பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)

This entry is part 3 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11 அன்று பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலின் பல பாகங்கள் இயங்கா காரணத்தால் சத்யலோகம் அடைந்தார்.

இவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் தக்ஷணவதியாகும்.

காரைக்குடியில் உள்ள அழகப்ப செடடியார் கல்லூரியில் கணிதபாடத்தில் பட்டம் பெற்றார். படித்து முடித்த பின் பழனி அருள்மிகு.பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஸ்தபதியாக 1957 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அங்கே 1960 ஆண்டு வரை பணியாற்றினார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி அவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட அரசு சிற்பகலை கல்லூரியில் அவரது தந்தை வைத்தியநாத ஸ்தபதி ஓய்வு பெற்ற பின கணபதி ஸ்தபதி முதல்வராக 1961 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். 1988 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். பின்னர் மாமல்லபுரத்தின் அருகில் உள்ள வடகடம்பாடியில் வாஸ்து வேத அறக்கட்டளை மற்றும் வாஸ்து வேத ஆராய்ச்சி மையத்தை நிறுவினர்.மேலும் அமெரிக்கன் பல்கலைகழக மயொனிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.

கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதற்கு முன் தெற்கே 10000 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்பு தீப எனும் பகுதி இருந்தாகவும் அங்கிருந்து சில்ப மரபு மயனால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அது வழி வழியாக தங்களிடம் தொடர்கிறது என கணபதி ஸ்தபதி தெரிவித்து உள்ளார். அப்படிப்பட்ட மயனுக்கு ஐந்து தலை பத்து கைகளுடன் மயனின் ஐந்திறமாக இயல், இசை,நாடகம், சிற்ப. மற்றும் கட்டக்கலை என உருவகப்படுத்தி தனது வேத ஆராய்ச்சி மையத்தில் மையத்தில அழகிய சிலை அமைத்துள்ளார்

இவரது பரம்பரையினர் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கட்டிய குஞ்சாரமாமல்லன் ராஜராஜ பெரும் தச்சன் வழி வந்தவர்கள் என சொல்லப்படுகிறது. சோழப்பேரரசின் விழ்ச்சிக்கு பின் இவர்களது முதாதையர் சிவகங்கை மருது சகோதரர்களின் அரவணைப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளையார்கோயில் இவர்களது முப்பாட்டன்களான பெரியநாயகன் ஸ்தபதி மற்றும பழம்பதி ஸதபதி ஆகியோரல் கட்டப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் இவர்களது முன்னோர்கள் நகரத்தார்-செட்டியார்களின் அரவணைப்பிற்குள் வந்து உள்ளனர். கணபதி ஸ்தபதியின் தந்தை வைத்தியநாத ஸ்தபதி கொழும்பில் உள்ள பூரணஅம்பலனிஸ்வர் கோயில், இராமேஸ்வரத்தில் உள்ள மத்துருபூதீஸ்வரர் கோயில்களை கட்டி உள்ளார். பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலின் ராஜகோபுரத்தையும் கட்டியுள்ளார்.

கணபதி ஸ்தபதி , வேதங்கள்,ஆகம சாஸ்திரங்கள், மாயமத வாஸது, கஷியப சில்ப சாஸ்திரம, மயனின் ஐந்திரம், சைவ சிந்தாந்த ஆகியவற்றில் புலமை பெற்றவர். தங்களது சமுதாயத்தை விஸ்வப்ரமின் என அழைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் இவர் விஸவகர்ம ஜகத்குரு, ப்ரணவ வேதி, வாஸ்து விஞ்ஞானி எனப் பெருமை படுத்தி அழைக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநதி அவர்கள் காலத்தில் கணபதி ஸ்தபதியினை கொண்டு சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பெரிய தேர்,. முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலையினை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன ..தஞ்சாவூர் அருகில் உள்ள பூம்புகாரில் கல்லால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் கணபதி ஸ்தபதியால் கட்ட வைக்கப்பட்டது. அங்குள்ள காட்சியகத்தில் உள்ள கண்ணகி மாதவி சிலைகள் இவரால் வடிக்கப்பட்டவையாகும்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கணபதி ஸ்தபதியினை கொண்டு தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழக நிர்வாக கட்டடம் மற்றும் நூலக கட்டடம் அதன் அழகான நுழைவாயில் ஆகியவற்றை கட்டவைத்தார்.. மேலும் ஜப்பானின் தை ஜோக்கியொ புத்த சங்கத்திற்காக சாரநாத்தில் உள்ள 38 அடி புத்தர் சிலையினை படியெடுத்தாற்போல் ஒரு சிலை செய்ய ஊக்கப்படுத்தி செய்து முடிக்க வைத்து உள்ளார்.

கணபதி ஸதபதி அவர்கள் புது டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மலை மந்திர் என அழைக்கப்டும் சுவாமிநாதஸவாமி முருகன் ஆலயத்தை கட்டி உள்ளார். தமிழகத்தில் காரைக்குடியில் தமிழதாய் கோயிலை கட்டி உள்ளார். மதுரையில் உள்ள பல அழகிய நுழைவாயில்கள் இவரால் கட்டபட்டவைக்ள்.

இந்து மதத்தில் இன்றும் இரண்டு பிரிவுகளாக உள்ள சைவ வைணவ இரண்டையும் ஒன்றாக நோக்க வேண்டும் என கணபதி ஸதபதி விரும்பினார். பிரண – மன –லக்ன வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு நாளில் 124 தடவை சிவனும் விஷனுவும் ஒருங்கிணைவதாக கணபதி ஸ்தபதி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள சிவ-விஷ்னு ஆலயத்தை கட்டினார் . இதைப்போல் மியாமி, செயிண்ட லூயிஸ் மற்றும் வாஷிங்கடன் ஆகிய இடத்திலும் சிவாவிஷனு ஆலயங்களை கட்டப்பட்டன ..ஹவாய் தீவில் உள்ள இறைவன் கோயில் இவரால் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது. ஸ்தபதய வேதம் எனும் நூலை எழுதியுள்ளார். முதல் வேதமான ப்ரணவ வேதத்தின் 50000 வாக்கியங்களை ஒலிபதிவு செய்து உள்ளார். ப்ரணவ வேதத்தை தமிழ் ஆக்கம் செய்து உள்ளார்

இவரது தந்தை ஒரு சமயம் உடல் நலகுறைவாக இருந்த போது இளையாற்றங்குடியில் தங்கியிருந்த காஞ்சி பெரியவரை தரிசித்து தனது தந்தையின் உடல்நலக்குறைவு நீஙகி நலம் பெற ஆசீர்வதிக்க வேண்டுமென கேட்க சென்று உள்ளார். .காஞ்சி பெரியவர் வர நேரமாகி விட்டது. இருள் கவிந்த பின் பெரியவர் வந்து சிறுவனாக இருந்த கணபதி ஸ்தபதியிடம் ஆறுதல் சொல்லி பிரசாதம் அளித்து ஒரு வழியை காட்டி கண்க்கரை போய் பார்.க்குமதறு சொல்லி இருக்கிறார். வழி இருட்டாக இருக்க கணபதி ஸ்தபதி பயந்து நிற்க, ஒரு சிஷ்ய சிறுவன் அங்கே வந்து தைரியமாக அவரை அழைத்து சென்று கணக்கரிடம் விட்டு விட்டு இருளில் மறைந்து விட்டதாகவும் பின்னாளில் இது பற்றி விசாரிக்க காஞ்சி பெரியவர் எங்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு உனக்கு கிடைத்து உள்ளது. உன்னை அழைத்து சென்றதது சாடசாத் அந்த ஆதி சங்கரர் தான் என கணபதி ஸ்தபதியிடம் சொல்லி உள்ளார்.

ப்ரணவ வேத தமிழாக்கத்தை, தமிழக அரசு வெளியிட்டு தமிழர்களிடையே பரப்ப செய்ய வேண்டுமென்றும், கோயில்களை தூய்மைபடுத்துகிறோம் எனும் பெயரில் கோயில்களில் உள்ள சுவர் சித்திரங்கள், சிலைகளின் வடிவ சிதைத்தல் போன்றவற்றை தடுக்க சிவாச்சாரியாகள், பட்டா, மற்றும் ஸ்தபதிகளை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கவேண்டும். என்பதும், மேலும் அரசாங்கத்தில் கோயில் பணித்துறை என புதிய துறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதும், மாமல்ல புரத்தில் அவர் நிறுவி உள்ள வாஸ்து வேத ஆராய்ச்சி பவுண்டேசனை விஸ்வகர்ம பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனவும் அதற்காக இன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் பேசி 10 ஏக்கர் நிலத்தை பெற வேண்டுமென்பதும்,. அந்த பல்கலைகழகத்தில் நான்கு வேதங்கள் , தமிழில் பிரணவ வேதம், கோயில் கட்டட கலை, வீட்டு கட்டடகலை, நகரமைப்பு திட்டமிடல், சிற்ப சாஸ்திரம், ஓவியக்கலை, பித்தளையில் சிலை வார்த்தல், ஸ்டுக்கோ மற்றும் ட்ரக்கோட்டா சிலைககள் ஆகியவை பாடமாக இருக்குவேண்டுமென்பதும் கணபதி ஸ்தபதி அவர்களின் தனது கடைசி ஆசையாக இருந்து உள்ளன..

அவரது கடைசி ஆசைகள் நிறைவேறுமா???? உலக நாடுகள் எல்லாம் சென்று தனது புகழை என்றென்றும் வாழவைத்த கணபதி ஸ்தபதியின் கடைசி பயணம் அவரது வடகடாம்பட்டி வேத ஆராய்ச்சி மையத்திலிருந்து தெர்டங்கி மாமல்லபுர சுடுகாட்டில் நிறைவடைந்தது. அன்னாரின் உடலுக்கு கணபதி ஸ்தபதியின் சகோதரியின் மகன்களான செல்வநாதன் மற்றும் சண்முகம் நெருப்பிட்டனர். அவர் உடல் நெருப்பில் போய்விட்டாலும். அவர் படைத்த இறைவன்கள் சிலையில் அவர் புகழ் காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் என்பது உறுதியானது.

Series Navigation“மச்சி ஓப்பன் த பாட்டில்”பூரணச் சந்திர சாமியார்
author

வே பிச்சுமணி

Similar Posts

Comments

  1. Avatar
    ஆனந்த்சாமி says:

    நான் பிறந்த ஊரான எழுவன்கோட்டை ஐயா அவர்களினால் பெறுமைகொள்கிறது. ஐயா அவர்களின் பேரன் என்னுடைய. கல்வி தோழன் என்பது மகிழ்ச்சியாகவும் பெறுமையாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *