“அம்மா இருட்டா இருக்கு”, ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான்.
“விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை கட்டி பிடிச்சுக்கோ; பயம் போயிடும்”
“உனக்கு தான் தெரியும் இல்ல? நான் சின்ன வயசிலிருந்து இப்படி தான்-ன்னு. எண்ணெய் வாங்கி வெக்க வேண்டியது தானே?” ஒரே நேரத்தில் பயமும், கோபமும்; விசித்திர சேர்க்கை தான்.
“இந்த வாரம் வேலை கம்மி டா. கஞ்சிக்கே சரியா போச்சு. நீ ஆம்பள புள்ள! நம்மள மாதிரி ஏழைங்களுக்கு வெளிச்சத்துலயும் இருட்டு தான். நீ இதுக்கு எல்லாம் பயப்படக் கூடாது”, அவள் தன் பிள்ளையின் தலையைத் தடவ, நம் கதை அவர்கள் குடிசையிலிருந்து எதிர்காலத்து குடிசைக்கு புலம்பெயர்கிறது.
முப்பது ஆண்டுகள் கழித்து..ரமணியின் குடிசை.
“நான் போய் தான் ஆகணுமா?”, வாசற்கால் என்ற பெயரில் ஒரு கட்டை சொருகப் பட்ட குடில். அந்த கட்டையின் இருபக்கமும் இரு கால்களை வைத்தபடி ரமணி. இப்போது அருகில் அவன் மனைவி.
“தெனமும் இதே தொல்லையா போச்சு உங்களோட. இருட்டு, இருட்டு, இருட்டு! இவ்வளவு பயம் இருந்தும் ஏன் ‘குல்ஃபி விக்கிற தொழிலை ஆரம்பிச்சீங்க? இப்போ என் கழுத்தை ஏன் அறுக்கறீங்க?” அவள் குரலில் அடுத்த வேலை கஞ்சிக்கான எதிர்பார்ப்பு இருந்தது.
“என்ன செய்யிறது? என் பயம் போகணும்-னா வீட்டுல விளக்கு எறியணும்; விளக்கு ஏறிய எண்ணெய் வேணும்; எண்ணெய் வாங்க காசு வேணும்; காசு சம்பாதிக்க திரும்பவும் பயத்தையே நாடவேண்டியாதா போச்சு”, சொல்லிவிட்டு வெளியேறினார் ரமணி.
தன் மிதிவண்டியின் மேல் கூடையை ஏற்றி கையிற்றால் இறுகக் கட்டினார். பின் தானும் இருக்கையின் மீது எறிக் கொண்டு பிள்ளையார் சுழியாக மிதிகட்டையின் மேல் கால்களை அமிழ்தினான்.
வண்டியும் கால்களும் மெதுவாக நகர்ந்தன. கும்மிருட்டு! நேரம், இரவு எட்டு மணி. ரமணிக்கு தினமும் ‘நைட் ஷிப்ட்’ தான். இருந்தாலும் அவர் வேலைக்கு செல்லும் போது எல்லோரும் வீட்டில் உணவு உண்டுக் கொண்டோ, டிவியில் நகைச்சுவை பார்த்துக் கொண்டோ, படுக்கையை விரித்துக் கொண்டோ இருப்பார்கள். அதனால் பயம் இல்லை. தவிர, ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரை ரமணிக்கு கவலை இல்லை. தன் தாயின் இடுப்பு இல்லை என்றாலும், அவர் வயதிற்கு அந்த துணை போதும். பிரச்சனை ஆரம்பிப்பதே திரும்பும் போது தான். அன்றும் அவருக்கு அது தான் பிரச்சனையை.
இரவு, 12:00 மணி..
ரமணிக்கு அன்றிரவு கதம்ப உணர்வுகள். ஒரு பக்கம் சந்தோசம், மறுபக்கம் துக்கம். எல்லோரையும் போல் நானும் முதலில் சந்தோஷத்தை சொல்லவே விருப்பப் படுகிறேன்.
அன்று இரவு ஊர் முழுவதும் மின்சாரத் தடை. “கிரிட் மாற்றுகிறோம்” என்ற காரணம் மின்சாரத் துறைக்கு. மின்சாரம் தடைப்பட்டதற்கு முன்னர்,
“ஒய்வு எடுக்க தூங்குகிறோம்” என்பதையே மறந்து, அடுத்த நாள் காலை அலாரம் அடிப்பது காதில் விழ வேண்டுமே என்ற எண்ணத்துடன் படுத்தனர் மக்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே கொடுத்த காசுக்கு வேலை செய்ய மறுத்தது மின்விசிறி. கெட்ட கெட்ட வார்த்தைகளை துப்பியபடி ஆண்களும், கோபத்தை விழுங்கிய பெண்களும் வெளியே வந்து வாசலில் உட்கார்ந்தனர்.
அந்த நேரம் மேலும் இருட்டானது உலகம். ஆனால், பயத்திற்கு பதில் மகிழ்ச்சியே பொங்கியது ரமணிக்கு. எல்லோரும் வெளியே இருந்தது மட்டும் அல்லாமல், எந்த மரமும் அசையாமல் புழுக்கம் வேறு. கண்டிப்பாக குல்ஃபி விக்கும். மிதிவண்டியின் நடுக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த மணியை வேகமாக ஆட்டினார் ரமணி. அது வாங்குபவர்களின் உற்சாகத்தை தூடுவதர்க்கு மட்டும் அல்ல; ரமணியின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கத் தான்.
ரமணியை பார்த்ததும் உள்ளேயிருந்து பணப் பையுடன் வெளியே வந்த மக்கள், பொதுவாக பண்ணிரண்டு மணியானாலும் காலியாகாத கூடையை 11:30 மணிக்கே தீர்த்து விட்டனர். அதனால் சந்தோசம். அடுத்து, பிடிக்க வில்லை என்றாலும் துக்கத்தை பற்றிக் கூறித் தான் ஆகவேண்டும்.
மின்தடை கொடுத்த ஊக்கத்தால் கால் வலி மறந்து வெகு தூரம் சென்று விட்டார் ரமணி. தன் வீட்டிலிருந்து சுமார் ஏழு கிலோமேடர் தொலைவிருக்கும். அவருடைய குருநாதர் அடிக்கடி சொல்வார், “நம்ம வேலை மணி ஆட்டுறது. ஆனா, அதிகம் சம்பாதிக்கணும் என்ற ஆசையில், உன் மணியை இழந்து விடாதே! அதிகம் மிதிக்காதே” என்று.
அந்த ஆலோசனையை மறந்து, அன்று அதிகம் மிதித்துவிட்டார். காசை வாங்கிப் பையில் போடும் போது இல்லாத வலி, வீட்டுக்கு திரும்பும் போது வெளியே தெரிந்தது. அது மட்டுமா பிரச்சனை?
“எட்டு மணிக்கு இருந்த மனிதப் புழக்கம் இப்போ இல்லையே! ‘மைல்டா’ தெரிஞ்ச இருட்டுல இப்போ யாரோ தாரை ஊத்தி ‘திக்’ ஆக்கிருக்காங்களே”, என்று தோற்றியது அவருக்கு.
“இந்த நேரத்துல தான் பேய் அலையுமாமே. இந்த சைக்கிள் வேற ‘கறக்கு’ ‘கறக்கு’-ன்னு சத்தம் போடுது. பாம்பை எழுப்புற தவளை மாதிரி. பின்னாடி திரும்பாத டா ரமணி! ராவிப்புடும்”, என்று தனக்குத் தானே ஆலோசனை சொல்லியபடி கண்கள் விரித்து மிதித்தார்.
அவர் குடியிருப்புப் பகுதிகளை தாண்டி பிரதான சாலைக்குள் நுழைந்தவுடன் நிலைமை மோசமானது. அது வரை ஒரு தெருவுக்கு ஒரு விளக்காவது இருந்தது. இப்போது ஒன்றுமே இல்லை. கும்மிலும் கும்மிருட்டு! முன்னால் போகும் வண்டியில் விளக்கு எறியாவிட்டால் ‘முட்டு’ தான். ஒரு சொட்டு வெளிச்சம் இருந்தாலும் அது தன் கண்களுக்குள் தான் விழவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, இமைகளே தெரியாத அளவுக்கு விழிகளை விரித்தார்.
“இப்படியே போய்கிட்டு இருந்தா நடுக்கம் அதிகம் தான் ஆகும். பேசாம வேற எதையாவது யோசிக்கலாம். பயத்தை போக்க சந்தோசம்?”, தன் மூளைக்குள் சந்தோசம் தரும் நிகழ்வுகள் ஏதாவது இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தார். சில மிதிகள் முடிவதற்குள், அன்றைய ‘மின்தடை’ சந்தோசம் முடிந்தது.
“இன்னும் அஞ்சு கிலோமீட்டர் இந்த இருட்டுல போகணுமே! வேற ஏதாவது இருக்கா பாரு”, என்றது சிந்தை.
ஐந்தரை அடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் ஒரு பையில், துன்பக் குவியலின் அடியில் ஒரு ஐம்பது பைசா நாணயம் மாடிக் கொண்டிருக்க,அதை எடுக்க ஏணி போட்டு பையினுள் குதித்து, அடிக்குச் சென்று தோண்டி எடுத்தார். அது அவர் விரலின் அழுத்தத்தை தாங்க முடியாமல், “நான் காகிதமென”, கசங்கிக் காட்டியது.
“என் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லையா? சே!”, என்று கைப்பிடியில் குத்திய அவரை, அடுத்த யோசனை கை தூக்கி விட்டது.
“எப்பவும் சந்தோஷத்தையே எதிர்பாத்துட்டு இருப்பவன் முட்டாள்; துக்கத்தை கோபமாக மாற்றிப் பார், விசித்திர சேர்க்கை நடக்கும்”
அவர் தன் பயத்தை அமிழ்த்த, அந்த ‘விசித்திர சேர்க்கையை’ முயற்சிக்கத் தயாரானார். துன்பத்தை தேட வேண்டிய அவசியமே இல்லாமல், கணினியின் ‘டேடா ஸ்ட்ரக்சர்’ பாடத்தில் வரும் ‘FIFO’ வை போல, ‘LIFO’ வாக வெளியே வந்தது அவர் நினைவுகள்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு..
“குல்ஃபி..குல்ஃபி..”, என்று அழைத்தது ஒரு குரல். அந்த வீட்டை தாண்டிச் சென்று விட்டதால் இறங்கி, வண்டியை திருப்பிக் கொண்டு வாசலை அடைந்தார். ஒரு ஆண் உருவம் பணியன், லுங்கியுடன் வெளியே வந்தது. அவர்கள் ‘இன்வர்டர்’ வாய்க்கப் பெற்றிருந்ததால் அவர் குடும்பம் உள்ளேயே இருந்தது. புழுக்கத்தை போக்க அல்லாமல், கொழுப்பை கூட்ட கணவரை வெளியே அனுப்பியிருந்தாள் மனைவி.
“எவ்வளவு பா?”, என்றார். அவர் அருகில் வந்த பிறகு தான் யார் என்று புரிந்தது. தனக்குத் தெரிந்ததை அடக்கிக் கொண்டு வியாபாரம் பேசினார் ரமணி.
“6 ரூபாய்க்கும் இருக்கு; 12 ரூபாய்க்கும் இருக்கு சார்”, என்றார்.
“என்னப்பா இவ்வளவு விலை சொல்ற? நாங்க படிக்கிறப்போ எல்லாம் ரெண்டணாவுக்கு கிடைக்கும்”
“நீங்க படிக்கிரப்போவா? யோவ் உன் தலை முடிய பாத்தா நீ படிச்சது சுதந்திரத்துக்கு அப்புறம்-னு எனக்கு தோணல”, என்ற எண்ணத்தை அடக்கிக் கொண்டு,
“ரெண்டா ஒண்ணா சார்?”, என்றார்.
“என்னப்பா பேச்சை மாத்துற? 12 ரூபா குல்ஃபி அஞ்சு வேணும். அம்பது ரூபாய்க்கு கொடுக்க முடியுமா?” அவர் ரமணியின் முகத்தை பார்க்கவில்லை. காரணம், அவர் வீட்டின் இன்வர்டர் கொடுத்த ‘வெளிச்ச’ சாறு ‘பணபலத்தால்’ உறிஞ்சப் பட்டு, சப்பிப் போட்ட ‘நிழற்’ கொட்டை மட்டும் ரமணியின் மேல் விழுந்தது தான்.
“எனக்கு கிடைக்கிறதே ரெண்டு ரூபா தான். அஞ்சு வாங்கினா ரெண்டு ரூபா குறைக்கலாம்; பத்து ரூபா கொறச்சா கட்டுப்படி ஆகாது சார்”, என்றார் ரமணி.
“அதெல்லாம் ஆகும். கொடு”, என்று ரமணியின் கையில் ஐம்பது ரூபாய் நோட்டை அழுத்தினார்.
“இல்ல சார். அறுபது ரூபா கொடுத்த தரேன். இல்லேன்னா முடியாது”
“என்னப்பா இப்படி கிராக்கி பண்ற? ரொம்ப தான் அல்டிக்கிறியே!” அவர் வார்த்தைகள் புன்னகையுடன் ரமணியின் மேல் தூவப் பட்டாலும், அது அவருக்கு நகைச்சுவையாய் தெரியவில்லை. மாறாக, அடக்கி வைத்திருந்த உண்மைகள் வெறுப்புடன் வெளியே கொட்டின.
“நான் உங்க கிட்ட எம்மகனுக்கு ‘மெரிட்’ சீட் கேட்டப்போ நீங்க செய்யாத கிராக்கியா நான் செஞ்சிட்டேன்? பணமிருக்குறவன் கிட்ட காசு வாங்கிகிட்டு, என்ன மாதிரி ஏழைக்கு ஒரு சீட்டு குடுக்கக் கூடாதா-ன்னு நான் கேட்டப்போ என்னை வெளியே துரத்தி நீங்க செஞ்ச அல்டாப்பை விடவா நான் அலட்டிக்கிறேன்?”, என்றார். தன்னைப் போன்ற ஏழையின் முகத்தையும் ‘பணம்’ பார்க்கட்டும் என்று நினைத்து நிழலிலிருந்து வெளியே வந்தார்.
“ஓ நீயா? குல்ஃபி ஐஸ் விக்கிற உனக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது பா! உன் லெவலுக்கு, உன் பையனை பி.எஸ்.ஈ படிக்க வைக்க நினைச்சா நியாயம். பி.ஈ படிக்கணும்-னா காசு கொடுத்து தான் ஆகணும்”
“திமிரு ‘பணத்துக்கு’ தான்-ன்னு எழுதி வெச்சிருக்கா? அது இருக்கட்டும், உங்க லெவலுக்கு கேவலம் ஒரு குல்ஃபியை கூடா பேரம் பேசாம வாங்க முடியல உங்களால. என் பையன் வாங்கின மார்க்குக்கு வியாபாரம் ஆக்கப் பட்ட படிப்பை நான் பேரம் பேசக் கூடாதா? என்ன நியாயம் சார் உங்களுது?” முகச் சுளிப்புடன் முகத்திரையை கிழித்தார் ரமணி.
“குல்ஃபியும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம். போ”, என்று திரும்பியவரை பார்த்து,
“நீங்க சொல்லிட்டீங்க ஈசியா. ஆனா என் பையனுக்கு படிப்பே வேணாம்-னு என்னால சொல்ல முடியலையே! சொன்னா படிக்காத அறிவிளி-ன்னு எங்க மேலையே பழி போட்டுட்டு அடுத்த வேலையை பாக்கப் போயிடுவீங்க. பணம் சம்பாதிக்க படிப்பு வேணும்; ஆனா படிக்க முதலில் பணம் வேணும்; விசித்திரமான சேர்க்கை தான் சார்”, என்று கூறிவிட்டு மறுபடியும் மணி ஆட்டினார்.
அந்த சம்பவம் நினைவிலிருந்து அகண்டபோது அவர் வீடு வந்துவிடவில்லை. ஆனால் பயம் போய்விட்டிருந்தது. காரணம், துன்பத்திலிருந்து கோபம் பிறந்துவிட்டிருந்தது. அவர் நினைப்பு மறுபடியும் குருநாதரின் அறிவுரையை நினைத்துப் பார்க்க,
“என்னை போன்ற ஏழைக்கு எதுக்கு ரெண்டு காலுக்கு நடுவுல மணி? மணி இருந்தா தானே புள்ள பொறக்கும்? புள்ளை இருந்தா தானே மானத்தை விட்டு கண்டவன் காலை பிடிக்கணும்? நாளையிலிருந்து பத்து கிலோ மீட்டர் ஓட்டப் போறேன். சூனியம் புடிச்ச என் வம்சத்துக்கு இனி புள்ளையே வேண்டாம் டா!”, மறுபடியும் அவர் கை, சைக்கிள்-இன் கைய்பிடியின் மேல் குத்துவிட்டது. அதை பார்த்த எனக்கு, பணமிருந்தும் மனம் வலித்தது. விசித்திரச் சேர்கை தான்!
- பயணத்தின் மஞ்சள் நிறம்..
- விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை
- இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி
- ஏமாற்றம்
- ஆர்வமழை
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.
- குற்றங்கள்
- வாய்ப்பு:-
- அவரைக்கொடிகள் இலவமாய்
- விசித்திர சேர்க்கை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10
- தியாகங்கள் புரிவதில்லை
- ஒன்றின்மேல் பற்று
- முடிவை நோக்கி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
- காதல் பரிசு
- எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
- செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
- பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
- தையல் கனவு
- மீளா நிழல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
- அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
- குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3
- உபாதை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42
- பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை
- புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
- திமுக அவலத்தின் உச்சம்