சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்

This entry is part 5 of 30 in the series 15 ஜனவரி 2012

சிறகு இரவிச்சந்திரன்

ஓவியர் ஆதிமூலத்தின் புகைப்பட அட்டையுடன் வந்திருக்கிறது சுகனின் 296வது இதழ். தஞ்சையிலிருந்து தனியொருவன் முயற்சியாக வந்து கொண்டிருக்கும் இதழ். ஆசிரியர் என்று துணைவியின் பெயர் இருந்தாலும் முழு முயற்சி சுந்தரசரவணன் தான். என்ன பல ஆண்டுகளாக இதழின் பொருட்டே விளிக்கப்படுவதால் அவரும் சுகன் என்றே அழைக்கப்படுகிறார்.
மற்ற சிற்றிதழ்கள் போலல்லாமல் இது கொஞ்சம் அரசியல் பேசும். ஒரு நிலை எடுத்துக் கொள்ளும். சுகனின் பிடிக்காத பகுதி எனக்கு இது. ஆனால் உரிமை சுகனுக்கே. சிற்றிதழ் சுதந்திரம். என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். தாத்தா தீவிர அரசியலில் இருந்தவர். அதனால் பாதிப்பு அதிகம்.
சுகனின் மிக சுவாரஸ்யமான பகுதி அவருக்கு வரும் கடிதங்கள் தாம். எல்லாவற்றையும் பற்றி எழுதுவார்கள். சிலர் கட்டுரை அளவு கடிதமே எழுதுவர். அதையும் வரி விடாமல் சுகன் வெளியிடும். ஒரு கட்டுரைக்கு விமர்சனமாக வரும் கடிதத்திற்கு வரும் பதில் படைப்பாளிக் கடிதத்தையும் போடுவார். ஏழெட்டு பக்கங்கள் தாண்டிவிடும்.
கவிதைகள் உண்டு. அதுவும் முன் உள அட்டையும் கட்டாயம் உண்டு. மூன்றாவது பக்கத்தில் இதழ் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம். அதற்கப்புறம் வரும் பக்கங்கள் தலையங்கம். அது முடியும்போதுதான் மற்ற படைப்புகள்.
தி.மா.சரவணன் எழுதும் ஆவணங்களும் சீரிதழ்களும் என்கிற தொடர் ஐந்தாறு மாதங் களாக வருகிறது. முடிவதாகக் காணோம்.
ந.செல்வன் எழுதியிருக்கும் சாதனைகளும் சில வேதனைகளும் என்கிற தொடர் லிம்கா சாதனைகள் நிகழ்த்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தோலுரிக்கிறது. ஆனாலும் கட்டுரை ரொம்ப நீளம். இதையும் கூட சாதனையாக அனுப்பலாம்.
கமலா சிவத்தின் ‘ அம்மா ‘ என்று ஒரே சிறுகதை. ஆரம்ப எழுத்தாளர் போலிருக்கிறது. திடீரென்று பேச்சுத் தமிழுக்கு தாவி விடுகிறார். ஆனால் அது சம்பாஷணைகளில் இல்லை. படித்து விட்டு வேலைக்குப் போகும் ஏழைப்பெண் தன் ஊர் சனங்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற அம்மாவின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். எப்படி? வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை தம் மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம்.
சேலம் கி.இளங்கோவின் ஓவியர் ஆதிமூலம் பற்றிய நினைவுகளும், அவரது ஓவியங்களும் கொஞ்சம் நிறைவைத் தருகின்றன. கடைசியில் ஆதிமூலத்தின் கையெழுத்திலேயே சில வரிகள் வெளியிட்டிருப்பது கிளாஸ்.
தொடர்பு முகவரி: சௌந்தர சுகன், அம்மா வீடு, சி 46, இரண்டாம் தெரு, முனிசிபல் காலனி, தஞ்சாவூர் – 613 007.
செல்: 9894548464/ 9442346334.
மின்னஞ்சல் : soundarasugan@gmail.com
0

Series Navigationஓர் இறக்கை காகம்நானும் எஸ்.ராவும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *