Posted in

எங்கே இறைமை ?

This entry is part 26 of 29 in the series 25 டிசம்பர் 2011

– செங்காளி –

மறைந்த யுகத்தில் மானிடர் எல்லாம்
இறைவன் அருளால் இருந்தனர் கடவுளாய்
கடவுள் தாமென்ற கர்வத்தில் அவர்கள்
அடக்கம் இன்றி அழும்புகள் செய்தனர்.

இதனைப் பார்த்த இதர கடவுளர்
வேதனை மிகைப்பட வேண்டுதல் செய்திட
நாடியே வந்தனர் நான்முகன் தன்னை
வாடிய முகத்துடன் வந்ததைச் சொல்லிட

மூவருள் செயலால் முதலில் வருபவன்
ஆவன செய்வோம் அஞ்சிட வேண்டாம்
தவறு செய்வோர் தெய்வத் தன்மையை
அவரிட மிருந்து அகற்றி விடுவோம்

தீவினை செய்பவர் திறனே போய்விடும்
நீவிர் அடைவீர் நிம்மதி என்றான்
இறைசூ தனன்தான் இப்படிச் சொல்லிட
மறைமொழி காப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்

எடுத்த இறைமையை எங்கே வைப்பது
அடுத்தவர் யாரும் அறியா வண்ணம்
ஒளித்து வைக்க ஓரிடம் எதுவென
விளக்கமாய்ச் சொல்வீர் விரைவில் என்று

ஆக்குவோன் தானே அவரிடம் கேட்க
ஊக்கமுடன் யாவரும் ஒன்றாய்க் கூடி
தெளிவுடன் பலவழி திறமுடன் ஆய்ந்து
களிப்புடன் சொன்னார் கடைசியில் இப்படி

மண்ணில் புதைத்து மறைத்து வைக்கலாம்
கண்ணுக்குத் தெரியாதெனக் கூறினர் கடவுளர்
தெரிந்து கொள்வார் தோண்டியும் அதைத்தான்
புரிந்து கொள்வீரெனப் பிரமனும் சொன்னான்

உயர்ந்த மலையின் உச்சியில் வைப்போம்
பயந்து நிற்பாருயர் பிறங்கலில் ஏறிட
அடைக்கலம் தேடினோர் இப்படிச் சொல்லிட
படைப்பவன் சொன்னானிது பயன்படா தென்று

விண்ணைத் தாண்டி வெளியே வைப்போம்
என்றிட அதற்கு இறைவன் சொல்வான்
என்ன நினைத்தீர் இவர்களைப் பற்றி
கண்ணைத் திறக்குமுன் கண்டு கொள்வார்

ஆழ்கடல் அடியில் ஆழத்தில் வைக்கலாம்
மூழ்கியதை எடுத்திட முடியா தென்றனர்
அளவிடா ஆழத்தில் அழுத்தி வைப்பினும்
களவாணி யைப்போல் கவன்றே விடுவர்

என்றே இறைவன் இதற்கும் சொல்லிட
என்ன சொல்வது எப்படிச் செய்வது
என்ற றியாத ஏனைய கடவுளர்
ஒன்றாய்ச் சேர்ந்து ஒருமனத் தவராய்

முழுமுதற் கடவுளே முடிவாய் இதற்கு
பழுதற்ற ஒருவழி புகல்வீர் என்றிட
அப்படிக் கேட்ட அவர்க்குப் புரிய
இப்படித் தானே இறைவன் சொல்வான்

“இருந்த இடத்திலே திரும்ப வைக்கலாம்
திரும்ப வந்தது தெரியாத மானிடர்
தேடுவார் அங்கே தேடுவார் இங்கே
தேடித் தேடித் திரிவார் எங்கும் !!”

குறிப்பு:
இறைசூதன – பிரமன்
பிறங்கல் – மலை

Series Navigationஅழுகிணிராசாவும் புளுகிணிமந்திரியும்அரங்காடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *