ஷங்கரின் ‘ நண்பன் ‘

This entry is part 28 of 30 in the series 15 ஜனவரி 2012

 

சிறகு இரவிச்சந்திரன்

நேர்த்தி என்பது இயக்குனர் ஷங்கரின் தவிர்க்க முடியாத ஒரு தன்மை என்பது அவரது முதல் படமான ஜென்டில்மேனிலேயே பார்த்ததுதான். இது இன்னமும் பல பரிமாணங்களில் பட்டை தீட்டப்பட்டு எந்திரனில் வெளிப்பட்டது. அவர் ஒரு இந்திப் படத்தை மறுபடியும் எடுக்க இசைந்துள்ளார் என்ற போது பலரது மனங்களில் எழுந்த ஐயம் இதில் அவரது தனித் தன்மையையோ பிரம்மாண்டத்தையோ நுழைத்து விட்டாரென்றால் படம் சுவைக்காது என்பது தான். திரையுலகில் பலரும் கூட அவர் அப்படிச் செய்து பெயரைக் கெடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தார்கள். உள்ளூர ஆசையும் பட்டார்கள். அவர்கள் வாயில் மண்.
முதலில் இந்தி 3 இடியட்ஸைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, பொம்மன் இரானி, கரிஷ்மா கபூர் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். கதையும் வித்தியாசமானது. சூப்பர் ஹீரோ கதையில்லை. எல்லோருக்கும் சம பங்கு நடிப்பதற்கு. நகைச்சுவை கலந்த காட்சிகள், வசனங்கள்,ம் அடுக்கடுக்கான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, படத்தை சுவாரஸ்யமாக்க கொஞ்சம் தற்காலம், கொஞ்சம் பின்நோக்கு என பயணிக்கும் திரைக்கதை என பாக்ஸ் ஆபிஸ் ஐட்டங்களைக் கொண்டு வந்ததால் படம் சூப்பர் ஹிட்.
ஷங்கர் தன் புத்திசாலித்தனத்தை நண்பனில் எதிலும் புகுத்தவில்லை. அதுவே அவரது புத்திசாலித்தனம். நடிகர் பாலாஜி எடுத்த இந்திப் படங்களின் தமிழ் பதிப்புகளெல்லாம் சிவாஜி என்கிற மாபெரும் நடிகனாலேயே தூக்கி நிறுத்தப்பட்டன. ஷங்கருக்கு இப்போது அப்படி யாரும் இல்லை. கிடைத்த இலுப்பைப் பூ சர்க்கரையை வைத்துக் கொண்டு அவர் சுற்றியிருக்கும் பஞ்சு மிட்டாய் உண்மையிலேயே பெரிய சாதனை தான்.
ஷங்கர் எதையுமே மாற்றவில்லை. இந்திப்படத்தின் திரைக்கதை ( அதற்கு பெயர் காட்டும்போதே அங்கீகாரம் கொடுத்து விடுகிறார்.), காட்சிகள் எல்லாம் அப்படியே தமிழில். காட்சி வரிசை கூட மாறவில்லை. என்ன மொழி தெரியாமல் அதைப் பார்த்தோம். இதை புரிந்து சிரித்து பார்க்கிறோம்.
வசனம் ஷங்கர்-கார்க்கி. மெலிதான நகைச்சுவையை விரசமில்லாமல் தந்ததற்கு இருவரையும் பாராட்டவேண்டும். சுஜாதாவின் அண்மை கற்றுக் கொடுத்த பாடம். சாம்பிளுக்கு ஒன்று: ‘ ஒரு ப்ளாஷ் பேக்கை திருக்குறள் மாதிரி எப்படி சுருக்கி சொல்லிட்டான் பாரு.. ‘
இன்னமும் ஆமிர்கான் பாத்திரத்தில் எப்படி விஜய் பொருந்துவார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கச்சிதமாக பொருந்த வைத்து விட்டார் ஷங்கர். கல்லூரி மாணவனைப் போலவே இருக்கிறார் விஜய். ரஜினியையே இளமையாகக் காட்டியவர் விஜயைக் காட்டுவதற்கு அதிகம் மெனக்கெடவில்லை. மிகை நடிப்பு கிடையாது, ஹீரோயிசம் கிடையாது. படம் முழுக்க உதை வாங்குகிறார். படம் நிமிர்கிறது.
மாதவன் பாத்திரத்தில் ஸ்ரிகாந்த். மாதவன் அளவிற்கு துள்ளல் இல்லை என்றாலும் நம்ப முடிகிறது. ஷர்மான் ஜோஷியைப் போலவே நீள முகம் ஜீவாவிற்கு. அதுவே ஐம்பது விழுக்காடு அவரை ஒப்புக்கொள்ள வைக்கிறது. மீதத்தை நடிப்பில் எடுத்து விடுகிறார் அவர்.
தமிழ் தெரியாத அமெரிக்க இந்திய மாணவன் பாத்திரத்தில் சத்யன். காமேடி பீஸாக வந்து கொண்டிருந்தவருக்கு முழு பாத்திரம். உணர்ந்து நடித்திருக்கிறார். புல் மார்க்ஸ்.
பொம்மன் இரானி பாத்திரத்தில் சத்யராஜ் பிச்சு உதறிவிட்டார். அதிலும் ஸ் சேர்த்து அவர் ஆங்கிலம் பேசுவது புதிய பரிமாணம். கரிஷ்மா கபூருக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதை நிருபிக்கிறார் இலியானா. அசினுக்கு அடுத்து அங்கே போய் விடுவார்.
பாடல்களில் தான் ஷங்கர் தெரிகிறார். பிரம்மாண்டம் அங்கு வருகிறது. ஆனால் உறுத்தாத பாடல் காட்சிகள்.
இந்திப் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப் பேசலாம். ஆனாலும் அவர்களுக்கு படம் பிடிக்கும். பார்க்காதவர்களுக்கு இன்னமும் பிடிக்கும்.
0
கொசுறு செய்தி:
முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பார்க்க விரும்புபவர்கள் எந்த திரையரங்கத்தில் பார்த்தாலும், அது விருகம்பாக்கம் கருமாரியாக இருந்தாலும், பரங்கிமலை ஜோதியாக இருந்தாலும் டிக்கெட் விலை நூறு அல்லது அதற்கும் மேலே. நான் பேம் மல்டிப்ளெக்ஸில் பார்த்தேன். முதல் நாளாக இருந்தாலும் கடைசி நாளாக இருந்தாலும் 120 தான். என் சிபாரிசு முதல் நாளோ இரண்டாம் நாளோ காலைக் காட்சிக்குப் போங்கள். நூறு பேர் பார்க்கிறார்கள். அதிலும் குடும்பத்துடன் வரும் பெரிசுகள், சமீபத்தில் திருமணமான ஜோடிகள், வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் இளம் ஜோடிகள், கொஞ்சம் ஐடி ஆசாமிகள். அமைதியாக படம் பார்க்க முடிகிறது.
பேம் மல்டிப்ளெக்ஸின் எதிரில் கூட்டாஞ்சோறு என்று ஒரு சைவ உணவகம் இருக்கிறது. காலை பத்து மணிக்கு அங்கு போனால் கூட்டமும் இல்லை சோறும் இல்லை. உள்ளே ஏதாவது சாப்பிட எண்ணினால் ஆரம்ப விலையே ஐம்பது.
0

Series Navigationபொங்கல் வருகுதுமெர்சியின் ஞாபகங்கள்

3 Comments

  1. Avatar punai peyaril

    என் சிபாரிசு முதல் நாளோ இரண்டாம் நாளோ காலைக் காட்சிக்குப் போங்கள்—> என்ன எல்லோரும் சினிமா பித்து பிடித்தவர்களா என்ன.. சினிமா என தோணும் போது ஏதாவது காட்சிக்குப் போனா என்ன… அதும் போக ஒரு நாலு நாள் காத்திருந்தா டிவிடியில் நிம்மதியா வீட்டில் பார்க்கலாம்… இல்ல நெட்டில் பார்க்கலாம்..

  2. Avatar கணேஷ் எபி

    விமர்சனம் எழுதிய சிறகு ரவிச்சந்திரன் ஷங்கரின் ரசிகர் என்பது புரிகிறது. கரீனா கபூருக்கும் கரிஷ்மா கபூருக்கும் வித்தியாசம் தெரியாமலே 3 இடியட்ஸ் படத்தை பார்த்து ரசித்துள்ளார். எந்திரன் படத்தை ஷங்கரின் உச்சகட்ட நேர்த்தியான படைப்பாகச் சொல்லியிருப்பது சிரிக்க வைக்கிறது. உண்மையில் எந்திரன் பார்த்த போது எனக்கு தோன்றியது, வடிவேலு நடிக்க வேண்டிய பாத்திரத்திற்கு ரஜினியை ஏன் ஷங்கர் தேர்ந்தெடுத்தார் என்பதுதான். நண்பன் படத்தின் கதையோ, திரைக்கதையோ ஷங்கரின் மூளையில் உதித்தது அல்ல என்பதால் அப்படத்தைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.

  3. Avatar சித்ரா

    கரிஷ்மா கபூர் அல்ல கரீனா கபூர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *