சொக்கப்பனை

6
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 39 in the series 4 டிசம்பர் 2011

கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும் மனிதர்களும் மெதுவாகவும், அருகிலுள்ளவை யாவையும் வேகமாகவும் நகரும் பௌதிகம் புரியாத நாட்களிலும், ரயிலில் பயணிக்கும் இரவு நேரங்களில் வயல்களின் நடுவே உள்ள பம்ப் ஹவுஸின் வெளியே நிற்கும் லைட் போஸ்ட்டின் தலையிலிருந்து தொங்கும் குண்டு பல்பு சிந்தும் அழுக்கு மஞ்சள் வெளிச்சத்தின் தனிமைச் சோகம் மனதைப் பிழியும். சின்ன ஸ்டேஷன்களை உதாசீனப்படுத்தி ரயில் செல்லும்போது, ஒற்றை ஆளாய் நின்று கொடி அசைக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் கண்களிலும் சோகம் அப்பிக்கிடப்பதாகவே தோன்றும்.
சுப்பாராமன் வாத்தியாருக்கும் கார்த்திகை மாதம் மிகவும் பிடித்த மாதம். பிடிப்பது அதன் ஈரக்காரணங்களுக்காக அல்ல. அண்ணாமலை தீபத்திற்காக. சுப்பாராமன் சயின்ஸ் ஆசிரியர். எட்டாம் வகுப்பு “பி” பிரிவிற்கு, எங்களுக்காகக் கணக்குப் பாடம் எடுத்தார். ரொம்ப நன்றாக சொல்லிக் கொடுப்பார் என்று சொல்ல முடியாது. ஆனால் ரொம்ப நல்லவர். குட்டையான அவர், அவரைவிட உயரமான ‘ ராலே ‘ சைக்கிளில்தான் வருவார். கணுக்காலுக்கு மேலிருக்குமாறு வேஷ்டி கட்டிக்கொண்டு எப்போதும் வெள்ளை சட்டையே அணிந்துவருவார். காலையில் திரு நீறு, குங்குமம் மற்றும் சந்தனம் துலங்கும் நெற்றியுடன் காட்சிதரும் அவர், ஃபர்ஸ்ட் பீரியட் முடியும் முன்னரே அவையெல்லாம் அழிந்துவிடும் அளவிற்கு எங்கள் அட்டகாசத்தால் தலையில் அடித்துக்கொள்வார். அவருக்கு சைக்கிளில் பெடல் அடித்து ஏறத்தெரியாது. கொஞ்சம் உயரமான கல் அருகிலோ கட்டை அருகிலோ நிறுத்தித்தான் சைக்கிளில் ” மௌன்ட் ” ஆவார். இறங்கும்போதும் அப்படியே. இறங்குவதற்கு, சரியான அல்லது வாகான தளம் கிடைக்கவில்லையென்றால், லாண்ட் ஆவதற்கு சிக்னல் கிடைக்காத ப்ளேன் மாதிரி சுற்றிக்கொண்டேயிருப்பார். அப்படி ஒருமுறை, பொன்மலை சந்தைப்பக்கம் வட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, எங்கள் கேப்டன் ஷம்சுதின்தான், தசரதருக்குக் கைகேயிபோல் தோள் கொடுத்ததால், வகுப்பில் அவனின் அடாவடித்தனங்களைப் பொருட்படுத்தாமலிருந்தார்.

எங்களுக்குக் கணக்குப் பாடத்தைவிட, ஒழுக்கம் பற்றித்தான் அதிகம் சொல்லிக்கொடுக்கவேண்டியதாயிற்று அவருக்கு. அவர் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும் ஐந்தாவது நிமிடத்திலேயே எங்களுக்குப் போரடிக்க ஆரம்பித்துவிடும். அந்த மாதிரியான சிலசமயங்களில், யாராவது ஒருவன் எழுந்திருந்து திருவண்ணாமலையைப் பற்றி ஏதாவது கேட்டால், முதலில் கோபம் காட்டினாலும் உடனே தணிந்து, ரமணரைப் பற்றியும், மலையைப் பற்றியும், தீபம் பற்றியும் அங்குள்ள சித்தர்கள்பற்றியும் சொல்லத் தொடங்கிவிடுவார். வாழ்க்கை இருளின் அடர்ந்த கனத்தில் நெஞ்சம் தேடும் ஒளி அதுதானென்றும், சிவாய நம என்ற பதங்களுக்குள் அர்த்தம் கனன்று கொண்டிருப்பதாகவும், மலையில் பொதிந்திருக்கும் இருண்ட ரகஸ்யங்களுக்குக் கார்த்திகைச் சுடர்தான் சாட்சி என்றும் எங்களுக்குக் கொஞ்சம்கூடப் புரியாத பாஷையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் நீர்கோர்த்துக்கொள்ளும். கைகள் தானாகவே மேலெழும்பிக் கும்பிட ஆரம்பிக்கும். அவர் சொன்ன வார்த்தைகள் எங்களுக்குச் சொல்லாமல் விட்டதும், சொல்லாத சொற்கள் சொல்லிப் போனதும் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவரே தீயின் ஜ்வாலையாய் சுடரினின்று குதித்து வந்தமாதிரித்தான் தெரிகிறது. பின் வார்த்தைகள் தப்பி ஓடிய அவரின் மனக் குஹையில் மௌனம் கொஞ்ச நேரம் வீற்றிருக்கும். கைகளை உயர்த்தி நெருப்பின் பொருளை அளந்து கொண்டிருப்பதாகத்தான் எனக்குப்படும். அதன்பின் அவர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு கணக்குக்கு வந்துவிடுவார். எனக்குதான் தொடர்ந்து அண்ணாமலையின் ஏற்றின தீபம் நிழலாடிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட சிவப்பழத்தை கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை போகமுடியாதவாறு, குண்டக்கல் அனுப்பினால் எப்படி இருக்கும் ? பி.டி. மாஸ்டர் நெல்சன் ஜோசெஃபிற்குத் துணையாக ஹிந்தி தெரிந்த அவர்தான் போகவேண்டுமென்று ஹெட்மாஸ்டர் கொஞ்சம்கூட அவர் கெஞ்சலுக்கு மசியாமல், ” இது அரச கட்டளை ” என்று திருவிளையாடல் பாணியில் சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் போய்விட்டார். குண்டக்கல்லில் ஸ்போர்ட்ஸ் மீட். ஜூலை மாசமே நடந்திருக்க வேண்டிய அது என்ன காரணத்தாலோ தள்ளிவைக்கப்பட்டு இப்போது சுப்பாராமன் சாரின் சிவபக்திக்குக் குறுக்கே வந்து நின்றது.
பல்வேறு தடகள விளையாட்டுக்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும்போது, அதிகம்பேர் ஆர்வம் காட்டாததால், ஒவ்வொரு வகுப்பிலும் பத்துபேரைத் தரதரவென இழுத்து வரச் சொல்லி பி. டி. மாஸ்டர் ஆணையிட, டாஃபி வாங்கித்தராத படிப்பு சாரா காரணங்களுக்காக என்னையும் அதில் மாட்டிவிட்டுவிட்டான் என் வகுப்பு லீட( ன் ) ர். செலெக் ஷன் நடந்த அன்று வீட்டில் பாட்டிக்கு தெவசம் நடந்ததால், காலையில் ஒன்றும் சாப்பிடாமல்வேறு பள்ளிக்கு வந்திருந்தேன். நூறு, இரு நூறு, நானூறு மீட்டர் ஓட்டங்கள் மற்றும் ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் என்று எல்லாவற்றிலும் பங்கெடுக்கத் தள்ளப்பட்டேன். டி. ராஜுவும் நாகராஜனும் உண்மையிலேயே ஸ்போர்ட்ஸ்மேன்கள். அவர்கள் இரு நூறு மீட்டர் ரேஸில் இரு நூறாவது மீட்டரைத் தொட்டுக்கொண்டிருக்கும்போது நான் நூறாவது மீட்டரைக்கூடத் தொட்டிருக்க மாட்டேன். நெல்சன் வாத்தியாரின் ப்ராக்டிஸ் பயங்கரங்களுக்குப் பயந்து, மற்ற பசங்களெல்லாம் வேண்டுமென்றே மெதுவாக ஓட நான் தான் மூன்றாவதாக வந்து ஜூனியர்களுக்கான ரிலே ரேஸில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அதைத்தவிர, ஹை ஜம்பில் நான் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டேன். உண்மையில், ஐந்தடி உயரம் தாண்ட நிர்ணயிக்கப்பட்டபோது, நான் உள்பட எல்லோரும் குச்சியைத் தட்டிவிட்டோம். இரண்டாம் முறை நான் ” பெல்லி ஸ்ட் ரோக் ” முறையில் தாண்ட முயற்சித்தேன், நிச்சயம் குச்சியைத்தட்டிவிடலாம் என்ற நோக்குடன். ஆனால், என் துரதிர்ஷ்டம் கால் குச்சியின்மேல் நன்றாகப்பட்டு ஒருபக்க போஸ்ட்டே லேசாகச் சாய்ந்தும்கூட குச்சி கீழேவிழாது போனதில் செலக்ட் ஆகிவிட்டேன். ஷாட்புட் த்ரோ ஒன்றிற்குத்தான் ஆள்வேண்டியிருந்தது. ” அதற்குத் தனியாக ஒருபயலையும் செலக்ட் பண்ணவேண்டாம். ஹை ஜம்ப் காரனையே அதையும் பண்ணச் சொல்லுங்கள் ” என்று ஹெட் மாஸ்டர் சொல்லிவிட தாண்டி, குதித்து, ஓடி என்று என்னென்னவோ செய்துகொண்டிருந்ததில், மிட் டேர்ம் தேர்வில் கணக்கில் ஃபெயில் ஆகிவிட்டேன். அம்மாவோ நான் கணக்கில் வெறும் ஆறே மார்க் வாங்கியதில் பயந்துபோய் ” நோ மோர் ஸ்போர்ட்ஸ் ” என்று சொல்லிவிட்டாள். கணக்கில், ஏறத்தாழ எல்லோரும் ஃஃபெயிலாகியிருக்க, பேப்பர் திருத்திய சுப்பாராமன் சாரை ஹெட் மாஸ்டர், ” இதற்கு, உங்களைக் குண்டக்கல் போகச் சொன்னதுதான் காரணமா”? எனக் கண்டிக்க, சுப்பாராமன் சார் லீவ் எடுத்துக்கொண்டு இண்டெரிம் ஆக ஒருமுறை திருவண்ணாமலை போய் சிவனிடம்போய் முறையிட்டு வந்தார். அவரே எங்கள் வீட்டிற்கு வந்து , ” இந்த மார்க்கையெல்லாம் வைத்து எந்த முடிவிற்கும் வரக்கூடாது; ஃபார்ம் இஸ் டெம்பரரி, பட் க்ளாஸ் இஸ் பெர்மனெண்ட்” என்று க்ரிக்கெட்டில் சொல்வதை அப்பாவிடம் சொல்லிவிட்டுப்போனதின் அர்த்தத்தை அம்மா அரை மனதாகத்தான் ஏற்றுக்கொண்டாள்.
ஸ்போர்ட்ஸ் மீட்டிற்கு நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. பச்சைக் கலர் ட்ரௌசரும் வெள்ளை பனியனும் என அதற்கான யூனிஃபார்ம் முடிவாக, எல்லோரும் நல்ல டைலராகப் பார்த்து ட்ரௌசரைத் தைக்கக் கொடுத்திருந்தார்கள். ” டைலரிங்க் சார்ஜெல்லாம் என்னால் குடுக்கமுடியாது ” என்று கணக்கு மார்க்கையும் மனதில் வைத்துக்கொண்டு அம்மா சொல்லிவிட, புதிதாக டைலரிங்க் கற்றுக்கொள்ளும் பக்கத்துவீட்டு அக்காவிடம் ட்ரௌசர் தைக்கக் கொடுக்கப்பட்டுவிட்டது. அவள் ஒரு ட்ரௌசர் தைக்கக் கொடுத்த துணியில் இரண்டு ட்ரௌசர்கள் தைக்கப் பாடுபட்டிருந்தது அவள் தைத்துக்கொடுத்ததிலேயே தெரிந்தது. மற்ற எல்லோரும் அழகாக முன் பக்கப் பாக்கெட்டை ஏர் மாதிரி வைத்துத் தைத்திருக்க, என்னுடையது மாத்திரம் ஏதோ அடிவாங்கியவன் வாய் வீங்கியிருப்பதுபோலப் புண்ணாயிருந்தது. அந்தப் பாக்கெட் வெளியில் தெரியக்கூடாது என்று நான் பனியனைக் கடைசிவரை இன் பண்ணிக்கொள்ளவே இல்லை.
ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸில் ஒரு ஆளைத் தவிர மற்ற எல்லோருக்கும் பர்த் கன்ஃபர்ம் ஆகியிருந்தது. அரியலூர்தாண்டியும் இடம் ஒன்றும் கிடைக்காததால், மற்றவர்களெல்லாம் வண்டி ஆட்டத்தில் அரைகுறையாய்த் தூங்கிவிட்டிருக்க, ஜன்னல் வழி இருட்டை வேடிக்கை பார்க்கும் ஆசையினால், நான்மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருக்க, நெல்சன் சார், என்னைக் கீழே படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். நான் இரவெல்லாம் கரப்பான் பூச்சிகளோடும், எலிகளோடும் உறவாடிக்கொண்டே கண்ணயர முற்பட்டபோது, எக்மோர் வந்துவிட்டது. பின் மீண்டும் வேறு ரயிலில் குண்டக்கல்லுக்குப் பயணம்.

ஸ்போர்ட்ஸ் ஆரம்பித்ததே தெரியாமல் நாங்கள் பெண்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தபோது, நெல்சன் சார் என் தலையில் மட்டும் அடித்து, ” மூதி! அங்க என்ன பாத்துக்கிட்டு? போ ஒன் ஈவண்ட் ஆரம்பிச்சிடுச்சு ” என்று கத்தினார். எந்த ஈவண்ட் என்றே தெரியாது ஓடினால், ஹை ஜம்ப்பிற்கு என் பெயரைக் கூவிக்கொண்டிருந்தார்கள். ஓடின வேகத்திலேயே அதைத்தாண்டிவிட்டேன். முட்டிக்கு சற்றே மேலிருந்ததால் அதைத்தாண்டுவதில் ஒன்றும் ப்ரச்சனையில்லை. ஆனால், அடுத்ததாக ஐந்தடி உயரத்திற்கு சட்டென்று குச்சியை ஏற்றித் தாண்டச் சொன்னபோது அது ஐந்தடிக்கு மேலேயே இருந்ததுபோல்தான் எனக்குப்பட்டது. மூன்று முறையும் குச்சி தலையிலேயே தட்டி வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. ” தம்பி, இது லாங்க் ஜம்ப் இல்லப்பா, ஹைஜம்ப் ” என்று ஒருவன் தெலுங்கில் சொல்ல எல்லோரும் சிரித்ததில் அடுத்த ரயிலைப் பிடிக்கலாம்போல இருந்தது.

இதைவிட பெருத்த அவமானம் ஷாட்புட் த்ரோவில் காத்திருந்தது. எனக்கு ப்ராக்டிஸில் கொடுக்கப்பட்ட இரும்புப் பந்து மீடியம் சைஸ் சாத்துக்குடிபோலத்தான் இருந்தது. நானும் என் ” சைவ ” பலம்கொண்டமட்டும் வீசி எறிவேன். அது ஜூனியர் லெவலுக்குப் போதுமானதே என்று எங்கள் வசிஷ்டர் நெல்சனே சொல்லியிருந்ததில் எனக்குக் கொஞ்சம் பெருமை இருந்தது. ஆனால், ஈவண்டில் கொடுத்ததோ என் கைக்கு மீறிய இரும்புப் பந்து. இரண்டு கைகளாலும்கூட அதைப் பிடிக்க முடியாதிருந்தது. அப்புறம்தானே வீசுவதைப்பற்றி யோசிப்பதற்கு ! ஆனால் தெலுங்குப் “பையன்” ஒருவன் ப்ரம்ம ராட்ஷசன் போலவந்து அந்த ஷாட்புட்டை ஒரு நெல்லிக்காயைப் போல எடுத்து சற்றே மோந்துபார்த்துவிட்டு அதைப்பிடிக்காதவன்போல் விசிறி எறிந்ததில் அது க்ரௌண்டைவிட்டே காணாமல்போயிற்று. ஒலிம்பிக்கில்கூட இப்படி யாரும் வீசியிருக்க முடியாது என்று தெலுங்கு மஹா ஜனங்கள் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இப்படியாக நாங்கள் ஒன்றில்கூட ஜெயிக்காதுபோனது ஒன்றும் பெரிய விஷயமில்லை. துரைசாமி மாத்திரம் சீனியர்களுக்கான ஹைஜம்பில் கோல்ட் மெடல் அடித்தான். இந்த சிறுமைகளெல்லாம் ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு சுப்பாராமன் வாத்தியார் மைக்கில் பேசும்போது நடந்தது. ஏற்கனவே அவருக்கு ஒத்துவராத சாப்பாட்டினால் வயிறு உபாதையில் தவித்துக்கொண்டிருந்தார். நெல்சன் சார் ” தாக சாந்திக்காக ” வேறு இடம் தேடிப்போனதில் எங்களைக் கட்டிக்காக்கும் பெரும்பொறுப்பு சுப்பாராமன் சாருக்கு வந்துவிட்டதில் டென்ஷன் வேறு. ஷம்சுதீன் வாங்கிக்கொடுத்த ஜிஞ்சரில் படுத்த சில நிமிடங்களிலேயே தூங்கிப்போனவர் ஏதோ பழையகாலத்து கதவைத் தொடர்ந்து யாரோ இழுத்து மூடிக் கொண்டிருப்பதுபோலக் குறட்டைவிட ஆரம்பித்துவிட்டார். ” கேஸ்” ப்ராப்ளம் வேறு. எங்கள் யாராலும் அவரின் வேறு வேறு அவயவங்கள் எழுப்பிய இரண்டுவித சப்தங்களால் தூங்கமுடியாமல் போயிற்று.

மறு நாள் நிறைவு விழாவில் சுப்பாராமன் சார் பேச அழைக்கப்பட்டார். ” ஐ டோண்ட் நோ, வெதெர் யூ நோ ஆர் டோண்ட் நோ ” என விவேகானந்தரின் பேருரை போல் அவர் ஆரம்பித்தவுடன் கூட்டத்தில் இருந்தவர்களெல்லாம் ஏதோ ஒரு பேருண்மையை அறியும் ஆவலில் அமைதியாகிவிட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த லக்ஷ்மிபாய் என்ற வீரம் மிக்க அரசி குண்டக்கல் வந்ததாகவும், ” அவள் இப்போது உயிருடன் இல்லை ” என்ற உபரித் தகவலுடன் அவர் ஆற்றிய உரை இலக்கின்றி கவர்மெண்ட் அறிவிக்க வேண்டிய பஞ்சப்படிவரைக்கும் வந்தபோது எல்லோரும் கோரசாகக் கத்த ” இத்துடன் என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன் ” என்று மறந்துபோய்த் தமிழிலேயே சொல்லி விறுவிறுவென்று இறங்கி நேரே குண்டக்கல் ஸ்டேஷனுக்கே போய் விட்டார் அடுத்த வண்டியையேப் பிடித்துவிட. என் மேல் ஏனோ கோபத்திலிருந்த நாகராஜன், நானும் அவர் பேசும்போது கத்தியதாகச் சொன்னதை விசாரிக்காமல் நம்பி எனக்குக் கணக்குப் பரீட்சையில் அரையாண்டுத் தேர்விலும் ஃபெயில் மார்க் போட்டுவிட்டார். அதன்பின் விளையாடுப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கவில்லை நான்.
அதற்கு அடுத்த ஆண்டு, கார்த்திகை நன்னாளில், முருகன் கோவில் சொக்கப்பனைக்கு பனை மட்டைகளைத் தன் செலவில் வாங்கிக்கொடுத்திருந்த சுப்பாராமன் சார், இரவு எட்டு மணி அளவில், அதற்குத் தீ மூட்டிய போது, கைகளை உயர்த்தி சிவாய நமஹ என்று மூன்று சுற்று சுற்றி வந்து சொக்கப்பனைக்குள் குதித்து உடல் கருகிப்போனார். மீசை நரைத்துப்போயிருந்த பழைய கோல்ட் மெடலிஸ்ட் துரைசாமியைப் போனமுறை பார்த்தபோது, அவன் பையன் உடனிருந்தான். அவன் கன்னத்தைக்கிள்ளி “உன் பேர் என்ன”? என்றபோது ” சுப்பாராமன் ” என்றான்.

Series Navigationகனவுகளின் பாதைகள்இரண்டு வகை வெளவால்கள்
author

ரமணி

Similar Posts

6 Comments

  1. Avatar
    கண்ணண் says:

    திரு. ரமணி அவர்களுக்கு வணக்கம். உங்கள் எண்ணமும் எழுத்தும் நன்றாக இருக்கிறது.மேலும் தொடர வாழ்துக்கள்.

  2. Avatar
    vasu says:

    very humorous. the description is so good that one can easily visualise the scenes. keep giving such thoughtful entertaining events.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *