மலைகூட மண்சுவர் ஆகும்

This entry is part 26 of 47 in the series 31 ஜூலை 2011

முன்பெல்லாம் தேதி மறக்கும் அல்லது மாதம் மறந்து போகும். இப்போதெல்லாம் வருடமே மறக்கிறது. 2011 என்பதை இன்னும் பலர் 2010 என்றுதான் எழுதுகிறார்கள். அப்பப்பா! எவ்வளவு துரித கதியில் பறக்கின்றன நாட்கள்.
நேற்றுத்தான் சக்கரவர்த்தி தொடக்கநிலை ஆறு படித்ததுபோல் ஞாபகம். இப்போது இன்னும் மூன்று மாதங்களில் ஓ நிலைத் தேர்வு எழுதும் மாணவனாக நிற்கிறான்.
அப்பா ராகவன், அம்மா சுமங்கலி, கடைக்குட்டி சக்கரா என்கிற சக்கரவர்த்தி. டோர்செட் சாலையில்தான் வாசம். சக்கராவின் பெரியக்கா புவனா வீராசாமி சாலையில் தனிக்குடித்தனம். அடுத்த அக்கா மஞ்சு அல்ஜுனிட்டில் தனிக்குடித்தனம். மூன்றாவது அக்கா சித்ரா அமெரிக்காவில் தனிக்குடித்தனம். ஆறுபேர் குடும்பம் இன்று மூன்று பேர் குடும்பகமாகி இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் அம்மா வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அந்த வாரம் பார்த்த படங்கள், அழவைத்த தொலைக்காட்சி நாடகங்கள், அனுபவங்கள் அத்தனையும் சபைக்கு வரும். பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர்கள் பகிர்ந்து கொள்வது சக்கராவின் படிப்பை மட்டுமே.
இன்று ஞாயிற்றுக் கிழமை. எல்லாரும் வழக்கம்போல் கூடிவிட்டார்கள். விவாதம் கொஞ்சம் சூடாகவே இருந்தது. சக்கரா சொன்னான்.
‘நான் தொடக்கக் கல்லூரி போகமாட்டேன். பல்துறைக் கல்லூரிதான் போவேன். ஏதேனும் கலைத் துறையில்தான் சேர்வேன். எனக்குப் பிடிக்காததை ஏன் படிக்கச் சொல்கிறீர்கள்?’
பெரியக்கா புவனா சொன்னாள்.
‘உன்னால் 20 புள்ளிக்குக் குறைவாக மதிப்பெண் பெறமுடியாது என்று உனக்கே தெரிந்திருக்கிறது. அதை நியாயப்படுத்தத்தான் தொடக்கக் கல்லூரி வேண்டாம் என்கிறாய். பாட்டு நடனம் நடிப்பு என்று வீணடிக்கிறாய் நேரத்தை. இதை நீ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நல்ல கல்வித் தகுதி இல்லாமல் இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது தம்பீ.’
அடுத்த அக்கா மஞ்சு சொன்னாள்.
‘தம்பீ, உன் விருப்பம் சரிதான். ஆனால் என் அனுபவத்தைச் சொல்கிறேன். நானும் பல்துறைக் கல்லூரிக்குத்தான் போவேன் என்று அடம்பிடித்தேன். அதன்படியே போனேன். நான் விரும்பிய செய்தித் துறை எனக்குக் கிடைக்கவில்லை. ஆங்கில மதிப்பெண் போதவில்லை. பிறகு பல வழிகளில் முயன்றதில் நான் விரும்பிய பாடம் கிடைத்தது. ஆனால் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. தூரமான கல்லூரியில் கிடைத்தது. மூன்று
2
ஆண்டுகள் சிரமப் பட்டேன். நீயும் அப்படித்தான் விரும்புகிறாய். அதற்குரிய மதிப்பெண் முக்கியம். இப்போதைக்கு உன் நோக்கம் 20 புள்ளிக்குக் குறைவான மதிப்பெண் என்பதாகவே இருக்கவேண்டும். ‘
சக்கரா சொன்னான்.
‘சித்ராவிடம் பேசிவிட்டேன். தேர்வுகள் முடிந்தவுடன் அமெரிக்கா வந்துவிடு. இங்குள்ள பல்துறைக் கல்லூரியில் நடனம் நடிப்பு பிரிவில் சேர்த்து விடுகிறேன். நீ கவலைப்படாதே என்று உறுதியாகச் சொன்னது. என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள். மீண்டும் சீருடை. மூட்டைப் புத்தகங்கள் எனக்குப் பிடிக்கவே இல்லை. சீருடை இல்லை என்பதே எனக்கு மாபெரும் விடுதலை. தயவுசெய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.’
சும்மாவே இருந்த அம்மா சுமங்கலி சொன்னார்.
‘சித்ரா அப்படியா சொன்னாள். அவளை உடனே அழை. அமெரிக்க நேரம் இரவு 11 மணிதான். விழித்துக் கொண்டுதான் இருப்பாள். உடனே போடு. மறுபடியும் பேசு. ஒலிப்பானைத் திறந்துவிடு. அவள் என்ன சொல்கிறாள் என்று அனைவரும் கேட்போம். ‘
சக்கரா சித்ராவை அழைத்தான். உடனே தொலைபேசிக்கு வந்துவிட்டாள் சித்ரா. சக்கர்த்திதான் பேச்சைத் துவக்கினான்.
‘சித்ரா! தேர்வு முடிந்ததும் என்னை நீ அமெரிக்காவுக்கு வரச்சொன்னது உண்மைதானே. அப்பாவிடன் சொல்லி மற்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் சித்ரா.’
சித்ரா சொன்னாள். ‘கொஞ்சம் பொறு தம்பீ. இங்குள்ள கல்லூரியில் கேட்டேன். ஆண்டுக்கு பதினாறாயிரம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டுமாம். அதையும் முன்கூட்டியே தர வேண்டுமாம். வலைத்தள முகவரி தருகிறேன். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய். அங்குள்ள கல்வி அமைச்சகத்தில் உதவித் தொகைக்கு முயற்சி செய். உதவித் தொகை இல்லாமல் இங்கு வந்து படிப்பது சிரமம்தான் தம்பீ. ஆனாலும் இங்கு அனுமதி கிடைக்க மதிப்பெண் முக்கியம் ’
சுமங்கலி தொலைபேசியை வாங்கினார். ‘சரி சித்ரா நீ தூங்கு. நாளை பேசுவோம்.’ தொடர்பை வெட்டிவிட்டு சுமங்கலி தொடர்ந்தார். ‘பார்த்தாயா சக்கரா. முதலில் ஒன்று சொல்வார்கள். நெருங்கினால் வேறு ஒன்று சொல்வார்கள். எதையும் எதிர்பார்க்காதே. உன் பொறுப்பைப் புரிந்துகொள். தொடக்கக்கல்லூரி வேண்டாமென்றால் விட்டுவிடு. நான் கட்டாயப் படுத்தவில்லை.’
புவனா உடனே சீறினாள். ‘இப்படியே விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து அவனைக் குட்டிச் சுவராக்கப் போகிறீர்கள்.’ புவனா சொல்லி முடிப்பதற்கும் ராகவன் நுழைவதற்கும் சரியாக இருந்தது. சோபாவில் ஓரிடம் காலியாக இருந்தது. ராகவன் அமர்ந்து கொண்டார். வாழ்க்கையில் அவர் இன்பமாக இருக்கும் நொடிகள் பிள்ளைகள் அனைவரோடும் இருக்கும் இந்த நொடிகள் தான். உடை மாற்றுவதில் கூட சில
3
நொடிகள் வீணாவதை அவர் விரும்பவில்லை. ராகவன் தொடர்ந்தார். ‘என்ன புவனா? உன் குரல் மின்தூக்கி வரைக் கேட்டது. என்ன பிரச்சினை?’ ‘எல்லாம் உங்களின் அருமைப் பிள்ளை சக்கரா பற்றித்தான். அவன் தொடக்கக் கல்லூரி போகமாட்டானாம். அம்மா வக்காலத்து வாங்குகிறார்கள்.’ இப்போது ராகவன் தொடர்ந்தார்.
‘ஒன்று மட்டும் சொல்கிறேன் சக்கரா. நீ என்ன வேண்டுமானாலும் படி. உன் விருப்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு வாழ்க்கை உண்மையைப் புரிந்து கொள். நேற்று நாம் எடுத்த முடிவு இன்று முட்டாள்த்தனமாகப்படும். இன்று எடுக்கும் முடிவு நாளை முட்டாள்த்தனமாகத் தெரியும். எந்தத் தீர்மானமும் நிரந்தரமில்லை. உனக்கு மிகச் சிறந்த மதிப்பெண் கிடைக்கலாம். உனக்குப் பிரியமான தோழிகள் தோழர்கள் தொடக்கக் கல்லூரியில் சேரலாம். இரண்டு ஆண்டுகள் அவர்கள் நட்புக்காக நீயும் சேர்ந்து படிக்க விரும்பலாம்.’ மஞ்சு குறுக்கிட்டாள். ‘சக்கராவுக்கு தோழிகள் உண்டா?’ ராகவன் தொடர்ந்தார். இல்லாவிட்டால் சக்கராவிடம் ஏதோ கோளாறு என்றுதான் அர்த்தம்’
எல்லாரும் சிரித்தார்கள். சக்கரா வெட்கப்பட்டான். ‘சரிதானப்பா. பாகற்காயை சர்க்கரையாக மாற்ற உங்களுக்கு மட்டும் தானப்பா தெரிகிறது.’ எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். பேச்சு திசை திரும்பியது. அதற்குமுன் சக்கராவைப் பற்றி சில தகவல்கள்.
சமீபத்தில்தான் ஒரு பொது நிகழ்ச்சியில் சக்கராவின் நடனத்தை ஓர் அங்கமாக ஏற்பாடு செய்தார் ராகவன். அந்த நடனத்தைக் கண்ட நண்பர்கள் ராகவனிடம் சொன்னார்கள். ‘உன் மகனிடம் பிரமிப்பூட்டும் கலை இருக்கிறது. அந்தக் கலைகளுக்கு நீ காவலனாய் இரு.’ ஏற்கனவே சக்கரா ஏசியாவின் நடனம் நடிப்பு பற்றிய ஒரு வலைத் தளத்தில் தன் விபரங்களைப் பதிவு செய்திருந்தான். கடந்த மே மாதம் ‘ரைம்ஸ்’ என்ற குழுவின் ஓர் ஆங்கில நாடகம் தொலைக்காட்சியில் இடம்பெற்றது. அதில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சக்கரா நடித்திருந்தான். அந்த நாடகத்தை யூடியூப்பில் இணைத்துவிட்டான் சக்கரா. அவனின் நடன அசைவுகள் அவனே கண்டுபிடித்தது. அதைக் கற்கவுமில்லை. அதற்கான பயிற்சிகள் ஏதும் செய்ததுமில்லை. அந்த இயற்கையான திறமை ராகவனை பலமுறை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது. ஆனாலும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.
இப்போது நாம் கதைக்கு வருவோம். எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சக்கரா சொன்னான். ‘எங்கள் பள்ளியின் ஆசிரியர் தின விழாவிற்கு உள்துறை அமைச்சரை அழைத்திருக்கிறார்கள் அப்பா. மிகப் பெரிதாக ஏற்பாடுகள் நடக்கின்றன. மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக ஒரே ஒரு நடனம் ஒரே ஒரு பாட்டுத்தான். அந்த ஒரே ஒரு நடனம் என்னுடையது.’ ‘பாராட்டுக்களடா மகனே.’ சாப்பிட்டுக் கொண்டே மகனை முத்தமிட்டார் ராகவன். சக்கரா தொடர்ந்தான். ‘ரைம்ஸ் குழுவும் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறதப்பா. அதோடு உங்களுக்கும் அம்மாவுக்கும் முதல் வரிசையில் சிறப்பு இருக்கை தருவார்களாம்.’

4
ஆசிரியர் தின விழா. சம்பிரதாய நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதோ சக்கராவின் நடனம் தொடங்கப் போகிறது. அறிவிப்பாளர் சொன்னார். ‘இதோ! கைகால் முளைத்த புயல் ஒன்று அரங்குக்குள் வீசப்போகிறது. மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் நடனப்புயல் சக்கரா!!’ என்று சொல்லிமுடிப்பதற்குள் சக்கரா மேடையில் தோன்றினான். தொடக்க இசையில் இதயங்கள் அதிர்ந்தன. மூன்று நிமிடங்கள். யாருமே கண் சிமிட்டவில்லை. நடனம் முடிந்தது. கரவொலி அடங்க வெகுநேரமானது. உள்துறை அமைச்சர் சக்கராவைக் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். ரைம்ஸ் குழுவின் தலைவர் ஜேம்ஸ் சக்கராவை அப்படியே அணைத்துக் கொண்டார். ராகவனை ஜேம்ஸ் பார்க்க விரும்பினார். சக்கரா அறிமுகப் படுத்தினான். ஜேம்ஸ் சொன்னார். ‘உங்கள் பிள்ளையிடன் அசாத்தியத் திறமை இருக்கிறது. நாளை என் அலுவலகம் வரமுடியுமா? ஒரு முக்கியமான ஆலோசனை உங்களோடு.’ ‘முடியும்’ என்றார் ராகவன். எல்லாரும் கலைந்தார்கள்.
மறுநாள். ஜேம்ஸ் அலுவலகத்தில் ராகவன். ஜேம்ஸ் சொன்னார்.
‘இந்த ஆண்டு இறுதியில் எங்களின் அடுத்த தொடரைத் தொடங்கவிருக்கிறோம். மொத்தப் படப்பிடிப்பும் சிகாகோவில்தான். சக்கரவர்த்திக்கு ஒரு முக்கியமான பாத்திரம் இருக்கிறது. நடனத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. சிகாகோவின் நடிப்பு நடனம் தொடர்பான கலைக் கல்லூரியில் நான் நிர்வாக உறுப்பினர். உங்கள் மகனை அதில் சேர்த்துவிடுகிறேன். ஆண்டுக்கு சிங்கப்பூர் வெள்ளி 36000 தருகிறேன். அதன் 30 சதவீதமான 10,800ஐ இப்போதே வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்த கையோடு சிகாகோவுக்கு சக்கரவர்த்தி வரவேண்டும். நீங்களும் வரலாம். எல்லாச் செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவு உங்கள் கையில். நாளை வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் முடிவு தெரிந்த பிறகுதான் நான் வேறு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.’
ராகவன் கண்களை இறுக்கமின்றி மூடி யோசித்தார். சில கண்ணீர்த் துளிகள் நாசிவரை வந்து தயங்கி நின்றன. மகனின் எந்த விருப்பத்திற்கும் ராகவன் மறுப்புச் சொன்னதில்லை. சக்கரவர்த்தியின் மாபெரும் கனவு இது. எப்படி ராகவனால் மறுக்கமுடியும். கண்களைத் திறந்தார். முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜேம்ஸ். ராகவன் நெகிழ்ந்தார். ‘நாளை என்ன. இன்றே சொல்கிறேன். ‘எனக்குச் சம்மதம்.’ ராகவனின் அந்த ‘சம்மதம்’ என்ற சொல் சக்கரவர்த்தி என்ற சாதனைக் கலைஞனின் வரலாற்றுச் சரித்திரத்தின் முதற் சொல்லானது.
உற்றார் உறவினர் உடன்பிறந்தோர் என்று எத்தனை பேர் எதிர்த்தாலென்ன? ஒரு மகனுக்குப் புரிந்துணர்வு கொண்ட அப்பா போதும். மலைகூட மண்சுவர் ஆகும்
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சிசெதில்களின் பெருமூச்சு..
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    Seshadri says:

    Very good story. in the same time i felt bad about my self, i don’t have these kind of people around me.to encourage in the interest area.

    now i am poor IT fellow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *