அந்தக் குயிலோசை…

This entry is part 4 of 39 in the series 18 டிசம்பர் 2011

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது.

பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு அப்பாலிருந்து எழுந்த புகை குடிசையெங்கும் நிறைந்திருந்தது. ஈரவிறகோடு போராடியபடி அடுப்புப் பற்றவைக்க முயன்று கொண்டிருக்கும் மகளை அழைக்க மனமின்றி, மெல்ல எழுந்து ஊன்றுகோலின் உதவியுடன் படிக்கத்தைத் தேடி எடுத்தார். புகை வரவழைத்த இருமலோடு வந்த சளியையும் காறி உமிழ்ந்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்தவரின் தொடையருகில் ஏதோ தட்டுப்பட்டது. ஏதோ என்ன! அவருடைய புல்லாங்குழல்தான்.

கீழே தடுக்கி விழுந்துவிட்ட குழந்தையை வாரியணைக்கும் தாயாய் அந்தப் புல்லங்குழலை நடுங்கும் கரங்களால் வாஞ்சையோடு எடுக்கிறார். மறுகணம் அவரது விரல்கள் அதனை மெதுவாய் வருடிக் கொடுக்கின்றன. தன்னையறியாமலேயே குழல் துளைமீது இதழ் பதிக்கிறார்; இசை பிறக்கிறது; அடிமனதில் அடக்கிவைத்த சோகம் பீறிட்டு எழுந்து… பரந்து… எங்கும் வியாபித்து… சில கணங்களில் நூலறுந்த பட்டமாகின்றது.

“ஏனப்பு நிறுத்திட்டீங்க?”
“…………”
“அப்பு!”
“ம்?”
“ஏனப்பு நிறுத்திட்டீங்க?”
“பிடிக்கல்ல புள்ள. பழசெல்லம் ஞாபகத்துக்கு வந்து… மனசெல்லாம் எரியுறாப்பல… தாங்க முடியல்ல, அதான்!”
தொடர்ந்து அங்கு மொழிகளற்ற மௌனம். “டங்..டங்…டங்…” மழைத்துளி ஒழுகும் ஓசை மட்டும் கேட்கிறது.

தன் மனதைப் போலவே குப்பி லாம்பின் சுடரும் நிலை தடுமாறி நடுங்குவதாக நினைக்கத் தோன்றியது, மாஸ்டருக்கு. “வெளியே சுடர் விளக்கினைப் போல்…” பாரதியின் கவி வரி ஞாபகத்தில் தோன்றி மறைந்தது. உயிரின் வேரில் இருந்து உற்பவித்ததான வெப்பம் நிறைந்த நெடுமூச்சு நாசியில் இருந்து கிளம்பியது. “ஹூ…ம்!!!”

கடந்துவந்த காலத்தை நினைக்கிறார். கண்கள் பனிக்கின்றன. சங்கீத ஆசிரியராய் சொந்த மண்ணில் சேவையாற்றியபோது, வாழ்க்கை எவ்வளவு அமைதியாய்… இன்பமாய்… ஒரு நீரோட்டம் போல் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது! உள்ளம் நிம்மதியால் நிறைந்திருந்ததால் அல்லவோ தன்னைச் சுற்றியெழும் சின்னச் சின்ன ஓசையிலும் ஸ்வரம் உணர்ந்து ரசிக்க முடிந்தது! அவற்றையெல்லாம் தன் குழலுக்குள் சிறைசெய்ய முடிந்தது!

தினசரி காலையில் படுக்கை விட்டெழும் போதே கோயில் கண்டாமணியோசை… தொடர்ந்து சுப்புலட்சுமியின் கணீர்க் குரலில் சுப்ரபாதம்… அதனை விழிமூடி உருகியபடி கேட்டுக்கொண்டு கிணற்றுக் கட்டருகே நின்ற பொழுதுகள்… பக்கத்துவீட்டுப் பார்வதியம்மாள் துலா இழுக்கும் “கிறீச் கிறீச்” ஒலியில்… காலைநேரப் பட்சிகளின் குதூகலமான இன்னிசையில் மனம் லயித்துப் போன நேரங்கள்…! வசந்தகால மாலைகளில் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மாந்தோப்பு ஒற்றைக் குயிலின் சோகமும் தவிப்பும் இழைந்த கூவலில் இதயம் தொலைந்த நாட்கள்…! ஓ! அவை மீண்டும் திரும்பி வரவா போகின்றன?

மனைவி, மகள் கலா, மகன் விசு, அன்னை திலகம் ஆகிய உறவுகளோடு நிறைவான வாழ்க்கை மாஸ்டருக்கு. பாடசாலை விட்டால் தோட்டம், நல்ல நாட்களில் கோவில், குளம், சினேகிதர் வீடு என்று சலனமின்றி ஓர் ஒழுங்கில் இயங்கியது, அவரது பயணம். திடீரென்று ஒருநாள் விசு தலைமறைவாகி விட்டபோதுதான், அவர்களது அழகான குருவிக்கூடு முதன்முதலில் கலவரமடைந்தது.

தன் வாழ்வில் இசையையே உயிராய் நேசிக்கும் மென்மையான் சுபாவம் கொண்ட கந்தசாமி மாஸ்டரின் வாழ்க்கையும் திசை தப்பிய படகாயிற்று. எல்லாப் பக்கமிருந்தும் குண்டுகளின் இரைச்சல், மனித ஜீவன்களின் அவலமான மரண ஓலங்கள் இடைவிடாது ஒலிக்கலாயின. அவ்வளவு காலமும் ஆத்மார்த்தமாய் நேசித்த சொந்த மண்ணை, வீட்டை, வளவை, தோட்டந்துறவை விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையின் கடைசியை நோக்கி ஓடுவதான பிரமையில் காடென்றும் மேடென்றும் இரவுபகலாய் ஓடியோடிக் களைத்துப் போன அந்தக் கறுப்பு நாட்களின் ரணம், இப்போதும்கூட புதிதாய் வலிக்கிறது, மாஸ்டருக்கு!

இடைவழியில் இறந்துவிட்ட அன்னையின் ஈமக்கடன்களை ஆற்றக்கூட அவகாசமின்றி, குண்டு விழுந்து குழியாகிப் போன ஒரு பள்ளத்தில் தள்ளி, அவசர அவசரமாய் மண்ணை விரவிவிட்டு ஓடிவந்த போது, “கந்தப்பு, என் ராசா… உன் கையால கொள்ளி வாங்கிட்டுச் சாகறதுக்குக் கூட எனக்கு வாய்க்கலையேப்பா!” என்று அம்மாவின் ஆன்மா அழுது புலம்புவதான பிரமையில் நெஞ்சு பதறிய வினாடிகளின் நினைவில் தடுமாறிப் போகின்றார்.

யுத்தத்தின் கோரத் தாண்டவத்தால் தன் அருமை மகன், அமைதியான வாழ்வு, வாழ்ந்த மண், சொத்துசுகம், ஈமக்கடன்கள் நிறைவேற்றப் படாமல் உயிர் நீத்த அன்னை, கண்ணியில் வெடியில் சிக்கிய தன் இடது கால் என்பவற்றை மட்டுமா அவர் இழந்துள்ளார்? இருட்டான கேள்விக்குறியாய், எதிர்காலத்தையும் சேர்த்தே இழந்துவிட்டு, வெறும் நடைபிணமாய் பழைய ஞாபகங்களின் சுமையால் கனக்கும் இதயத்தைச் சுமந்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு மன நோயாளிபோல் வெறுமனே ‘இருந்து’ கொண்டிருப்பது கந்தசாமி மாஸ்டர் மட்டும்தானா?

தாரை தாரையாக வடிந்த விழிநீரைத் துடைக்கவும் தோன்றாது வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த தந்தையை நோக்க கலாவுக்கும் மனதைப் பிசைந்து, கண்கள் கலங்கின. ‘ஆஸ்பத்திரியில் இருக்கும் அம்மா ஞாபகம் போலும்!’ என்று நினைத்துக் கொள்கிறாள். இரவுணவை வேண்டா வெறுப்பாக உண்டு முடித்துவிட்டு அவர்கள் உறங்க முயன்றனர். இரவு நீண்டு தோன்றியது.
——————————————————————————————————————————————–
மறுநாள் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு தினசரியைப் படித்துக் கொண்டிருந்த மாஸ்டர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். எங்கிருந்தோ அந்த ஓசை… “கூ…குக்கூ!” திடீரென்று நிகழ்காலம் மறந்து போகிறது, மாஸ்டருக்கு. வாடிப் போன வதனத்தில் ஒரு மலர்ச்சி! மனதுக்குள் ஏதோ ஈர்ப்பு!! காலும் மனதும் தம்மையறியாமல் பரபரக்கின்றன. ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு கெந்திக் கெந்தி குடிசைக்கு வெளியே வந்து விட்டார்.

மழை இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது. அதனைப் பொருட்படுத்தும் நிலையில் அவரில்லை. விழிகளால் நாலாபுறமும் துழாவுகிறார். “கூ…குக்கூ!” ஓசை வந்த திக்கைப் பார்த்தவுடன் அவரது முகம் மீண்டும் தொங்கிப் போகிறது. உடல் தளர்கிறது. விழி வடித்த கண்ணீரை வான்மழை கழுவிச் செல்கிறது. கடந்து போன அந்த வசந்தகாலம் இனி வரவே வராது என்ற யதார்த்தம் புரிந்து, தன் மனப் பிரமையில் இருந்து மீள முயன்றபடி குடிசையின் வாசல் வரை வந்துவிட்டார்.

மீண்டும், “கூ…குக்கூ!” . உண்மை நிலையைத் தெரிந்துகொண்டே சமாதானத்துக்கான போலி வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப் போடும் நமது மக்களைப் போல, உள்ளம் ஓர் அற்ப நப்பாசையில் சலனப்பட்டுவிட, வெகு இயல்பாய் தலையைத் திருப்பிப் பார்க்கிறார். தெருவின் மறுபக்கம் இருந்த மாடி வீட்டுச் சிறுமியின் குயில் பொம்மை அவரைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிக்கிறது…
“கூ…குக்கூ!”
– ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்-
(இலங்கை)

Series Navigationநிறையும் பொறையும்ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
author

லறீனா அப்துல் ஹக்

Similar Posts

Comments

  1. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    /கீழே தடுக்கி விழுந்துவிட்ட குழந்தையை வாரியணைக்கும் தாயாய் அந்தப் புல்லங்குழலை நடுங்கும் கரங்களால் வாஞ்சையோடு எடுக்கிறார். மறுகணம் அவரது விரல்கள் அதனை மெதுவாய் வருடிக் கொடுக்கின்றன. தன்னையறியாமலேயே குழல் துளைமீது இதழ் பதிக்கிறார்; இசை பிறக்கிறது; அடிமனதில் அடக்கிவைத்த சோகம் பீறிட்டு எழுந்து… பரந்து… எங்கும் வியாபித்து… சில கணங்களில் நூலறுந்த பட்டமாகின்றது./ அருமையாக உள்ளது.

    இறந்தகாலத்திற்கு பதில் நிகழ்காலத்தை பயன்படுத்துவதால் சற்றே நாடகதன்மையுடன் உள்ளது. (உ.ம். நோட்டமிட்டார்க்கு பதில் நோட்டமிடுகிறார்).

    நிறைய எழுதுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *