தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !

This entry is part 37 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

பேராசிரியர்  பெஞ்சமின் லெபோ, பிரான்சு

‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்டுச்  செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப்  பூக்கள்.  காரணம்,  அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர்  ம. இலெ.தங்கப்பா அவர்கள்  அடியேனின் நண்பர்.   புதுச்சேரித் தாகூர்  கலைக் கல்லூரியில்  1970 -ஆம் ஆண்டு,  பணியில் யான் சேர்ந்த போது,  அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார்.

“இவர்தாம் தங்கப்பா…” – என் இனிய  நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது ஏறிட்டுப் பார்த்தேன் : படிய வாரிய முடிகள் ; பெரிய  மீசை ; ஊடுருவும் கணகள் ; கூரான மூக்கு ; முதிராத முகம் ; அதிராத குரல் ; அழகான தமிழ் ….
எங்களுக்குள் நட்பு முளை விட்டது ; கிளை விட்டது, நாள் தோறும் வளர்ந்தது!

இந்த முக்கோண நட்பில் நாற்கோணமாக வந்து சேர்ந்தார் நண்பர் பேராசிரியர் க. நாராயணன். தத்துவப் பேராசிரியர்.
(அப்போது தத்துவத் துறை உருவாகா நிலை).
எங்களுடன்  பணியாற்றிய அருமை நண்பர்கள்  பேராசிரியர் சு. சுப்பிரமணியன்,  பேரா. நாகப்ப. நாச்சியப்பன்… (இவ்விருவரும்  அமரர் ஆகிவிட்டனர்)…
பேரா சி சக்திவேல் (சக்திப் புயல்), பேரா. சாயபு மரைக்காயர், பேரா  எ. சோதி…..எனத் தமிழ்த்  துறை பல்கிப் பெருகிய பொற்காலம் அது.
ஏனைய துறைகள் போல் அல்லாது, எங்கள் தமிழ்த் துறை  அப்போதெல்லாம் வெகு கலகலப்பாகவே இருக்கும்.
ஒய்வு நேரங்களில் நாங்கள் அரட்டை அடிப்பது உண்டு.
வெற்று அரட்டை இல்லை : பலவேறு பொருள் பற்றிப்  பொருள் நிறைந்த அலசல் .
எப்போதும் எங்கள் தமிழ்த் துறையிலேயே இருக்கும் பேராசிரியர் க. நாராயணன் நல்ல பல கருத்துகளை நடுவில் வைப்பார்.
இந்த அரட்டைகளில் கலந்துகொண்டாலும் பேரா தங்கப்பா  தேவை இல்லாமல் வாய் திறக்க மாட்டார்.
அப்படியே பேச நேர்ந்தாலும்  அளவோடுதான் பேசுவார். சில சொல்லிக் கேட்போரைக் காமுறவைக்கும் கலையில் வல்லவர் தங்கப்பா !

தமிழ்த் துறையில் பணியாற்றினாலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் இருவர் அங்கே உண்டு என அடிக்கடி பாராட்டியவர்
அத்துறையின் பேரா. (அமரர்) மா. ரா. பூபதி. அவர் குறிப்பிடும் அந்த இருவரில்  ஒருவர்    தங்கப்பா. (மற்றவர் ? அடியேன்தான்).
அப்போது எல்லாக் கடிதப் போக்குவரத்துகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். எனவே  ஆங்கிலத்தில் கடிதம் வரையப்  பேரா. பூபதி,
தங்கப்பாவைத்தான்    நாடுவார் ; இல்லெனின் என்னைத் தேடுவார்.  தங்கப்பாவின் ஆங்கிலப் புலமை கண்டு  பெரிதும் வியந்திருக்கிறேன்.
அச்சமயம் சங்கப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
(அவைதாம், பின்னர் ‘Hues And Harmonies From An Ancient Land’ என்ற தலைப்பில் வெளிவந்து அவரை வெளிஉலகுக்கு அறிமுகப்படுத்தியது.)
இவர் மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்ட (அமெரிக்காவில்  வாழ்ந்த) மொழிபெயர்ப்பாளர்  திரு ஏ.கே . இராமானுசம் இவரோடு மடல்வழித் தொடர்பை
ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய மொழிபெயர்ப்பைப் பற்றி நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) ‘திண்ணையில்’ ஆராய்சிக் கட்டுரையே
எழுதி இருக்கிறார்.(காண்க : ‘மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா’ – தேவமைந்தன் –
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60704059&format=html&edition_id=20070405).

சென்ற  ஆண்டு, தங்கப்பா மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் LOVE STANDS ALONE என்ற பெயரில்…நூலொன்று வெளி வந்தது.

பேராசிரியர் தங்கப்பா அவர்கள் சங்கப்பாடல்களை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதை அறிஞர் உலகம் குறிப்பிடுவது உண்டு.அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின்(168 பாடல்கள்) ஆங்கில மொழிபெயர்ப்புப் புகழ்பெற்ற புது தில்லி – பெங்குவின் நிறுவனத்தின்(Penguin Books India) வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
(காண்க : http://muelangovan.blogspot.com/2010/02/love-stands-alone.html).
இப்படிப் பழங்கவிதைகள் மொழிபெயர்ப்பில் முடி சூடா மன்னராய்த்  திகழும் தங்கப்பா, மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதுவதிலும்  வல்லவர் ;
‘ஆந்தைப்பாட்டு’, ‘வேப்பங்கனிகள்’, ‘கள்ளும் மொந்தையும்’, ‘மயக்குறு மக்கள்’, ‘பின்னிருந்து ஒரு குரல்’, ‘பனிப்பாறை நுனிகள்’, ‘சோளக்கொல்லை பொம்மை’ முதலியவை தங்கப்பாவின்  தங்கப் பாக்கள் (கவிதை நூல்கள்). இவர் எழுதிய கவிதை ஒன்றை, ஒரு சமயம்,  எங்களிடம் படித்துக்காட்டினார் ; அதில் சாலை ஓரத்திலே,  சிறுவர்கள் காலைக் கடன் கழிப்பதை முறுக்கு பிழிவதாக உருவகப்படுத்தி இருந்தார். அதைப் பற்றி அவரைக் கேலி செய்தோம் நாங்கள். புன்னகையோடு எங்கள் கேலியை  ஏற்றுக்கொண்டார், அவர்.  அக்கவிதை எந்த அளவுக்கு உயிரோட்டமாக இருந்தது என்றால், முறுக்கு என்ற சொல்லே  எங்களுக்கு  வெறுப்பாகிப்  போனது.

மொழிபெயர்ப்பாளர், கவிஞர் என இருமுகம் கொண்ட தங்கப்பாவுக்கு மூன்றாம்  முகமும் உண்டு . இவரின் உரை  நடைத்  தமிழும் உயர் நடைத்  தமிழே! இதுதான் இவரின் மூன்றாம்  முகம்.
கடந்த  ஆண்டு   வெளிவந்த இவரின் உரை நடைப்  படைப்புகள் சில : ‘ மொழி  மானம் ‘  (http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=119), ‘தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்‘, ‘மாந்தருள் பன்றிகள்!‘,
பயிற்றுமொழி எது என்று தீர்மானிக்கப் பெற்றோருக்கு உரிமை உண்டா?‘, ‘மக்களியக்கம் வேண்டும்‘ (காண்க :http://www.keetru.com/index.php?option=com_aisection&id=12781&Itemid=139)
‘தங்கப்பாவின் வலிமைகளுள் மற்றொன்று அவரது தமிழ் நடை. கவிதையிலும் சரி, உரையிலும் சரி கலப்பு நீங்கிய தெளிவுமிக்கது அது. தீவிரமான படைப்பெழுத்தும் மொழிபெயர்ப்பும் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் கிண்டலும் கேலியும்கூடத் தங்கப்பாவுக்கு மிக எளிதாகக் கைகூடும்’. இவரை  நேர்கண்டு காலச்சுவட்டில் எழுதிய திரு பழ. அதியமான் கூற்று உண்மையிலும்  உண்மையே! (காண்க : http://www.kalachuvadu.com/issue-121/page101.asp).

தென்மொழி ஆசிரியர் பெருஞ் சித்திரனாருடன் கைகோர்த்து இவர் ஆற்றிய தமிழ்ப்  பணிகள் ஏராளம்.
புதுவை  இலக்கணப்  புலி  முனைவர் இரா.திருமுருகன் அவர்களோடு இணைந்து தெளி தமிழ் வழியே தங்கப்பா ஆற்றிய , ஆற்றிவரும் மணிகளும் அதிகம்.
இவர் தமிழ்ப் பற்றால் எனக்கு விளைந்த நன்மையை  இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும் (கொஞ்சம்  தன்  புராணமாக  அஃது அமைந்தாலும்!).
அடியேன் அருந்தமிழோடு அறிவியலும் பயின்று பட்டம் வாங்கியவன். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய போது, அறிவியல் படிக்கும் (என்)  மாணவர்களுக்கு அவரவர் துறை சார்ந்த பல செய்திகளை வகுப்பில் கூறி அவர்கள் ஆர்வத்தைத் தூண்டுவது வழக்கம். அவர்கள், தத்தம் துறை பற்றி என்னிடம் விவாதிக்கவும் செய்வார்கள். (  இனி,  சில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுகிறேன் ; அருள்கூர்ந்து பொறுத்தருள்க!).

Physics மாணவர்கள் சங்கத்தில் சிறப்புரை நிகழ்த்த இருந்த என் மாணவர் ஒருவர் என்னை அணுகினார். “நல்ல தலைப்பு  ஒன்று தாருங்கள், ஐயா!”  – அவர் வேண்டுகோள்  இது.  பல சிந்தனைகளுக்குப் பிறகு, ‘Cryogenics’ பற்றிப் பேசச் சொன்னேன். அது பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.(இப்போதும் இது பற்றிப் பலரும் அறியார்!). அதைப்  பற்றி விளக்கி  , அவருக்காக நூலகம் சென்று பல நூல்கள், குறிப்புகள்… கொண்டுவந்து தந்தேன். அம்மாணவரும்  தன் உரையை  (அரை மணி நேரம்) நிகழ்த்தினார்.  செம அறுப்பு! சொதப்பு சொதப்பு எனச் சொதப்பிவிட்டார் அவர்.பலரும் என்னைத் திட்டித்  தீர்த்தனர். பின்னர் ஒரு முறை கணிதம் , விலங்கியல், உயிரியல்… எனப் பல துறை பேராசிரியர்கள் Physics மாணவர்கள் சங்கத்தில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டனர். அப்போது,  என்னுரையும்  இடம் பெற வேண்டும் என என் மாணவர்கள் விரும்பினார்கள். அத்துறைத் தலைவரை அணுகி அவர்களே அனுமதி பெற்று வந்தார்கள். என் துறைத்தலைவரும் (பேரா. பூபதி)  ஒப்புதல் தந்தார். தலைப்பு? என் மாணவர் அறுத்துச் சொதப்பிய அதே தலைப்பில் பேசலாம் என முடிவெடுத்தேன். (மாணவருக்காகச் சேகரித்த   தவல்கள் கைவசம் உள்ளனவே என்ற நினைப்பு தோள் கொடுத்தது!) உரை நிகழ்த்த ஒரு வாரம் இருக்கும்.

இது பற்றிக் கேள்விப்பட்ட நண்பர் தங்கப்பா, “என்ன ஐயா, புதிய  தலைப்பில் அறிவியல் துறையில் பேசப் போகிறீர்களாமே! உங்கள் உரை ஆங்கிலத்திலா?”  என்று சாதாரணமாகக் கேட்டார். “ஆம்” என்றேன். உடனே, சண்டைக்கே வந்துவிட்டார்.
“ஆங்கிலத்தில் உரையாற்ற பெஞ்சமின் எதற்கு? அந்த உரையைத் தமிழிலே நீங்கள்  நிகழ்த்தினால் அது சாதனை!” என்று  அவர் கூறவும் திகைத்துப் போய் விட்டேன்.
“எப்படி ஐயா  முடியும்? எடுத்துக்கொண்ட  தலைப்போ, உயர் அறிவியல் (higher physics) ; அறிவியல்  முதுகலை  மாணவர்களே (M.Sc) அறியாத பாடம் இது! ஏன் பேராசிரியர்களுக்கே புரியாதது. ‘laws of thermodynamics, absolute zero,  entropy,  differentiation, integration…என  ஏராளமான கலைச் சொற்கள் உண்டு…. முடியாது, முடியாது தமிழில் இவற்றைச்  சொல்ல முடியாது.   ‘ cryogenics’ என்பதை  எப்படிச்  சொல்வீர்கள்?” என்று மறுத்தேன்.

“உங்களால் முடியும் பெஞ்சமின்! உங்களால் மட்டுமே முடியும். முயற்சி  செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு வகுப்புக்குப் போய்விட்டார்.
செய்யலாமா? செய்ய முடியுமா? … அவர் சொற்கள் உள்ளத்தில் சுழன்றன! முடியும் என்றொரு பொறி பறந்தது  ; முடிக்கவேண்டும் என்ற வெறி  பிறந்தது.
இரவும் பகலும் உழைத்தேன் ; பல கலைச் சொற்களுக்கு ஈடான (சரியோ தவறோ) தமிழ்ச்  சொற்களை உருவாக்கினேன்.
என் உரை தமிழில் இருக்கும் என நான் அறிவித்தபோது அனைவருமே திகைத்தனர். ஆனால் எவருமே தடை சொல்லவில்லை.
அந்த நாளும் வந்தது. தமிழ்த் துறையில் இருந்து என்  நண்பர் பேரா சோதி (சிறுவர்களுக்குப் பல நூலகள் எழுதி வெளியிட்டுப்  பதிப்பகம்
தொடங்கி அதில் கொடி கட்டிப் பறப்பவர் ) என்னுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டார்.
(இங்கே கூறும் அத்தனைக்கும் மெயச்சான்றாக இருப்பவர் அவர்) .

நிகழ்ச்சி நடைபெறும் அறைக்குள்  நுழைகிறோம். பேராசிரியர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று  வரவேற்றனர்.  கல்லூரி  முதல்வர் கணித இயல் பேரா. பாலகிருட்டிணன் பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டதால் அவர் வரவில்லை. என்னை ஊக்குவித்த நண்பர் தங்கப்பாவும் வர இயலாமல் போனது. அறிவியல் வகுப்பு மாணவர்கள் மட்டும் அல்லாமல் கலை வகுப்பு மாணவர்கள் பலரும்  வந்திருந்தனர். என்னை வரவேற்ற மாணவர் தலைவர் (இரண்டாம் மொழியாகப் பிரஞ்சு  பயிலும் மாணவர் இவர்) அழகான தமிழில் வரவேற்றார். என்னை அறிமுகப் படுத்திப் பேசிய (physics ) இயல்பியல் பேரா சங்கரன் Physics head of the Department ;என்னை நன்கு அறிந்தவர் ; யான் அவர் மாணவன்) தமிழில் பேசினார். இறுதியில் நன்றி நவின்றவரும்  தமிழில்தான்  நன்றி கூறினார்.
என் உரையைத் தமிழில் தொடங்கினேன்.  அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் இன்று வரை  எந்தக் கல்லூரியிலும் நடை பெறாத நிகழ்ச்சியாக அமைந்தது அது.

‘Cryogenics, the science of super cold’ என்றால் என்ன என்பதைத் தமிழில் விளக்கிப் பின் இதனைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன். சிலர் ஏதேதோ பதில் உரைத்தனர். இறுதியில் ‘நனி தண்ணியல்’ (மிகு குளிர்ச்சியை உருவாக்குவது  பற்றிய துறை) என்ற சொல்லைச் சொல்லி இது எப்படிப் பொருத்தமாக இருக்கிறது என விளக்கியதும் முதல் கைதட்டல் எழுந்தது ; பின் நகையும் சுவையுமாக உரை தொடர்ந்தது. வெப்ப இயக்க வியல் (thermodynamics), இறுதிச் சூன்யம் (absolute zero) ,  சீர்குலைவு  (entropy), பகுத்தல் (differentiation), தொகுத்தல்  (intergartion)…என  அடுக்கு  அடுக்காகக் கலைச்சொற்கள்  அறிமுகம்  ஆயின. வெப்ப  இயக்கவியலின்  மூன்று விதிகள், அவற்றின் அடிப்படையில் பிறக்கும்    இறுதிச் சூன்யம் , (இந்த  இறுதிச்  சூன்யத்தை ஏன் எட்ட முடியாது என்பற்கான கணிதச் சமன் பாடுகள்..) எனக் கோட்பாடுகள் பலவற்றையும் எளிய  தமிழில் விளக்கி இவற்றின்  அடிப்படையில் எப்படி நனிதண்ணியல்  செயல்படுகிறது, அதனால் விளையும் பயன்கள் … என்று ஒன்றரை  மணி நேரம் உரை  ஆற்றினேன். அவ்வளவும் தமிழில். எளிய இனிய தமிழில். உரை முடிந்ததும் எழும்பிய கையொலி முடியவில்லை. பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களே சொதப்பும் வெப்ப  இயக்கவியலின் விதிகள், அவற்றின் அடிப்படையில் பிறக்கும்    இறுதிச் சூன்யம்,  சீர்குலைவு   போன்றவற்றை மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியதாக  அறிவியல் துறை மாணவர்கள் என்னைப் பாராட்டினர். இந்த வெற்றிக்கு அடிப்படைக்  காரணம் என்னருமை நண்பர் தங்கப்பவே!
இது பற்றிக் கேள்விப்பட்ட அவரும் என்னைப் பெரிதும் பாராட்டினார்.
இன்று வரை இந்த நிகழ்ச்சியும் நண்பர் தங்கப்பாவும் என் உள்ளத்தி கல் வெட்டாய்ப் பதிந்துவிட்டார்கள்.

நான்காம்  முகம் ஒன்றும் தங்கப்பாவுக்கு  உண்டு.
அதுதான் மனித நேயம். இவரின் இந்த மனித நேயத்தால்என் பதவி பிழைத்த நிகழ்ச்சியும் ஒன்று இருக்கிறது.
அதனை மட்டும் சொல்லி அவர் புகழ் பாடி இக்கட்டுரையை   அவருக்குக் காணிக்கையாக்குகிறேன்.

1973-1974 இல் நடைபெற்ற நிகழ்ச்சி இது. அப்போது புதுச்சேரித் துணைநிலை ஆளுநராக இருந்தவர் மேதகு செடிலால் அவர்கள்.
பிற்படுத்தப் பட்டோருக்கே அரசுப் பணிகளில் முதலிடம் என்ற கொள்கை கொண்டவர். அந்த இனத்தைச் சேர்ந்தவருக்குத் தமிழ்த் துறையில் பேராசிரியர் பதவி தரவேண்டும் என்பதற்காக என்னைப்  பேராசிரியர்  பதவியில் இருந்து   பதவி இறக்கம்  செய்ய  அவர் திட்டம் தீட்டி இருந்தார். இது பற்றி அறிய வந்த  புதுச்சேரிக் கல்வித் துறைச் செயலர், எங்கள் கல்லூரி  முதல்வர், எங்கள் துறைத் தலைவர்  முதலியோர்  என் பதவியைக் காக்கப் பல திட்டங்கள் வகுத்தனர். பேராசிரியர் யாரவது ஒருவர் ஆறு திங்கள் விடுப்பு எடுத்தால், அதற்குள் இன்னொரு பதவியை உருவாக்கி அந்த இடத்தில்  என்னை அமர்த்தி விடலாம் என்றும் கல்வித் துறைச் செயலர் கருத்து வெளியிட்டார். ஆய்வுப் பணிக்காக விடுமுறையில் சென்று இருந்தார் முதுநிலை பேராசிரியர் ஒருவர். அவர் ஆறு மாதம் தம் விடுமுறையை நீடித்தால் கூடப் போதும். என் பதவி பறிபோகாது. மதுரையில் இருந்த அவரிடம் நேரில் போய்க் கேட்கலாம் என முடிவானது. நண்பர் பேரா (அமரர்) நாகப்ப. நாச்சியப்பன் துணையுடன் அங்கே போய் அவரைப் பார்த்து நிலைமையை விளக்கினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். என்ன செய்வது என்று கையறு நிலையில் கலங்கியபடியே புதுவை (புதுச்சேரி) திரும்பினோம். எங்கள் தோல்வியைக்  கேள்விப்பட்ட தங்கப்பா, பொருளாதார இழப்பையும் பொருட்படுத்தாது,  தானே முன்வந்து  விடுமுறை எடுக்க ஆவன செய்தார். கல்வித் துறைச் செயலர் சொல்லை நிலை நாட்டினார். என் பதவியும் பறிபோகவில்லை.  பேரா தங்கப்பா எனக்கு எந்த விதத்திலும் உறவு  இல்லை ; உதவ வேண்டிய கட்டாயமும் இல்லை. இருப்பினும் உதவ அவர் முன்  வந்தார் என்றால்  காரணம் அவருடைய இரக்க மனப்பான்மைதானே! இவர் காட்டிய இந்த மனித நேய முகத்தை யான் என்றுமே மறந்தது இல்லை.

ஆகவே தங்கப்  பாக்களைத்  தாராளமாகத் தரும்  பேராசிரியர் தங்கப்பாவுக்கு நாலு முகம் என்பது பொருத்தம்தானே!
பல்லாண்டுகள் வாழ்ந்து பயனுள்ள படைப்புகளைத் தமிழ்த் தாய்க்கு அவர் அணிவிக்க வேண்டும்.
வாழ்க அவர் புகழ்! வளர்க அவர்  படைப்புகள்!

Series Navigationபொன்மாலைப்போழுதிலானதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
author

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

Similar Posts

Comments

  1. Avatar
    Devamaindhan says:

    pazhaiya ninaivugaLaik kiLaRiya katturai. padikka makizhchchiyaay irundhadhu. ennaipppaRRiya nalla padappidippaaga amaindhuLLadhu. en makizhchchiyaiyum nanRiyaiyum theriviththuk koLkiRaen. – thangappaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *