கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3

This entry is part 42 of 42 in the series 1 ஜனவரி 2012

மூளைக்குள் கடவுள்

இது பிபிஸி ஆவணப்படம்.
இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை.

இரண்டாம் பகுதி

குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.

டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் (சிரிக்கிறார்) வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு.

குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.

டான் ஹில்: என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன.
நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை விட முடியவில்ல. அது ஒளிந்திருக்கிறது. என்னை கவனிக்கிறது. அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு. என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு. அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன். ஆமாம். அது எப்படி இருக்கமுடியும். அங்கே ஒன்றுமில்லை. பாதுகாப்பான இடத்தில்தான் நான் இருக்கிறேன்.

குரல்: அந்த அறைக்குள் டான் இந்த பரிசோதனை நடத்தும்போதெல்லாம் வரும் பொதுவான, ஆனால்,வினோதமான விளைவை அனுபவித்தார். அவர் கூட இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு. டாக்டர் பெர்ஷிங்கர் இதனை “இருப்பறியும் உணர்வு” என்று கூறுகிறார்

பெர்ஷிங்கர்: இந்த பரிசோதனையின்போது அனைவரும் அடையும் அடிப்படையான அனுபவம், இந்த ”இருப்பறியும் உணர்வு”. இன்னொரு வியக்தி அங்கே இருக்கிறது.உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன.

குரல்: இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள்.

பெர்ஷிங்கர்: ஒருவர் தனது மகள் மீது அக்கறை காரணமாக எங்களை ஒருவர் கூப்பிட்டார். அந்த மகளது அனுபவங்கள் காரணமாக அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று மற்றவர் கருதினர்.

குரல்: அந்த சிறுமிக்கு தூங்குவது பெரிய பிரச்னையாக இருந்தது. ஒவ்வொரு நாளும், திகிலான அமானுஷ்ய அனுபவங்கள் அவளுக்கு தோன்றின. அவள் இன்னும் அதிகமாக திகிலடைந்து தனது அறையில் ஒரு ஆவி சுற்றுவதாக கருதினாள். இதனால் பயந்து தனது படுக்கையறைக்கு போவதற்கே அஞ்சினாள். ஆகவே டாக்டர் பெர்ஷிங்கர் அவளது வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தார். அந்த சிறுமியின் பிரமைகளுக்கு அங்கே மறைந்திருக்கும், மாறுபடும், மின்காந்த புலமே காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் கருதினார். வீட்டுக்குமேலே செல்லும் மின் கம்பிகளோ அல்லது தரைக்குள் செல்லும் மின்கம்பிகளோ இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த காந்த புலத்தை கண்டறிவதே டாக்டர் பெர்ஷிங்கருக்கும், அவரது உதவியாளர் ஸ்டான் கோரனுக்கும் சவால். இதற்காக அவர்கள் உருவாக்கிய கருவிகளை உபயோகித்தனர். பால் டப்பாவும் அதனை சுற்றி கட்டப்பட்ட செம்பு கம்பிகளுமே.

பெர்ஷிங்கர்: கிகாஹெர்ட்ஸுக்கு என்ன அலைஎண்? 15?

கோரன்: 15 கிலோஹெர்ட்ஸ் – சரிதான்.

பெர்ஷிங்கர்: சில சமயங்களில், மின்காந்த புலங்கள் மூளை உருவாக்குவதோடு ஊடுபாடு கொள்கின்றன. சிலரது மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால், இந்த புலங்களினால், சக்திவாய்ந்த, பொருள் பொதிந்த அனுபவங்களை உருவாக்குகின்றன. சில சமயங்களில், அதுகடவுள், அல்லது ஆவி. அவரவரது அர்த்தப்படுத்துதலுக்கு உகந்ததாக.

ஆகவே இந்த காந்த புலத்துக்கு ஆதாரமாக இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதியவற்றை தேடிப்பார்த்தோம். சில சமயங்களில் அனுபவம் மூலமாக, இங்கேதான் நடந்தது என்று அவர்களே சொல்வார்கள்.

குரல்: ஆரம்பத்தில், அவர்கள் கண்டறிந்தது எதுவும் நிச்சயமானதாக இல்லை. பிறகு அந்த சிறுமியின் அறையில் ரேடியோ கடிகாரத்தை கவனித்தார்கள்.

பெர்ஷிங்கர்: நாங்கள் அருகே சென்று அளந்தோம். அவள் அந்த கடிகாரத்தின் அருகேதான் தூங்கினாள் என்பதை அறிந்தோம். அந்த கடிகாரத்தை அளந்தோம். அந்த கடிகாரத்தில் அசாதாரணமான காந்தபுலம் இருந்தது. அதே வடிவமைப்புடனே நாங்கள் பரிசோதனைச்சாலையில் காந்தப்புலத்தை உருவாக்கி அதன் மூலம் “இருப்பறியும் உணர்வை” உருவாக்கியிருந்தோம். அந்த கடிகாரம் நீக்கப்பட்டது. அந்த ஆவி வருவதாக உணர்வதும் நின்றுவிட்டது.

குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் சொல்வது நம்பமுடியாதது போல உள்ளது. ஆனால், அமானுஷ்ய காட்சிகளுக்கும், காந்தப்புலங்களுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் தடயங்கள் உள்ளன. வட துருவத்திலும் தென் துருவத்திலும் அசாதாரணமான காட்சிகளை உண்டுபண்ணும் துருவ ஒளிகள் சூரியனின் காந்தப்புயல் பூமியை தாக்கும்போது உருவாகின்றன. இந்த புயல்கள் பூமியின் காந்தப்புலத்தை மாற்ற வலிமைகொண்டவை. எப்போதெல்லாம் இது நடக்கிறதோ அப்போதெல்லாம் ஆவிகளை பார்த்ததாக மனிதர்கள் குறிப்பிடுவதும் அதிகரிக்கிறது. பல விஞ்ஞானிகள் மாறும் காந்தப்புலங்களால் மூளையில் வலிப்பு நோய் ஏற்படுகிறது என்பதை குறித்திருக்கிறார்கள்.

பெர்ஷிங்கர்: புவி காந்தப்புல செயல்பாடு டெம் போரல் லோப்களை பாதிக்கிறது என்பதை அறிவோம். ஏனெனில், எப்போதெல்லாம் புவியின் காந்தப்புல செயல்பாடு அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் வலிப்பு, டெம் போரல் லோப் வலிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் உண்டு.

குரல்: விவாதத்துக்குரியதாக, டாக்டர் பெர்ஷிங்கர் பெரும்பாலான ஆன்மீக, மத அனுபவங்களை மனித மூளையில் உள்ள டெம் போரல் லோப்களில் காந்தப்புலத்தின் பாதிப்பு மூலமாக விளக்கிவிடலாம் என்று கூறுகிறார்.

பெர்ஷிங்கர்: என்னுடைய பல சக ஆய்வாளர்கள் ஏன் இதனை ஆராய்கிறாய் என்று கேட்கிறார்கள். ஏனெனில் எனக்கு எந்த ஆய்வுப்பண உதவியும் கிடைக்காது என்கிறார்கள். எதனை ஆராயக்கூடாதோ அதனை ஆராய்கிறாய். மத அனுபவங்கள், அமானுஷ்ய அனுபவங்கள், இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன என்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால், ஏன் இவற்றை ஆராயக்கூடாது? பரிசோதனை ஆய்வுமுறைதான் நம்மிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த கருவி. இதன் மூலமாகவே எது உண்மை எது உண்மையல்ல என்று அறிகிறோம்.

குரல்: ஆகவே, டாக்டர் பெர்ஷிங்கரின் தேற்றத்துக்கு ஒரு கடினமான பரிசோதனை வைக்க முடிவு செய்தார். உலகத்தின் மிகவும் கடினமான நாத்திகரான பேராசிரியர் ரிச்சர்ட் டாகின்ஸுக்கு மத அனுபூதி அனுபவத்தை அளிப்பதே அது. பேராசிரியர் டாக்கின்ஸின் கருத்தின்படி, நாத்திகத்துக்கும் மதத்துக்குமான போராட்டம், உண்மைக்கும் அறியாமைக்குமான போராட்டம். போப்பாண்டவரும், காண்டர்பரி ஆர்ச்பிஷப்பும், தலாய்லாமாவும் தோற்ற ஒரு விஷயத்தில் டாக்டர் பெர்ஷிங்கர் வெற்றிபெறுவாரா?

பேராசிரியர் ரிச்சர்ட் டாகின்ஸ்(ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்): நான் ஒரு ஆத்திகனாக மாறினால், என் மனைவி என்னை விட்டு போய்விடுவேன் என்று சொல்லியிருக்கிறாள். இந்த ஆன்மீக அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்கு நான் எப்போதுமே ஆவலாகத்தான் இருக்கிறேன். இந்த முயற்சிக்கு இன்றைய மாலையை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.

குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் பல விதமான காந்தப்புலங்களை ரிச்சர்ட் டாகின்ஸின் மூளை நடுவே அனுப்ப திட்டமிட்டார்.

டாகின்ஸ்: நான் இதுவரை எந்த அசாதாரணமான அனுபவத்தையும் அடையவில்லை.

குரல்: டாக்டர் பெர்ஷிங்கரின் ஆய்வின்படி, வெவ்வேறு விதமான புலங்களை அது இடது புறமா வலதுபுறமா அனுப்பப்படுகிறது என்பதை வைத்து அந்த நபர் கடவுள் அனுபவம் அடைவாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

டாக்கின்ஸ்: எனக்கு லேசாக தலைசுற்றுகிறது.

குரல்: ஆரம்பத்தில் டாக்டர் பெர்ஷிங்கர் டாக்கின்ஸின் தலையின் வலது புறம் காந்தப்புலத்தை உருவாக்கினார்.

டாக்கின்ஸ்: வினோதமான உணர்வு.

குரல்: :”இருப்பறியும் உணர்வு” வரும் சாத்தியத்தை அதிகரிக்க டாக்டர் பெர்ஷிங்கர் காந்தப்புலத்தை இருபுறமும் அனுப்பினார்.

டாகின்ஸ்: என்னுடைய மூச்சு இழுத்துகொள்கிறது. இது என்னவென்று தெரியவில்லை. எனது இடது கால் நகர்கிறது. எனது வலது கால் இழுத்துகொள்கிறது.

குரல்: ஆக 40 நிமிடங்களுக்கு பிறகு, கடவுளுக்கு அருகாமையில் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டுவரப்பட்டாரா?

டாகின்ஸ்: துரதிர்ஷ்டவசமாக, இருப்பறியும் உணர்வை நான் பெறவில்லை. முழு இருட்டில், தலை மீது ஹெல்மட்டுடன், சந்தோஷமாக ஓய்வுடன், அவ்வப்போது நான் மைக்ரோபோனில் சொன்ன உணர்ச்சிகளை அடைந்தேன். ஒரு சாதாரண இருட்டு நேரத்தில் நடந்திராத ஒன்றுதான் நடந்தது என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியாது. நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். மதவாதிகள் அனுபவிக்கும் அனுபூதி நிலையை, பிரபஞ்சத்துடன் ஐக்கியமான நிலையை, நான் அனுபவித்திருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நிச்சயமாக அதனை அனுபவிக்க விரும்புகிறேன்.

குரல்: ஆனால், டாக்டர் பெர்ஷிங்கர் ரிச்சர்ட் டாகின்ஸுக்கு ஏன் பரிசோதனை வேலை செய்யவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது என்கிறார்.

பெர்ஷிங்கர்: சில வருடங்களுக்கு முன்னால், ஒரு கேள்விபதில் சர்வே தயாரித்திருந்தோம். அதன் படி, டெம் போரல் லோப் உணர்ச்சிகர அளவை மானி ஒன்றை தயாரித்தோம். ஒருசிலர் பாதிக்கப்பட மாட்டார்கள், சிலர் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். சிலர் மிகவும் பாதிக்கப்படுபவர்களாகவும், ஒரு சிலர் அங்கு டெம் போரல் லோப் எபிலப்ஸி அளவுக்கும் இருப்பார்கள். டாகின்ஸின் அளவை ஒரு சாதாரண நபரது பாதிக்கப்படும் அளவை விட மிக மிக குறைவு.

பிஷப் ஸ்டீபன் ஸைக்ஸ்(துர்ஹம் பல்கலை): எல்லோருக்கும் ஒரே அளவு ஆன்மீக உணர்வை பெற திறந்திருக்காது. மதரீதியாக ஒரு சிலருக்கு திறமை இருக்கிறதா அல்லது அது இசை போல ஒரு சிலருக்கு உண்டு ஒரு சிலருக்கு இல்லை என்பது போன்றதா என்பது சுவரஸ்யமான விவாதம்.

குரல்: பேராசிரியர் டாகின்ஸ் தவிர்த்து, டாக்டர் பெர்ஷிங்கர் சுமார் 1000க்கும் மேற்பட்ட மனிதர்கள் மீது பரிசோதனை நடத்தி மற்ற எவரையும் விட, மனிதமூளையில் இருக்கும் டெம் போரல் லோப்களுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் இடையேயான துல்லியமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறார். நியூரோ தியாலஜியின் மிக முன்னேறிய ஆய்வுகளாக இவரது ஆராய்ச்சிகள் உள்ளன. மோட்டார்சைக்கிள் ஹெல்மட்டுக்கும் உண்மையான ஆன்மீக உணர்வுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது என்று மத ஆதரவாளர்கள் கூறுகின்றனர்

பிஷப் சைக்ஸ்: என்னுடைய மனத்தை ஒரு சில அனுபவங்கள் மூலம் மாற்றினாலோ, வேறொருவர் நின்று எனக்காக செய்து தந்தாலோ, அந்த அனுபவம் சந்தோஷமானதாக இருந்தாலும், அதற்கு நல்ல விளைவுகள் இருந்தாலும், அதற்கும் மதத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றே கருதுவேன். என்னுடைய மத நம்பிக்கை காரணமாக

குரல்: மூளையின் ஒரு பகுதியை தூண்டி அடைவது போன்ற அனுபவத்தை விட மிகவும் சிக்கலானது மத ஆன்மீக அனுபவம் என்பது உண்மையே. டாக்டர் பெர்ஷிங்கரின் ஆய்வு ஒரு ஆரம்பமே. இப்போது பல விஞ்ஞானிகள் மூளைக்கும் மத நம்பிக்கைக்கும் இடையே மிகவும்நெருங்கிய தொடர்பு உண்டு என்று நம்புகிறார்கள். ஒரு ஆய்வு குழு இந்த உறவை ஆராய ஒரு வித்தியாசமான வழியை முயற்சித்தார்கள். உண்மையான ஆன்மீக உணர்வு அடையும்போது மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தார்கள். மைக்கேல் பெய்ம் அவர்களது மூளை அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அளித்தது.

டாக்டர் மைக்கேல் பைம்: தியானத்தில் அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை அடையலாம். மிகவும் ஆழமான தியானம். அது ஒரு வகை பிரபஞ்சத்தோடு ஐக்கியம்.

குரல்: மைக்கேல் பைம் ஒரு பௌத்தர். இந்த மதத்தில் தியானத்தின் மூலம் ஆன்மீக அனுபவத்தை அடைவது வலியுறுத்தப்படுகிறது.

பைம்: மனம் லகுவாக லகுவாக, நமக்கு இருக்கும் தனித்தன்மைக்கும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கும் இடையேயான எல்லைக்கோடு மறைகிறது. எல்லாமே கரைந்துவிடுகிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுடனுமான ஒரு ஐக்கியம் தோன்றுகிறது. அப்போது தனித்தன்மை மறைகிறது.

குரல்: ஆய்வாளர் டாக்டர் ஆண்ட்ரூ நியுபெர்க் ஒரு மூளை பிம்பம் எடுக்கும் அமைப்பை வடிவமைத்தார். இதன் மூலம் முதன்முதலாக, மைக்கேலின் மூளை அவர் தியானம் செய்யும்போது என்ன ஆகிறது என்பதை எளிதே பார்க்கலாம்,

டாக்டர் ஆண்ட்ரூ நியுபெர்க( பென்ஸில்வேனியா பல்கலை மருத்துவமனை): எங்களதுபரிசோதனை சாலைக்கு வரும்போது, நாங்கள் வழக்கமாக, ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச் செல்வோம். அதன் பிறகு அவர் தியானம் செய்ய ஆரம்பிப்பார். அப்போது நாங்கள் அறைக்குள் இருக்கமாட்டோம். எந்த விதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக. அவர்களது கையில் ஒரு சின்னகயிற்றை கொடுத்திருப்போம். தியானத்தின் உச்சத்தை அடையும்போது அவர்களை அந்த கயிற்றை இழுக்கச் சொல்வோம்.

குரல்: கயிற்றை இழுப்பது, மைக்கேலின் உடலுக்குள் ஒரு ரேடியோஆக்டிவ் தடயம் தரும்வேதிப்பொருளை அனுப்ப கொடுக்கும் சங்கேதம். இந்த வேதிபொருள் அவரது ரத்த்ததுக்குள் கலந்து அவரது மூளைக்கு சென்று அவரது மூளையில் அவரது தியான உச்சத்தின்போது எப்படி ரத்தம் செல்கிறது என்பதை காட்டும் வரைபடம். இந்த படங்கள் அவரது மூளைக்கும் ரத்தத்தின் அளவை காட்டும். சிவப்பு மிக அதிகமான ரத்த பாய்ச்சல். மஞ்சள் மிக மிக குறைவான ரத்தப்பாய்ச்சல். இந்த பரிசோதனை முடிவுகள், மற்ற பரிசோதனைகள் போலவே டெம் போரல் லோப்கள் நிச்சயமாக பங்கெடுக்கின்றன என்பதை காட்டுகின்றன. ஆனால் அவை வேறொன்றையும் காட்டின. மைக்கேலின் தியானம் உச்சம் அடைய அடைய, அவரது மூளையில் பெரிய்டல் லோப் என்பதற்கு மேலும் மேலும் ரத்தம் குறைந்தது. ஏறத்தாழ அது வேலையை நிறுத்தும் அளவுக்கு. இது மிகவும் முக்கியமான புதிய செய்தி. பெரிய்டல் லோப் தான் நமக்கு காலம் , இடம் ஆகியவற்றை உணர வைக்கிறது.

நியூபெர்க்: மூளையின் இந்த பகுதி நமது உடலிலிருந்து வரும் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு அந்த உணர்ச்சிகள் மூலம் நமக்கான சுய அடையாளத்தை உருவாக்குகிறது. மனிதர்கள் தியானம் செய்யும்போது சுய அடையாள இழப்பதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். அதைத்தான் இந்த தியானம் செய்பவர்களின் மூளையை ஆராயும்போது நமக்கு தெரிகிறது. இந்த பெரிய்ட்ல் லோபில் ரத்த ஓட்டம் செயல்பாடு குறைவதை காண்கிறோம்.

குரல்: சுய அடையாளம் இழக்கும் ஒரு வினோத உணர்வே எல்லா உலகத்து மதங்களிலும் மைய கருத்தாக ஆன்மீக உணர்வாக சொல்லப்படுகிறது. பௌத்தர்கள் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகும் உணர்வை தேடுகிறார்கள். இந்துக்கள் ஆன்மாவும் கடவுளும் ஐக்கியமாவதை தேடுகிறார்கள். யுனியோ மிஸ்டிகா Unio Mystica என்பதை கத்தோலிக்கர்கள் தேடுகிறார்கள். டாக்டர் நியூபர்க் இவ்வாறு பலமதங்கள் கூறுவது அனைத்தும் ஒரே விஷயத்தைத்தானா என்று சிந்திக்கிறார். இதனை பரிசோதிக்க ஃப்ரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களது மூளைக்கும் பௌத்தர்களது மூளைக்கும் ஒற்றுமை இருக்குமா என்று பரிசோதித்தார்.

நியூபர்க்: சுவாரஸ்யமாக, பிரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகளது மூளையை பார்க்கும்போதும், பெரிய்ட்ல் லோப் பகுதி செயலற்று இருந்ததை பார்த்தோம். திபேத்திய பௌத்தர்களது மூளை போலவெ.

குரல்: பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் இரு வெவ்வேறான மத பாரம்பரியங்களிலிருந்து வந்திருந்தாலும், அவர்களது மூளை எவ்வாறு தியானத்திலோ பிரார்த்தனையிலோ செயல்படுகிறது என்பது, மூளை வேதியியலை பொறுத்தமட்டில், ஒரே மாதிரிதான். டாக்டர் நியூபெர்கின் ஆராய்ச்சி, முதன்முறையாக நமது மூளையில் பல்வேறு விதமான பகுதிகள் எவ்வாறு மத நம்பிக்கையில் செயலாற்றுகின்றன என்பதை அறிவியற்பூர்வமாக காட்டியது.

நியூபர்க்: எங்களது ஆய்வுகள் மூலம் அறிந்தது என்னவென்றல், மூளையில் பல்வேறுவிதமான வித்தியாசமான அமைப்புகள் ஆன்மீக அனுபவத்தின்போது ஒன்றோடு ஒன்று தொடர்புடனிருக்கின்றன. பல பகுதிகள் செயலூக்கம்பெறுகின்றன. பல செயலற்று போகின்றன. இப்படிப்பட்ட பயிற்சிகளின்போது பெரிய தொடர்பு வலை இதில் பங்கெடுக்கிறது என்று அறிகிறோம்.

குரல்: டாக்டர் நியுபர்கின் ஆராய்ச்சியும், டாக்டர் பெர்ஷிங்கரின் ஆராய்ச்சியும் சில முக்கியமான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. நாம் எதனை நம்புகிறோமோ அது நமது மனத்தின் பௌதீக அமைப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமக்கு ஏன் இந்த வல்லமை தோன்றியது? இதற்கு பரிணாமவியல்ரீதியாக எளிய விளக்கம் இருக்கலாம். மத நம்பிக்கையாளர்கள் வெகுகாலம் வாழ்கிறார்கள், ஆரோக்கியமாக வாழ்கிறார்கள், குறைவான புற்றுநோய், இதயநோய் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் உயிர்வாழ உபாயமாக இந்த மத நம்பிக்கையை பரிணமித்துகொண்டோமா?

டாகின்ஸ்: ”பரிணாமரீதியின் மத நம்பிக்கையின் மதிப்பு என்ன?” என்று கேட்டால், நீங்கள் தவறான கேள்வியை கேட்கிறீர்கள் என்றும் இருக்கலாம். சரியான சூழ்நிலையில், மத நம்பிக்கை என்று தன்னை காட்டக்கூடிய மூளைக்கு எவ்வளவு பரிணாமவியல் ரீதியில் மதிப்பு இருக்கும் என்று கேட்பது சரியானதாக இருக்கலாம்.

குரல்: பரிணாமத்தின் பக்க விளைவுதான் மத நம்பிக்கை என்றால், கடவுள் நம்பிக்கையை இயற்கையின் ஒரு வினோதமான உப விளைவு என்று ஒதுக்கிவிட முடியுமா? உண்மை என்னவென்றால், மக்களது நம்பிக்கையை விளக்கிவிட நியூரோ தியாலஜியே போதும் என்பது அவசரமான முடிவாக இருக்கக்கூடும். மதத்துக்கு நமது மூளை தகுந்ததாக இருந்தாலும், கடவுள் என்பதை மூளை வேதியியலின் ஒரு வினோத பக்க விளைவு என்று ஒதுக்கிவிடமுடியாது.

ராமச்சந்திரன்: உங்களது மூளையில் இருக்கும் சர்க்யூட்டுகள் உங்களை மத நம்பிக்கைக்கு ஏற்றவராக ஆக்கினாலும், மத நம்பிக்கையின் மதிப்பை இல்லையென்று ஆக்கிவிட முடியாது. உங்களது மூளைக்குள் கடவுளை அறிந்துகொள்ள கடவுள் போட்டு வைத்த ஆண்டணா என்றும் இருக்கலாம். மதத்துக்கு உகந்த மூளை சர்க்யூட்டுகள் பற்றி நமது விஞ்ஞானிகள் சொல்வது எதுவும், கடவுள் இல்லை என்றும் ஆக்கிவிடாது. ஆன்மீக அனுபவத்தை அடையும் மனிதனது அனுபவத்தையும் அதற்கான மதிப்பையும் இல்லையென்றும் ஆக்கிவிடாது.

பிஷப் சைக்ஸ்: மத நம்பிக்கை மூலமாக நாம் அடையும் சந்தோஷத்துக்கு எப்படிப்பட்ட பௌதீக வேதியியல் வினைகள் துணை புரிகின்றன என்று அறியாமல் இருந்தால்தான் ஆச்சரியம். கிறிஸ்துவர்களும், மற்ற மதத்தினரும் மேலும் ஆய்வுகளை செய்வதற்கு அஞ்ச வேண்டியதில்லை. சொல்லபோனால், நாம் ஆர்வமுடன் இருந்து அவற்றை புரிந்துகொள்ள முயலவேண்டும்.

குரல்: மதத்தின் தோற்றம் நாம் நினைத்ததை விட மிகவும் சிக்கலானது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. மதத்தை வெறுமே மத தலைவர்கள் உருவாக்கியது என்றோ, சமூக கட்டுப்படு மூலம் உருவானது என்றோ கூறுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம் என்பதையே நியூரோ தியாலஜி வெளிப்படுத்துகிறது. ஏதோ காரணங்களால், கடவுளை நம்பும் சில அமைப்புகள் நமது மூளையில் உருவாகியிருக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, நமது மூளைகள் உருவான விதத்தில், நாம் கடவுளை தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்போம்.

டாகின்ஸ்: மனித மத உணர்வு மிக எளிதில் நீக்க முடியாதது. அது எனக்கு கொஞ்சம் துக்கத்தையே தருகிறது. தெளிவாக மதத்துக்கு பிடிவாதம் நிச்சயம் உண்டு.

நியுபர்க்: மூளையின் வடிவமைப்பினால், மதமும் ஆன்மீகமும் அதற்குள் கட்டப்பட்டு இருக்கின்றன. கடவுள் மதம் ஆகிய கருத்துகள் ரொம்ப ரொம்ப காலம் இருக்கப்போகின்றன.


துணை இணைப்புகள்

1) செயிண்ட் பால் அவர்களுக்கு இரு்ந்தது TLE என்னும் Temporal Lobe Epilepsy என்று கூறும் ஆராய்ச்சிகட்டுரை
http://jnnp.bmj.com/content/50/6/659.abstract
http://jnnp.bmj.com/content/50/6/659.full.pdf

2) http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18171635

3) An investigation of religiosity and the Gastaut–Geschwind syndrome in patients with temporal lobe epilepsy
Michael Trimblea, , , Anthony Freemanb

4) Spirituality and Religion in Epilepsy
Orrin Devinsky , , George Lai

5) RELIGIOUS AND MYSTICAL EXPERIENCES AS ARTIFACTS OF TEMPORAL LOBE FUNCTION: A GENERAL HYPOTHESIS
MICHAEL A.PERSINGER

6) Epilepsy and Religious Experiences: Voodoo Possession
E. Carrazana, J. DeToledo, W. Tatum, R. Rivas-Vasquez, G. Rey, S. Wheeler

7) The “sensed presence”: An epileptic aura with religious overtones
Anne-Marie Landtblom ,

8) Hypergraphia in epilepsy: is there a specificity to temporal lobe epilepsy?
B P Hermann, S Whitman, P Arntson

9) Sudden religious conversions in temporal lobe epilepsy

10) Did Ezekiel Have Temporal Lobe Epilepsy?

11) Religious Practice, Brain, and Belief
Author: Livingston, Kenneth R.

Series Navigationஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
author

ஆர் கோபால்

Similar Posts

7 Comments

 1. Avatar
  தங்கமணி says:

  விழிப்புணர்வு ஊட்டும் தொடர்.

  இதுவரை மேற்கத்திய மதங்கள், கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் போன்றவை revelationary மதங்கள் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

  இதில் தீர்க்கதரிசிகள், நபிமார்கள் போன்றவர்கள் நேரடியாக கடவுள் கொடுக்கும் செய்தியை மக்களிடம் கொடுப்பவர்களாக கூறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

  இப்படிப்பட்ட ரெவலேஷன் கீழ்தேய மதங்களான இந்துமதம் பௌத்தம் சமணம் போன்றவற்றில் இல்லை. ஆகவே அவை சரியான மதங்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து வந்திருந்தார்கள்.

  இந்த கட்டுரை, ஆவணப்படம், அறிவியல் ஆகியவை அப்படிப்பட்ட ரெவலேஷன் ஒரு மூளை வியாதி என்றுகாட்டியிருக்கிறது.

  விழிப்புணர்வு கொடுத்த தொடர்

 2. Avatar
  அப்துல் ஹக் says:

  உண்மையிலேயே விடுதலை அளிக்கும் ஒரு கட்டுரை.
  ஆவணப்படம் எடுத்தவர்களுக்கும், அத்னை தமிழில் மொழிபெயர்த்தவருக்கும் நன்றி.

  நான் என்ன விடுதலையை குறிப்பிடுகிறேன் என்பதை அறிவீர்கள் என்று கருதுகிறேன்.

 3. Avatar
  ஜான்ஸன் பிரபு says:

  கிறிஸ்துவ மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால் அது இயேசு கிறிஸ்து அல்ல. செயிண்ட் பவுல் அவர்களே.

  அவருக்கு இருந்த டெம்போரல் லோப் எபிலப்ஸி காரணமாகத்தான் அவர் மத நம்பிக்கையாளராக மாறி எல்லன் ஒயிட் seventh day adventist மதத்தை உருவாக்கியது போல கிறிஸ்துவ மதத்தை உருவாக்கினார் என்பது அதிர்ச்சியானதாகவும், கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையையே கேள்விக்குறியதாகவும் ஆக்குக்கிறது.

  இது பற்றி மேலும் தகவல்களை அறியத்தர வேண்டுகிறேன்.

 4. Avatar
  அருணகிரி says:

  பிரமாதமான தொடர். அருமையான மொழி பெயர்ப்பு.

  ஆக, ஆபிரஹமிய மதங்களின் ஸ்தாபகர்களுக்கு (பவுல் உள்பட) ஏற்பட்ட அனுபவங்கள் ஒன்றும் தனித்தன்மை வாய்ந்த இறையனுபவங்கள் அல்ல, எல்லோராலும்- அதுவும் காக்காய் வலிப்பு உள்ளவர்களுக்கு இன்னமும் எளிதாகவே – அடையக்கூடியது என்பது முக்கியமான பாயிண்ட். வேறு வகையில் சொல்லப்போனால், தேவ தூதர்களும் அவர்களுக்கே வெளிப்படுத்தப்படும் தீர்க்க தரிசனங்களும் சுத்த ஹம்பக் என்பதை இந்த ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 5. Avatar
  கே. பி. ஆனந்தன் says:

  எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாவணும். பொண்டாட்டியை சிலுவையில அறைஞ்சவன் (கொடுத்து வச்சவன்) என்னடான்னா கடவுள் கனவுல வந்ததா சொல்றான். இவரு என்னமோ டெம்போரல் லோபில வந்ததா சொல்றாரு. அவரு அதில வந்தாரா இல்லை, இதில வந்தாரா? சரியா சொல்லுங்கப்பா.

 6. Avatar
  சூபி முஸ்லிம் says:

  முகம்மதுவுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த காந்த புலன்களின், டெம்போரல் லோபுகளின் மாற்றங்கள் என்பது உறுதியாகிறது.
  தன்னையே கடவுளாக காணுவது மட்டும் அல்ல , தானே கடவுளின் ஒரே தூதர், இறுதி பிரதிநிதி என்று நம்புவதும் இந்த ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
  ஏன் என்றால் 23 ஆண்டுகளாக சிறுக சிறுக குரானின் வசனங்களை தேவ தூதன் கபிரியேல் (ஜிப்ரீல் ) மூலம் பெற்றதாக சொன்ன முஹம்மது , சிலநேரம் மணியோசை அல்லது தேனீக்களின் சப்தத்தின் மூலமாக பெற்றதும் சிந்தனைக்குரியது!!
  ஏன் ஒரு முறை கூட ஒரு சஹாபி (நபி தோழர் ) கூட ஜிபீர்லை காணவில்லை என்பது ஆணித்தரமான ஆதாரமாகிறது.
  இது முஹம்மதின் மூளைக்குள் அல்லா என்ற ஒரு அராபிய தெய்வத்தின் நம்பிக்கை சார்ந்த மன ஓட்டங்களே என்பதும் தெளிவாகிறது !!

 7. Avatar
  iniyavan says:

  சிந்தனையைத் தூண்டும் தொடர் தேவ தூதர்கள் என்பதே மறைமுகமாக தன்னை வணங்க வேண்டும் என்கிற சதி வேலைதான். தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்க வேண்டும்,புகழ வேண்டும்,பிரார்த்திக்க வேண்டும் என்பதை மய்யப்படுத்தியே பல தூதர்கள்,அவதாரங்கள்,சாமியார்கள் என்று தங்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை இக் கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. உண்மைகளை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *