எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு

This entry is part 8 of 44 in the series 16 அக்டோபர் 2011


(கே.எஸ்.செண்பகவள்ளி)

கடந்த ஆகஸ்ட் மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகர் குவாலா லும்பூர் ‘கிராண்ட் பசிபிக்’ தங்கும் விடுதியில் மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தியது. இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றிய முனைவர் முல்லை இராமையா ஒரு மாதகாலமாக தொய்வில்லாது உழைத்து நல்லதொரு பங்களிப்பை வழங்கினார்.

இந்தியாவில் ‘தாகூர்’ விருது பெற்ற முதல் தமிழர் என்ற சிறப்புக்குரிய தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களைத் தலைமைப் பயிற்றுனராகக் கொண்டு நடத்தப்பட்ட இம்மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கு பல்வேறு தலைப்புக்களுடன், பலகோணங்களில் வழிநடத்தப்பட்டது. இப்பயிலரங்கின் சில அங்கங்களை மூத்த எழுத்தாளர்கள் முனைவர் திரு.ரெ.கார்த்திகேசு, இணைப் பேராசிரியர் திரு.வே.சபாபதி, முனைவர் திரு.ஆறு.நாகப்பன், திரு.கோ.புண்ணியவான், ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் வழி நடத்தினர்.

இப்பயிலரங்கை முறையாகத் தொடக்கி வைத்து சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

“புத்தகம் வாசிக்கும் வாய்ப்பில்லாமல் போவதை சுவாசிக்க முடியாமல் போவது போல் உணர்வேன் என்று எஸ்.இராமகிருஷ்ணன் கூறினார். வாசிப்பு மட்டும் போதாது வாசித்தது பற்றி விவாதிக்கும் நிலை வரவேண்டும். இளையோர்கள் நவீன இலக்கியத்திற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். காலத்திற்கேற்ப அந்த மாற்றத்தை வரவேற்று ஆதரிக்க வேண்டும்” என்று தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

பயிலரங்கின் தொடக்கமாக ‘எப்போதுமிருக்கும் கதை’ என்ற தலைப்பில் எஸ்.இராமகிருஷ்ணன் (எஸ்.ரா) விளக்கவுரை அளித்தார். கதை என்பதற்கும் சிறுகதை என்பதற்குமான வேறுபாடு, சிறுகதையின் வரலாறு, தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களைப்பற்றிய அறிமுகம் ஆகிய கூறுகளை மிகவும் அழகாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் பகுதியில் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் “திண்மையான காட்சிகளும் கதை மாந்தர்களும்” என்ற தலைப்பில் ஒளித்திரைக்காட்சிகளுடன் விளக்கவுரை அளித்தார். சிறுகதையில் காட்சியமைப்பையும், கதாமாந்தரையும் எவ்வாறு கொணர்வது என்பதை அழகாக விளக்கினார்.

மறுநாள் காலை முதல் அங்கத்தில் இணைப்பேராசிரியர் திரு.வே.சபாபதி அவர்கள் ‘சிறுகதைகளில் உத்தி’ என்ற தலைப்பில் ஒளித்திரைக் காட்சிகளுடன் விவரித்தார். சிறுகதைகளில் எவ்வாறு உத்திகளைக் கையாளுவது என்ற தெளிவான விளக்கங்களைப் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.

இரண்டாம் அங்கத்தில் ‘சிறுகதையின் சாத்தியங்களும் சவால்களும்’ என்ற தலைப்பில் எஸ். ரா. விளக்கவுரையாற்றினார். சிறுகதை எழுதுவது எப்படி, கதைக்கருவை எப்படித் தேர்வு செய்வது, அதன் மொழி எப்படியிருக்க வேண்டும், பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகள் குறித்த அறிமுகங்களைத் தெளிவுப்படுத்தினார்.

மூன்றாம் அங்கத்தில் பயிற்சி அரங்கத்தை எஸ்.ரா. அவர்கள் வழிநடத்தினார். பங்கேற்பாளர்கள் முதல் நாள் எழுதி வந்திருந்த ஒரு பக்கப் பதிவிலிருந்து கொடுக்கப்பட்ட எல்லா தலைப்புகளிலிருந்தும் ஒரு சிறந்த கதையைத் தேர்வுசெய்து எழுதியப் பங்கேற்பாளர்களையே வாசிக்கச் செய்தார். அதன் நிறை குறைகளையும் விவரித்தார். மதிய உணவுக்குப்பின் ‘சிறுகதையின் அழகியல்’ என்ற தலைப்பில் சிறுகதையில் எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, எவ்வாறு கவித்துவத்தைக் கொணர்வது மேலும் கதையில் இடம் பெறும் சமூகப் பிரச்சனைகள், பெண்ணிய சிந்தனைகள், பின்நவீனத்துவ சிந்தனைகள் ஆகியவைகளையும் தெளிவுப்படுத்தினார்.

இறுதி அங்கமாக ‘வாசிப்போரின் கருத்தைச்செட்டென்று கவரும் கதை ஆரம்பங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு.கோ. புண்ணியவான் அவர்கள் ஒளித்திரைக் காட்சிகள் வழி விளக்கவுரையாற்றினார். ஒரு கதையின் ஆன்மா எது, எவ்வாறு கதையைத் தொடங்குவது என்றும் தெளிவுப்படுத்தினார். கதையின் ஆரம்பங்களை எவ்வாறு உருவாக்குவது என்ற நோக்கத்தில் பங்கேற்பாளர்கள் கதையின் தொடக்கத்தை எழுதும் பயிற்சிப் பட்டறையும் நடத்தினார். அதில் தேர்வுச் செய்யப்பட்ட ஆரம்பங்களைப் பங்கேற்பாளர்கள் வாசித்தனர்.

சிறுகதைப் பயிலரங்கின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று காலை உணவுக்குப் பிறகு ‘உலகின் சிறந்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மிகவும் சுவாரசியமாக சலிப்புத் தட்டாமல் பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் செவிமடுக்கும் வண்ணம் கதைகளைக் கூறினார் எஸ்.ரா.

மூன்று நாள் பயிலரங்கின் இறுதி அங்கத்தை முனைவர் ஆறு. நாகப்பன் வழிநடத்தினார். ‘கருப்பொருளிலிருந்து கதைப் பின்னல்’ என்ற தலைப்பில் மிகவும் சுவாரசியமாக விளக்கங்களை ஒளித்திரைக்காட்சிகள் வாயிலாக தெளிவுப்படுத்தினார். அந்த அங்கத்திற்குப் பிறகு பொது கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கான விளக்கங்களை எஸ்.ரா. விளக்கினார்.

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்புரட்டாசிக் காட்சிகள்
author

கே.எஸ்.செண்பகவள்ளி

Similar Posts

Comments

  1. Avatar
    கே.எஸ்.செண்பகவள்ளி says:

    வணக்கம். “திண்ணை”யில் என் படைப்புகளைப் பதிவு செய்தமைக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பாக நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *