”முந்தானை முடிச்சு.”

This entry is part 23 of 47 in the series 31 ஜூலை 2011

வரும்போது மகளுக்கு
பலகாரம் வாங்கியாங்க..
ராட்டையில் பட்டு கோர்த்தபடி சொன்னாள்.
சுற்றுலா வண்டி கும்மாளக்குரலில்
குற்றாலத்துக்கு குளிக்கப்போனவனுக்கு
சரியா காது கேக்கல போலும்.

அப்படியே எனக்கும் வயித்துவலி
மாத்திரை ஏதாவது வேணும்..
தறியில் நெய்துகொண்டு கேட்டாள்.
சினிமா கொட்டகை
சீட்டி ஒலியில் மறந்து விட்டான் போலும்

பாவி மகளை பத்தாவது அனுப்ப
பணத்துக்கு வழியில்ல..
சரிகை சிக்கெடுத்தவள் குரலை
மேலத்தெரு ராக்கம்மா மடியில்
கரைத்து விட்டான் போலும்

ஓடிப்போன மகளை
எங்காவது பார்த்தீங்களா..
புடவையை நீட்டி மடித்தவள்
தேம்பலை சீட்டுக்கட்டுக்குள்
ஒளித்துவைக்க போய்விட்டான் போலும்.

ஒத்த ரூவா ஊறுகாயோடு
பனைமரத்தடியில் படுத்திருப்பான்.
பார்த்தா சொல்லி அனுப்புங்க..
உத்தரத்துல கட்டிய புடவையில்
கழுத்து மாட்டி தொங்குனவள
அவுத்து கிடத்த சீக்கிரம் வான்னு..

வெங்கடேசன்.செ

Series Navigationகுதிரே குதிரே ஜானானா361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்
author

வெங்கடேசன்.செ

Similar Posts

2 Comments

 1. Avatar
  hema says:

  நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள் தம்பி….நாங்கள் சுவைத்து மகிழ இன்னும் நெறைய படைப்புகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் …வாழ்த்துக்கள் என் செல்லத் தம்பிக்கு

 2. Avatar
  க.உதயகுமார் says:

  கதையில் கவிதை சொல்லுதல் ஒரு யுத்தி …. கவிதையில் கதை சொல்லுதல் இன்னொரு யுத்தி ….

  இன்னொரு வாழ்க்கையை , இன்னொரு வலியை பதிவுசெய்யும் போது தான் , கவிதை கவுரவப்படும் !!!

  கதையை கதையாக சொல்லுதல் எளிது . கதையை கவிதையாக சொல்லுதல் கொஞ்சம் மெனக்கெடவேண்டும் . சொல்லவரும் செய்தியை , தேர்ந்த வார்த்தைகள் கொண்டு பின்னுதல் இன்னொரு சவால் . இவைஅனைத்தும் தாண்டி , கதை நடக்கும் பகுதியை பொருத்தே, வட்டார மொழியை ஆள வேண்டும் .

  கவிஞர் வெங்கடேசன் , கதை, சொல்லவந்த வார்த்தைகள் , வட்டார மொழி அத்தனையும் பிசிறில்லாமல் செய்து கவிதையாக திண்ணையில் கிடத்திவிட்டார் .

  திண்ணைகளில் வெட்டி நியாயம் தான் பெரும்பாலும் பேசுவார்கள் . “வீடு தோறும் திண்ணை கட்டி , வெறும் பேச்சு வெள்ளை வெட்டி ” என்று ஒரு திரைப்பட பாடலில் கண்ணதாசன் சொல்லுவார் .

  ஆனால் , திண்ணை வெட்டி பேச்சு பேசுவதற்கான இடம் அல்ல , என்று அண்ணன் நிரூபித்துவிட்டார் . அது வெறும் திண்ணையா …? ஹ்ம்ம்…இன்றிலிருந்து அது “சிறப்பு வாய்ந்த திண்ணையாக ” பதவி உயர்வு பெறுகிறது …..!!!

  “வரும்போது பலகாரம் வாங்கியாங்க ” என்று பெண்ணின் மீது அக்கறை கொள்ளுகிற தாய் , “மகளை பத்தாவது அனுப்பனும் ” என மகளின் எதிர்காலம் மீது அக்கறை கொள்ளுகிற தாய் , “ஓடிப்போன மகளை எங்காவது பாதீங்களா ” என மூக்கை சிந்துகையில் பதபதைக்கிற தாய் , கடைசியில் தன்னையே உத்திரத்தில் தொங்கவிட்ட போது கவிதையின் முடிவில் அனுதாபத்தை அள்ளுகிறாள் . ஒரு கட்டத்தில் அவனை சுமந்தவள் , வாழ்நாளெல்லாம் அவள் மகளை மாரிலும் மடியிலும் தோளிலும் சுமந்தவளை கடைசியில் உத்தரம் தான் சுமந்திருக்கிறது … வலிமிகுந்த நெசவுபெண்ணின் வாழ்க்கை ….

  இந்த முந்தானைய தான் , கையாலாகாத ஒருத்தனுக்கு விரிச்சேன் , இந்த முந்தானையில முகம்மூடித்தான் பாவி மவளுக்கு பால் கொடுத்தேன் , இனி என்ன இருக்கு எனக்கு “இந்த முந்தானயிலையே முடிச்ச போட்டு இருக்கிகிறேன் ” என்கிற அந்த தறி நெய்த தாயின் எண்ண ஓட்டம் தான் , தறியை போலவே பெருத்த சத்தத்தை கொடுத்துகொண்டே , என்னை உலுக்கியது .

  கரிசல் எழுத்தாளர் திரு கி . ராஜநாராயணனின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட கதை மாந்தர்களையும் , இப்படிப்பட்ட வட்டார மொழிகளையும் அனாயாசமாய் கையாள்வார் . எழுத்தாளர் எஸ்.ரா அதனாலேயே அவரை “பீஷம்ர்” என சொல்லுவார் . எனக்கு பிடித்த கதை சொல்லி கி.ரா தான் .

  ஆனால் அவர் கவிதை எழுதுவதில்லை . எனக்கு மிகவும் பரிட்சயமான ஒருவர் கவிதை எழுதுவார் , சித்திரங்கள் வரைவார் , என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் . இன்றைக்கு “கதை சொல்லியாகவும் ” தன்னை வெளிபடுத்தி விட்டார் .

  அண்ணா எழுதுங்கள் . எப்போதாவது தான் எழுதுகிறீர்கள் . உலுக்குகிரீர்கள் . கதையை பாட்டாக படிப்பது “நாட்டுப்புறங்களில் வெகுவாக பார்க்க முடியும் . உங்கள் இந்த கவிதையை அப்படித்தான் பார்க்கிறேன் . எனக்கு இப்படி எழுதவரவில்லையே என பொறாமையாக இருக்கிறது . இப்படி மண் மணத்தோடு நான் கவிதை எழுதியது இல்லை . என் சோகம் தாண்டி எவர் சோகமும் பதிந்ததில்லை . உங்களுக்கு கைவருகிற வித்தையை

  எனக்கு ஒரே வேண்டுகோள் அண்ணா அண்ணா . இதே கதைக்கருவை ஒரு சிறு கதையாக எழுதி அதுவும் அச்சில் வெளிவரவேண்டும் என விருப்பபடுகிறேன் .

  முந்தானை முடிச்சு “ஒரு வெள்ளந்தி தாயின் ” கவிதையான வாழ்க்கை . வலி மிகுந்த வாழ்க்கை !!!

  முடிச்சு மிக இறுக்கமாகவும் , தீர்க்கமாகவும் வாசகர் இதயத்தில் இடம்பிடித்துவிட்டது !!!

  அண்ணனின் வாசகர்களே ! உங்களோடு சேர்ந்து நானும் திண்ணைக்கு நன்றி நவில்கிறேன் !!!

  — க. உதயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *