E. Mail: Malar.sethu@gmail.com
தமிழ்ப் புலவர்களில் காலந்தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் திருவள்ளுவர் ஆவார். தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வரும் காலங்களிலும் திருவள்ளுவரின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது நோக்கத்தக்கது. காப்பியங்களிலிருந்து தற்காலம் வரை தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறட் கருத்துக்கள் விரவிக் காணப்படுவது கண்கூடாகும். ஒவ்வொரு புலவரும் திருவள்ளுவர்மேல் தணியாத பற்றுக் கொண்டிருந்தனர் என்பதற்கு திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் உள்ளடக்கி அவர்கள் படைத்த இலக்கியங்களே சான்றுகளாக அமைந்திலங்குகின்றன. காலந்தோறும் திருக்குறள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பது நோக்கத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கவிஞராகத் திகழ்ந்த பட்டுக்கோட்டையார் திருவள்ளுவர் மீது தணியாத பற்றுக் கொண்டு விளங்கினார். திரையிசைப் பாடல்களில் வாய்ப்பு நேரும்போதெல்லாம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் அவர் எடுத்தாண்டிருப்பது போற்றுதற்குரிய ஒன்றாகும்.
திருவள்ளுவர் வழி வாழ்க்கை
திருவள்ளுவர் காட்டிய வழியில் உலகோர் அனைவரும் அறவாழ்வு வாழ வேண்டும். வள்ளுவர் இயற்றிய திருக்குறள் வாழ்வியல் நூல். அந்நூல் காட்டிய வழியில் நடப்பதுவே அறிவுடைமை. அவ்வாழ்க்கையே செம்மாந்த சீரான வாழ்க்கை என்பதை,
‘‘வள்ளுவர் வழியினிலே – இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே’’
என்ற பாடல் வரிகளில் கவிஞர் வெகு சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
நேர்மைாயன வாழ்வினை ஒவ்வொருவரும் வாழ வேண்டும். அதுவே உன்னதமான வாழ்வாகும். அவ்வாழ்வு எத்தைகையது? யார் கூறியுள்ளது? என்பதற்கு அவ்வாழ்வு வள்ளுவர் கூறியுள்ளார். அவர் கூறிய வழியயே சிறப்பான வாழ்வுநெறியாகும். அதுவே சிறந்த அறிவுடைமையும் ஆகும். என்பதை,
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை
என்று பட்டுக்கோட்டையார் எடுத்துரைக்கின்றார். பாவேந்தர் எங்ஙனம்,
‘‘வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி?’’
எனக் கூறியுள்ளாரோ அவரைப் பின்பற்றி அவரது மாணவரும் பாடியிருப்பது ஒப்புமையுடையதாக அமைந்துள்ளது.
திருக்குறள் நூலைப் படிப்பதுதான் சிறு குழந்தைகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறப்படுகிறது. ஆசிரியை பிள்ளைகட்குப் பாடம் நடத்துகிறார். வினாவும் மறுமொழியுமாகவும் வகுப்பு தொடர்கிறது
‘‘ஆசிரியை : ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன? சொல்லு?
என்கிறார்.
‘‘சிறுவர்கள், வள்ளுவன் ’’
என மறுமொழி சொல்லுகின்றனர். அத்தகைய அறிவை வளர்த்த வள்ளுவர் செய்த வாழ்வியல் நூலை அனைவரும் படித்து அதன்படி வாழ வேண்டும் என்பதை,
‘‘திருக்குறள் நூலை
சிறந்தமுப் பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை’’
என்று பட்டுக்கோட்டையார் குறிப்பிடுகின்றார். இளம் வயதில் குறளைக் கற்றால் அது மனதில் ஆழமாகப் பதியும். அதனால் கருத்துடன் சிறுவர்கள் அந்நூலைக் கற்க வேண்டும் என்ற கருத்தினை எளிமையாகப் பட்டுக்கோட்டையார் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. மேலும், திருவள்ளுவரின் திருக்குறளை மனத்தில் கொண்டு, அக்குறட் கருத்துகளை எளிய வடிவில் மக்கள் மொழியில் கவிஞர் பல இடங்களில் பாடியிருக்கிறார்.
அனைவரும் சமம்
அனைவரும் சமம். உயிர்கள் அனைத்தும் ஒன்று. அதிலும் மனிதர்களுள் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. இதனை அனைவரும் உணர்ந்து வாழ வேண்டும் என்பதனை வள்ளுவர்,
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’
என எடுத்துரைக்கிறார். இத்திருக்குறளை,
‘‘மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம்கடமை’’
என்று பட்டுக்கோட்டையார் எடுத்துரைப்பது உன்னற்பாலதாகும்.
உழவு
உழவே உலகத்தின் வாழ்வாதாரம் ஆகும். இதனை மறந்தால் உலகம் அழிவுறும். உழவையும், உழவரையும் மதிக்காத உலகம் துன்புறும். அவர்களைப் போற்றினால் உலகமும் உயரும். இதனை உணர்ந்த வள்ளுவர்,
‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’’(1033)
‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து’’(1032)
என்று உழவையும், உழவரையும் போற்றி உரைக்கின்றார். திருக்குறளையும், உழவு அதிகாரத்தில் உள்ள இதையொத்த குறட்பாக்களையும் மனத்தில் கொண்டு,
‘‘ஒருவன் : ஓதுவார் தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே…
மற்றவன் : உலகம் செழிப்பதெல்லாம்
ஏர்நடக்கும் நடையிலே’’
எனப் பட்டுக்கோட்டை பாடியிருப்பது சிறப்பிற்குரியது.
செயல் தூய்மை வேண்டும்
நாம் செய்யக் கூடிய செயல்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். பிறருக்கு எவ்வகையிலும் தீமை விளைவிக்காததாக அச்செயல் இருக்க வேண்டும். செய்த பிறகு அதனை நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களை ஒருபோதும் செய்யக் கூடாது. ஒருக்கால் அப்படிச் செய்து விட்டாலும் மீண்டும் அதைச் செய்யாதிருப்பது நன்று என்ற கருத்தை வள்ளுவர்,
‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று’’ (655)
என்ற குறட்பாவில் தெளிவுறுத்துகிறார். இக்குறளை மனத்தில் கொண்டு பட்டுக்கோட்டையார்,
‘‘சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து – தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா – அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ’’
என்று எழுதுகின்றார். சிந்தித்துச் செயலாற்று. அப்போது தவறு நேரிடாது. அவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தால் தவறு நேரிடின் அதனை ஆராய்ந்து மீண்டும் அத்தவறு ஏற்படாதவாறு பார்த்துக் கவனமாகச் செய்க என்று இளம் மனதில் பதியும் வண்ணம் குறட்கருத்தை எளிமைப்படுத்தி உரைக்கின்றார்.
அச்சம்
அஞ்சாமை வேண்டும். எனினும் எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்சியே வாழ வேண்டும். அது அறிவுடைமையாகும். அஞ்சத்தக்கவை எவை? உலகம் பழிக்கும் பழிபாவங்கள் இவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும். இதனை,
‘‘அஞ்சுவ (து) அஞ்சாமை பேதமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்’’(428)
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இத்திருக்குறளை கவிஞர்,
‘‘அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமோ?’’
என ஒரு கேள்விக்குள் அடக்கி விடுகிறார். நெசவுத் தொழிலைக் குறிப்பிடும்போது,
‘‘வள்ளுவரின் வழிவந்த பெரும்பணி – வாழ்வில்
நன்மை யுண்டாக்கும் தன்மானம் காக்கும்’’
என வள்ளுவர் செய்த மேன்மைத் தொழில் என்கிறார். ஏனெனில் வள்ளுவர் நெசவுத்தொழில் செய்தவராகச் செவிவழிக் கதை ஒன்று மக்களிடையே நிலவி வருவது நோக்கத்தக்கது. மக்களிடம் வழங்கிவரும் கதையை அடிப்படையாக வைத்து மக்கள் கவிஞர் பாடுவது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.
மானம்
தன்னிலை தாழாமலும், தெய்வத்தால் தாழ்வுற்ற வழி உயிர் வாழாமையுமே மானம் ஆகும் என்பர் பரிமேலழகர். தன் மானம் தன்னிடம் உள்ளது. அவமானம் பிறரால் ஏற்படுவது. பிறர் ஒருவரைப் பிடிக்காமலிருந்தால் அவரை அவமானப்படுத்துவர். ஆனால் தன்மானம் என்பது ஒருவனுடன் உடன்பிறந்த ஒன்றாகும். அதற்கு ஊறு நேராமல் ஒருவன் மானத்துடன் வாழ்தல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,
‘‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பின் மானம் வரின்’’(969)
என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் அடியொற்றிப் பாடும் பட்டுக்கோட்டையார்,
‘‘தன் மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது’’
என்று குறிப்பிட்டு தன்மானத்துடன் ஒருவன் வாழ வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.
களவு
உழைத்து வாழ வேண்டும். பிறர் பொருளைக் கவர்ந்து அதன் வாயிலாக வாழக் கூடாது. அவ்வாறு வாழ்வது அறவாழ்வாகாது. எந்த நிலை ஏற்பட்டாலும் பிறரது பொருளைக் கவர்ந்து வாழ நினைக்கவோ கவரவோ கூடாது. உள்ளத்தாலும் இதனைச் செய்வது தவறான ஒன்றாகும். இதனை,
‘‘உள்ளத்தால் உள்ளலும் தீதேபிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்’’(282)
என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார். வள்ளுவர் கூறும் இத்தகைய வாழ்வியல் நெறியின் பிழிவாகப் பட்டுக்கோட்டையாரின்,
‘‘திருடாதே பாப்பா திருடாதே
வறுமைநிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே’’
என்ற வரிகள் அமைந்துள்ளன. இதில் திருட்டிற்கான காரணத்தையும், அதற்காகப் பயந்து விடாது திறமையை உணர்ந்து வாழ வேண்டும் என்ற உயரிய நெறியையும் காலத்திற்கேற்ற வகையில் திருக்குறளின் விளக்கமாகப் பட்டுக்கோட்டையார் எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.
விதி(ஊழ்)
மனிதர்கள் தாங்கள் உயராததற்குக் காரணம் தலையெழுத்தே காரணம். பிரமன் தங்களது தலையில் எழுதியுள்ளபடியே நடக்கும். தங்களின் வாழ்வு விதிப்படியே நடக்கும் என்று பலவாறு எண்ணி வாழ்ந்து வருகின்றனர். மக்கள் இத்தகைய மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டு உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து உழைத்து முன்னேற வேண்டும். தொடர்ந்த முயற்சியும், சோர்வில்லா உழைப்பும் விதியை மாற்றும் என்பதை,
‘‘ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்’’ (620)
என்று வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார். பட்டுக்கோட்டையார்,
‘‘விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலை செஞ்சா எல்லாம் உயர்வோம் என்ற
விவரம் மண்டையில் ஏறணும்’’
என்று முயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம் எனக் காலத்திற்கேற்ற வகையில் வள்ளுவரின் கருத்தை எளிமைப்படுத்திப் பாடுகின்றார்.
கயவர்
மக்களுக்கு எப்போதும் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள் கயவர். ஒருவரைத் துன்புறுத்தி அதனால் மகிழ்ச்சி அடையும் குறுகிய எண்ணம் படைத்தவர்கள் இவர்கள். இவர்களைப் பற்றி யாரும் அறிந்து கொள்ள இயலாது. இவர்கள் மக்களைப் போன்றே இருப்பர் என்பதை,
‘‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்’’ (குறள்,1071)
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றர். வள்ளுவரின் வாய்மொழியைப் பொன்னேபோற் போற்றும் மக்கள் கவிஞர் கயவர்களை,
‘‘கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்கு
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை உலகம் நடமாடவிட்டதடா’’
என மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றார். அதுமட்டுமின்றி அவர்களது குணம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதனை,
‘‘உறங்கையிலே பானைகளை உருட்டுவது
பூனைக் குணம் – காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே
குரங்குக்குணம் – ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று இரையாக்கல்
முதலைக்குணம் – ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா’’
என மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார். வள்ளுவர் அவர்களது செயல்களைக் கூறி அவர்களை அடையாளம் காணமுடியாது அவர்கள் மக்களைப் போன்றே இருப்பார்கள் அதனை உணர வேண்டும் என்று குறிப்பிட, மக்கள் கவிஞரோ அவர்களது குணத்தையும், அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். வள்ளுவர் சுருங்கச் சொன்னதை பட்டுக்கோட்டையார் விரித்துரைத்து விளக்கம் தருகின்றார்.
மேலும் வள்ளுவர்,
‘‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழு கலான்’’ (குறள், 1073)
எனத் தேவர்களைக் கயவர்களுக்கு உவமையாக்குகின்றார். பட்டுக்கோட்டையாரோ,
‘‘நல்லவர்போல உலகம்மீது
நரியும் கழுகும் உலவும்போது
நம்மை இன்பம் நாடிவருமா சொல்லடி சொல்லு’’
என நரியுடனும், கழுகுடனும் ஒப்பிட்டு இகழ்கின்றார். நரியும் கழுகும் பிணங்களைத் தாம் தின்னும். ஆனால் இந்த மனித மிருககங்களோ உயிருடன் மனிதரை நடமாடவிட்டே தின்றுவிடுகின்றன எனும் கயவர்களின் இழிநிலைக்கு ஏற்ப உவமையைக் கவிஞர் கையாள்கின்றார். கயவர்களைத் தேவருடன் ஒப்பிட்டால் அஃது உயர்வானதாகப் புரியாமல் சிலர் கருத இடமுண்டு. ஆனால் அவர்களது செயல்பாடுகளைப் போன்று இழிவான உயிரினங்களுடன் ஒப்பிட்டால் மட்டுமே கயவர்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கருதியே பட்டுக்கோட்டையார் இங்ஙனம் உவமித்திருக்கிறார் எனலாம்.
அன்புடைமை
அனைத்து உயிர்களும் இணக்கத்துடன் இணைந்து வாழ்வதற்கு அன்பே அடிப்படைக் காரணமாகும். விலங்குகள் கொடியனவாக இருந்தாலும் அவை தமது குட்டிகளிடம் அன்புடன் நடந்து கொள்கின்றன. அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்த மனிதன் பிற உயிர்களிடம் அன்பாகப் பழகத்தெரிந்தவனாக இருக்கின்றான். இப்பண்பு மனிதனின் சிறப்புக்குரிய பண்பாகும்.
பற்று, பாசம், நட்பு, காதல், உதவி, ஈகை, அருள் ஆகிய அனைத்துக் பண்புகளும் அன்பின் விரிவுகளாகும். புத்தர், அசோகர், சிபி, மனுநீதிச் சோழன் ஆகியோரின் செயல்பாடுகள் அனைத்தும் அன்பினை வலியுறுத்தியே அமைந்திருப்பது நோக்கத்தக்கது. வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரம் வகுத்து அன்பின் மேன்மையைப் பலவாறாக விரித்துரைக்கின்றார். மேலும் அன்பின் பரிமாணங்களையும் தனித்தனியாக எடுத்துரைக்கின்றார். வள்ளுவரின் வழியில் வந்த பட்டுக்கோட்டையாரோ அன்பிற்கு,
‘‘அன்பு கொண்டு குடியரசு புரிந்திடனும்’’
‘‘ஆதிநீதி முறை ஆட்சி செய்யவே
அன்புமழை பெய்யவே’’
‘‘எல்லை மீறும் அன்பே செல்வமாகுமே’’
‘‘ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில்’’
‘‘உண்மையன்புக்கு உடல்நலமில்லையா?’’
‘‘மாசற்ற அன்புக்கு மரணமுண்டோ’’
‘‘பேசிடும் அன்பும் நிலையாக வேண்டும்
பேரின்பம் வேறெது உலகில்’’
என பல விளக்ககங்களை எடுத்துரைக்கின்றார். அன்பினைப் பற்றி விளக்கமாகக் கூறிவந்த உலகில் அன்பே பேரின்பம் என்று கூறுவது, வள்ளுவரின் ‘அன்புடைமை’ அதிகாரத்திற்கு விளக்கம் போல் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இன்றைய உலகின்நிலை என்ன என்பதை,
‘‘அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலைபாயுது ஆசைகள் கோடி’’
எனத் தனிமனிதன் அன்பினைத் தேடித் தேடி அலைகின்றான் எனக் கவிஞர் குறிப்பிட்டு,
‘‘இன்ப உலகில் செல்வம் அதிகம் இதயந்தான் கொஞ்சம்
அன்பு இதயந்தான் கொஞ்சம்’’
இன்றைய உலகில் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகின்றார். மேலும் நிகழ்காலத்தில்,
‘‘அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு அகந்தைக் குரங்கு தாவும் – அதன்
அழகைக் குலைக்க மேவும்’’
என அன்பினைக் குலைக்கும் செயல்களே அதிகம் நிகழுகின்றன என்பதையும் பட்டுக்கோட்டையார் எடுத்துரைக்கின்றார். அனைவரும் அன்புடன் வாழவேண்டும் என்பதை வள்ளுவர் வழியில் காலச் சூழலுக்கேற்ப பட்டுக்கோட்டையார் இயம்புவது போற்றுதற்குரியதாகும்.
கற்றவரும் – கல்லாதவரும்
கல்வியைப் பற்றி வள்ளுவர் அளவிற்கு யாரும் கூறவில்லை எனலாம். கல்வி கற்றவர், கல்லாதவர் ஆகியோரைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறி கல்வி கற்க வேண்டும் என்று சமுதாயத்திற்கு அறநெறியை வள்ளுவர் பகர்கின்றார். கற்றவர்களை வள்ளுவர் உயர்வாகக் கூறினும், கற்றவன் பேசத் தெரியாதவனாகத் தடுமாறும்போது கோபமுற்றுக் கற்றவர்களை,
‘‘கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்’’ (குறள், 729)
என்றும்,
‘‘உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்’’ (குறள், 730)
என்றும் இழித்துரைக்கின்றார்.
வள்ளுவரைப் போன்றே பட்டுக்கோட்டையாரும் படித்தவனை வெறுக்கின்றார். பட்டுக்கோட்டையார் படித்தவர்களை வெறுக்கக் காரணம் ஏனென்றால் அவர்கள் முயற்சியற்றவர்களாக, திறனற்றவர்களாக இருப்பதைப் பார்த்தே,
‘‘சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க’’
என்று வெறுத்துக் கேட்கின்றார்.
கற்றவர்களிடம் தொற்றி நிற்கும் பழைய நினைப்பினைக் கவிஞரால் பொறுத்துக்கொள்ள இயலவிலலை. தெரிந்தவன் தவறு செய்தவனைக் காணும்போது வெறுப்புணர்ச்சியானது கவிஞருக்கு வள்ளுவருக்கு ஏற்படுவது போன்று வெறுப்பு ஏற்படுகின்றது. அதனால் தான் என்ன பண்ணிக் கிழிச்சீங்க’’ என்று வெறுப்புடன் கற்றவர்களைப் பார்த்துக் கேட்கின்றார். வள்ளுவர் கற்றவர் செயலற்றவராக இருக்கும் நிலையில் அவர்களைப் பார்த்து கடையர், செத்தவர் என்று குறிப்பிடுவது போன்று கவிஞரால் குறிப்பிட இயலவில்லை. ஏனெனில் கவிஞர் அனுபவப் பள்ளியில் பயின்றதால் என்னவோ அவருக்குக் கற்றவரிடம் அதிகம் மதிப்பிருந்தது. அதனால் அவர்களை இழிவாகக் கூற அவருக்கு மனம் வரவில்லை. அவர்களை வெறுப்புடன் மட்டும் பேசுகின்றார் என்பது நோக்கத்தக்கது.
கற்பனை
வள்ளுவப் பெருமானின் கற்பனைத் திறத்தைக் காமத்துப் பாலில் கண்டு மகிழலாம். வள்ளுவரின் காதலியைப் பற்றிய கற்பனை நினைத்து நினைத்து இன்புறத்தக்கதாக அமைந்துள்ளது. வானத்தில் முழுநிலவு உலா வருகின்றது. நிலவைச் சுற்றிலும் விண்மீன்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்நிலவைப் பார்க்கும் காதலனுக்குத் தன் காதலியின் முகம் நினைவுக்கு வருகின்றது. இரண்டையும் ஒப்பிடுகின்றான். விண்மீன்கள் நகருவது வள்ளுவருக்குக் கலக்கமாகத் தெரிகின்றது. ஏன் விண்மீன்களுக்குக் கலக்கம் வரவேண்டும். வானத்தில் இருந்து கீழே பார்க்கின்றன. அங்கு காதலி நிற்கின்றாள். அவள் வானத்தைப் பார்த்ததால் அவளது முகம் நிலவு போல் காட்சியளிக்கின்றது. விண்மீன்களுக்கு நிலவு எப்போது பூமிக்குச் சென்றது? நம்முடன் இருப்பது உண்மையான நிலவா? பூமியில் தெரிவது உண்மையான நிலவா? அதனால்தான் கலங்குகின்றன. இதனை,
‘‘மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்’’ (குறள், 116)
என்று வள்ளுவர் கற்பனை நயத்துடன் காட்சிப் படுத்துகின்றார்.
பட்டுக்கோட்டையாரும் இதனைப் பார்க்கின்றார். அவருக்கு வேறுமாதிரியான கற்பனை தோன்றுகின்றது. காதலன் முழுநிலவு, சிதறிக்கிடக்கும் விண்மீன், இவற்றைப் பார்க்கின்றான். தனது காதலியின் முகத்தையும், நிலவினையும் ஒத்துப் பார்க்கின்றான். இரண்டும் ஒன்றுபோல் இருப்பதைக் கண்டு, நிலவைப் பார்த்து தனது உறவோ என்று கருதி,
‘‘எண்ணருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா? மூத்தவளா? வெண்ணிலாவே’’
என்று தன் காதலிக்கு தங்கை முறையா? அல்லது தமக்கை முறையா? என்று வினவுகின்றான். மேலும், சிதறிக்கிடக்கும் விண்மீன்கள்,
‘‘கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே’’
என வெண்ணிலவைக் காவல் காக்கும் தோழியராகக் காதலனுக்குக் காட்சியளிக்கின்றது. இது மரபு மீறாத காலத்திற்கேற்ற புதிய கற்பனையாக மிளிர்கின்றது. இது மக்கள் கவிஞரின் கவித்துவத்திற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது. இவ்விதக் கற்பனையில் வள்ளுவரும், பட்டுக்கோட்டையாரும் கலாங்கள் மாறினாலும் ஒன்றுபட்டு நிற்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் கருமை காணப்படுகின்றது. அது இயற்கை. அத்தகைய நிலவு கருமையுடன் பூமியைப் பார்க்கின்றது. அங்கு பெண்ணணங்கு ஒத்த காதலி நிற்கின்றாள். அவளின் முகத்தைப் பார்த்து நிலவுக்கு வெட்கம் வர அது மேகக் கூட்டத்திற்குள் மறைய முற்படுகின்றது. நிலவு ஏன் காதலியின் முகத்தைப் பார்த்து வெட்கமுற வேண்டும். காதலன் சிந்திக்கிறான். அவனுக்கு ஓர் உண்மை புலப்படுகின்றது. காதலியின் முகத்தைப் போன்று மாசுமருவற்றதாக தான் இல்லை என்ற காரணத்தாலேயே அதுபலரும் காணத் தோன்றுவதற்கு வெட்கமுறுகின்றது. இதனை,
‘‘மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி’’ (குறள், 1119)
என்று நயத்துடன் வள்ளுவர் படைத்துக்காட்டுகின்றார்.
பட்டுக்கோட்டையாரின் காதலனுக்கு நிலவில் காணப்படும் கருமை வேறுமாதிரியாகத் தோன்றுகிறது. காதலனும் காதலியும் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருக்கும்போது காதலன் காதலியின் கன்னத்து அழகைப் பார்த்து கிள்ளுகின்றான். அதனால் காயம் ஏற்படுகின்றது. அது பார்ப்பதற்கு கருமையாகத் தோன்றுகின்றது. இத்தகைய அழகிய கற்பனையை,
‘‘கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே’’
என்று மக்கள் கவிஞர் படைத்துக் காட்டுகின்றார். இது அனைவராலும் இரசிக்கத்தக்க உயர்ந்த புதிய கற்பனையாக மிளிர்கின்றது.
இங்ஙனம் காலங்கள் பல தோன்றி மாறிமாறி வந்தாலும் கவிஞர்களின் எண்ணங்கள் ஒன்று போல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு வந்த, வரும் அனைத்துக் கவிஞரிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி காலந்தோறும் வாழும் கவிஞராகத் திகழ்கின்றார். வள்ளுவரின் வழித்தோன்றலாக விளங்கிய மக்கள் கவிஞரும் மரபு மீறா புரட்சிக்கவிஞராக, காலம் வடித்த புதுமைக்கவிஞராகத் திகழ்ந்து மக்களின் மனத்தில் வள்ளுவரைப் போன்று நிறைந்து விளங்குகின்றார் எனலாம்.
- நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 20
- மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17
- காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )
- பகிரண்ட வெளியில்…
- மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து
- இதயத்தின் தோற்றம்
- கனவும் காலமும்
- பிழைச்சமூகம்
- நினைவுகளின் சுவட்டில் (81) –
- சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2
- சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!
- செல்வராகவனின் மயக்கம் என்ன ..
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2
- யாருக்கும் பணியாத சிறுவன்
- வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)
- வா
- பிறைகாணல்
- வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்
- சென்ரியு கவிதைகள்
- மாயை
- பேர்மனம் (Super mind)
- மூவாமருந்து
- புதுவைத் தமிழ் சங்கம்
- நானும் வல்லிக்கண்ணனும்
- காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்
- மனக் குப்பை
- ஓய்வு தந்த ஆய்வு
- பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!
- முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)
- ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி?