சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப் பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?
வீம்புக்கோ, பக்கத்து வீட்டில் வேறு மொழி பேசுகிற பெண் குடியேறினால் நப்பாசையோடோ சம்பந்தப் பட்ட மொழியைப் படிக்கிறவர்கள், எழுதக் கற்றுக் கொள்வதை விட நாலு வார்த்தை பேசுவதில் தான் அக்கறை காட்டுகிறார்கள். வடக்கில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வருகிற நடிகைகள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். சாப்பாடு, வணக்கம், தமிழ்நாடு, பிடிச்சிருக்கு என்று டிவி சானல் டிவி பேட்டிக்கு உபயோகமாக நாலு வார்த்தை கற்றுக் கொண்டால் தமிழ் இவர்களுடைய தெரிந்த மொழி பட்டியலில் சேர்ந்து விடும்,
இப்படி அவசரமாக மொழி கற்றவர்கள் பேசும்போது அந்த மொழிக் காரர்களுக்கு மொழி அதிர்ச்சி அவ்வப்போது ஏற்பட வாய்ப்பு உண்டு. பஞ்சாபி ராதா சலூஜா எம்.ஜி.ஆர் படத்தில் கதாநாயகியாக வந்து ’ஐயோ விடுங்க, அத்தை வெந்துடப் போறாங்க’ என்று சிணுங்குவது இந்த ரகம்.
அயல் மொழி தெரியாமல், இதுதான் அர்த்தம் என்று உத்தேசமாக அனுமானம் செய்து கொண்டு இருக்க, ஏற்படும் மொழி அதிர்ச்சி இன்னொரு மாதிரி.
தில்லியில் வங்கி அதிகாரியாக வேலை இட மாற்றம் கிடைத்துப் போனபோது பேங்க் லோனுக்காக வந்த கௌரவமான சர்தார்ஜி சொன்னது போல – ‘நான் இண்டர்கோர்ஸ் வரைதான் படிச்சிருக்கிறேன். மீதியை எல்லாம் சொந்தமா அனுபவிச்சுக் கத்துக்கிட்டேன்’. இண்டர்மீடியட் வகுப்பு தமிழ்நாட்டில் இல்லாமல் போச்சே என்று ஏக்கமாக இருந்தது.
அயல்மொழி உச்சரிப்பிலும் வார்த்தை, வாக்கிய அமைப்பிலும் சொந்த மொழிக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்குமோ அதைப் பொறுத்து அதிர்ச்சியின் அளவு கூடும் அல்லது குறையும்.
உதாரணத்துக்கு தமிழும் மலையாளமும்.
மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் பிறப்பால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய கவிதையில் ‘இடி முழக்கம்’ என்று கம்பீரமாக ஓர் இடத்தில் வந்ததைக் குற்றம் சொன்னார் ஒரு பிரபல மலையாள இலக்கிய விமர்சகர். ‘இடி நாதம்’ தான் சரியான வார்த்தைப் பிரயோகமாம்.
‘பரமேஸ்வர அய்யருக்கு மனதளவில் கவிதைக்குள் தமிழில் தான் இடி முழங்கியது. நாதம் என்பது வீணையை மீட்டினால் வருவது. மலையாளத்திலேயே நினைத்து மலையாளத்திலேயே அவர் கவிதை செய்திருந்தால் இடி இசை பாடி இருக்கும் என்று அந்த விமர்சகரிடம் சொல்ல வேண்டி வந்தது.
வீட்டில் தூங்கிட்டிருந்தேன் என்று மலையாளியிடம் சொன்னால் பேயைப் பார்த்ததுபோல் கலவரத்தோடு பார்க்கிறார். ’தூங்கி’ என்பது குறுக்கல் விகாரமாகத் ’துங்கி’ என்று அவர் காதில் விழுந்த்தே காரணம். துங்குதலானது தமிழில் தூக்குப் போட்டு உயிரை விடுவது என்று அறியப்படும்.
தூறல் நின்னு போச்சு என்று பாக்கியராஜின் படம் வந்த போது தமிழ்நாட்டில் ‘என்ன மாதிரி கவித்துவமான தலைப்பு’ என்று சிலர் சொன்னார்கள். கேரளத்தில் படம் வெளியிட ஏகப்பட்ட தயக்கம். ‘இதென்ன சார் டைட்டில்? எப்படி படம் பார்க்க வருவாங்க, முக்கியமா லேடீஸ்?’ என்று விநியோகஸ்தர்கள் சங்கடத்தோடு சிரித்தார்கள்.
காரணம் தூறல் என்ற சொல் தமிழில் சிறு மழை. மலையாளத்தில் காலைக் கடன்.
பழைய தமிழ்ப் படத்தில் சிவாஜி உருக்கமாக ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என்று பாடிக்கொண்டு உடம்பு முழுதும் விதிர்விதிர்க்க நடக்க, கோழிக்கோடு சினிமா கொட்டகையில் படம் பார்க்க வந்த சேட்டர்கள் சேட்டையாகச் சிரித்தார்கள்.
‘இவ்வளவு பெரிய மனுஷர்.. இவருக்கு வழி காட்ட வேறே யாராவது கிடைக்கலியா? போயும் போயும் ..’ என்று மலையாளத்தில் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அண்ணன் (அண்ணான்) என்றால் மலையாளத்தில் ஓணான்.
பாக்கியராஜின் இன்னொரு படத்தில் ஒரு மலையாளப் பாடல் வரும். சப்த ஸ்வர தேவி உணரு என்று தொடங்குவது. உணரு என்றால் தமிழ் அறிந்தவர்கள் உணர்ந்து கொள் என்று பொருள் கொள்வது சகஜம். இங்கே மலையாள உணருக்கு அது அர்த்தமில்லை. விழித்துக் கொள் என்பதே பொருள்.
இது கூடப் பரவாயில்லை. பாட்டு நாலு அடி முன்னால் போனதும் விழித்துக் கொண்ட சப்த ஸ்வர தேவியை இப்படி பிரார்த்திக்கும்.
என் கழிவில் ஒளிதீபம் ஏற்று.
தலையை ஆட்டி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கேட்டார், ‘என்ன சார், கோபார் காஸ் சமாச்சாரம் போல் இருக்கே. மங்கலகரமா நெய் விளக்கு, மாவிளக்கு ஏத்தி கும்பிடாம. அது எதுக்கு லெட்ரின்லே இருந்து .. மலையாளப் பழக்கம் அவ்வளவு நல்லா இல்லீங்களே’.
என்ன செய்ய? கழிவு என்றால் மலையாளத்தில் திறமை. தமிழ்க் கழிவு அங்கே, சொன்னேனே, தூறல்.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
மொழி அதிர்ச்சி வேற்று மொழியில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.
சகலமானதையும் கம்ப்யூட்டரிலேயே எழுதி எழுதிப் பழக்கமாகிப் போய், தாளும் பேனாவுமாக எழுத உட்கார்ந்தபோது ஏற்பட்ட மொழி அதிர்ச்சி.
அக்கன்னாவுக்கு மேலே ரெண்டு வட்டம் கிழே ஒரு வட்டமா அல்லது மேலே ஒரு வட்டம் கீழே ரெண்டு வட்டமா?
*********************************************************************************************
மணிக்கொடி காலத்துக்குப் பின் விஜயபாஸ்கரனின் ’சரஸ்வதி’ காலமும் அதன் பிறகு சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ காலமும் தமிழ் இலக்கியத் தடங்கள்.
செல்லப்பா எப்பொழுதும் ‘எழுத்துவில்’ என்று தான் எழுதுவார். கேட்டால் அவருடைய பதில் –
நவரத்தினங்களில் ஒன்றான முத்தைப் பார்த்தால், முத்தைப் பார்த்தேன் என்கிறோம். முத்து என்ற பெயர் உடைய ஒருவரைச் சந்தித்ததைக் குறிப்பிடும்போது ‘முத்துவைப் பார்த்தேன்’ என்கிறோம். அது போல்தான் ‘எழுத்துவில்’.
அவர் ‘இதற்கும்’, ‘அதற்கும்’ என்பவற்றை ‘இதுக்கும்’, ‘அதுக்கும்’ என்று கையாண்டது என்னையும் பிடித்துக் கொண்டது.
என்னைப் பிடித்துக் கொண்ட இன்னொரு சொல்லாட்சி – ‘அவன்கள்’. படர்க்கை – பன்மை – ஆண்பால்.. ஒரு கும்பல். ‘அவர்களை’ என்று எழுதினால் மரியாதை கொடுத்தமாதிரி ஆகிறது.ஆகவே ‘அவன்கள்’.
‘பண்ணு’ என்ற பிரயோகம் நான் வளர்ந்த சூழலிலும் இல்லை. எழுத்திலும் இல்லை. ‘செய்’ தான் எப்போதும் (எப்பவும்). அதே போல், ‘மெல்ல’ தான். ‘மெள்ள’ என்று எழுதினால் ஏதோ கடமுடவென்கிறது.
அவை நிறைவாக நடந்த அரவான் இசை வெளியீட்டு விழாவுக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே போய் அண்ணா நூலகத்தில் இதையும் அதையும் படித்துக் கோண்டிருந்தேன். கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும்.
நாடி வந்து வரவேற்ற பட இயக்குனர் வசந்தபாலனின் வரவேற்பு இதம். பத்து வருடம் முன் கதை சொல்ல வீட்டுக்கு வந்த முகம் இன்றும் அதே அடக்கமும், ஆர்வமும் நட்புமாக.
ராமகிருஷ்ணனோடும் ஜெயமோகனோடும் பேசிக் கொண்டிருந்தபோது (முக்கியமாக ராமகிருஷ்ணனின் ‘யாவரும்’ சொல்லாட்சி பற்றி) வ.பாலனும் கலந்து கொண்டார். அவர் விருப்பப்படி நால்வரும் சம்பிராதயமான புகைப்படத்தில் உறைந்தோம்.
பாட்டுக்களையும் முன்னோட்டத்தையும் பார்க்கும் போது பதினெட்டாம் நூற்றாண்டை கிட்டத்தட்ட சரியாக வ.பா படத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
தமிழில் முக்கியமான micro-history படம் இதுவாக இருக்கலாம். பாரதிராஜா அழகாக ஆரம்பித்து திசைமாறிப் போன ‘நாடோடித் தென்றல்’ (19ம் நூற்றாண்டு) போலவோ, வரலாற்று அபத்தங்கள் நிறைந்த ‘மதராஸப் பட்டிணம்’ (20-ம் நூற்றாண்டு 1947 வரை) போலவோ அரவான் சறுக்கியிருக்க மாட்டான்.
ஒரு ஆம்னிபஸ் லோடு அளவு நபர்களை மேடையேற்றி ரெண்டே ரெண்டு வார்த்தை பேசச் சொல்வதை விட, படத்தோடு தொடர்புடைய நாலு பேர், வாழ்த்த நாலு பேர் போதுமே.
சில கவனிப்புகள் –
ஏஆர் ரஹ்மான் மொழிநடை மாறியிருக்கிறது. ரெண்டு நிமிஷப் பேச்சில் நிறைய ‘வந்துண்டு இருந்தேன்’ ‘ பார்த்துண்டு இருந்தேன்’..
எஸ்.ராமகிருஷ்ணன் கேன்ஸில் சர்வதேச பரிசு இந்தப் படம் பெறும் என்றார். அவர் கேனைச் சொன்னார் என்று நினைக்கிறேன். Cannes என்று எழுதி Kan என்று உச்சரிக்கப்படும் பிரஞ்சு ஊர்ப்பெயர் அது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் வெண்ணிலா இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்று தெரிந்தது. சேக்ஷ்பியரின் கிளியோபாட்ராவை பாஸ்டஸ் என்ற கவிஞர் பாடலில் வடித்த வரிகளைப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அவர் கிறிஸ்டஃபர் மார்லோ ‘Helen of Troy’ பற்றி எழுதிய Doctor Faustus கவிதையைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்.
இன்னொரு தொகுப்பாலர் இயக்குனர் மனோபாலா சிறு பொறி தீயாவது போல் ஒரு வார்த்தைச் சிந்தனை இரண்டு மணி நேரப் படமாகிறது என்பதெல்லாம் சரிதான். உதாரணத்துக்கு பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ பிறக்கக் காரணம் ‘அம்பட்டன் மகன் கவிஞன்’ என்ற ஒன்லைனர் என்றபோது நெருடலாக இருந்தது. நாவிதர் என்ற தொழில் கௌரவத்தோடு கூடிய சொல் உண்டே.
- தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11
- தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)
- பேக்குப் பையன்
- ஒருகோப்பைத்தேநீர்
- மீண்டும் ஒரு முறை
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்
- எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு
- புரட்டாசிக் காட்சிகள்
- இதுவும் அதுவும் உதுவும்
- அலைகளாய் உடையும் கனவுகள்
- வீடு
- அதில்.
- இங்கே..
- குடை ரிப்பேரும் அரசியல் கைதும்
- (80) – நினைவுகளின் சுவட்டில்
- படங்கள்
- இதற்கு அப்புறம்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா
- விடுவிப்பு..:-
- கிளம்பவேண்டிய நேரம்.:
- சேமிப்பு
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
- சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்
- சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்
- முடிவுகளின் முன்பான நொடிகளில்…
- கவிதை
- மழைப்பாடல்
- இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !
- மண் சமைத்தல்
- ஈடுசெய் பிழை
- ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
- கோ. கண்ணன் கவிதைகள்.
- ஏன் பிரிந்தாள்?
- ஆசை
- திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
- ஒரு உண்ணாவிரத மேடையில்
- ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- சலனக் குறிப்புகள்
- பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
- முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்