ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு சித்திக்க இயலாது என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும் மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம் படித்தோ, ஜாதகம் கணித்தோ, பூஜை அறையில் விளக்கேற்றி பூ போட்டுப் பார்த்தோ அல்லது ஏதோ பூசாரியைக் கூப்பிட்டு அவனை சாமியாட வைத்துக் கேட்ட சமாசாரமோ அல்ல. எனக்குக் கிடைத்த அனுபவத்தின் கசப்பில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
பாலையும் வாழையும், பான்ஸாய் மனிதன் என்று இரண்டு கட்டுரைகள் ஒன்றையடுத்து மற்றொன்றாக. எழுதினேன். அவை இரண்டிலும் எடுத்து வைக்கப்பட்டிருந்த விஷயங்களின் சுருக்கமாக நான் எழுதியிருந்த ஒரு பாராவின் சுருக்கத்தை மாத்திரம் தான் இங்கே நான் திரும்பச் சொல்லமுடியும். அதை அதே வார்த்தைகளில் சொல்ல என்னிடம் இங்கு பங்களூரில் பழைய எழுத்து இதழ்களோ, அல்ல்து அந்த கட்டுரை வெளியான பாலையும் வாழையும் அல்லது பான்ஸாய் மனிதன் புத்தகமோ இல்லை.
”எதிர்காலத்தில் தமிழ் நாடு எப்போதாவது பொருள் வளம் செழித்த நாடாகலாம். அனைவரும் சிறந்த கல்வி பெற்றவர்களாகலாம். கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள், மாளிகைகள் எல்லாம் நம்மைச் சுற்றி எழ்லாம். அதெல்லாம் சரி. நடக்கக் கூடிய விஷயங்கள். திட்டமிட்டு பெறக்கூடிய விஷயங்கள் தான். ஆனால் நாம் என்றாவது கலையுணர்வு பெற்ற மனிதர்களாக, உலகத்துக்கு நமது கொடை எனத் தரத்தக்க கலைச் செல்வங்களை சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவர்களாக, ஆவோமா என்பது சந்தேகமே,” என்று எழுதியிருந்தேன். இதே வார்த்தைகளில் அல்ல. எழுதியிருந்ததன் பொருள் இது தான்.
அது 1961-ம் வருடம். எழுதியது எழுத ஒரு வாய்ப்பு கிடைத்த போது. ஆனால் இந்த முடிவு அனேகமாக அதற்கு முன் பல வருடங்களாக என் மனத்தை வதைத்துக்கொண்டிருந்தது தான். சென்னையை விட்டு நீங்கி 1950-ல் ஒரிஸ்ஸாவில் வேலை தேடிக்கிளம்பிய காலத்திலிருந்து சுமார் 10 வருடங்களாக நான் கலை இலக்கிய உல்க நடப்புகளைத் த்மிழ் நாட்டிலும், தமிழ் நாட்டுக்கு அப்பாலும் பார்த்து வந்ததனால் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கே அந்த நடப்புகள் என்னை இழுத்துச் சென்றிருந்தன.
இப்படிப்பட்ட ஒரு முடிவை நான் முன் வைத்தபோது, பலர் தமிழ் நாட்டின் இலக்கிய கலை நடப்புகளோடு அதிருப்தி கொண்டிருந்தாலும், என்னுடைய, ‘ இனி தமிழ் நாடு உருப்படப் போவதில்லை’ என்ற பாணியிலான அபிப்ராயத்தை ஏதோ கோபத்திலும் அலுப்பிலும் வெளிப்படும் வார்த்தைகள் என்றே நினைத்தனர். அப்படி என்ன உருப்படாமலா போகும், எல்லா இடங்களிலும் மாற்றங்கள் நிகழும் போது, தமிழ் நாடு மட்டும் உருப்படாமல் போக என்ன சாபக்கேட்ட என்ன? என்ற நினைப்பில் மெத்தனமாக இருந்தனர். இலக்கியம், ஓவியம் போன்ற ஒரு சில துறைகளில் மாற்றங்கள் துளிர்க்கத் தொடங்கியதையும், அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அம்மாற்றங்களின் துளிர்ப்பையும் கூட, ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் அரசும், பெரிய வியாபார ஸ்தாபன்ங்களும் மக்கள் ரசனையையே நம்பியிருந்த காரணத்தால் ஒன்று அலட்சியம் செய்தன, அல்லது எதிர்த்தன.
ஆனால், யாரும், என்னையும் சேர்த்து, எனது 1961-ம் வருட மிகக் கசப்பில் உதிர்த்த வார்த்தைகள் உண்மையாகிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘நீ நாசாமாத்தான் போவே” என்று பாட்டி திட்டினால், எந்த பேரப்பிள்ளை, கிட்டிப்புல் விளையாடிக் கொண்டிருப்பவன், மாட்டினி ஷோ பார்க்கப் போகிறவன் உடனே பயந்து பாடப் புத்தகத்தைத் தேட்ப்போவான்?. அவனுக்கு பாட்டியின் எரிச்சல் கேலியாகத்தான் இருக்கும். இன்று என் ஆருடம் மெய்த்துப் போனதைப் பற்றி யாரும் கவலைப் பட்டார்களா தெரியாது. இல்லை என்று தான் நினைக்கிறேன். ஏனெனில், இன்றைய தமிழ் புத்திஜீவிகளும் பாமரர்களும் ஒரே அலை வரிசையில் தான் இருக்கிறார்கள். இன்றைய ஆபாச பாமரத்தனம் இன்றைய அறிவுஜீவிகளால் மகோன்னத சிகர சாதனைகளாகப் பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது.
பார்ப்போமே. என் கசப்பு தொடர்ந்த ஆபாச இரைச்சலின் தாக்குதலில் பிறந்தது. அவ்வளவையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத் தொடர்ந்த ஆபாச இரைச்சலின் சில் எல்லைத் திருப்பங்களைக் குறிப்பிட்டால் போதும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நான் சினிமாவை மாத்திரம் எடுத்துக்கொள்கிறேன்.
1950-லிருந்து 1956- ம் வருட முடிவு வரை நான் வாழ்ந்திருந்தது ஒரிசாவின் பழங்குடி மக்கள் நிறைந்திருந்த சம்பல்பூர் என்னும் ஜில்லாவில் மகாநதியின் இரு கரைகளிலுமிருந்த, புர்லா, ஹிராகுட் என்னும் இரண்டு அணைக்கட்டுக் குடியிருபுகளில். அங்கு ஒரு தற்காலிக சினிமா கொட்டகை. 1951-52-லிருந்து.தொடங்கியது. ஒரு பஞ்சாபி முதலாளியாக இருந்த அந்த கொட்ட்கையில் நான் ஆரம்ப வருட்ங்களில் பார்த்த படங்கள், ரித்விக் காடக்கின், அஜாந்த்ரிக், மேக் டாகெ தாரா, குல்தீப் சைகல் நடித்த ஹிந்தி தேவ்தாஸ், கல்கத்த்டா நியூ திடேட்டர்ஸ் தயாரித்த முதல் வங்க மொழி தேவதாஸ்,. கன்னன் பாலா நடித்திருந்த தொர்ப்ப சுன்னா, நீல் கமல், யாத்ரிக், மார்லன் ப்ராண்டோவின் On the Water Front ஆகியவை. ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். இவையும் இப்போது நினைவுக்கு வராத இது போன்ற இன்னும் பலவும், . அந்த ஒரிஸ்ஸா குடியிருப்பில் பார்க்கக் கிடைத்த இந்த படங்கள் எல்லாம் எனக்கு ஒரு புதிய சினிமா உலகை அறிமுகப்படுத்தின. சினிமா பற்றிய என் பார்வைகளையும் ரசனையையும் மாற்றின.
1953-ல் அணைக்க்ட்டு வேலை மும்முரமாகவே, அப்போது அணைக்கட்டின் பிரதம பொறியாளராகச் சேர்ந்த திருமலை ஐயங்கார், தான் முன்னர் பொறுப்பேற்றிருந்த துங்கபத்ரா அணைக்கட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்கள் அனைவரும், அவர்கள் தமிழ்ர்கள், ஹிராகுட் அணைக்கட்டு வேலைக்கு பல்லாயிரக்கணக்கில் சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு ஒவ்வொரு நாள் மாலையும் சினிமாக் கொட்டகை வாசலில் ஏதோ திருவிழாக் கூட்டம் போல மொய்த்திருப்பதை நாங்க்ள் அலுவலக்ம் முடிந்ததும் காணும் காட்சியாயிற்று. இந்தக் கூட்டம் முழுதையும் தினம் கவர்ந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி தமிழ்ப் படங்களாகவே அந்த கொட்டகை திரையிட்டது தான். அங்கு தான் நான் தமிழ் சினிமாவில் ஒரு சூறாவளியாகவே வீசி தமிழ் சினிமாவின் ரசனையையும் போக்கையும் முற்றிலுமாக மாற்றி யமைத்த பராசக்தியைப் பார்த்தேன். அதைத் தொட்ரந்து எதிர்பாராத்து போன்ற படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, 1956 வரை. இங்கு நான் சொல்ல விரும்புவது பராசக்தி, அதன் பின்வரும் தமிழ் சினிமாவின் குணத்தையும் தீர்மானித்து, இரண்டு பெரிய சக்திகளாக சிவாஜி கணேசன் மு.கருணாநிதி இருவரையும் அதன் உச்ச சாதனைகளாக உருவாக்கித் தந்த்து தான். இன்று வரை 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சாதனைகள் சாதனைகளாகவே நிலை பெற்றுவிட்டது தான். வேடிக்கை என்னவென்றால், தமிழ் சினிமா அதன் ஆரம்பங்களிலும் சினிமாவாக இல்லை. அதன் ஒவ்வொரு கட்ட மாற்றத்திலும் அந்த மாற்றங்கள் சினிமா என்ற கலை பெறும் மார்றங்களாக இருந்ததில்லை.
1961-லோ என்னவோ, நான் விடுமுறையில் சென்னை வழிச் செல்லும்போது, ப்ராட்வே யின் மறு எல்லையில் இருந்த ஒரு தின்ன தியேட்டரில் அதன் மாடியில் சத்யஜித் ரேயின் பதேர் பஞ்சலி திரையிடப்பட்டிருந்தது. திரும்ப ஒரு முறை பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு சென்றது அந்த ஹாலில் படம் பார்க்கக் கூடியவர்கள் சுமார் இருபது பேர்க்கு மேல் இல்லை. அந்த சின்ன ஹால் கூட நிரம்ப்யிருக்கவில்லை. அந்த மாஸ்டரின் படம் வெளிவந்து உலகப் புகழ் பெற்று ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும், சினிமாவிலேயே தம் வாழ்க்கையை மூழ்கடித்துக்கொள்ளும் வெறிபிடித்துள்ள தமிழ் சமூகத்தில் அதைப் பார்க்க 20 பேருக்கு மேல் விருப்பமில்லை.
அதற்குள் ஸ்ரீதர் ஒரு வித்தியாசமான, சிந்த்னையில் ஆழ்ந்த கலைஞராக தன்னை முன் நிறுத்திக்கொண்டாயிற்று. அந்த காலங்களில் அவர் தன் தாடையில் கைவைத்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பதான ஒரு போஸ் கொண்ட போட்டோ தான் அதிகார பூர்வமாக அவர் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள பயன்படுத்தியது. கருணாநிதியும் சிவாஜி கணேசனும் நீண்ட் சொற்பொழிவுகளை அலங்கார வார்த்தைகளில் உரத்துக் கூச்சலிட்டுக் கொட்டுவது கலையாகியபோது, ஸ்ரீதர் சின்ன சின்ன வாக்கியங்களை சாமர்த்தியம் தொனிக்கத் தருவதும் மேஜைக் கால்களிடையேயும் சாவித்துவாரத்தினூடேயும் காட்சிகளைத் தருவது கலையென தமிழ் சினிமா ரசிகர்களை நம்ப வைத்தார்.
தமிழ் சினிமா மாறிக்கொண்டு தான் வந்தது. ஆனால் சினிமாவாக அது மாறவில்லை.
வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் (கல்வி, பொருளாதாரம், நவீன வாழ்க்கை வசதிகள், தொழில் நுட்பம் இப்படி சொல்லிக் கொண்டே போகாலாம்) பின் தங்கியதாகக் கருதப்படும் ஒரிஸாவில் ஒரு தற்காலிக குடியிருப்பில் தொடங்கப்பட்ட ஒரு எளிய தோற்றமுடைய சினிமா கொட்டகையில், நான் ஒரு கால கட்டம் வரையில் அன்றைய தினம் இந்தியாவின் சிறந்த கலைத் தரமான, சினிமா என்றால் என்னவென்று சொல்லும் படங்களை நான் பார்க்க் முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்ர் கூட்டம் பெருகவே, அந்த வாய்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க்ப்பட்டு உரத்த நாடகத்தனமான, தமிழ் நாட்டு கட்சி அரசியல் நோக்கங்களுக்காக எழுதப்பட்ட பிரசார, அல்லது வெற்று கற்பு, காதல் வசன்ங்கள் கொண்ட போதனைக் கதைகள் பேசும் படங்களின்.ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. எங்கு? ஒரிஸ்ஸாவில். அதன் பின் வெகு அபூர்வமாகவே சினிமா என்று சொலத்தக்க படங்களை நான் பார்த்தேன்.
அது ஏன் அப்படி மாறிற்று. அந்த கொட்டகையை நடத்தியவன் ஒரு ப்ஞ்சாபி. வியாபார நோக்கத்திற்காகத் தான் அதை நடத்துகிறானே தவிர, கலை உத்தாரணம் செய்யும் லட்சியங்கள் ஏதும் அவனுக்கு இல்லை. வியாபார நோக்கோடேயே செயல்படும் அவனுக்கு சிறந்த படங்களை அவனால் திரையிட முடிந்திருக்கிறது. ஒரு கால கட்டம் வரை. ஆனால் தமிழ்ர்கள் கூட்டம் பெருகியதும், அவர்களது தினசரி கூட்டமே தன்க்கு லாபகரமாக இருப்பதைக் கண்டதும், பல மொழிகள் பேசும், பல பிராந்தியாங்களிலிருந்து வந்துள்ள மக்கள் நிறைந்த அந்த இடத்திலும் அவன் தமிழ்ப் படங்களையே திரையிட்டுக் கொண்டிருந்தான். தமிழ்க் கலைக்கு சேவை செய்வதாக அவன் சொல்லிக்கொள்வானானால், தமிழ் சமூகம் கட்டாயம் அவனை கட்டாயம் அப்படியே போற்றும். இப்போது நாம் யார் யாரையெல்லாம் தமிழ் சினிமாவின் இமயம், சிகரம், புலவர், கலைஞர், என்றெல்லாம் போற்றிக்கொண்டாடுகிறோமே அதே குணத்தில், அதே தகுதியில். இன்றைய நம் சிகர்ங்களும் திலகங்களும் தங்களைப் பாராட்டிக்கொள்வது போல அந்த பஞ்சாபிக்கு சிந்தனை செல்லவில்லை. அவன் சொல்லிக் கொண்டதெல்லாம் “இவங்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கிறேன். எனக்கும் அதில் லாபம் கிடைக்கிறது” எனப்தே.
இந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு தான் நான் 1961-ல் தமிழன் வேறு எந்தத் துறையில், பொருளாதார வளத்தில், கல்வியில் வளர்ச்சி பெறக்கூடும். ஆனால் ஒரு கலை உணர்வுள்ள சமூகமாக, , உலக்த்துக்கு தன்னது என ஒரு கலைப்படைப்பைத் தரும் ஆற்றல் உள்ளவனாக மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றேன்.
ஒரு கசப்பில், ஏமாற்றத்தில், பிறந்த வார்த்தைகள் எதிர்கால ஆரூடம் சொல்லும் வடிவம் பெற்று உண்மையின் நிரூபணமும் பெற்றுவிட்டது, என் ஜோஸ்யம் பலித்துவிட்டது எனக்கு உவப்பான விஷயம் இல்லை. பார் என் ஜோஸ்யம் பலித்து விட்டது என்று பெருமை பேசுவதற்கும் நான் இதைச் சொல்லவில்லை.
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?