மூன்று தலைமுறை வயசின் உருவம்

This entry is part 14 of 44 in the series 30 அக்டோபர் 2011

1)மூன்றுதலைமுறைவயசிருக்கும்
இதன் பிரம்மாண்டமான உருவத்தை
யாரும் கவனித்ததாய் இல்லை.
எவருக்கும் தெரிந்ததுவுமில்லை
இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும்
வான் நோக்கி நிமிர்ந்தும்
மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும்
வேப்பமரம்தான் என்றாலும்
முன்காமிகளும் சொன்னதில்லை
இத்தனை ஆண்டுகளாய்
இது உதிர்க்கும் பச்சை இலைகளுக்கு
புனிதம் சேர்ந்த வரலாறு குறித்தும்
மூலிகை காற்றாய்
சுவாசத்திற்கு இதமளிக்கும்
இதன் அகவிலாசம் பற்றியும்.

2)ஒவ்வொரு இலைகளும் தாழ்வாரங்களில்
சமாதிகளின் பூக்களோடு பேசிக் கொண்டிருக்கும்
ரகசியம் பிடிபடவில்லை.
கசக்கும் வேப்பிலைகளை வாயில் போட்டால்
இனித்துக் கிடக்கிறதென்ற
இன்னொரு பரமரகசியம்
உலவிச் செல்லும் காற்றோடு.
வருவோர் போவோருக்கெல்லாம்
திரி எரியும் குத்துவிளக்கிலிருந்து
கரண்டியில் சொரிந்த எண்ணெய்
தேங்கிநிற்கும் உள்ளங்கையில்.
காணிக்கை போட்டாலும் போடாவிட்டாலும்
சருகான ரோஜா இதழ்களையும்
காய்ந்த பிச்சிப் பூக்களையும்
காணிக்கையாய் சுமந்து செல்லும்
நிறமற்ற வரிசைகள்
இனிக்குமென நினைத்து
வேப்பிலையை தின்றபோது
யாருக்கும் கசக்கவில்லை.

3)வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும்
கொம்புமுளைத்த ஜின்களின்
காலடியோசைகளும்
லத்திமுனைவீச்சுக்களும்
வெகுஅருகாமையில் கேட்கின்றன.
என்னை நெருங்கிவரும்
வீச்சரிவாளின் ஓசை
கழுத்தை துண்டித்து
கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது.
தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த
வேம்படிமரநிழலில் துஆ செய்தேன்
வாவாவென ஆவல்மேலிட
தன்னை ரெண்டாய் பிளந்துகாட்டி
வேம்பு அழைத்தது.
உள்ளே சென்ற என்னை ஒன்றாய் மூடி
உயிர்காத்து கிளையசைத்து சிரித்தது.
கொலைசெய்ய துரத்திவந்த ஜின்களின்
கூர்தீட்டிய அரிவாள்கள் இப்போது
வெறியோடு மரத்தை அறுக்கத் துவங்கின

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationநெடுஞ்சாலை அழகு..சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *