வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)

This entry is part 19 of 37 in the series 27 நவம்பர் 2011

பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing!

அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ். கெல்சன் என்கிற பெயரில் கடந்த பதினைந்தாண்டுகளாக நிலக்காட்சிகளை மட்டுமே ஓவியங்களாகத் தீட்டிவருகிறார்.

ஏன் இயற்கைக்காட்சிகளை மட்டுமே ஓவியமாகத் தீட்டுகிறீர்கள்?

”ஒன்று, இயற்கைக்காட்சிகள் மனதை அமைதிப்படுத்தும். இரண்டாவது, எனக்கு அதுதான் வரையத்தெரியும்”

_வெகு இயல்பாக உண்மைபேசுகிறார் தர்மேஷ்!

ஓவியர் தர்மேஷ் [GELSON]

“எனக்கு குழந்தைப்பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால், முறையாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து பயிலக்கூடிய பொருளாதாரச்சூழல் எனக்கு அமையவில்லை. பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கமுடியாத நிலை.

வயிற்றுப்பிழைப்புக்காக சென்னை அடையாறிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயிருந்த இயற்கைக்காட்சி ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அங்கே வேலைபார்த்துவந்த ஓவியர் லியோ என்னைப் பெரிதும் ஊக்குவித்தார். தினமும் வேலைநேரம் முடிந்த பிறகு மாலைவேளைகளில் அவரிடம் போய்விடுவேன். அவர் வரைவதைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன்.

பிறகு, யூனிட்டி ஓவர்ஸீஸ் என்ற நிறுவனத்தில் ‘ஆர்ட்டிஸ்ட்’டாகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு எம்ப்ராய்டரி டிசைனிங்கும் லைன் ட்ராயிங்கும் கற்றுக்கொண்டேன். அந்த நிறுவனத்தின் தலைவர் திரு ஸ்ரீதர் ஓவியக்கலையில் எனக்கிருந்த ஆர்வத்தையும் தேர்ச்சியையும் பார்த்து என்னைப் பலவகையிலும் ஆதரித்து ஊக்கப்படுத்தினார். இன்றுவரை உதவிசெய்துவருகிறார்.

அதேபோல் திருமதி உமா மகேசுவரி அவர்களும் ஓவியக்கலையில் மிகுந்த ஆர்வங்கொண்டவர். யாருக்குப் பரிசளிப்பதென்றாலும் ஓவியத்தையே நாடுவார். தொடர்ந்து என்னிடம் ஓவியங்களை ஆர்டர் செய்து வாங்கியும், தனக்குப் பரிச்சயமானவர்களிடம் என்னைப் பற்றி எடுத்துச்சொல்லியும் எனக்கு உதவிசெய்துவருகிறார். திரு. கே.பாஸ்கரையும் குறிப்பிடவேண்டும். இவர்களெல்லாம் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.

இதுவரை எத்தனை ஓவியங்கள் தீட்டியிருப்பீர்கள்? என்னவகையான ஓவியங்கள்? என்னென்ன அளவுகளில் உருவாக்கித்தருகிறீர்கள்?

கடந்த பத்து வருடங்களில் 400-500 ஓவியங்கள் தீட்டியிருப்பேன். ஆர்டர் கிடைப்பதைப் பொறுத்து, ஆர்டர் தருபவர்களின் விருப்பத்திற்கேற்ப ‘தைல ஓவியங்கள்’ வரைந்துதருவேன். இயற்கைக்காட்சிகள்தான். 3/2 என்ற ‘மீடியம் ஸைஸ்’ ஓவியங்கள் தான் அதிகமாக ஆர்டர் செய்யப்படுகின்றன. 2/1 ½, 12/16 ஆகிய அளவுகளிலும் ஓவியங்கள் கோரப்படுகின்றன. ஒரு ஓவியத்தைச் செய்துமுடிக்க இரண்டு நாட்கள் – அதற்கு சற்று கூடக்குறைய – தேவைப்படும்.

வாழ்க்கைத்தொழில் என்ற அளவில் ஓவியக்கலை உங்களுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது?

அதுதான் எனக்கு சோறுபோட்டுவருகிறது. அதேசமயம், திருமணமாகி ஒரு மகனுக்குத் தகப்பனாக உள்ள நிலையில் ஓவியம் மூலம் எனக்குக் கிடைத்துவரும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மைநிலவரம். என்ன செய்ய…

அறிதவர்கள், தெரிந்தவர்கள் மூலம் ஆர்டர்கள் கிடைத்தால் ம ட்டுமே வேலையும் வருமானமும் என்றல் சிரமமாயிற்றே. நீங்கள் ஓவியக்கண்காட்சி நடத்தலாமே? அதன்மூலம் உங்களுடைய ஓவியங்களைப் பலர் பார்க்கவும் வாங்கவும் வழிகிடைக்குமே? அல்லது, மொத்தமாக இருபது முப்பது ஓவியங்களைத் தீட்டிவைத்துக்கொண்டு விற்பனை செய்யலாமே?

எல்லாவற்றிற்கும் நிதிவசதி வேண்டுமே. ஓவியம் தீட்டுவது எனக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம். ‘மெய்வருத்தம் பாராமல், கருமமே கண்ணாய்’ ஓவியங்களைத் தீட்ட நான் என்றுமே தயார். ஆனால், என்னிடம் நிதிவசதியில்லை. பத்திருபது ஓவியங்களைத் தீட்ட குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படும். யாரேனும் புரவலர் அல்லது ஏதேனும் நிறுவனம் நிதியுதவி செய்ய முன்வந்தால் என்னால் நிச்சயம் நல்லவிதமாக ஓவியக்கண்காட்சி நடத்திக்காட்ட முடியும். அல்லது ஒருமாதத்தில் இருபது-முப்பது இயற்கைக்காட்சி ஓவியங்களைத் தயார்செய்துவிட முடியும். அதன்மூலம் என் ஓவியங்கள் பரவலாக அறிமுகமாகி என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வருமானம் எனக்குப் பிடித்த ஓவியக்கலை மூலம் எனக்குக் கிடைக்க வழிபிறக்கும்.

எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் ஓவியர் தர்மேஷ். இன்று இந்திய ஓவியர்களின் படைப்பாக்கங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாடமாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும்தான் ஓவியங்கள் மாட்டப்பட்டிருக்கும் என்ற நிலை மாறி இன்று அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், நடுத்தரவர்க்கத்தினரின் சிறிய இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் என்று எல்லாவிடங்களிலும் கண்ணுக்கு இதந்தந்து மனதை அமைதிப்படுத்தும் ஓவியங்களை – குறிப்பாக இயற்கைக்காட்சி ஓவியங்களை மாட்டிவைப்பது இயல்பான நடைமுறையாகிவிட்டது. தர்மேஷின் ஓவியங்கள் தரமானவை. இயன்றவர்கள் இயன்ற வழிகளில் அவருக்கு உதவ முன்வரவேண்டும்.

ஓவியர் தர்மேஷைத் தொடர்புகொள்ள:-
அலைபேசி எண் : 99402 48316
மின்னஞ்சல் முகவரி: dharmesh.viswanathan@yahoo.com

Series Navigationயாருக்கும் பணியாத சிறுவன்வா
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *