பயணம்

This entry is part 4 of 38 in the series 10 ஜூலை 2011

ஹபீபுல்லா கிளம்பிக் கொண்டிருந்தார். பாத்திமுத்துவும் அவரோடு சேர்ந்து பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்து வச்சியா, இத வச்சியா என்று கேட்டுக் கொண்டே, மகனின் கனமான மௌனத்தையும் கவனிக்கத் தவறவில்லை.

மகன் சலீமும் பேப்பர் படிப்பது போல இருந்தாலும், மனதில் பெற்றோரின் இந்த புறப்படல் அரித்துக் கொண்டேயிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாரும், சலீமோடு கோவித்துக் கொண்டுதான் ஹபீபுல்லாவும், பாத்திமுத்துவும் கிளம்புவதாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக ஒரு இறுக்கமான சூழ்நிலைதான் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. ஆனால், உண்மைநிலையோ தலைகீழ்!!

பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு, மகனிடம் வந்தவர், “போலாமாப்பா?” என்று கேட்டார். “ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு, கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பின்தொடர்ந்த இருவரும், “சாஜிதா, போய்ட்டு வாரோம்மா” என்று மருமகளிடமும் விடைபெற்றுக் கொண்டனர். ”எப்போ வருவீக?” என்ற மருமகளின் கேள்விக்கு, ’உனக்குத் தெரியாதா’ என்பதுபோல பாத்திமுத்து பார்த்துப் புன்னகைக்க, ஹபீபுல்லாவோ “இன்ஷா அல்லாஹ்” என்பதை மட்டும் பதிலாக்கிவிட்டு, காரில் ஏறிக் கொண்டார்.

வழியிலும் மகன் எதுவும் பேசாமல் வருவதைக் கவனித்த ஹபீப், ”என்னப்பா கோவமா?” என்றார். “நான் கோவப்பட்டு என்ன ஆகப் போவுது?” என்று வெறுமையாகப் பேசினான்.

“ஏம்ப்பா கோச்சுக்கிற? உன் தம்பி ஜலீல் வீட்டுக்குத்தானே போறோம்? அவன் பிள்ளைகளையும் பாக்கணும்னு இருக்காதா எங்களுக்கு?”

“அங்க உங்களுக்குக் கிடைக்கிற மரியாதை என்னன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதீங்க. அப்படியிருந்தும், அங்கே போகாம இருக்க உங்களால முடியலைன்னா என்ன அர்த்தம்?”

“ஒரு அர்த்தமும் இல்லைப்பா. அவனும் எங்க புள்ளைதான் உன்னமாதிரி. அவன் பெத்த பிள்ளைகளும் எங்கமேல பாசமாருக்காங்கள்ல உன் பிள்ளைகளைப் போல? அப்ப போக வேண்டாமா?”

“உங்க பிள்ளையும், பேரனும் மட்டும் பாசமா இருந்தாப் போதுமா? மைனி அப்படியா இருக்காங்க?”

“அப்படிலாம் இல்லைப்பா. அவ சின்னப் பொண்ணு. இன்னும் விவரம் வரல. அதெல்லாம் பெரிசா எடுத்தா காரியமாவாது. விடுப்பா. நாளபின்ன அவளும் மாறிடுவா. இன்ஷா அல்லாஹ்”

“ம்.. எவ்வளவு பட்டாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்க உங்களாலத்தான் முடியும் வாப்பா.”

“நீயும் என்னை மாதிரி ஆனப்புறம் இப்படித்தான் இருப்பே, இன்ஷா அல்லாஹ்”

“இப்படியெல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது வாப்பா. வீட்டுக்கு வந்திருக்க மாமா-மாமியை மதிக்கத் தெரியாத, முகம்கொடுத்துப் பேசாத மருமக வாய்ச்சா நான் அந்தப் பக்கம் தலைய வச்சுப் படுக்கக்கூட மாட்டேன். மதியாதார் வாசல் மிதியாதேன்னு இருந்திடுவேன். இத்தனைக்கும் நீங்க என்ன ஊருலகத்துல இருக்க மாதிரியான கொடுமைக்கார மாமனார்-மாமியாரா என்ன? அப்படியிருந்தும்..”

“இதாம்ப்பா உன் வயசுக்கும் என் வயசுக்கும் இருக்க வித்தியாசம். நீ உன் நிலையை மட்டுமே யோசிக்கிறே. அங்க இருக்கானே உன் தம்பி, அவனைப் பத்தி யோசிச்சியா நீ? மருமகளைக் காரணம் காட்டி அவனை ஒதுக்கலாமா?”

“அவனாலத்தானே இவ்வளவும்? மைனி இழுத்த இழுப்புக்கெல்லாம் அவன் போனதாலத்தானே இவ்வளவும்? முதல்லயே ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம்ல? குடும்பத்துல யாரோடயும் ஒட்ட விடாமல்ல வச்சிருக்காங்க. நம்ம வீட்டுலயோ, சொந்தபந்தத்திலயோ விசேஷங்கள் வந்தா வந்து கலந்துகறதுக்கும் என்ன பாடு அவனுக்கு?”

”சலீம், மனைவிய அடக்கறது பெரிய விஷயம் இல்லப்பா. அதச் செய்ய ஒரு ஆம்பளைக்கு எவ்ளோ நேரம் ஆகும்? ஆனா, அதுக்கப்புறம் குடும்பத்துல சந்தோஷமோ, அமைதியோ, நிம்மதியோ நீடிச்சு இருக்குமாப்பா? கோவத்தையோ, அதிகாரத்தையோ காட்டி கட்டுப்படுத்துறது ரொம்ப நாள் நிலைக்காதுப்பா. அதுவே அன்புக்குக் கட்டுப்படுத்துனா அதோட பலன் காலத்துக்கும் இருக்கும்ப்பா. நம்ம சந்ததிகளுக்கும் அதுல ஒரு பாடம் கிடைக்கும். குழந்தைங்களையும் பாக்கணும்ல? அதனாலத்தான் ஜலீல் பொறுமையா இருக்கான்போல. நானும் அவனிடம் எந்தவிதமான சங்கடத்தையும் சொல்றதில்லை. ஆனாலும், அவனுக்காத் தெரியும்.”

ரயில் நிலையத்தை அடைந்து, ரயிலில் ஏறினர். விட்ட இடத்திலிருந்து பாத்திமுத்து தொடர்ந்தார்.

“உனக்குப் பார்த்த பொண்ணு போலத்தானப்பா அவனுக்கும் பாத்தோம். என்னவோ, இவ கொஞ்சம் தொட்டாச்சுருங்கிபோல இருக்கா. சரியாய்டும்ப்பா.”.

“நீங்களும் பணிஞ்சு பணிஞ்சு போறதுனாலத்தான் மைனிக்கு தொக்காப் போகுது.”

“பணிஞ்சு போறதுனால என்ன குறைஞ்சு போகப்போறோம், சொல்லு? இதுல மருமக மட்டும் இல்லை, நம்ம புள்ளையும்ல சம்பந்தப்பட்டுருக்கான்? நாங்களும் முறுக்கிப் பிடிச்சோம்னா, அவன் நிலையை யோசிச்சுப் பாரு? ரெண்டு பக்கமும் அடிபடுற மத்தளமா ஆகிடமாட்டானா புள்ளை? அவனோட மனநிம்மதி முழுசாத் தொலைஞ்சிடாதா?”

“அதெல்லாம் சரி. அப்படியிருக்கையில, நீங்க ஏன் அங்க அடிக்கடி போறீங்க? இங்க உங்களுக்கு என்ன குறைச்சல்? எல்லாவிதத்துலயும் உங்களைப் பாத்துப் பாத்து கவனிக்கிறா சாஜிதா. அப்படின்னாலும், அங்க போறீங்கன்னா, அவளுக்கு நாமதான் குறை வச்சுட்டோமோன்னு தோணாதா?”

“ஏம்ப்பா, குறையிருந்தாத்தான் இன்னொரு பிள்ளைகிட்ட போகணுமா? அவனை நாங்களும் பாக்கப் போகாம ஒதுக்கி வச்சிட்டோம்னா, அவன் மனசு வேதனைபடாதாப்பா? நாம கவனிக்காததாலத்தானே நம்ம சொந்தங்கள் அன்னியமாகிடுச்சோன்னு வருத்தப்படுவானே. நமக்குன்னு யாரும் இல்லையோன்னு அவன் துவண்டுபோய், அதனால அவன் குடும்பத்துல இன்னும் பிரச்னைகள் அதிகமாகிடக்கூடாதுன்னுதாம்ப்பா நாங்க பொறுமையா இருக்கோம். கோடிகோடியா கொட்டிக் கிடந்தாலும், ஒரு மனுசனுக்கு வீட்டில நிம்மதி இல்லைன்னா, அப்புறம் என்னப்பா வாழ்க்கை?”

பாத்திமுத்து வாஞ்சையோடு மகனின் தலையைத் தடவினார். “மகனே சலீமு, உன் மனசுலயும், சாஜிதா மனசுலயும் நீங்க எங்களை கண்ணுக்கு கண்ணாப் பாத்துக்கறதை நாங்க உணரலயோன்னு பரிதவிக்கிறது புரியுதுப்பா. எப்பவும் ஜலீலைப் பத்தியே கவலைப்படுறோம், உன்னைப் பத்தி நினைக்கலைன்னு தோணுதாப்பா? உடம்புல ஒரு உறுப்பில நோய் வந்தா, அதைக் கூடுதல் கவனத்தோட பராமரிப்போம். அதுக்காக, மத்த உறுப்புகள் மேலே அக்கரையில்லன்னு அர்த்தமாகிடுமா? அந்த நோய் முற்றி முழு உடம்புக்கே ஆபத்தாகிடக்கூடாதேங்கிறதுதானே நம்ம எண்ணமா இருக்கும்? அதுபோலத்தான்ப்பா இதுவும்.
அல்ஹம்துலில்லாஹ், எங்களுக்கு இப்படியொரு மருமக வாய்ச்சது நாங்க பண்ண பாக்கியம். உன்னப் பத்தி நாங்களோ, எங்களப் பத்தி நீயோ எந்தக் கவலையும் படத் தேவையில்லாம குடும்பத்தை அழகா நிர்வாகம் பண்றா சாஜிதா. உங்களைப் பத்தின எந்தவிதமான சஞ்சலமோ, கவலையோ எங்களுக்கு தராமல், நிம்மதியை மட்டுமே தந்த உங்க ரெண்டுபேருக்கும் எப்பவும் எங்களோட துஆ உண்டுப்பா. அதோட பெத்தவங்க மன அமைதிக்குப் பங்கம் ஏற்படக்கூடாதுன்னு நினைச்சு கவனமா பார்த்துப் பார்த்து நடக்கிற உங்க ரெண்டுபேருக்கும் ஆண்டவனோட கிருபையும், அருளும் நிச்சயமா கூடுதலாவே கிடைக்கும்.”

ரயில் கிளம்பியது. சலீம் மனதினின்று சஞ்சலமும்.


ஹுஸைனம்மா

Series Navigationவேஷங்கள்வேடிக்கை
author

ஹுஸைனம்மா

Similar Posts

9 Comments

 1. Avatar
  ஸாதிகா says:

  அட..நம்ம ஹுசைனம்மா கூட இவ்வளவு அருமையாக கதை எழுதுறீங்க.

  /உடம்புல ஒரு உறுப்பில நோய் வந்தா, அதைக் கூடுதல் கவனத்தோட பராமரிப்போம். அதுக்காக, மத்த உறுப்புகள் மேலே அக்கரையில்லன்னு அர்த்தமாகிடுமா?//அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

 2. Avatar
  நட்புடன் ஜமால் says:

  Assalamu Alaikkum

  “பணிஞ்சு போறதுனால என்ன குறைஞ்சு போகப்போறோம், சொல்லு? இதுல மருமக மட்டும் இல்லை, நம்ம புள்ளையும்ல சம்பந்தப்பட்டுருக்கான்? நாங்களும் முறுக்கிப் பிடிச்சோம்னா, அவன் நிலையை யோசிச்சுப் பாரு? ரெண்டு பக்கமும் அடிபடுற மத்தளமா ஆகிடமாட்டானா புள்ளை? அவனோட மனநிம்மதி முழுசாத் தொலைஞ்சிடாதா?”

  Insha ALLAH, your son’s wife will get a good mamiyar

  regards

  Jamal A M

 3. Avatar
  ஜெய்லானி says:

  ஆஹா… அருமையான சிந்திக்க க்கூடிய நடையில் ஒரு கதை .:-) நிஜம் மாதிரியே கொண்டுப்போயிருக்கீங்க . இதுப்போல இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :-)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *