சமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன். நான் தேடியதை காணோம். இரசீது போட்டுக்கொண்டிருந்த யுவதியை பார்த்து “ஏங்க, இந்த தமிழ் புத்தகங்கள் எல்லாம் எங்க இருக்கு?” என்று கேட்டேன். வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தார். என்னை அந்த சூழலில் மிக அன்னியமாக உணர்ந்தார். “யூ மீன் தமில் புக்ஸ்?” என்று கேட்டார். ஆமாங்க. ”இரண்டாயிரம் வருட பேரிலக்கிய மரபு கொண்ட தமிழ் மொழிபுத்தகம்” தாங்க அது என்றேன். யுவதியும் பிற ஊழியர்கள் அனைவரும் கருப்பு சீருடை அணிந்து இருந்தார்கள். கருப்பு சீருடையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் தெரியவில்லை. புத்தகம் படிப்பதே துக்கம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?
மூலையில் இருந்த ஒரு அடுக்கத்தை காண்பித்தார். அரசு அலுவலகத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்போல் இருந்தது. சரி என்ன இருக்கிறது என்று ஆர்வமாக போனேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்த கடையில் ஏறக்குறைய இருபது தமிழ் புத்தகங்கள் இருந்தன. அதுவும் ”30 நாட்களில் மார்கெட்டிங்”, “இந்த நாள் இனிய நாள்”, “30 நாட்களில் ஆங்கில பாஷை” என்றெல்லாம் இருந்தது. “கனவு மெய்ப்படும்” என்று சுகி சிவம் பொங்கி இருந்தார். எங்க பொங்குறது? ”ஊருக்கு நல்லது சொல்வேன்” என்று வேறு சொல்லி இருந்தார். என்ன நல்லது சொல்லி என்ன செய்ய, யாராவது கேட்டால் தானே? அடுக்கத்தின் பக்கத்தில் சாதாரண தோற்றத்தில் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று “என்னங்க இவ்வளவு தானா? “ என்றேன். அவர் “ஆமா அவ்வளவு தான் சார். நான் இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. யாரும் இந்த பக்கம் வருவதே இல்லை. இங்க இருக்க இந்த புத்தகங்களை வாங்கவே ஆள் இல்லை அதுல எங்க சார் புது புது புத்தகம் எல்லாம் வாங்கி வைப்பாங்க?” என்றார். வருத்தமாக இருந்தது.
புத்தக கடைக்காரர்களுக்கும் பதிப்பகத்தாருக்குமான தொடர்பு எல்லாம் எனக்கு தெரியாது? ஆனால், அந்த கடையில் பல தமிழ் சினிமாக்களின் குறுவட்டுகள் இருந்தது. “ஒஸ்தி” (வரி விலக்கு உண்டா என்ற சந்தேகம் எல்லாம் வேறு வந்து தொலைக்கிறது?!) என்ற தமிழ் சினிமாவின் பாட்டுகள் அடங்கிய குறுவட்டு கூட இருந்தது. ஜெயமோகனின் “அறம்” சிறுகதை தொகுப்பை அந்த கடையில் எப்படி தேடுவது? (”அறம்” எங்கே கிடைக்கும் என ஜெ.மோ அவருடைய தளத்தில் குறிப்பிட்டிருப்பது வேறு விசயம்)
Chetan Bhagat – ன் “Revolution 2020” விளம்பரம் வைத்து இருந்தார்கள். சரி. இந்த புத்தகம் இருக்கான்னு கேட்கலாமே என்று தோன்றியது. கேட்டேன். ஸ்டாக் இல்லை என்றார்கள். அந்த புத்தகம் அக்டோபரில் வெளிவந்து நவம்பரில் 1,75,000 காப்பிகள் விற்று தீர்ந்திருப்பதாக கேள்வி பட்டேன். ஆச்சர்யமாக இருந்தது. Chetan Bhagat –ன் எழுத்துக்களை ஒரு சாரர் எழுத்துக்களாகவே ஒத்துக்கொள்வதில்லை. ஆனால், அவரால் இன்றைய இளைய சமுதாயத்தையும் வெகுஜனத்தையும் நெருங்க முடிந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இவர் எப்படி வெகுஜனத்தை கவர்கிறார்? தன்னுடைய எழுத்துக்களில் மிக எளிமையான உரையாடல்களை வைக்கிறார். கதை நேர்கோட்டில் செல்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான நடுத்தர மக்களையும் அவர்கள் சார்ந்த விசயங்களையும் வைத்து பகடை விளையாடுகிறார்.
இங்கே வாசகர் வட்டம் எல்லாம் வைத்தும் கூட மூவாயிரம் நாலாயிரம் விற்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. பொதுவாகவே இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
Anuska Ravisankar-ன் “I like Cats, Elephants never forget” இருக்கா என்று கேட்டேன். ஒருவர் கணினியில் உட்புகுந்தார். வினாடியில் எந்த அடுக்கத்தில் எங்கே இருக்கு என்று தெளிவாக சொன்னார். இப்படி தமிழ் புத்தங்களை கணினியில் தேடி தரும் கடைகள் இருக்கிறதா என்றே எனக்கு தெரியவில்லை.
சென்னை நகரின் தெருவோரங்களில் சிலர் அடுக்கு வைத்து ஆங்கில “Best sellers”-ன் புத்தகங்களை விற்கிறார்கள். அது எல்லாம் நகல் எடுக்கப்பட்டவை என நினைக்கிறேன். அவர்கள் கூட தமிழ் புத்தகங்களை விற்பதில்லை. ஒரு வேளை தமிழ் பதிப்பகத்தார் வந்து பிடிப்பார்களோ என்னவோ?
வருடம் தோரும் நடைபெறும் சென்னை புத்தகக்கண்காட்சியின் முடிவில் அதிகமாக விற்பனையாகி இருக்கும் புத்தகங்களை பார்த்தால் “பொன்னியின் செல்வன்”, “காந்தியின் சுய சரிதை(மலிவு விலை பதிப்பு)”, “திருக்குறள்”, “How to write Essays” போன்ற புத்தகங்கள் தான் முதல் பத்து இடங்களை பிடிக்கின்றன.(அட, அதையாவது ஜனங்க படிக்கிறாங்களே, விடுங்க சார் என்பது காதில் விழுகிறது) மற்ற படி என்னதான் மாய்ந்து மாய்ந்து “வெய்யிலையும்”, “அறத்தையும்” எழுதினாலும் சீந்துவாரில்லை.
JK.Rowling-ன் “Harry Potter” புத்தகத்தை முதல் நாள் இரவே சென்னை புத்தக கடை வாசலில் படுத்து இருந்து வாங்கி சென்ற செய்தி எல்லாம் இப்பொழுதா நினைவில் வந்து தொலைக்கவேண்டும்.
ஒரு முறை சிறிய ஊர் ஒன்றின் ”கிளை” நூலகம் ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. (அது என்னவோ பெரும்பாலும் நூலகங்கள், கிளையாகவே இருக்கிறது). கவிதை புத்தகங்கள் வரிசையில் மீராவின் “கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள்” புத்தகத்தை எடுத்து பிரித்து பார்த்தேன். முழுவதும் கசங்கி இருந்தது. சில பக்கங்கள் சிறிது கிழிந்தும் இருந்தது. மிக அதிகமாக வாசிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. ஒரு பக்கத்தை பிரித்தேன். ”மன்மதப் பந்தல் சரிய போகிறது” என்று எழுதி இருந்தார். எதை நினைத்து எழுதினாரோ?
70-களில் மீராவால் இளைய சமுதாயத்தை அசைத்து பார்க்க முடிந்திருக்கிறது. அதே போல் ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” வெளிவந்த வெகு நாட்களுக்கு சாதாரண வாசகனையும் ஆட்டி படைத்திருக்கிறது.
சுஜாதா கொஞ்சம் இளைய சமுதாயத்தை அசைத்து பார்த்திருக்கிறார். (எத்தனை பேர் இதை எதிர்க்க போகிறார்களோ தெரியவில்லை?). சுஜாதா இலக்கியவாதியே அல்ல என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். மேலும், அவருடைய கதைகள் இன்றைய இளைஞர்களால் பெரிதாக ஒன்றும் கொண்டாடப்பட வில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால். எஸ்றா- வின் கதாவிலாசத்தில் சுஜாதாவின் “நகரம்” கதையை குறிப்பிட்டு அவரை இலக்கியவாதியாக எஸ்றா ஆக்கி இருக்கிறார். ஆனால், ஒன்றை மறுப்பதற்கு இல்லை. சுஜாதா வெகுஜன எழுத்துக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார்.
80 – களில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் “உன்னால் முடியும் தம்பி” போன்ற சுய முன்னேற்ற நூல்கள் ஓரளவுக்கு இளைய சமுதாயத்தை சென்றடைந்திருக்கிறது.
பொதுவாக இன்றைய இளைய சமுதாயத்திற்கு “Cinema, Cricket, Politics” ஆகியவற்றில் தான் சுவாரசியம் இருக்கிறது. அதுவும் “Politics” எல்லாம் மேம்போக்காகத்தான் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். (அதுவும் கூட அவர்களின் தினசரி வாழ்க்கையை பாதிப்பதால் தான்.) ஏதோ ஒரு சினிமாவின் ஓரத்தில் வந்து போன துணை நடிகை பற்றி எல்லாம் தீர்க்கமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சென்னை அண்ணா நூலகத்திற்கு தினமும் ஏறக்குறைய 1000 பேர் வருவதாக தெரிகிறது. சென்னையின் ஏதாவது ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் தியேட்டர்களுக்கு ஒரு நாளில் செல்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. போகாத நூலகம் எங்கே இருந்து தொலைந்தால் தான் என்ன?
இன்றைய இலக்கியவாதிகளை ஏங்க இந்த இளைய சமுதாயத்தையும் சேர்த்துக்கொண்டு உங்கள் எழுத்துக்களை எழுதலாமே என்று கேட்டால்,
”ஈராயிரம் வருட தொன்மை கொண்ட தமிழ்ப்பண்பாட்டின் அறிவுத்தளம் என்பது எளிமையாக பள்ளிக்கூட தளத்திலோ டீக்கடை தரத்திலோ பேசப்படக்கூடிய ஒன்று அல்ல” என்று கூறி வாசகன் தான் தன்னுடைய வாசிக்கும் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமே தவிர எங்களால் எல்லாம் இறங்கி வர முடியாது என்கிறார்கள். பெரும்பாலான வெகுஜனத்தை புறக்கணித்து எழுதும் எழுத்து இருந்தால் என்ன இல்லாவிட்டால் தான் என்ன?
இன்றளவும் உலகத்தின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக கருதப்படும் ஓ.ஹென்றி எழுதிய “The Gift of the Magi” மிக எளிமையானது என்பது அனைவரும் அறிந்ததே.
பொதுவாகவே இலக்கியவாதிகள் எல்லாம் வெகுஜன விரோதிகளாவே இருக்கிறார்கள். இன்றைய தமிழ் எழுத்தாளர்களால் எல்லாம் இளைய சமுதாயத்தையும் பெரும்பான்மை வாசகர்களையும் நெருங்கவே முடியவில்லை என்பது தான் உண்மை.
அப்பொழுதெல்லாம் ”அம்புலிமாமா” வெளிவரும் நாள் மிகுந்த இன்பம் பயப்பதாக இருந்தது. யார் முதலில் நூலகத்திற்கு செல்வது என்பதில் தான் அன்றைய நாள் தொடங்கும். அம்புலிமாமாவில் வெளிவரும் “விக்கிரமாதித்தனும் வேதாளமும்” கதையில் வரும் வேதாளம் பெரிய ஆச்சர்யமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள், சிறுவர் தொலைக்காட்சிகளில் வரும் கோர முகம் கொண்ட வேதாளங்களை பார்த்து விட்டு அங்கே பேய், இங்கே பேய் என்று இரவில் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். ஆச்சர்யம் அவஸ்தை ஆகி போனது.
சிறுவர்களுக்கான தமிழ் கவிஞர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. வானொலி அண்ணா “கூத்த பிரான்” சென்னை வானொலியில் ஏதவது நிகழ்ச்சி செய்கிறார். அந்த சென்னை வானொலியை யாரு கேட்கிறார்கள்? குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவிற்கு பிறகு யாராவது சிறுவர் இலக்கியம் அவர் அளவுக்கு எழுதுகிறார்களா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.
இன்றும் அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் நடுத்தர வயதை கடந்த பெண்கள் “ரமணி சந்திரன்”, விமலா ரமணி, சிவசங்கரி” எல்லாம் அலுவலக நேரத்திலேயே படிப்பதையும் பார்க்க முடிகிறது.
”Lift Operator”, “Night Watchman”, “Security Man” “Librarian” இவர்கள் எல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். எப்பவும் புத்தகம் படித்துக் கொண்டே இருக்கலாம். சிலர் படிப்பதையும் பார்க்க முடிகிறது. எவர் ஒருவருக்கு அவருடைய விருப்பமே தொழிலாக அமைகிறதோ அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் ஒரு நாள் கூட வேலையே செய்ய வேண்டியதில்லை. விருப்பத்தை செய்தால் மட்டும் போதும்.
முன்பு, சினிமா துறையை சேர்ந்தவர்கள் “சில நேரங்களில் சில மனிதர்கள்(ஜெயகாந்தன்), கரையெல்லாம் செண்பக பூ (சுஜாதா)” போன்ற கதைகளை சினிமாவாக எடுத்தார்கள். (சுஜாதா இரு தளங்களிலும் இயங்கியதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை) இப்பொழுது, நிலைமை தலைகீழ். தீவிர இலக்கியவாதிகள் தான் சினிமாவை நோக்கி படை எடுக்கிறார்கள். அப்படியாவது தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்தால் சரிதான்.
இயக்குனர் மிஸ்கின் புத்தகங்களின் காதலராக இருந்து ஏதாவது புத்தகங்களை சினிமா திரையில் காண்பிக்கிறார். யாராவது அதைப் பார்த்தாவது ஏதாவது புத்தகம் படிக்கிறார்களா பார்ப்போம் என்று நினைக்கிறார் போல இருக்கிறது.
பக்கத்து மாநிலமாகிய கேரளாவில் சிறுவர்களுக்கு வித்யாரம்பம் எழுத்தாளர்களால் செய்து வைக்கப்படும் நிகழ்வை இங்கே நினைத்து பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே முல்லைப்பெரியார் பிரச்சினையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் சகோதரிகள் ”மிக அதிகமாக படித்தவர்களை” கொண்ட கேரள மாநிலத்தின் ஒரு சாராரால் மானபங்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்து மனத்தை வருத்துகின்றன. படிப்பிற்கும் அறிவிற்கும், படிப்பிற்கும் பணத்திற்கும், படிப்பிற்கும் வாழ்வியல் ஒழுங்கிற்கும் (படிப்பிற்கும் எதற்குமே) எந்த சம்பந்தமுமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியது.
அய்யன் திருவள்ளுவன் வேறு நினைவில் வந்து தொலைக்கிறான்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கற்றதனாலாய பயனென் கொல்? தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சார்லஸ் டிக்கன்சின் “A Tale of Two Cities”, ப்ராங்க் பாம்-ன் “கோழை சிங்கமும் பசித்த புலியும்” எல்லாம் தெரிந்து வைத்து இருந்தார். ஜெயகாந்தனையும், புதுமை பித்தனையும் சுத்தமாக தெரியவில்லை. “Prodigy” நிறுவனம் வெளியிட்டுள்ள ரூ.20/- புத்தக வரிசையில் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறார். ஒரு புத்தக கடையில் மேற்படி வரிசையை பார்த்தேன். தமிழ் இலக்கியவாதியாக “பாரதி” மட்டும் இருந்தான். இன்றைய இலக்கியவாதிகளின் கதையோ அல்லது புதுமைப் பித்தனின் ஒரு கதையோ கூடவா பதிப்பிப்பதற்கு இவர்களுக்கு கிடைக்கவில்லை.
நடுத்தர வர்க்கத்தின் இறுக்கமான மாநகர வாழ்க்கைச் சூழலில் புத்தகங்களை படிப்பது என்பதும் படித்த புத்தகங்களை பராமரிப்பது என்பதும் பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
கடையில் ஒன்றுமே வாங்க பிடிக்கவில்லை. வெளியே வந்து பக்கத்தில் இருந்த திண்டில் உட்கார்ந்தேன். நடுத்தர வயதை கடந்த பலரும் (பெரும்பாலும் புத்தகக்கடைகளில் 40+ தான் தென்படுகிறார்கள்) பல்வேறு இந்திய ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை சுமந்து கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஏதோ விவாதித்துகொண்டு போனார்கள். அவர்கள் கார் டிரைவரிடம் தமிழில் வழி சொல்லிக் கொண்டே குண்டும் குழியுமான சென்னை தெருக்களை கடப்பதை பார்க்க முடிந்தது. ”இரண்டாயிரம் ஆண்டு பேரிலக்கிய மரபை கொண்ட” ஒரு மொழியால் வெகுஜனத்தை நெருங்கவோ வெகு ஜனத்திடம் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தவோ முடியவில்லை. கொலவெறி… தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது! என்ற செய்தி எல்லாம் படித்தால் வருத்தமாகவும் ஆதங்கமாகவும் இருக்கிறது.
இக்கட்டுரையின் நோக்கமானது தமிழ் இலக்கிய சூழலை ஆராய்வதோ, தமிழ் எழுத்தாளர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில் இளைய சமுதாயத்தின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது என்பது குறித்தும், பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது(குறிப்பாக இளைய சமுதாயத்திடம்) என்பதன் மீதான ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்பட்டது.
மேலும் இக்கட்டுரையில் இடம் பெறும் சில கருத்துக்கள், பலராலும் சில சமயங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது. (இணையத்தில் எதை எழுதினாலும் யாரவது தடி எடுத்து விடுகிறார்களே?! அதான் இந்த தன்னிலை விளக்கம்)
- புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்
- கோழியும் கழுகும்…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 22
- விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி
- பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
- மணியக்கா
- கெடுவான் கேடு நினைப்பான்
- எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- வெண்மேகம்
- மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை
- வெளிச்சம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்
- ஒஸ்தி
- மழையின் முகம்
- பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து
- முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)
- எவரும் அறியாமல் விடியும் உலகம்
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- புரிந்தால் சொல்வீர்களா?
- மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம்
- கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி
- இரவின் முடிவில்.
- காந்தி சிலை
- அகஸ்தியர்-எனது பதிவுகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1
- தரணியின் ‘ ஒஸ்தி ‘
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்.
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- ஆனந்தக் கூத்து
- விருப்பங்கள்
- அழிவும் உருவாக்கமும்
- பார்வையின் மறுபக்கம்….!
- மழையும்..மனிதனும்..
- பிரம்மக்குயவனின் கலயங்கள்
- சொல்லவந்த ஏகாதசி
- அரவம்
- அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்
- குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்
- அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
- ’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1 Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson
- புத்தகம் பேசுது
- மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா
- அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்