந்தவேளின் திருவடிகளில் கலந்தார். அவரது இறப்பு பூமியில் நிகழவில்லை என்பது நோக்கத்தக்கது. வாழ்நாள் முழுவதும் தமது இறைப்பணியிலும், சமுதாயப் பணியிலும் சிறந்து விளங்கிய கிருபானந்த வாரியார் இறைவனுடன் இரண்டரக்கலந்து அறுபத்து நான்காவது நாயன்மாராக என்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆன்மீகச் செல்வர்கள் அனைவரும் வாரியாரை அறுபத்து நான்காவது நாயன்மாராகவே கருதி இன்றும் அவரை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு எவ்வாறு நமது நெஞ்சங்களில் நின்று நிலைத்து விளங்குகின்றதோ அதனைப்போன்று அறுபத்து நான்காவது நாயன்மாராகிய வாரியாரின் வரலாறும் நமது நெஞ்சில் நிலைத்து நின்று நமதுவாழ்க்கைக்கு வழிகாட்டும் எனலாம்.

முனைவர் சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigationஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    balu says:

    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *