“கானுறை வேங்கை” விமர்சனம்

This entry is part 6 of 38 in the series 10 ஜூலை 2011

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்

என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய “The Way of the Tiger” என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை திரு.தியடோர் அவர்கள் சிறப்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்படும் சில சொற்களை முதன் முதலாக இந்த நூலில் தான் தமிழில் படிக்க நேந்தது. உதாரணமாக, உருமறை தோற்றம் ( Camouflage ), நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி (Sustainable Development) போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமைவாய்ந்த ஒருவராக மட்டும் இருந்து இதை புத்தகத்தை மொழி பெயர்த்துவிட முடியாது. இயற்கையின் மீதான காதல் இல்லாமல் இந்த நூலை மொழி பெயர்ப்பது சிரமம். அந்த வகையில் திரு.தியடோர் அவர்கள் இதற்கு சரியான தீர்வாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

இந்த நூலை ஆங்கிலத்தில் படித்ததை விட, தமிழில் இன்னும் சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பு நூலாக இருந்தாலும் சொற்கள் எப்படி கையாளப்படுகிறது என்பதே முக்கியம். பொருளும் மாறாமல் சொற்களையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் :

“நாம் காட்டில் ஒரு புலியைக் காணும்பொழுது அது ‘தனியாக’ நடக்கிறது என்று நினைக்ககூடும். ஆனால் மற்றப் புலிகளுக்கு அது பல செய்திகளைத் தன் நெடியின் மூலம் விட்டுச் செல்கிறது. ஒரு புலி தனியாக இருக்கலாம். ஆனால் அது தனிமையில் இருப்பதில்லை”. (பக்கம் : 68 )

புலியின் பாதுகாப்பை விரும்புவோர், புலிகள் தொடர்ந்து இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த புத்தகத்தை படித்தால், “என்ன செய்ய வேண்டும்” என்ற ஒரு தெளிவான நிலையை அடைய முடியும். புலிகளின் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.

காலச்சுவடு பதிப்பகத்தால் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பா.சதீஸ் முத்து கோபால்

Series Navigationவேடிக்கைபெண்பால் ஒவ்வாமை
author

பா.சதீஸ் முத்து கோபால்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *