பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை

This entry is part 5 of 48 in the series 11 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

அதனினும் அரிது கூன், குறளு, செவிடு பேடு

நீங்கிப் பிறத்தல் அரிது’’

என்று ஔவையார் மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றிப் பாடும்போது குறிப்பிடுகின்றார். பிறவியில் இறுதியானது மனிதப் பிறவியே என்பர். உயிர்கள் செய்யக் கூடிய நல்வினைப் பயன் காரணமாகவே உயர்வான மனிதப் பிறவியாக பிறக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவர். அதில் எந்தக் குறைபாடும் இல்லாது பிறப்பது சிறப்பிலும சிறப்பாகும்.

இவ்வாறு குறைபாட்டுடன் பிறந்தவர்கள் சமுதாயத்தில் பல்வேறு சிக்கல்களையும், ஏசல்களையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய குறையுடன் பிறந்த மனிதர்களை கூனன், குருடன், குறளன், செவிடன், மூங்கையன்(ஊமையன்), முடவன், நொண்டி எனப் பலவாறாகக் கூறி இழிவு படுத்துகின்றனர். குறையில்லா மனிதர்கள் யாரும் இல்லை. உடலில் குறையுடையவர்களையே இச்சமுதாயம் இழிவாக மேலே குறிப்பிட்டவாறு கூறுகின்றது.

இவையெல்லாம் மாறி அவர்களை உடல் ஊனமுற்றோர், ஊனமுற்றோர் என்று சமுதாயத்தில் குறிப்பிட்டனர். அச் சொற்களும்கூட அவர்களது மனதை வருத்தும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏதேனும் குறையிருப்பினும் அவர்களுக்கு வேறு(மாற்றுத் திறன்கள்) திறமைகள் இருக்கும் அதனால் அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று இன்று சிறப்பாக அழைக்கின்றனர். இச்சொல்லே அவர்களது குறைகளுக்கு மருந்திடுவது போன்று அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

நமது முன்னோர்கள் சமுதாயத்தில் நிலவியதை எல்லாம் வைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த செய்திகளைப் பழமொழிகளில் கூறிப் போந்துள்ளனர்.

உடற்குறைபாடுடையோர் காரணம் கூறல்

கால், கை அல்லது உடல் உறுப்புக் குறைபாடுடையவரை நொண்டி என்று வழக்கில் மக்கள் கூறுவர். இவர்களில் சிலர் சுறுசுறுப்பாகப் தங்களது உடற்குறைபாட்டையும் மறந்து தங்களால் இயன்ற வேலையைப் பார்ப்பர். ஆனால் சிலர் வேண்டுமென்றே தங்களது குறையை ஒரு காரணமாகக் காட்டி வேலைசெய்ய இயலும் என்றாலும் வேலையைப் பிறரிடம் ஒப்படைப்பர். தாங்கள் வேலை செய்யாததற்கு தங்களது குறையைக் காரணமாகக் கூறுவர். காலில் அல்லது கையில் குறையிருந்தால் அதனைக் கூறித் தப்பித்துக் கொள்வர். இவர்களின் செயலை,

‘‘நொண்டிக்குச் சறுக்குன்னதுதான் சாக்காம்’’

(சாக்கு-காரணம், சறுக்குன்னது- வேலையின் தன்மை)

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. மேலும் இங்ஙனம் இருப்போர் பிறருடைய இரக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் என்ற அவர்களது பண்புக் குறைபாட்டையும் புலப்படுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது. உடற் குறைபாடு உள்ளவர்கள் தங்களால் இயலுகின்ற வேலைகளை மனஉறுதியுடன் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் இப்பழமொழி வழங்குகின்றது.

குசும்பு(செயல்)

உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு பல திறமைகள் இருக்கும். அவர்களிடம் இருக்கும் பிற திறமைகளை அறிந்து அவற்றை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் நன்கு முன்னேற்றம் அடைவர். பிறருக்குச் சுமையாக இருக்க மாட்டார்கள். சமுதாயத்தில் உள்ளவர்கள் இதனை அறிந்து செயல்பட வேண்டும். அவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது. இத்தகைய அரிய பண்பாட்டு நெறியை,

‘‘நொண்டிக்கு நூறு குசும்பு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இங்கு குசும்பு என்பது வழக்கில் தவறாக மக்களால் பிறரைச் சீண்டி வலுச்சண்டைக்கு இழுப்பது அல்லது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி விட்டுவிட்டு ஒன்றும் அறியாதது போன்று இருப்பது என்பன போன்ற பொருள்களில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

ஆனால் இங்கு குசும்பு என்பது செயல்பாடு என்ற பொருளில் வழங்கப்பட்டு வருவது சிந்தனைக்குரியதாகும். ஒன்றில் குறைபாடு உடையவராக இருந்தாலும் மற்றொன்றில் அவர் திறம்படச் செயல்படுவார் என்பதையே இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது. அதனால் இதனைப் புரிந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து அவர்களது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும் என்ற அன்பு நெறியை இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

முடவனும் கொம்புத்தேனும்

அவரவர் தங்களது தகுதிக்கும், திறனுக்கும் ஏற்ற வகையில் தான் ஆசைப்படுதல் வேண்டும். அதுவே அவருக்கு நலம்பயக்கும். தங்களது சக்திக்கு மீறி ஆசைப்பட்டால் அது துன்பத்தையே தரும். இதனை விளக்க,

‘‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையால்ல இருக்கு’’

என்ற பழமொழியை நமது முன்னோர்கள் கூறுவர். மரக்கிளையில் உள்ள தேனை கைகால்கள் குறைபாடுடைய ஒருவன் எடுக்க ஆசைப்பட்டால் அது நிறைவேறாது. அதுபோன்று, ஒருவன் தன்னால் இயலுகின்ற செயல்களைச் செய்யவே ஆசைப்பட வேண்டும். மாறாக தன்னால் முடியாத செயலைச் செய்ய ஆசைப்படுதல் கூடாது. அது நிறைவேறாது துன்பத்தைத் தரும் என்பதை உணர்ந்து வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது. இதனுடன்,

‘‘கையில் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல

நோன்று கொளற்கரிதே’’

(இதன் பொருள் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான் ஒருவன். நண்பர்கள் அது தவறு விட்டுவிடு என்கின்றனர். அதற்கு அவன், நண்பர்களே கையில்லாத வாய் பேச இயலாத ஒருவன் சுடுகின்ற பாறையில் வைத்துள்ள வெண்ணெய் உருண்டையை எவ்வாறு கண்ணினால் காவல் செய்கின்றானோ அது போன்று எனது நிலை உள்ளது. வெப்பமான பாறையில் வைத்துள்ள வெண்ணெய் உருகிப் போவதை அவனால் தடுக்க இயலாது. பிறரை அழைத்தும் தடுத்து நிறுத்த முடியாது. அது உருகுவதைப் பார்க்க மட்டுமே முடியும். அது போன்று எனது காதல் நோய் உள்ளது என்று கூறுகின்றான். முடவனின் நிலை தலைவனின் நிலையை விளக்குவதாக உள்ளது.)

என்ற குறுந்தொகைப் பாடல் வரிகள் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளன.

குருடு

கண் பார்வையற்றவரைக் குருடன்(ஆண்), குருடி(பெண்) என்று வழக்கில் வழங்குவர். ஒருவர் மீண்டும் மீண்டும் ஒரே செயலையோ அல்லது ஒரு தவறையோ செய்து கொண்டே இருப்பர். தவறைச் சுட்டிக் காட்டினாலும் அதனைத் திருத்திக் கொள்ளாது மீண்டும் அதே தவறினைச் செய்து கொண்டே இருப்பார். இதனை,

‘‘பழைய குருடி கதவைத் திறடிங்கற கதைதான்’’

என்ற பழமொழி விளக்குகிறது. ஒருவன் திருந்தமாட்டான் என்ற நிலையில் அவனது செயலைக் குறிப்பிடுவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

சிலர் யார் எப்படிப் போனாலும் பரவாயில்லை. தமக்கு பயன் கிடைத்தால் போதும் என்று இருப்பர். இவர்கள் சுயநலக்காரர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படமாட்டார்கள். தாங்கள் பலன் பெற்றால்மட்டும் போதும் என்று நினைப்பர். இவர்களது மனநிலையைப் புலப்படுத்தும் வகையில்,

‘‘கோழிகுருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தாச் சரிதான்’’

என்ற பழமொழி அமைந்துள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் நமக்குப் பலன் கிடைத்தால் சரிதான் என்ற மனநிலையில் உள்ளவர்களின் பண்பினையும் இப்பழமொழி விளக்குகின்றது. இங்கு குருடு என்ற மாற்றுத் திறனாளிகளைக் குறிக்கும் சொல்லை வைத்து தன்னல மனப்பாங்கு உள்ளோரின் செயல் விளக்கப்படுவது நோக்கத்தக்கது.

குருட்டுப் பூனை

பார்வையற்ற பூனை அது தனக்குரிய இடத்தில் இருந்தால் அதற்கு எந்தவிதத் துன்பமும் வராது. ஆனால் அது வீட்டின் விட்டத்தில்(மேல்பகுதி) ஏறிவிட்டால் அது எந்த இடத்தில் குதிக்க வேண்டும் என்று தெரியாது குதித்து உயிர் துறக்க நேரிடும். அதுபோன்று சிலர் தங்களால் முடியாத, தங்களுக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் ஒரு செயலைச் செய்வர். அச்செயலைச் செய்ததினால் அதிலிருந்து ஏற்படும் துன்பத்தில் இருந்து மீள முடியாது வருந்துவர். அவர்களது அத்தகைய நிலையை,

‘‘குருட்டுப் பூனை விட்டத்தில ஏறுனமாதிரி’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இங்கு குருட்டுப் பூனை என்பது துன்பம் ஏற்படும் என்று அறிந்தும் ஒன்றனைச் செய்பவரைக் குறித்த குறியீட்டுச் சொல்லாகும். தங்களால் முடியாத செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்ற வாழ்க்கை நெறியையும் இப்பழமொழி அறிவுறுத்துகின்றது.

ஆண்டி

எதிலும் பற்றில்லாத துறவியரை சந்நியாசி, சாமியார், ஆண்டி என்று குறிப்பிடுவர். அனைத்தையும் முற்றிலும் துறந்தவரைத்தான் இவ்வாறு குறிப்பிடுவர். அவர்களே உண்மையில் துறவியர்கள் ஆவர். மற்றவர்கள் போலி வேடதாரிகள் ஆவார். இத்துறவியர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஐம்புலன்கள் வழி அவர்கள் வாழ்ந்தால் அவர்களை இச்சமுதாயம் இகழும். அவர்கள் இழிநிலை அடைவர். இத்தகைய துறவியர்க்குரிய வாழ்வியல் அறத்தை,

‘‘ஆண்டிக்கு வாச்சது அஞ்சும் குருடு’’

(ஆண்டி-துறவி, வாச்சது-வாய்த்தது, அஞ்சு-ஐந்து)

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

துறவியர்க்கு வாய்த்த மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்களும் குருடு. இவற்றிலிருந்து உணரக்கூடிய அனைத்து உணர்வுகளையும் அவர்கள் மற்றவர்கள் போன்று உணர்ந்தாலும் அவர்கள் அதற்கு அடிமைப் படாது வாழ்வர். அவர்களைப் பொறுத்தவரையில் அவை இருந்தும் இல்லாதது போன்றதே ஆகும். ஐம்புலன்கள் வழி அவர்கள் நடவாது அவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தி வாழ்வர் என்ற துறவியர் வாழ்வை விளக்கியுரைப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

காது குறைபாடுடையோர்

கண்ணைப் போன்றே செவியும் முக்கியமான உறுப்பாகும். செவிப்புலத்திறனில் குறைபாடு உடையவர்களை சமுதாயத்தில் செவிடன் என்று அழைப்பர். சிலர் எவ்வளவுதான் கூறினாலும் அவற்றைக் கேளாது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனையே செய்து கொண்டிருப்பர். அவர்களின் நடவடிக்கைகளை,

‘‘செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரிதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இராமாயணத்தில் வரும் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைக்கின்றான். இராவணனுக்கு கும்பகர்ணன், வீடணன், இந்திரஜித் உள்ளிட்டோர் நீதிநெறிகளை எடுத்துரைக்கின்றனர். ஆனால் அவற்றை இராவணன் கேட்காது அவன் என்ன நினைத்தானோ அதனையே செய்து முடிக்க நினைக்கின்றான். அவனுக்குப் பலர் கூறிய அறிவுரைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது. ஏனெனில் சங்கின் ஒலி மிகவும் அதிகமானது. அதன் ஒலியைக் கேட்க இயலாதவன் மற்ற ஒலியையும் கேட்க முடியாது. அதுபோன்றே அனைவரும் கூறியதைக் கேட்காத இராவணன் இறுதியில் அனைத்தையும் இழந்து தனது உயிரையும் இழந்தான். அதனால் பிறர் சொல்லக் கூடிய நல்ல கருத்துக்களை அனைவரும் கேட்டு நடத்தல் வேண்டும் என்ற கருத்தை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.

வாய்பேசா இயலாக் குறையுடையோர்

இத்தகு குறையுடையோரை சமுதாயத்தில் ஊமன், ஊமையன், மூங்கையன் என்று பலவாறு குறிப்பிடுவர். சிலர் வாய் ஓயாது பேசிக்கொண்டே இருப்பர். சிலர் அளவுடன் பேசுவர். சிலர் எதுவும், எதற்கும் எப்பொழுதும் பேசமாட்டார்கள். தேவையேற்படின் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவர். இவர்களையும் வாயில்லாப் பூச்சி, வாய்பேசாதவன் என்று குறிப்பிடுவர். இவ்வாறு இருப்பவர்கள் சிலர் பிறருக்குத் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பர். பேசாமலேயே இருந்து பிறருக்குத் தீமை செய்வர். இத்தகைய கயமை எண்ணம் உடையவர்களை,

‘‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்’’

(பெருச்சாளி- சிறிய நாய்க் குட்டி போன்றது. பெரிய எலி இதனை வழக்கத்தில் ஊரெலி என்பர்.)

என்ற பழமொழி சித்தரிக்கின்றது.

இப்பழமொழி உண்மையில் வாய்பேச இயலாதவர்களைக் குறிப்பிடவில்லை. அமைதியாக தேவையின்றி வாய்பேசாது இருப்போரையே குறிப்பிடுகின்றது. பெரிய எலியானது வீட்டைச்சுற்றித் தோண்டித்தோண்டி வீட்டின் அடிப்பாகத்தில் வளைஅமைத்து வாழும். இதனால் வீடு கெடும். அது போன்று வாயில்லாப் பூச்சி என்று பிறரால் அழைக்கப்படுவோர் அயலாருக்கு அமைதியாக இருந்தே கெடுதல் நினைப்பர். இதனை,

‘‘கலார்னு பேசறவனை நம்பலாம். வாய்பேசாது அமுக்குணியா இருப்பவனை நம்ப முடியாது’’

என்ற வழக்குத் தொடர் விளக்குவது குறிப்பிடத்தக்கது. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருப்பவனை கலார்னு பேசறவன் என்பர். தேவையானால் பேசுபவனை,‘அமுக்குணி’ என்பர். இவர்களின் உள்ளார்த்தத்தை யாராலும் அறிந்து கொள்ள இயலாது. அனைவரிடமும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற உன்னத பண்பாட்டு வாழ்வியல் நெறியை இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகின்றது.

மேலும் எல்லாச் செய்திகளையும் நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலாது. சிலவற்றைக் கூறலாம். சிலவற்றைக் கூற முடியாது. அவ்வாறு இருந்தால்தான் ஒவ்வொருவருக்கும் நல்லது. ஏனெனில் அனைத்தையும் பிறர் அறியக் கூறினால் மற்றவர்கள் இதனை அறிந்து பழிப்பர். இதனால் பலரின் அவமானங்களுக்கு ஆளாக நேரிடலாம். இதனை,

‘‘ஊமையன் கனவு கண்டது மாதிரி’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. வாய்பேசாதவன் எவ்வாறு தான் கண்ட கனவைப் பிறரிடம் கூற முடியாதோ அதுபோன்று வெளியில் யாரிடமும் கூற இயலாத செய்திகளைக் கூடாது. அச்செய்தியை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நலம்பயக்கும் என்ற அரிய கருத்தை இப்பழமொழி மொழிகின்றது.

பழமொழிகள் மாற்றுத்திறனாளிகளை மதித்து அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. மேலும் இப்பழமொழிகளில் இடம்பெறும் மாற்றுத் திறனாளிகள் பற்றிய செய்திகள் அனைத்தும் குறியீட்டுச் சொற்களாக அமைந்து நமக்குப் பண்பாட்டு நெறிகளை விளக்குகின்றன எனலாம்.

Series Navigationவிஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணிமணியக்கா
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *