பழமொழிப் பதிகம்

This entry is part 27 of 53 in the series 6 நவம்பர் 2011
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயே மக்களிடையே வழங்கப்பட்ட பல்வேறு விதமான நாட்டுப்புறக் கூறுகள் இலக்கிய வடிவம் பெற்றன. மக்களின் விளையாட்டுக்கள், புதிர்கள், பழமொழிகள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவாரம் பாடிய மூவரில் நீண்ட காலம் வாழ்ந்த பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசர். இந்நாவுக்கரின் இயற்பெயர் மருணீக்கியார் என்பதாகும். இவரை, உழவாரப் படையாளி, தாண்டக வேந்தர், அப்பர் என்று பல பெயர்களில் வழங்குவர்.

மக்களுக்குத் தொண்டு செய்வதே தமது அறப்பணியாகவும், சிவப்பணியாகவும் கருதி வாழ்ந்தவர் நாவுக்கரசர் ஆவார். அவர்  தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தையும் பண்பாட்டினையும் சமூகத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அரிய முயற்சியில் ஆழ்ந்திருந்தார். நாவுக்கரசரின் பாடல்களே தேவாரம் என்று வழங்கப்படுகின்றது நோக்கத்தக்கது. ஞானசம்பந்தரின் பாட்டு திருக்கடைக்காப்பு என்றும், சுந்தரரின் பாடல்கள் திருப்பாட்டு என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாவுக்கரசரின் பாடல்களில் நாட்டுப்புற வழக்குகள் பல இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பழமொழிகளும் உண்டு.

நாவுக்கரசர் முதலில் சமணராக இருந்து, பின்னர் சைவராக மாறி, தான் வாழ்ந்த காலத்தில் ஆண்ட பல்லவமன்னன் மகேந்திரவர்ம பல்லவனையும் சைவராக மாற்றிய பெருமைக்கு உரியவர் ஆவார். மக்களோடு மக்களாக வாழ்ந்த அத்திருவருட் செல்வரின் பாடல்களில் பழமொழிகள் இடம்பெற்றிருப்பது உன்னற்பாலதாகும்.

பழமொழிகள்

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் பிழிவாகக் காணப்படுபவை பழமொழிகளாகும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும்பலவிதமான அனுபவங்களைப் பெறுகின்றனர். அவற்றுள் சில இன்பத்திற்குரியன, சில துன்பத்திற்குரியன, சில நினைத்து மகிழத்தக்கன. சில மறந்து விடத்தக்கன. எப்படிப்பட்டஅனுபவமாயினும் அதனுடைய சாரத்தைத் தனக்குப் பின்வருவோர் உணருமாறு மனிதன் கூறியவையே பழமொழிகள் எனலாம். பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும்,நாகரிகத்தையும் பழக்க வழக்கங்களையும் அறியலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது.

பழமொழி, பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொலவம், சொலவடை உபகதை(ஒவகதை என்று வழக்கில் வழங்குவர்) என்று பலவாறான பெயர்களில்  பழமொழிகளை மக்கள் வழங்குகின்றனர். இவ்வாறு வழங்குவதே பழமொழியின் தொன்மையை விளக்கும்.

தொல்காப்பியர்,

“ஏதுநுதலிய முதுமொழி”

என்று குறிப்பிடுவதால், பண்பாடு தொடங்கிய காலந்தொட்டுப் பழமொழிகள் இருந்து வந்தமையை அறிய முடிகிறது. அகநானூறு,

“நன்று செய் மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபடு பழமொழி”

என  எடுத்துக்காட்டுகிறது.

பழமொழிகளின் பண்புகள்

மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படல் பழமொழியின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. ‘‘Trench Proverbs and their lessions பழமொழி உரைநடை சார்ந்தது எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைக் காணலாம். பழமொழி உவமைப் பண்பு கொண்டது. சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன என வேறு சில இயல்புகளையும் தே. லூர்து கூறுகின்றார் (தே. லூர்து நாட்டார் வழக்காறுகள் பக்.6,7). குறைந்தபட்சம் ஒரு தலைப்பையும் ஒரு முடிவுரையையும் உள்ளடக்கிய மரபுவழி உரைக் கூற்றே பழமொழியாகும் எனப் பழமொழிக்கு ஆலன்டண்டிஸ் என்ற அறிஞர் வரையறை தருகிறார். அமைப்பியல் அடிப்படையில் அவர் கூறும் பழமொழி வகைகளுள்  “வேறுபடுத்திக் காட்டும் முரணுடைய பழமொழிகள்” என்பதும் ஒன்று (நாட்டார்வழக்காறுகள் பக்.11,14).

திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்பெறும் பழமொழிகளுள் பெரும்பாலானவை மேற்கூறிய இயல்புகளுக்குப் பொருந்தி வருவனவாக அமைந்துள்ளன. வேறுபடுத்திக் காட்டும் முரணுடையப் பழமொழிகள் என்னும் அமைப்பிலேயே அப்பர் கூறும் பழமொழிகள் மிகுதியும் அமைந்திருப்பது நோக்கத்தக்கன.

பழமொழிப் பதிகம்

திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி (Proverb) அல்லது சொல்லடை (Proverbial phrase) வருமாறு அமைந்துள்ளது. வேறு பல பாடல்களிலும் பழமொழிகள் பயின்று வருவதையும் காணமுடிகிறது.

திருப்பாடல்தோறும் ஒரு பழமொழி அமையப்பெற்ற தன்மையினால் நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியோ, சொல்லடையோ இடம் பெறுகின்றன. இவற்றுள் சில இன்றளவும் மக்கள் வழக்கில் உள்ளவை என்பது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

ஐந்தாம் பதிகமான பழமொழிப் பதிகத்தில்,

“மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
உழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயில்ஆலும் ஆரூ ரரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே”

என்ற பாடல் முதற்பாடலாக அமைந்துள்ளது.

இப்பதிகப்பாடலின் இறுதியில் உள்ள ‘கனியிருப்பக் காய் கவர்ந்த கள்வனே’’ என்ற வரிகள் ‘‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்னும் குறள்வரியை நினைவுபடுத்துகின்றது. இப்பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறும் “கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே” என்னும் பழமொழியும் இதே கருத்தை கூறுவதாக அமைந்துள்ளது.

நாவுக்கரசர் சைவ சமயத்தை விட்டுப்பிரிந்து, சமணம் சார்ந்து தருமசேனர் என்ற பெயரில் பல்லாண்டுகள் வாழ்ந்து, கழித்து மீண்டும் சைவசமயத்திற்குத் திரும்பியவர். தாம் சமண சமயத்திற் புகுந்ததால் தமக்கு இழிநிலை ஏற்பட்டதாகக் கருதி, சைவத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக இப்பதிகப் பழமொழிகளைப் பாடல்களில் அமைத்து நாவுக்கரசர் பாடியிருப்து சிறப்பிற்குரியனவாகும்.

முயல்-காகம்

இரண்டாம் பாடலில் அமையும் பழமொழி, “முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே” என்பதாகும். முயலின் பின் போதல் எளிது, காக்கையின் பின் போதல், பறத்தல் இயல்பில்லாத மனிதர்க்கு அரிது. தமக்கு இயல்பல்லாத சமண நெறியில் சென்ற இழிநிலை இப்பாடலில் அப்பரால் கூறப்படுகிறது. இஃது,

‘‘இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்கறதைப் பிடிக்க ஆசைப்படலாமா?’’

என்னும் பழமொழியை ஒத்துள்ளது. சைவ சமயத்தை(இருப்பது) விட்டுவிட்டு சமண சமயத்தை(பறப்பதை)ச் சார்ந்து வாழ்ந்ததையே நாவுக்கரசர் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

அறம்-மறம்

அறம், மறம் இரண்டும் வேறுவேறானவை ஆகும். இவை ஒருபோதும் பொருந்தி வராது. இத்தகைய முரணை வைத்து நாவுக்கரசர் மூன்றாம் பாடலில்,

“அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே”

என்னும் பழமொழியினை அமைத்துப் பாடியுள்ளார். அறமாகிய நன்மையை அனைவரும் வீரும்புவர். ஆனால் மறமாகிய தீமையை யாராவது விரும்புவாரா? மாட்டார். அறமாகிய சைவத்தை விடுத்து மறமாகிய சமணத்தைப் பிடித்துக் கொண்டு அலைந்தேனே! என்பதையே இங்ஙனம் நாவுக்கரசர் முரண் சுவையுடன் விளக்கியிருக்கிறார். இப்பழமொழியானது,

‘‘வயிற்றில் இருக்கிற பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற

பிள்ளையைக் கொல்வாகளா?’’

(வயித்துப் பிள்ளையை நம்பி மாடுமேய்க்கிற பிள்ளையைக் கொல்லச் சம்மதிப்பாகளா? என்றும் மேற்குறிப்பிட்ட பழமொழியை மக்கள் வழங்குவர்)

என்ற வழக்கில் வழங்கும் பழமொழியை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தவம்-அவம்

தவம் என்பது நன்மை பயக்கும் ஒன்று. ஆனால் அதன் மாறுபாடாக உள்ளது அவம் ஆகும். இது தீயனவற்றையே பயக்கும். அதனை விலக்கி வாழ்தல் வேண்டும். மேலும் நல்லவர்களைச் சார்ந்தே வாழ வேண்டும். மாறாக கெட்டவரைச் சார்ந்து வாழக் கூடாது. இதனை,

“நல்லவனை நாலு பணம் கொடுத்து வாங்கு
கெட்டவனை நாலு பணம் கொடுத்தாவது விலக்கு”

என்று ஒரு பழமொழி தெளிவுறுத்துகிறது. இதன் மறுதலையாய் விலை கொடுத்து மறம் வாங்குவது எத்தனை பேதமை என்பதனை இப்பாடல் வரி விளக்குகின்றது. மேலும்,

“தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே”

என்ற ஒன்பதாம் பாடற் கருத்தும் இதுவேயாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இதனை வள்ளுவர்,

‘‘கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு’’

என்றும்,

‘‘ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலர் நட்பு’’

என்றும் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

மணல் வீடு-நீர்க்கோலம்

மணல் வீடு கட்டுவது, நீர்க்கோலம் போடுவது போன்ற நிலைபேறற்ற செயல்களைச் செய்வது அறிவிலிகள் செயல் ஆகும். இதனைத் தாம் செய்ததாக அறிவிக்கும் அப்பரடிகள் கீழ்க்காணும் தொடரைக் கூறுகிறார்.

“பணி நீரால் பாவைசெயப் பாவித்தேனே”

சமண நெறியால் வீடுபெறக் கருதுதல் என்பது அறிவீனமாகும் என்னும் கருத்தை இப்பாடல்வரி கொண்டுள்ளது. இப் பாடல்வரிகள்,

‘‘தண்ணீரில் கோலம் போட்ட மாதிரி’’

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?’’

என்ற பழமொழிகளின் விளக்கமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிலியும் அழிவும்

அறிவற்றவரோடு சேர்ந்தால் அழிவு நிச்சயம். அறிவிலியோடு சேர்ந்தால் அழிவு உறுதி என்னும் கருத்தினை,

“எதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே”

என்ற அடுத்த பாடல் பழமொழி விளக்குகிறது. இப்பாடல் வரி,

“பின் இன்னா பேதையார் நட்பு”

என்னும் பழமொழி நானூற்றுக் கருத்துக்கு ஒத்திசைக்கிறது. இப்பழமொழிக் கருத்துடன்,

‘‘பன்னியுடன் சேர்ந்த கன்றும் பீ தின்னும்’’

என்ற மக்களின் வழக்கில் வழங்கப்பட்டு வரும் பழமொழியுடன் ஒத்திருப்பது நோக்கத்தக்கது.

இருட்டறையில் மலடு கறத்தல்

கொண்ட கொள்கையின் தன்மை அறியாமல்,  கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் முட்டாள் தனத்தை,

“இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்தவாறே”

என்னும் நாவுக்கரசரின் பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி எடுத்தியம்புகிறது. இருளில் ஒன்றும் தெரியாது.  கன்றீனா மலடாகிய மாட்டில் பால் கறப்பது என்பது இயலாது. இதனை வைத்துக் கொண்டு தாம் சமணத்தில் சேர்ந்திருந்தை திருவருட் செல்வர் விளக்குவது சுவைபயப்பதாகும். இது,

‘‘முனிக்கிளையில் இருந்து கொண்டு

அடிக்கிளையை வெட்டின கதைதான்’’

என்ற பழமொழியை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விழலுக்கு இறைத்த நீர்

பயனற்ற செயலைச் செய்து ஓய்ந்து போகும் செயல்பாடு மனிதனிடம் இன்றளவும் உள்ளது. இதனை,

“விழலுக்கு இறைத்த நீர்போல”

என்னும் பழமொழித் தொடர் உணர்த்துகின்றது.  இக்கருத்து அமைய  அப்பரடிகள்,

“பாழ் ஊரிற் பயிக்கம்புக்கு எய்த்தவாறே”

(பயிக்கம் = பிச்சை)

“பயிர்தன்னைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீரிறைத்து” (4:52:7)

என்றும் பாடகளில் அமைத்துப் பாடுகின்றார்.

வழிகாட்டுவது

வழி தெரிந்தவன், தெரியாதவனுக்கு வழி காட்டுவது உலக இயல்பு. மாறாக அப்பரடிகள் ,

“கொத்தைக்கு மூங்கை வழிகாட்டும்”

போக்கினைப் பற்றி கூறுகின்றார் (கொத்தை = குருடன், மூங்கை = ஊமை) (4:99:2).

நாட்டுப்புற வழக்காறுகளிலும், பழமொழிகளிலும் காணப்படுகின்ற “விளக்கினில் விழும் விட்டிற் பூச்சியையும் (4:31:5), ஆற்றினிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரையும் (4:87:6),இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பையும் (4:75:6), பாம்பின் வாய்த் தேரையையும் (4:52:7) தமது திருப்பாடல்களில் எடுத்துக் காட்டுகின்றார் அவர்.

பிச்சைக்கு வந்தவன்

“நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணிபுரவர்க்குத்
தக்கதன்று தமது பெருமைக்கே” (5:158:7)

என்னும் பாடல், “பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை” என்ற பழமொழியை நினைவுறுத்துவதாய் அமையக் காணலாம். “நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த கதை”யும் அப்பரடிகளால் இரு இடங்களில் (4:27:5, 5:213:7) கூறப்பெற்றுள்ளது.

மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் வாழ்வில் வழங்கப்பட்டு வந்த அரிய பழமொழிகளை இலக்கியங்களில் புகுத்திக் காலம் உள்ளளவும் அவற்றை வாழவைத்த பெருமைக்குரியவராக இறையடிராகிய நாவுக்கரசர் விளங்குகின்றார். மேலும் நாவுகரசரின் பழமொழிப் பதிகம் பழமொழிகளின் விளக்கமாக மட்டும் அமையாமல் மக்களின் பண்பாட்டினை விளக்கும் அரிய களஞ்சியமாகவும் விளங்குகின்றது எனலாம். மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே அப்பரடிகள் இப்பழமொழிகளை தமது பாடல்களில் அமைத்துப் பாடினார் என்பது நோக்கத்தக்கது.

 

Series Navigationஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்நிலத்தடி நெருடல்கள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *